No icon

செப்டம்பர் 14: திருச்சிலுவை திருநாள் சிறப்புக் கட்டுரை

திருச்சிலுவை தெய்வீகத்தின் ஏணிப்படி!

நாம் இவ்வுலகில் பிறந்தபோது நம்மை நம் பெற்றோர் வரவேற்க முதலில் வரையும் வரவேற்பு அருளடையாளம் திருச்சிலுவை. திருமுழுக்கு அருள்சாதனம் வழியாக நம்மைத் திரு அவையில் ஓர் அங்கத்தினராய் சேர்த்திடும் அருளடையாளம் திருச்சிலுவை. கிறிஸ்தவர்களுக்கு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தருவது திருச்சிலுவை. உறுதிப்பூசுதல் மூலம் நம்பிக்கையில் நம்மை உறுதிப்படுத்த ஆயரால் வரையப்படும் அருளடையாளம் திருச்சிலுவை. உயர்ந்தோரிடமிருந்து ஆசிர்வாதங்களை அள்ளித் தந்திட உதவும் அருளடையாளம் திருச்சிலுவை. தீயசக்திகளை விரட்டும் அருளடையாளம் திருச்சிலுவை.

தெய்வீகத்தின் ஏணிப்படி

சாதாரண அப்பத்தையும் இரசத்தையும் கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றிடும் அருளடையாளம் திருச்சிலுவை. நோயில் பூசுதலின் வழியாக மரணத்தைச் சந்திக்க சக்தியைத் தரும் அருளடையாளம் திருச்சிலுவை. நம் அனைவரையும் மீட்பதற்கு இறைமகன் தேர்ந்தெடுத்த அருளடையாளம் திருச்சிலுவை. இவ்வாறு கத்தோலிக்கக் கிறிஸ்தவ மக்களின் அடிப்படையும் ஆணிவேருமாய் அமைந்திடும் அருளடையாளம் திருச்சிலுவை. எனவே, சிலுவை என்பது நமது வாழ்வியல் அறநெறியின் அடிப்படை நோக்கமான தெய்வீகத்தை அடைந்திட மாற்ற முடியாத, மறுக்க முடியாத, விரும்பித் தேர்ந்தெடுக்க வேண்டிய அருளடையாளமாகவும், ஏணிப்படியாகவும் திகழ்கிறது.

மாற்ற முடியாத சிலுவைகள்

இவ்வுலகில் சில காரியங்கள் நம்மால் மாற்ற முடியாதவைகளாய் அமைகின்றன. இவைகள் இறைவன் அல்லது இயற்கை நமக்குத் தந்த சிலுவைகள் எனலாம். பிறப்பிலே ஊனமாகப் பிறப்பதும், தவிர்க்க முடியாத பலவீனங்களோடு பிறப்பதும், நாம் வாழ்கின்றபோதும் சில சிலுவைகள் நம்மை மாற்ற முடியாதவைகளாகவும் அமைந்துவிடுகின்றன.

ஆன்மிக, உளவியல் ரீதியாக இவற்றைச் சிந்திக்கையில், முதலில் இவைகளை உளமார ஏற்றுக்கொள்ள (accept) வேண்டும். இரண்டாவது நமதாக்கிக்கொள்ள (personalize) வேண்டும். இவை இரண்டையும் உளமாரச் செய்துவிட்டால் பாதி தீர்வு கிடைத்துவிடும்.

இந்நிலையில், நமது பலம் எதில் உள்ளது? என்று சிந்தித்துப் பார்ப்பது அவசியம். அதில் நமது ஆன்மிக, உளவியல் சக்தியைப் பயன்படுத்தி, நாம் நமது வாழ்வில் உயர்வதற்கு வழிவகைகளைத் தேடி, திட்டமிட்டுச் செயல்படுத்தும்போது தெய்வீகத் தன்மையை அடைந்திடலாம்.

