No icon

இவர்களால் முடிந்தது என்றால் உங்களாலும்...! -25

ஆசிரியர்களே, நல்வாழ்த்துகள்!

ஆண்டின் ஒவ்வொரு நாளுக்கும் ஏதாவதொரு சிறப்பு உண்டு. யார் யாருக்காக எடுக்கும் விழா என்பதைப் பொறுத்தே அந்த நாள் முக்கியத்துவம் பெறும். இந்த அடிப்படையில் பெரும்பான்மையான விழாக்களுக்கான முக்கியத்துவம் நினைவூட்டப்பட வேண்டி வரும். ஆனால், ஆசிரியர் தினமான செப்டம்பர் 5, டாக்டர் இராதா கிருஷ்ணன் பிறந்த நாள் என்பதால் மட்டுமல்ல; ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுவதால், இதற்கான முக்கியத்துவம் ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே வருகிறது. ஏனெனில், இந்நாள் மாணவர்கள் தங்களைப் பயிற்றுவித்த, பயிற்றுவித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு எடுக்கும் விழா. எவ்வளவு உயரத்துக்கு ஏறிச்சென்றாலும், ஏறிவர உதவிய ஆசிரியர்களை மக்கள் மறப்பதில்லை.

மாணவர்கள் கொண்டாடுவது ஒருபுறம் இருக்க, ஒவ்வோர் ஆசிரியரும் தன்னைத்தானே மதிப்பீடு செய்யும் நாளாகவும், புதுப்பித்துக்கொள்ளும் நாளாகவும் இந்நாள் அமைய வேண்டும். ஏனெனில், இந்நாள்களில் கற்றல்-கற்பித்தல் பணி சாதாரணமானதல்ல; சவால்கள் நிறைந்தது. பலரும் நினைப்பது போன்ற உள்ளீடு-வெளியீடு (கண்ணுக்குப் புலனாகும்) அல்ல; மனமும் உடலும் உள்ளமும் கொண்ட, உயிரும் ஆற்றலும் கொண்ட குழந்தைகள்மீது செலவிடும் நேரமும் உழைப்பும் ஆகும். இதன் பலனை ஏனையவற்றைப் போல உடனுக்குடன் அளக்கவும் முடியாது, பார்க்கவும் இயலாது. கற்றலின் முழு பயனையும் மாணவன் அனுபவிக்கும்போது, அவனுக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியர் எங்கேயோ இருப்பார். ஆனால், நன்றியுணர்வோடு நினைவுகூரப்படுவார்.

மனித வாழ்க்கையானது மிதிவண்டியில் பயணம் செய்வதைப் போன்றது. அது சமநிலையில் சாயாது செல்லவேண்டுமானால், அது முன்னோக்கிச் சென்றுகொண்டே இருக்க வேண்டும்என்று மிகப்பெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் குறிப்பிடுவார். மிதிவண்டியில் இரண்டு சக்கரங்கள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவை சமமாக இயங்க வேண்டும். பணிப்பொறுப்பு என்றால், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு மற்றொரு சக்கரம் பயிற்றுவிக்கும் மாணவர்களின் முழு ஆளுமை வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

இன்றைய ஆசிரியர் பணி சென்ற நூற்றாண்டைப் போன்று மதிப்பானதும், சிரமமற்றதும் அல்ல; படிப்புக்குத் தேவையான பொருள்கள் மட்டுமே இருக்க வேண்டிய புத்தகப் பைகளில், போதைப் பொருள்களும், பேனா பிடிக்க வேண்டிய கைகள் சிலவற்றில் துப்பாக்கியும் இருக்கும் காலமாக இக்காலம் மாறிவருகிறது. இவை எங்கேயோ வெளிநாடுகளில் மட்டுமல்ல, நம் நாட்டிலும்கூட. பச்சிளம் குழந்தையாகப் பத்து ஆண்டு முன்பு அழுதுகொண்டே பெற்றோரின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்த குழந்தை, பத்து ஆண்டுகளின் முடிவில் அறத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகிறதென்றால் ஒருவகையில் ஆசிரியர்களான நாமும் காரணமோ!

தவறு செய்யும் மாணவர்களைத் தண்டிக்கக் கூடாது; தப்பு செய்யும் குழந்தைகளைத் தட்டிக் கேட்கக்கூடாது என்று இருக்கும் இன்றைய நிலையில், ஆசிரியர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை இப்போது என்றால் அது மிகையாகாது. ‘அறப்பணியாம் ஆசிரியப் பணிக்கு உன்னை அர்ப்பணிஎன்ற நிலை திரும்புமா? திரும்பவும் வேண்டும்; தாகத்தோடு பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் படிக்க வரும் சூழலும் உருவாக வேண்டும். நம்புவோம். செடியில் ஈரம் இருக்கும் வரை வேர்கள் காய்வதில்லை. இலைகள் உதிர்வதில்லை. நம்மில் நம்பிக்கை இருப்பது வரை நாமும் தோற்றுப்போவதில்லை.

