No icon

ஆசிரியப் பணி ஒரு மாயாஜாலம்!

ஆசிரியப் பணி ஓர் அறப்பணி; அதற்கு உன்னை அர்ப்பணிஎன்று நினைத்த காலம் போய், ‘ஆசிரியப் பணியை விட்டு விட்டு ஏதாவது உருப்படியாகச் செய்யலாமேஎன்ற நினைவு வந்து போகிறது என்றார் ஓர் ஆசிரியர். இன்றைய காலச்சூழலில் ஆசிரியப் பெருமக்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் நிலையில், மேலே சொல்லப்பட்ட ஓர் ஆசிரியரின் கருத்து வியப்புக்குரியதாக அல்ல; மாறாக, சிந்திக்க வைத்தது.

நெருக்கடியான காலகட்டத்திலும் உருப்படியாகச் சாதிக்க முடியும் என்பதற்கு எத்தனையோ ஆசிரியர்கள் எடுத்துக்காட்டாக உள்ளனர்.

நமது வழக்கமான சிந்தனைதான் நம் வாழ்க்கைக்குள் தன்னை அமைத்துக் கொள்கிறது. நமது நெருக்கமான சமூக உறவுகளை விடவும் அது நம்மைப் பாதிக்கிறது. நாம் அடிக்கடி எண்ணும் சிந்தனைகளைப் போல நமது நம்பிக்கைக்குரிய நண்பர்கள் கூட நம் வாழ்வை வடிவமைப்பதில்லைஎன்கிறார் ஜே. டபிள்யு. டீல்.

இந்த வெட்டியான பாடத்தை எல்லாம் நாங்க ஏன் படிக்க வேண்டும்?” என்று நன்னெறிப் பாட வேளையில் கேட்டான் ஒரு மாணவன். அதற்கு ஒரு பழங்கதையைப் பதிலாகக் கூறினார் ஆசிரியர் பெனடிக்ட்.

ஒருநாள் இரவு ஒரு நாடோடிக் கூட்டத்தினர் ஓய்வெடுக்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு பிரகாசமான வெளிச்சம் அவர்களைச் சூழ்ந்தது. ஏதோ தெய்வீக விசயம்தான் தோன்றியிருக்கிறது என்று அவர்கள் புரிந்து கொண்டனர். தங்களுக்காகவே சொல்லப்படப் போகும் மிக முக்கியமான தேவலோகச் செய்திக்காக அவர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

கடைசியாக அசரீரி ஒலித்தது: “நீங்கள் ஒவ்வொருவரும் உங்களால் முடிந்தளவு கூழாங்கற்களைச் சேகரித்து உங்கள் பைகளில் இடுங்கள். நாளை முழுவதும் பயணம் செய்யுங்கள். நாளை இரவு நீங்கள் சந்தோசம் அடைவீர்கள்; அதே நேரம் வருத்தமும் அடைவீர்கள்.”

வெளிச்சமும் அசரீரியும் மறைய, நாடோடிக் கூட்டத்தினர் தங்களின் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகத் தெரிவித்துக் கொண்டனர். ஒரு மாபெரும் பிரபஞ்ச உண்மை தங்களிடம் வெளியிடப்படப் போகிறது; அதைக்கொண்டு நிறைய செல்வம் ஈட்டலாம், நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம், உலகுக்கு ஒரு நற்செய்தியை அறிவித்துப் பெருமையும் அடையலாம் என நினைத்தனர். ஆனால், அவற்றுக்கு மாறாக, தங்களுக்கு ஒரு சாதாரண வேலை கொடுக்கப்பட்டு விட்டதே என வருந்தினர். ஆனாலும், ஒவ்வொருவரும் பெயருக்குச் சில கூழாங்கற்களைச் சேகரித்துக் கொண்டனர். ஆனால், தங்கள் அதிருப்தியை முனகலாக வெளிப்படுத்தத் தவறவில்லை.

