No icon

உயிர்ப்பும் ஒருங்கியக்கமும்!

கிறிஸ்தவர்களாகிய நமக்கு உயிர்ப்பு என்பது வெறும் வருடாந்திரத் திருவிழாவோ, நம்பிக்கையின் கோட்பாடோ மட்டுமன்று; மாறாக, நமது அடையாளம். “நாம் உயிர்ப்பின் மக்கள்! ‘அல்லேலூயாநமது கீதம்என்பது புனித அகுஸ்தினாரின் உணர்வுப்பூர்வ முழக்கம்.

உயிர்ப்பு என்பது இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பு இயேசுவுக்கு நேர்ந்த அனுபவம் மட்டுமல்ல, 2024-ஆம் ஆண்டில் வாழும் நமது வாழ்வின் பாதைக்கு ஒளியூட்டும் மறைபொருள் இயேசுவின் உயிர்ப்பு. கடந்த சில ஆண்டுகளாகக் கூட்டொருங்கியக்கத்தைக் குறித்து நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒருங்கியக்கப் பாதையில் தொடர்ந்து பயணிக்க விழையும் திரு அவைக்கு உயிர்த்த ஆண்டவர் கற்பிக்கும் பாடங்கள் சிலவற்றை உங்கள் சிந்தனைக்கு முன் வைக்க விரும்புகின்றேன்.

1. தாழிடப்பட்ட கதவுகளை ஊடுருவும் உறவுவழி

யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுவது போல, யூதர்களுக்கு அஞ்சி, தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்த சீடர்களின் நடுவில் நிற்கின்றார் உயிர்த்த இயேசு (யோவான் 20:19). தாழிடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் பதுங்கியிருந்த தம் தோழர்களுக்குத் தம்மை வெளிப்படுத்துகின்றார் உயிர்த்த ஆண்டவர்.

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் நம்மைச் சாதி, மத, இன, மொழி அடையாளங்களின் துணை கொண்டு பிரித்து, பிரிவினைவாதம் என்னும் சிறையில் பூட்டிச் சிறைபிடித்து, ஆட்சியையும், அதிகாரத்தையும் கைப்பற்றத் துடிக்கும் சக்திகள் எவையெவை என்பதை நாம் அறிவோம். நமது பன்முகத் தன்மையைப் பேணிக்காக்கும் கடமை கொண்டவர்களே நம்மை அடையாளச் சிறைகளுக்குள் தாழிட்டு அடைக்க முயல்வது இன்றைய அவலம். நாம் பேசும் மொழி, பிறந்த பகுதி, உண்ணும் உணவு, உடுத்தும் விதம், வழிபடும் தலம், செய்யும் தொழில், சார்ந்திருக்கும் சித்தாந்தம் போன்ற தனித்துவங்களைப் பிரிவினையின் ஆயுதங்களாகப் பயன்படுத்தும் இந்தப் போக்கிற்கு உயிர்த்த இறைவன் சவால் விடுகின்றார். தாழிடப்பட்ட கதவுகளைத் தாண்டி உறவை நிலைநாட்ட வழிகாட்டுகின்றார் உயிர்த்த இயேசுஇந்த உண்மையை உணர்ந்த பவுல் கூறுகின்றார், “ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை” (உரோ 8:38).

தடைகளையும், தடுப்புகளையும், தாழ்களையும் தகர்த்தெறிந்து, நம்மை அரவணைக்கும் உயிர்த்த ஆண்டவரின் அன்பு நமது ஒருங்கியக்கப் பாதைக்கு விடுக்கும் அழைப்பு இதுவே. பிரிவுகளைத் தாண்டி, பிரிவினைகளை மீறி பன்முகத்தன்மையைப் பேணும் உறவுமுறைகளை நிலைநாட்ட இணைவோம். வேற்றுமையில் ஒற்றுமையைக் காக்கும் வித்தையைப் பாதுகாப்போம். நமது தனித்துவ அடையாளங்களைத் தங்களுக்கான வாக்கு வங்கிகளாக மாற்றும் அரசியல் முயற்சிகளை முறியடிப்போம். பிரிவினைகளைக் கொண்டு நம்மைப் பிரித்தாள நினைக்கும் சக்திகளை நமது ஒன்றிப்பால்  வென்றிடுவோம். இதுவே இன்றைக்கான அவசிய, அவசர ஒருங்கியக்கப் பாதையும், இறைப்பணியும் ஆகும்.