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஆளுமை வளர்ச்சி போன்றவை நம்மிடம் தேவைப்படும் உளவியல் விழுமியங்களாகும். ஆன்மிகச் சக்தியானது மேற்கூறிய உளவியல் விழுமியத்தில் தடைகள் ஏற்படும்போது அதைத் தாங்கிக்கொண்டு, தொடர்ந்து போராட உதவிடும் விழுமியம் ஆகும். மாற்ற முடியாத சிலுவைகளை ஏற்றுக்கொண்டு வெற்றியடையும்போது, முழு மனிதம் வெளியாகிறது. அதனால் தெய்வீகத்தில் அம்மனிதர் ஒளிர்வதைப் பார்க்கலாம். கை, கால்கள் இன்றி பிறந்த நிக்வுஜிசிக் என்பவர் நற்செய்தியைப் போதிக்கும் மனிதர் ஆகிறார். இது ஓர் அற்புத எடுத்துக்காட்டு ஆகும்

மாற்ற முடிந்த சிலுவைகள்

இக்காலக்கட்டத்தில் யாருக்கும், எப்பொழுது எதுவும் நடக்கலாம். எதிர்பாராதவிதமாகப் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுகிறது, உடல்நலம் பாதிக்கப்படுகிறது. விபத்துகள் மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்படுகிறோம். இவ்வாறு நிகழும்போது நாம் முதலில் நமது உள்ளத்தை, எதையும் சந்திக்கத் தயாரான மனப்பக்குவத்தில் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மாற்ற முடிந்த சிலுவைகளைச் சந்திப்பதில் நேர்மறை மனப்பக்குவம் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இவைகளை இறைத்திட்டமாக ஏற்றுக்கொள்வதற்கு ஆன்மிகப் பலத்தை நாடி, நமது இலக்கை நிர்ணயித்து, திட்டமிட்ட செயல்பாட்டில் ஈடுபடும்போது நம்மிடம் உள்ள  முழு மனிதத் தன்மை சக்தியுடன் மலர்கிறதுஅதுவே தெய்வீகத் தன்மையில் நம்மை ஒளிர்விக்கிறது.

விரும்பித் தேர்ந்தெடுக்கும் சிலுவைகள்

) தன் முன்னேற்றத்திற்கு: தனது வளர்ச்சிக்காகத் தனது இலக்கை அடைந்திட, ஒரு மனிதன் தானே விரும்பித் தேர்ந்திடும் சிலுவைகள். இதில் எவ்விதப் பிறர்நலம் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால், இறைவன் தனக்குத் தந்த கொடைகளை, திறமைகளை, பலங்களை, பலவீனங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு தெளிவடைவார்கள். அதன்பின் தனது பலம் என்ன என்பதை அறிந்து, அதில் தனது இலக்குகளைப் பதித்து, கடின உழைப்புடன் உழைப்பார்கள். தனக்கு வரும் தடைகளையும் சிலுவைகளையும் தன்னம்பிக்கையுடனும், ஆன்மிகப் பலத்துடனும் எதிர்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள். தனது இலக்கை அடைந்திட சிலுவைகளைத் தானே தேர்ந்துகொள்வதுடன், எதிர்வரும் சிலுவைகளையும் சந்திப்பார்கள்.

தாலந்து உவமையில் ஐந்து மற்றும் இரண்டு தாலந்துகள் பெற்றவர்கள், மீண்டும் அவைகளை வைத்து  இரட்டிப்பாக்கியதைப் பாராட்டுகிறார் இயேசு (லூக் 19:11-27). நிச்சயமாக இத்தகைய மக்களின் திறமையாலும் முயற்சியாலும் மற்றவர்கள் பயனடைவார்கள் என்பது எதார்த்தம். இப்படித் தன்முயற்சியிலும் இறைநம்பிக்கையிலும் முழு மனிதம் வெளிப்படுவதால் தெய்வீகம் ஒளிர்வதைப் பார்க்கலாம்.   

 ) பிறருடைய வாழ்விற்காக: தானே மனமுவந்து, எந்தவித வற்புறுத்தலும் இன்றி பிறருக்காகச் சிலுவைகளை மனமுவந்து ஏற்று, இறுதி மூச்சுவரை தனது வாழ்வை அர்ப்பணிக்கும் மனிதர், வாழும்போதே முழுமனிதத்தில் மலர்ந்து, தெய்வீகத்தில் ஒளிர்வதை உணரலாம். அன்னை தெரேசா வாழும்போதே பலர் அவரிடம் இருந்த தெய்வீகத்தைக் கண்டுணர்ந்தனர்.

ஆயர் ஆஸ்கர் ரொமேரோ, திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், ஸ்டேன் சுவாமி போன்ற எண்ணற்ற மனிதர்கள் வாழும்போதே சிலுவைகளைப் பிறருக்காக மனமுவந்து ஏற்றுக்கொண்டதால் தெய்வீகத்தில் சிறந்து இருப்பதைப் பார்க்கலாம்.