மறுநாள் பகல் முழுக்கப் பிரயாணம் செய்த அவர்கள், இரவில் ஓர் இடத்தில் தங்குவதற்காகக் கூடாரம் அமைக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினர். அப்போது அவர்கள் தங்கள் பைகளைப் பார்க்க, அதிலிருந்த ஒவ்வொரு கூழாங்கல்லும் வைரமாக இருந்ததைக் கண்டு பேராச்சரியம் கொண்டனர். கல்லெல்லாம் வைரமாகி விட்டதை நினைத்து அவர்கள் சந்தோஷப்பட்டனர். அதேநேரம், இன்னும் கொஞ்சம் கற்களை எடுத்து வந்திருக்கலாமே என்று வருத்தப்பட்டனர்.

ஆசிரியப் பணியில் அற்புதங்கள் நிகழ்த்தலாம் என்பதற்கு ஆசிரியர் பெனடிக்ட் ஒரு முன்னுதாரணம். இக்கதையோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை; ஆசிரியப் பணியில் ஒருசில யுக்திகளைக் கையாண்டார். ஒவ்வொரு நாளும் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மாபெரும் சிந்தனையாளரின் கருத்து ஒன்றை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும் என்று பணித்தார். வருகைப் பதிவேடு எடுக்கும்போது ஒவ்வொரு மாணவரின் பெயரைக் கூப்பிடுவதுடன் ஒவ்வொரு கருத்திலும் சில வார்த்தைகளைக் கூறுவார்; மீதியுள்ளதை அந்தந்த மாணவர் சொல்லி முடிக்க வேண்டும்.

அமலன்என்று அழைத்து, “நாம் முயற்சிக்கும் வரைஎன்று சொல்ல, “தோல்வி என்பது இல்லைஎன்றான். கடைசியில்உள்ளேன் ஐயாஎன மாணவன் சொல்ல இப்படியாக அந்த ஆண்டு முடியும்போது 150 மாபெரும் சிந்தனைகளை மனனம் செய்து விட்டனர்.

ஒரே ஒரு மாணவனைத் தவிர யாரும் இந்த வழக்கத்தைக் குறை கூறவில்லை. அந்தக் குறிப்பிட்ட மாணவன் ஐந்தாண்டுகள் கழித்து ஆசிரியருடன் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு சொன்னான்: “சார், நீங்கள் சொன்ன கதை என் நினைவிற்கு வருகிறது. மாணவப் பருவத்தில் மனப்பாடம் செய்யச் சொன்னது கதையில் வரும் கூழாங்கல் போன்று அர்த்தமற்றவையாக இருந்தது. இன்று அது வைரமாக மாறி என் வாழ்வைச் செழிப்பாக்கியுள்ளதுஎன்றான்.

ஆம், இன்று கூழாங்கல்லாகத் தோன்றுபவற்றை முடிந்தவரை சேகரிக்கச் சொல்கிறார் ஆசிரியர். ஏனென்றால் எதிர்காலத்தில் அவர்களுக்கு அது வைரக்கற்களாக மாறும் என்பது ஆசிரியருக்குத் தெரியும்.

அடுத்து ஆசிரியை நிர்மலா. முதன்முறையாக அந்த வகுப்பிற்குள் நுழைந்த ஆசிரியை பாடம் நடத்த முயன்றார். ஆனால், அனைவரும் அலட்சியமாக அமர்ந்திருந்தனர். வகுப்பு முடிந்ததும் ஒரு மாணவனிடம்ஏன் இந்த அலட்சியம்?’ என்று கேட்டதற்கு, அவன் சொன்ன பதில்: ‘உங்க நேரத்தை வீணாக்காதீங்க டீச்சர். நாங்க லூசுப் பசங்கஎன்றான். நிர்மலா டீச்சர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

மறுநாள் மீண்டும் வகுப்பிற்குச் சென்றார். பாடம் நடத்தவில்லை; மாறாக, தன்னைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். “எனக்குடிஸ்லெக்ஸியாஎன்ற கற்றல் குறைபாட்டு நோய் இருக்கு. நான் பள்ளியில் படித்தபோது என் பெயரைச் சரியாக எழுத முடியாது. வார்த்தைகளை உச்சரிக்க முடியாது. நானும் கூடலூசுஎன்றுதான் முத்திரை குத்தப்பட்டேன். என்னையும்லூசுஎன்றுதான் கூப்பிடுவார்கள்.”