நமது தனித்துவமான அடையாளங்கள் மற்றும் ஆரோக்கியமான வேறுபாடுகளைக் கொண்டாடுவோம். உயர்வு-தாழ்வு பாராட்ட கற்பிக்கும் கட்டமைப்புகளிலிருந்து நமது சமூகத்தை விடுவிப்போம். “எந்த  நிலை வாய்த்தாலும், நம்மில் அனைவருக்கும் அந்த நிலை பொதுவாகும். முப்பது கோடியும் வாழ்வோம் - வீழ்ந்தால் முப்பது கோடியும் முழுதாய் வீழ்வோம்என்ற பாரதியாரின் வாக்கை வாழ்வாக்குவோம்.

2. அச்சத்தின் வன்முறையை வீழ்த்தும் துணிவுப் பயணம்

புனித வெள்ளியின் கொடூரக் கொலையும், வன்முறையும் இயேசுவின் சீடர்களின் உள்ளங்களில் அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. அதிகாரத்தின் ஆதிக்கத்தால் ஆண்டவரையே வென்றுவிட்ட உணர்வு மேலோங்குகின்றது. இயேசுவைக் கைது செய்த தருணம் துவங்கி, தங்கள் உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்த சீடர்கள் கூட்டம், எங்கே தங்களையும் அடித்து இழுத்துக்கொண்டு போய் சிலுவையில் அறைந்து கொன்று விடுவார்களோ என்ற பயத்தில் நடுங்கிப் போயிருந்தனர். தலைமைக் குருக்களும், பரிசேயர்களும் எதிர்த்த போதும், குற்றம் சுமத்திய போதும் தங்களைக் காப்பற்றிய இயேசு இப்போது தம்மோடு இல்லை என்ற உணர்வு அவர்களைப் பயமுறுத்தியது. இந்த அச்சமும், பீதியும் இன்று நமது சமூகத்திலும், திரு அவையிலும் வளர்ந்து கிடப்பதை நாம் காண்கின்றோம். சமூக நலனுக்கும், நீதிக்கும், தன்னாட்சிக்கும் குரல் கொடுப்போரை அச்சுறுத்தி, அடக்க நினைக்கிறது இன்றைய அதிகாரத்துவம். உண்மைக்கும், உரிமைக்கும் குரல் கொடுப்பவர்களைத் திட்டமிட்டுப் பலியாக்கும் அவலம் வருத்தத்தை ஏற்படுத்துகின்றது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு நமது இந்தியத் திருநாட்டில் சரிந்து வரும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம். சர்வதேச ஊடகச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான Reporters Without Borders (RSF) என்ற அமைப்பு  ஆண்டு தோறும் உலக நாடுகளின் ஊடகச் சுதந்திரம் பற்றிய தரவரிசையை வெளியிடுவது வழக்கம். இந்த ஆய்வின்படி, 2022-ஆம் ஆண்டு 150-வது இடத்தில் இருந்த இந்தியா, 2023-ஆம் ஆண்டு 161-வது இடத்திற்குச் சரிந்துள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கும் விவரம்.

அன்று அச்சத்தினால் உறைந்திருந்த சீடர்களைஅஞ்சாதீர்கள், நான்தான்’ (மத் 28:5) என்று கூறித் திடப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அதிகார வர்க்கத்தைப் பார்த்து, “நீங்கள் சிலுவையில் தொங்க வைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார்” (திப 5:30) என்று துணிவுடன் அறிக்கையிடும்  வீரர்களாகத் திருத்தூதர்களை மாற்றினார் உயிர்த்த ஆண்டவர். அச்சம் நீங்கியவர்களாக, தங்கள் உயிரையே மறைப்பணிக்குச் சீடர்கள் கையளித்தனர் என்பது வரலாறு. “இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாதுஎன்று கண்டிப்பாகக் கட்டளையிட்ட தலைமைச் சங்கத்தாரிடம் பேதுருவும், யோவானும் மறுமொழியாகக் கூறியது: “உங்களுக்குச் செவி சாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது? என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும், கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” (திப 4:20). வன்முறையையும், அடக்குமுறையையும் காட்டிப் பயமுறுத்தி நம்மை அடக்க நினைக்கும் போக்கை எதிர்க்க அதே உயிர்த்த ஆண்டவர் நமக்கும் துணிவைத் தருகின்றார். நீதிக்கும், வாழ்விற்கும், விடுதலைக்குமான ஒருங்கியக்கப் போராட்டப் பாதையில் உயிர்த்த இயேசு நம்மோடு உடன் நடந்து, நமக்குத் துணிவை ஊட்டுகின்றார் என்ற உண்மை நம்மை உயிராற்றலுள்ள சாட்சிகளாய் மாற்ற வேண்டும்.

