இறந்தும் அழியாத செல்வங்கள்!
செப்டம்பர் மாதம் என்றாலே உடனே நினைவிற்கு வருவது ஆசிரியர் தினக் கொண்டாட்டமே! அதையும் கடந்து செப்டம்பர் மாதம் நமக்கு மிகவும் முக்கியமான மூன்று அழியாச் செல்வங்களைப் பெற்றுக் கொள்ள அழைக்கிறது. ஆசிரியர் தினம் கொண் டாடும் செப்டம்பர் 5 -ஆம் தேதி மூன்று முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டதாக உள்ளது.
முதலில், டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். இரண்டாவதாக, அன்பின் பிறப்பிடமாய் இருந்து, கருணையின் கன்னியான நம் உலகம் போற்றும் அன்னை தெரேசா அவர்களின் இறந்த நாள் நினைவேந்தலைக் கொண்டாடுகிறோம். மேலும், இந்த நாளானது தொண்டு அல்லது சேவை செய்யும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. மூன்றாவதாக, இந்த நாளில்தான் 1972 -ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் முனிச் என்ற இடத்தில் ஒலிம்பிக் நடைபெற்ற போது தீவிரவாதத் தாக்குதலால் சில ஒலிம்பிக் வீரர்கள் இறந்து போனார்கள். எனவே இந்த நாளும் நாம் மறக்க முடியாத நாளாகவே இருக்கிறது.
இந்த மூன்று முக்கியமான நிகழ்வுகளும் நமக்கு மூன்று பாடங்களைக் கற்றுத் தருகின்றன. முதல் நிகழ்வில் நாம் கல்வியின் மேன்மையும், இரண்டாவது நிகழ்வில் ஒழுக்கம் நிறைந்த பண்புகளின் முக்கியத்துவத்துவமும், மூன்றாவது நிகழ்வில் வீரர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த உழைப்பும் திறமைகளும் நமக்குச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
கல்வி, ஒழுக்கம், திறமைகள் இந்த மூன்றையும் கடின உழைப்பு, கட்டுப்பாடு மற்றும் தொடர் முயற்சி போன்றவற்றால் பெற்றுக்கொள்கிறோம். இந்த மூன்றும் நம்மை விட்டுப் பிரியாத அழியாச் செல்வங்கள் ஆகும். மனிதர்களாகிய நாம் இந்த உலகை விட்டுப் பிரிந்த போதும், நம்மை விட்டுப் பிரியாமல் பிறரால் காலந்தொட்டும் பேசப்படுவது இந்த மூன்று அழியாச் செல்வங்களே என்றால் அது மிகையாகாது.
என்னுடைய நண்பர் ஆண்ட்ருவிடம் ஒரு நாள் நான் பேசிக் கொண்டிருக்கும்போது அவரின் பள்ளி அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவர் ஓரியூர் என்ற பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய ஆசிரியர் பொங்கல் விடுமுறையில் கூடுதல் வகுப்புகள் வைத்திருந்தார். பொங்கல் விடுமுறை என்பதால் விடுதி மூடப்பட்டிருந்தது. அவருடைய வீடு பள்ளியிலிருந்து 92 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. இந்தக் கூடுதல் வகுப்பிற்குத் தினமும் இந்த விடுமுறை நாள்களில் எப்படி வருவது என்று சிந்தித்துக் கொண்டிருந்தார். தன் நிலையிலிருந்து சிந்தித்து முடிவெடுப்பதைவிட, அடுத்தவர் பார்வையிலிருந்து முடிவெடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்த அந்த ஆசிரியர் மாணவர்களிடம், ‘யாரெல்லாம் அதிகத் தொலைவிலிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்டார். இவனும் தன் கைகளை உயர்த்தினான். ஆசிரியர் சிறிதும் தயக்கம் இல்லாமல், ‘நீ என்னோடு வந்து என் வீட்டில் தங்கிக்கொள். என் மனைவியும் உனக்கு மூன்று நேரம் உணவு செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறார்’ என்றார்.
இந்த அனுபவம் என் நண்பரின் வாழ்வில் பசுமரத்தாணி போலப் பதிந்தது. மேலும், அவர் சொன்னார்: ‘நான் மட்டும் அங்குத் தங்கி அந்தக் கூடுதல் வகுப்பில் பங்கெடுக்கவில்லை என்றால், இன்று இந்த நிலைமைக்கு உயர்ந்திருக்க முடியாது. அந்த நாள்களில் நான் ஆசிரியரிடமிருந்து என்றும் அழியாக் கல்வியையும், அவரின் ஒழுக்கமான பண்புகளான சேவை மனப்பான்மையையும், எல்லாருக்கும் புரியும் வகையில் வகுப்பு நடத்தும் திறமையையும் கற்றுக்கொண்டேன்’ என்றார் என் நண்பர்.
‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினினும் ஓம்பப் படும்’ (குறள் 131)
என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப ஒழுக்கம் உயரினும் சிறந்தது என்று கூறுகிறார் திருவள்ளுவர். ஒழுக்கத்தில் சிறந்தவர் இறந்தாலும், அவரின் ஒழுக்கம் நிறைந்த பண்புகள் காலத்தால் பேசப்படும். அவர் காலத்தாலும் அழியாத வாழும் மனிதராக எல்லார் மனத்திலும் வாழ்வார்.
‘மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் மன்னற்குத்
தன்தேசமல்லாமல் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு’
என்ற ஒளவையாரின் மூதுரை பாடலுக்கேற்ப, கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கூறப்படுகிறது. கல்வியால் இவர் பெற்ற சிறப்பானது காலத்தாலும் அழியாத சிறப்பாக அவருடைய வாழ்வில் இருக்கும்.
“திறமை என்பது பிறப்பில் வருவது அல்ல; வளர்த்துக் கொள்வது” என்று கிரேக்கத் தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் சொல்கிறார். திறமைகள் அனைத்தையும் நமது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் பெற்றுக்கொள்கிறோம். நாம் பெற்ற இந்தத் திறமைகளும், அதனால் பெற்ற புகழும் என்றும் அனைவராலும் பேசப்படும். இந்தத் திறமைகளே என்றும் அழியாத வரலாறாக இருக்கும்.
நாமும் சிந்திப்போம்: நமது வாழ்வில் என்னென்ன அழியாச் செல்வங்கள் இருக்கின்றன? எப்படி இந்த அழியாச் செல்வங்களை வளர்க்க இருக்கிறோம்?
Comment