No icon

மாண்புமிகு மருத்துவர்கள்!

உலக மருத்துவர்கள் தினம்: ஜூலை - 1

வாழும் மனித இனத்திற்கு, பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை நோயின் பிடியில் சிக்கி மருத்துவமனையில் மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெறுவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. முக்கிய உடல் உறுப்புகளான இதயம், நுரையீரல், சிறு நீரகம், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகள் சரியாக இயங்கினால் மட்டுமே மனிதன் மகிழ்வாய் வாழ முடியும். நூறு வயதுக்குமேல் வாழ்பவரும், இளம்வயதிலேயே வியாதியால் மரித்துப் போவதும் அறிந்த நிகழ்வுகள். கடந்த நூற்றாண்டில் பிளேக், பெரியம்மை போன்ற கொடூர நோய்களால் ஆயிரக்கணக்கானோர் மாண்டு போனதை மறந்திட முடியாது. காலங்கள் கடந்தோட நோய்களை வெல்ல உலக நாடுகளில் மருத்துவர்கள் தோன்றினார்கள். உரிய நோய்களுக்கான மருந்துகளைக் கண்டறிந்தார்கள். நாளடைவில் கல்வி வளர்ச்சியில் மருத்துவத்தை ஒரு பாடமாகப் படித்து மருத்துவர்கள் தோன்றினார்கள். பயிற்சி எடுத்து மருத்துவப் பணியாற்றினர்.

மருத்துவத்தின் நோக்கமே அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மை, தியாக உணர்வு, தன்னலம் தவிர்த்தல் ஆகிய பண்புகளை உள்ளடக்கி மருத்துவப் பணிபுரிதல். உலகில் முதல்மருத்துவர் தினம்அமெரிக்காவில் மார்ச் 30, 1933-இல் ஜார்ஜியா மாகாணத்தில் துவங்கியது. இந்தியாவில் மருத்துவர் தினம் ஜூலை முதல் தேதி கொண்டாடப்படுகிறது. புகழ்மிக்க மருத்துவரும், மேற்கு வங்க இரண்டாவது மாநில முதல்வருமான பைதான் சந்திரராய் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் மருத்துவர் ஆனந்த் கோபால் ஜோஷி.

உலகில் முதல் பெண் மருத்துவர் எலிசபெத் பேச்வெல். அமெரிக்காவைச் சேர்ந்தவர். எம்.டி. பட்டம் பெற்ற மருத்துவர். பணிபுரியத் தொடங்கிய ஆண்டு 1821. அறுவை சிகிச்சையின் தந்தையாகச் சுஸ் சுருதா சாகிதா அழைக்கப்படுகிறார். இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

முதல் MBBS மருத்துவர் கடம்பினி போஸ் கங்குலி ஆவார். இதயத் துடிப்பைக் கண்டறியும் ஸ்டெதஸ்கோப்பைக் கண்டறிந்தவர் ரெனிலியோ நெக். நுரையீரல் செயல்பாட்டையும் இது கண்டறிய உதவுகிறது. இந்தியாவில் தேசிய மருத்துவர் தினம் 1991-இல் அறிவிக்கப்பட்டது.

முதல் இந்திய பெண் மருத்துவர்பத்ம பூஷன்பட்டம் பெற்ற புகழ்மிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்துலெட்சுமி ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 1926, சென்னை சட்ட மேலவை உறுப்பினரான இந்தியாவின் முதல் பெண்மணியும் ஆவார். அடையாறு புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கி, இன்று ஆல்போல் தழைத்திடச் செய்தவர். தேவதாசி முறையை ஒழித்து, சேவை செய்யும் மனப்பான்மை கொண்டவர் சமூகப் போராளி மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி ஆவார். அன்னாருக்குப்பின் மருத்துவர் சாந்தா வழிநடத்தி மறைந்தார்.

இன்று உலகமெங்கும் மருத்துவத்துறை மேம்பட்டு புதிய புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர்கள் மருத்துவ சேவை ஆற்றி வருகின்றனர். 2019 இறுதியில் கொரோனா கொடிய பெருந்தொற்றினால் உலகமெங்கும் பல இலட்சக்கணக்கான மக்கள் மடிந்தபோதும், உடனடியாகத் தடுப்பு மருந்துதான் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. பழமைமிக்க ஆயுர்வேத மருத்துவம் இந்தியாவில் தோன்றிய வரலாறு உண்டு.

இந்நாளில் அனைத்து மருத்துவர்களையும் போற்றுவோம். அவர்கள் பணியை வாழ்த்துவோம்.

Comment