3. காயங்களைக் குணமாக்கும் அமைதியின் வழி

இயேசு தம் உயிர்ப்புக்குப் பின் சீடர்களைச் சந்திக்கும்போது அவர்களிடம் கூறிய முதல் வார்த்தைகள்: “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்பதாகும். தமது பாடுகளின் போதும், சிலுவைப் பாதையின் போதும், மரணத்தின் போதும், தம்மைத் தனியே விட்டு ஓடியவர்கள், மறுதலித்தவர்கள், இப்போது குற்றவாளிகளாய் அவர் முன் நிற்க, உயிர்த்த ஆண்டவர் அவர்களுக்கு அமைதியின் ஆசீரை வழங்குகின்றார். தங்கள் சீடத்துவத்தின் தோல்வியில் துவண்டவர்களாய்த் தலை குனிந்து நின்ற சீடர்களுக்கு உயிர்த்த ஆண்டவர் மொழிந்த வாழ்த்து, “உங்களுக்குச் சமாதானம்!”

இயேசு அவர்களின் தோல்வியைக் குறிப்பிடக் கூட இல்லை. அவர்களை ஏளனம் செய்யவும் இல்லை. “ஏன் இவ்வாறு செய்தீர்கள்?” என்று விளக்கம் கேட்கவும் இல்லை. தம்மை அநியாயத் தீர்ப்புக்குக் கையளித்த பிலாத்துவைப் பழி வாங்கத் துடிக்கவில்லை. தம்மேல் உமிழ்ந்து, கசையால் அடித்து, சிலுவையில் அறைந்து கொன்ற காவலர்களைத் தண்டிக்க அவர்களைத் தேடிச் செல்லவில்லை. இந்த வன்முறைக்கும், பழிவாங்கும் உணர்விற்கும் மாற்றாக உயிர்த்த இயேசு கொண்டு வருவதுஅமைதிஎன்னும் நற்செய்தியே!

இன்று நமது சமூகத்திலும், குடும்பத்திலும், திரு அவையிலும் பழைய காயங்கள் பல ஆறாமல் நம்மைத் தொடர்ந்து வருத்திக் கொண்டிருக்கின்றன. வரலாற்று விரோதங்கள் நம்மை இன்னும் பிரித்து வைத்திருகின்றன. இந்தக் காயங்கள் குணமாக ஒரே வழி, நாம் அமைதியின் தூதுவர்களாய் மாறுவதே. நம்முடைய குடும்ப, அலுவலக, சமூக உறவுகளில் சந்தித்த அல்லது சந்திக்கும் எதிர்ப்புகளை, மறுதலிப்புகளை, புறக்கணிப்புகளை மன்னிக்கவும், உயிர்த்த இயேசு வழங்கும் உண்மையான அமைதியைச் சாத்தியமாக்கவும் நாம் அழைக்கப்படுகின்றோம்.

இயேசுவின் பாடுகளும், உயிர்ப்பும் போதிப்பது அடங்கிப் போகும் அடிமைத்தனத்தையோ, ஆயுதம் ஏந்தும் வன்முறையையோ அல்ல; தமது பாடுகளின் மூலம் உயிர்த்த இயேசு அமைதியின் குணமாக்கும் வலிமையைப் போதிக்கின்றார். அநீதிக்குத் தலை வணங்காமல், வன்முறைக்கு இடம்கொடாமல், நாம் வாழும் சமூகத்தின் மாற்றத்திற்காக நம்மை முழுமையாக அர்ப்பணிப்பதும், ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் வாழ்வாதாரம் உயர பணியாற்றுவதுமே உண்மையான அமைதியை உறுதி செய்யும் ஒருங்கியக்க வழிமுறைகள். வரலாற்றின் அழியாத காயங்கள் ஏற்படுத்தும் தொடர் வலியை நீக்க, மன்னிப்பில் விளையும் அமைதியின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்எனவே, உயிர்த்த ஆண்டவர் இன்று நமக்கு உணர்த்தும் ஒருங்கியக்கப் பாதையின் முக்கியமான பரிமாணங்கள் மூன்று:

1. தாழிடப்பட்ட கதவுகளைத் தாண்டி, வேற்றுமையில் ஒற்றுமையின் வழிநடத்தல்.

2. ஆதிக்கவாதத்தின் அச்சுறுத்தல்களை எதிர்த்து, துணிவுடன் சாட்சியப் பாதையில் பயணித்தல்.

3. பழைய காயங்களை மன்னிப்பால் குணமாக்கி, புதிய அமைதிக்கான பாதைகளை வகுத்தல்.

உயிர்ப்பை நமது அடையாளமாகவும், வாழ்வியலாகவும் மாற்ற உயிர்த்த ஆண்டவர் குறித்துக் காட்டும் கூட்டொருங்கியக்கப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம். ‘நம் வாழ்வுஇதழின் ஆசிரியர்கள், உடன் பணியாளர்கள் மற்றும் வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் உயிர்ப்புத் திரு விழாவின் வாழ்த்துகள்! இறையாசீர்!

+ ஜார்ஜ் அந்தோணிசாமி, சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர்

Comment