இவ்வாறு சிலுவைகளை விரும்பி ஏற்ற புனிதர்களின் இரத்தத்தால்தான் திரு அவை வளர்ந்திருக்கிறது. பிறரின் முன்னேற்றத்திற்காக விரும்பிச் சுமந்து தனது வாழ்வைப் பலியாக்கும் மனிதர்களால்தான் திரு அவை தொடர்ந்து வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இதில் எத்தனையோ பெயர் சொல்ல முடியாத குருக்கள், துறவியர்கள், பொதுநிலையினர் அடங்குவர். இவர்கள் அனைவரையும் தெய்வீகத்திற்கு உயர்த்தும் அடிப்படையும் ஆணிவேருமாய் திகழும் ஏணிப்படி அவர்கள் எதிர் நோக்கும் சிலுவைகளே!

சிலுவைகளை எதிர்கொள்ள சில உத்திகள்

வாழ்வில் சிலுவைகள் என்பது சில மாற்ற முடியாதவை, சில மாற்ற முடிந்தவை, சில விரும்பித் தேர்ந்தெடுக்க வேண்டியவை என்பது இன்றைய எதார்த்தம்.

முதலில் ஏற்றுக்கொள்வோம், நமதாக்குவோம், திட்டமிடுவோம். செயல்படுத்துவோம் வெற்றியடைவோம்.

மாற்ற முடியாத சிலுவைகளைச் சந்திக்கும்போது பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்து தாழ்வுமனப்பான்மையை வளர்த்துக்கொள்ளக்கூடாது. இரண்டாவதாக, இறைவனைக் குறை சொல்லி ஆன்மிக வாழ்வில் அதிருப்தி அடைவதில் எந்தப் பயனும் இல்லை.

மனிதரிடமிருந்து எதை வேண்டுமானாலும் பறித்துக் கொள்ளலாம். ஆனால், ஒரு மனிதனின் இலக்கையும் மனப்பாங்கையும் (attitude) யாரும் பறிக்க முடியாது. எனவே, இலக்கையும், நமது மனப்பாங்கையும் சரியாக வைத்துக் கொண்டால் சிலுவைகளைச் சுமப்பது எளிது என்கிறார் விக்டர் பிராங்கிளின் என்ற உளவியல் அறிஞர்.

நேர்மறை மனப்பாங்கு மிக அவசியம். ஒரு நாளில் மிகக் கடினமான சிலுவைகளாகப் பார்க்கப்பட்ட அனுபவங்கள் இப்பொழுது பல ஆசிர்வாதங்களாக அமைவதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு சிலுவையும் ஓர் உயிர்ப்பை உணர்த்தும் அருளடையாளம் என்பது நமது கிறிஸ்தவ விசுவாசம்.

சில சிலுவைகள், கூட்டு ஒருங்கிணைந்த செயல்பாடாகச் (synergy) சந்திக்கும்போது, அது எளிதாகிறது, வெற்றியை உறுதிப்படுத்துகிறது.

அதிக மனத்துன்பங்களையும், உடல் துன்பங்களையும் அனுபவிக்கும்போது இறை இயேசுவின் பாடுகளோடு ஒன்றித்துச் சிந்தித்து, மன ஆறுதல்  அடைந்திட  முயற்சிக்கலாம்.

வாழ்வின் அர்த்தத்தைத் தெரிந்துகொண்டால், வாழ்வில் வரும் துன்பங்கள் மறைந்து போக வேண்டும் என்றார் விக்டர் பிராங்கிளின் என்ற உளவியல் அறிஞர். அற்புதமான வாழ்வியல் உண்மை!

மாற்ற முடிந்த சிலுவைகளைச் சந்திக்க அறிவியல் மனப்பான்மையுடன் கூடிய திட்டமிடுதல் அவசியம். திட்டமிடத் தவறும் போது தவறு செய்திடத் திட்டமிடுகிறோம்.

எதிர்பாராது நடக்கும் சிலுவைகளுக்கு நாம் ஆன்மிக, உளவியல் பலத்தை வளர்த்து, நம்மையே தயாரித்துக் கொள்ளவேண்டும்.  

தெய்வீகத்தின் ஏணிப்படிகளான

சிலுவைகளைச் சிந்திப்போம்.

இறைத்தூதர்களாய்

மண்ணில் வாழ்ந்திடுவோம்!

Comment