அன்பான ஆசிரியர்களுக்கு!

மதிப்பெண்களை மட்டும் வைத்து உங்கள் வகுப்பில் பயிலும் மாணவர்களை நீங்கள் ஒரு போதும் எடை போடாதீர்கள். அவர்களுக்குள் உங்கள் அறிவுக்கு எட்டாத ஒரு கலைஞன் இருக்கலாம். நீங்கள் கற்றுக்கொடுக்கும் கணிதம் அவனுக்குத் தேவையும் படாது; புரியவும் செய்யாது. ஏதோ ஒரு மூலையில் வருங்கால தொழிலதிபர் தூங்கிய நிலையில் அமர்ந்திருக்கலாம். அவனுக்கு நீங்கள் கற்பிக்கும் அறிவியல் பாடம் புரியாது. ஒரு சிறந்த எழுத்தாளர், இசைஞானி, விளையாட்டு வீரன், மருத்துவர் என அமர்ந்திருப்பார்கள். உங்கள் கண்களுக்கு அவை மறைக்கப்பட்டிருக்கும்.

அவரவர் திறமைக்கு ஏற்ப வாழ வழிகாட்டுவதே ஒவ்வோர் ஆசிரியரின் கடமை. எங்கோ வாசித்த ஒருசில வரிகளை இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ‘நாம் எப்படி வாழ்ந்தால் நமது வெற்றியை யாரும் தடுக்க முடியாது?’ என்ற தலைப்பில் அது எழுதப்பட்டிருந்தது.

உலாவரும் காற்றாக நீங்கள் இருந்தால்,

உங்களை யாரும் தடுக்க முடியாது;

அலையடிக்கும் கடலாக நீங்கள் வாழ்ந்தால்,

உங்களை யாரும் அளக்க முடியாது;

பெய்யும் மழையாக நீங்கள் இயங்கினால்,

உங்களை யாரும் வேண்டாம் என மாட்டார்கள்!

மலைபோல நீங்கள் உயர்ந்து நின்றால்,

உங்களை யாரும் மறைக்க முடியாது!

கடின உழைப்போடு நீங்கள் செயல்பட்டால்,

உங்களது வெற்றியை யாரும் தடுக்க முடியாது!’

இவற்றை வாழ்ந்து காட்டுவதன் மூலம் மட்டுமே மாணவர்களுக்குக் கற்பியுங்கள். வெறும் வாய் வார்த்தைகளால் இவற்றைப் புரிய வைக்க இயலாது. வாழ்ந்து காட்டுவதைப் பயிலும் மாணவன் தோற்றுப் போகவும் மாட்டான், உயிரை மாய்த்துக்கொள்ளவும் மாட்டான்; சமுதாயத்தில் நஞ்சாக மாறவும் மாட்டான்.

காட்டில் வளரும் மூங்கில்களில் எந்த மூங்கில் புல்லாங்குழலாய் மாறும் என யாருக்கும் தெரியாது. தாம் கற்பிக்க வேண்டிய பாடப்பகுதியைப் பிழை இல்லாமல் பயிற்றுவிப்பதும், முழு மனிதனாக வாழத் தூண்டுவதும் மட்டுமே ஆசிரியர்களின் கடமை. ஐந்து அல்லது பத்து மதிப்பெண்களைக் கூடுதலாக வாங்க வைப்பதற்காக அவர்களது மூளையைச் சலவை செய்து, நுண்ணறிவை மழுங்கச் செய்து, இரசனையைத் திசைமாற்றி, விளையாட்டைக் குறைக்க வைத்து, பொழுதுபோக்குகளைப் பார்க்கவிடாமல் கண்களுக்குக் கடிவாளம் போட்டு, சாவி கொடுத்த பொம்மை போல் இயங்க விடுவதால் என்ன இலாபம்? அவனுக்கு நீண்டகால சாதனை எப்படிச் சாத்தியமாகும்?

மருத்துவமும் பொறியியலும் மட்டுமே படிப்பு அல்ல. தொழில்நுட்பமும் அறிவியலும் பல்வேறு திசைகளில் கிளைகள் பரப்பி வளர்ந்து வருகின்றன. சாதிக்க எத்தனையோ துறைகள் உள்ளன, எத்தனையோ கலைகள் உள்ளன என்பதையும், ஒவ்வொரு மாணவனைக் குறித்தும் படைத்தவனுக்கு ஒரு கனவு உண்டு என்பதையும், அதை நிறைவேற்றப் போதுமான தாலந்துகள் தரப்பட்டுள்ளன என்பதையும், தாயின் கருவில் உருவாகும்போது, எத்தனையோ உயிரணுக்களோடு போட்டியிட்டு வென்றவனால் எதையும் சாதிக்க முடியும் என்பதையும் புரிய வையுங்கள். தோல்விகள் வரும்போது துவண்டுபோகக்கூடாது என்பதை உங்கள் மாணவன் கற்றுக்கொள்வான்.