அப்படின்னா நீங்க எப்படி டீச்சர் ஆனிங்க?” யாரோ ஒரு மாணவன் கேட்டான். “காரணம், எனக்கு முத்திரை குத்துவது பிடிக்காது; எனக்குப் படிக்கப் பிடிக்கும். அப்படித்தான் இந்த வகுப்பும். லூசுப் பசங்க என்னும் முத்திரை வேண்டுமென்றால் இங்கே இருக்க வேண்டாம். இந்த வகுப்பில் யாரும் லூசு இல்லை. நீங்கள் படிப்பில் வேகம் காட்டும் வரை நாம் கடுமையாக உழைக்கப் போகிறோம்: நீங்கள் வெற்றி பெறுவீர்கள், கல்லூரி செல்வீர்கள். ‘லூசுஎன்ற சொல்லை நான் இனி கேட்கக்கூடாது. புரிந்ததா? எனக் கேட்டார்.

மாணவர்கள் சற்று நிமிர்ந்து அமர்ந்தனர்; கடுமையாக உழைத்தனர். அபார முன்னேற்றம். இரண்டு ஆண்டுகள் கழித்து அனைவருமே பள்ளி இறுதித் தேர்வில் தேறினர். உயர் கல்வி கற்றனர். முதல் நாள் வகுப்பிற்குள் காலடி எடுத்து வைத்தபோது வந்த எண்ணம் நினைவிற்கு வந்தது. நிர்மலாவுக்கு, ஆசிரியப் பணியை விட்டுவிட்டு ஏதாவதுஉருப்படியாகச் செய்யலாமே.”

அடுத்து விமல் சார் என்பவரின் பணி வாழ்வு.

ரவுடியாகப் பள்ளியில் வலம் வந்த மாணவன் ஒருவனைநான் உன் மட்டில் மிகுந்த அக்கறையோடிருக்கிறேன்என்ற வார்த்தை வழியாக மனம் மாற்றினார்.

ஆசிரியர் ஒருவர்பஞ்ச பூதங்கள் யாவை?’ என்று கேட்டார். அதற்கு மாணவன்தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல்எனப் பதிலளித்தான். அடுத்துஅப்துல்கலாம் பிறந்த இடம் எது?’ என்ற வினாவிற்குஆஸ்பத்திரிஎன்று பதில் தந்தான். ஆசிரியருக்கோ அதிர்ச்சி; அதனின்று மீண்டுதம்பி, உனக்கு வித்தியாசமான சிந்தனைத் திறன் உண்டு. அதை எதிர்மறையாகப் பயன்படுத்தாது நேர்மறையாகப் பயன்படுத்துஎன்று கூறி, சரியான பதிலைச் சொல்லிக் கொடுத்தார்.

மாறுபட்ட சிந்தனைகள் கொண்ட மாணவச் சமுதாயத்தை மறுபடி மாற்றும் சக்தி ஆசிரியப் பெருமக்களுக்கே உண்டு என்ற உண்மையை ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இறைவாக்கினர் எசாயா பின்வரும் வார்த்தைகளில் வடித்தெடுத்துள்ளார்: “நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட ஆண்டவராகிய என் தலைவர் கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்” (எசாயா 50:4).

நீங்கள் ஒரு தனிநபரை அவர் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்க முடியும்? என்று நினைத்து நடத்தினால், அவர் எப்படி இருக்க வேண்டுமோ, எப்படி இருக்க முடியுமோ அப்படி மாறுவார்என்ற கதே என்பவரின் கூற்றின்படி மாணவச் சமுதாயத்தை மாண்புமிக்கவராய் மாற்றியமைக்கும் ஆசிரியப் பெருமக்களுக்குப் பாராட்டும் வாழ்த்தும். ஏனெனில், பல ஆண்டுகள் கழித்து நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது என்ன சம்பாதித்துள்ளீர்கள் என்பதைவிட, ஒரு மாணவன்/மாணவி வாழ்வில் நீங்கள் எவ்வளவு முக்கியமாய் இருந்தீர்கள் என்பதே முக்கியம்.

Comment