ஆசிரியப் பயிற்சி பெற்று, மாணவர்களைப் பயிற்றுவிப்பதால் வருமானம் ஈட்டுவதோடு ஆசிரியப் பணி முடிந்துவிடுவதில்லை. ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களின் உள்ளத்தில் இடம்பிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆசிரியரே சிறந்த ஆசிரியராக விளங்க முடியும்.

என்னுடைய உயர்வுக்கு இந்த ஆசிரியரே காரணம்; என் வாழ்வுக்குத் திருப்புமுனை இவர்தான்; இந்தப் பணியில் நான் அமர என் ஆசிரியரே காரணம்; இன்று நான் பேச்சாளனாக, பாடகராக, உயர் அதிகாரியாக, தொழில் வல்லுனராக மாற இவரே காரணம்என உங்களிடம் பயின்ற ஒரு மாணவனாவது உங்களைக் குறித்துச் சொல்வானேயானால் உண்மையாகவே நீங்கள் நல்லாசிரியரே!

ஒரு முக்கியமான நிகழ்ச்சியின்போது வயதான ஆசிரியர் ஒருவரின் கால்களைத் தொட்டு வணங்கிஎன்னைத் தெரிகிறதா?’ என்று கேட்டு நின்றான் வாலிபன் ஒருவன். அவருக்கு அவனைத் தெரியவில்லை. குறிப்பிட்ட ஆண்டைச் சொல்லி நினைவுபடுத்தக் கேட்டுக் கொண்டான். அப்போதும் அவருக்கு அவனைத் தெரியவில்லை. ‘உங்களால்தான் இப்போது நான் ஓர் ஆசிரியராக விருது வாங்கும் நிலைக்கு உயர்ந்திருக்கின்றேன்என்றான் அவன். ‘அப்படி நான் உனக்கு என்னதான் செய்துவிட்டேன்?’ என ஆச்சரியமாகக் கேட்டார் அந்த வயதான ஆசிரியர். அவன் கூறலானான்:

நான் 6-ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது கையில் கடிகாரம் கட்ட வேண்டும் என்பது எனது நீண்டகால ஆசையாக இருந்தது. வீட்டிலோ வாங்கித்தர வசதி இல்லை. பக்கத்தில் இருந்த மாணவன் அவனது புத்தகப் பையில் ஒரு கைக்கடிகாரத்தை வைத்திருந்தான். அதை எப்படியாவது எனதாக்கிக் கொள்ளத் திட்டமிட்டேன். வகுப்பில் யாரும் இல்லாத நேரத்தில் அதை எடுத்து எனது அரைக்கால் சட்டையில் (நிக்கர்) மறைத்து வைத்துக்கொண்டேன்.

தனது பையில் வைத்திருந்த கைக்கடிகாரத்தை காணாததால் அந்த மாணவன் உங்களிடம் முறையிட்டான். நீங்கள் மாணவர்கள் எல்லாரையும் எழும்பி நிற்க வைத்துக் கண்களை இறுக மூடச் சொன்னீர்கள். ஒவ்வொருவர் பாக்கெட்டிலும் கையை விட்டுத் தேடினீர்கள். என் பாக்கெட்டில் தேடினபோது கைக்கடிகாரத்தை எடுத்தீர்கள். ‘இன்றோடு தொலைந்தோம்எனப் பயந்து நடுங்கினேன். நீங்கள் என்னிடம் எதையும் கேட்கவும் இல்லை; தண்டிக்கவும் இல்லை; கோபப்படவும் இல்லை. யாரிடமும் என்னைப் பற்றிச் சொல்லவும் இல்லை.

அன்று என்னுடைய வாழ்வில் மிக முக்கியமான தீர்மானம் எடுத்தேன். யாருடைய பொருள்கள் மீதும் ஆசை வைக்கக்கூடாது என்றும், எந்தச் சூழலிலும் பிறர் பொருளை எடுக்கக்கூடாது என்றும், வளர்ந்து ஆசிரியராகப் பணி செய்ய வேண்டும் என்றும் திட்டமிட்டேன். இன்று அனைத்தையும் கடைப்பிடிப்பவனாக இதோ நான் உங்கள் முன்பு நிற்கின்றேன். இப்போதாவது என்னை நினைவிருக்கிறதா?” என்று மீண்டும் கேட்டான் அந்த வாலிபன். அப் போதும் அந்த வயதான ஆசிரியர்இல்லைஎன்றார். “தேடும் நேரத்தில் நானும் உங்களைப்போல கண்களை இறுக மூடியிருந்தேன்என்றார் ஆசிரியர். அன்றைய அந்த ஆசிரியரால் முடிந்தது என்றால், இதைப்போல் செயல்பட தற்போதைய ஆசிரியர்களாலும் முடியும்.

உலகில் புனிதமான இடங்கள் இரண்டு என்பர். 1. தாயின் கருவறை, 2. பள்ளியின் வகுப்பறை. இந்த இரண்டும் பாவமற்றதாக, பாரபட்சமற்றதாக இருந்தால், வேறு என்ன வேண்டும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு!

Comment