No icon

அக்டோபர் 01: லிசியு நகர் செல்வம் குழந்தை இயேசுவின் புனித தெரேசா!

இயேசுவை அன்பு செய்ய எளிய வழி!

என் குட்டி மகள் பிறந்து விட்டாள். என்ன அழகு! எத்துணை அழகு!” பிரான்சு நாட்டில் லிசியு நகரில் மார்ட்டின் - செலி தம்பதியருக்குக் கடைக்குட்டி செல்வ மகளாய்ப் பிறந்தவள் சின்னராணி. குழந்தையுள்ளம் கொண்ட இளவரசி. பதினைந்தாம் வயதில் கார்மெல் துறவு வாழ்வை ஏற்றவள். ஒன்பது ஆண்டுகள் கார்மெல் மடத்தை விட்டு வெளியே செல்லாதவள். இருப்பினும் அவளின் எளிய செய்தி ஆயிரக்கணக்கான உள்ளங்களில் இன்றும் எதிரொலிக்கிறது.

திருத்தந்தையரின் சான்றுகள்

பேதுருவின் ஆட்சிப் பீடத்தை அலங்கரித்த திருத்தந்தையர் பலரும் குழந்தை தெரேசாவின் வாழ்வையும், அவரது போதனையையும் அதிகாரப்பூர்வமாக அறிக்கையிட்டு உறுதி செய்துள்ளனர். திருத்தந்தை 10-ஆம் பத்திநாதர்நவீன காலத்தின் மிகப்பெரிய புனிதைஎன அறிக்கை செய்தார். திருத்தந்தை 15-ஆம்  பெனடிக்ட்கார்மெல் சபையின் எளிய சகோதரி தெரேசா, தனது புகழ்மிக்க தத்துவத்தால் பெண் குலத்திற்கே அணி செய்துள்ளார்என்றார்.

திருத்தந்தை 11-ஆம் பத்திநாதர்தெரேசா ஓர் இறைவனின் வார்த்தை, ஆன்மிக வாழ்வின் ஆசிரியை, மீட்படைய ஒரு நிச்சயமான வழியைக் காண்பிக்க இறைவனால் அனுப்பப்பட்டவள், நம்மை நிறைவுக்கும் அன்பின் முழுமைக்கும் இட்டுச் செல்லும் ஒரு சிறிய வழிகாட்டி, உலகனைத்தும் நேசிக்கிற குழந்தை. ஆன்மிக வாழ்வின் தலைவிஎனப் புகழாரம் சூட்டினார். இவரே 1927-ஆம் ஆண்டு புனித சவேரியாருடன் மறைத்தூதுப் பணியின் இணைப் பாதுகாவலராக இவரை அறிக்கையும் செய்தார். இவரைத் தனது தலைமைப் பீடத்து விண்மீன் என்றார். “நற்செய்தி அறிவுறுத்தும் விண்ணக மறைபொருளைப் புரிந்துகொள்ள அருள்பெற்ற சிறியவர்களுள் தெரேசாவும் ஒருவர்என்கிறார் திருத்தந்தை 16 -ஆம் பெனடிக்ட். திருத்தந்தை பிரான்சிஸ்தெரேசாவின் வாழ்வும் எழுத்துகளும்நாங்களும் உங்களுடன் வர விரும்புகிறோம்என்று சொல்லப் பணிக்கிறதுஎன்கிறார்.

புதிய பாதை

ஆன்மிக குழந்தைமை வழி அல்லது சிறுவழி என்பதுநம்பிக்கையின் வழி அது கடவுளுக்கு முழு கையளித்தலின் வழி. நாம் செய்ய வேண்டியது ஒன்றே! சிறு சிறு தியாக மலர்களை இயேசுவின் பாதங்களில் தூவுவது, இதமாக அப்பாதங்களை வருடிக் கொடுப்பதன் வழியாக அவரது உள்ளத்தைக் கொள்ளை கொள்வது. இவ்வாறுதான் நான் அவரைச்சிக்கென பற்றிப் பிடித்துள்ளேன்என்கிறார் தெரேசா. ‘சிறு குழந்தையாகவே ஒருவர் எப்படி தொடர்ந்து இருக்க முடியும்?’ என்று கேட்டபோது, “நமது ஒன்றுமில்லாமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். தந்தையிடமிருந்து அனைத்தையும் எதிர்பார்த்திருக்கும் குழந்தைபோல ஆண்டவரிடமிருந்து நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும். எதைப் பற்றியும் கவலைப்படாமல், சிறியவராய் இருப்பதில் திருப்தி அடைய வேண்டும். சிறு தியாக மலர்களைச் சேகரிப்பதில் மட்டுமே ஆர்வமுள்ளவர்களாய் நம் நல்ல ஆண்டவரின் மகிழ்ச்சிக்காக அவற்றை ஒப்புக்கொடுத்தலிலும் இது அடங்கியுள்ளதுஎன்றார். புனிதம் என்பது ஓர் அகச்சார்பு நிலை, ஓர் உள்ளுணர்வு. அது கடவுளது கரங்களில் நம்மைத் தாழ்ச்சியுள்ள சின்னஞ்சிறியவராக மாற்றுகிறது, நமது பலவீனங்களை உணரச் செய்து, நம் தந்தையின் நன்மைத்தனத்தில் துணிச்சல் நிறைந்த நம்பிக்கை கொள்ளச் செய்கிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தெரேசாவின் சொந்தச் சான்று

தெரேசா தனது கோட்பாடுகள் ஆண்டவரிடமிருந்தே வருவதாக உறுதிபட உணர்ந்தார். அன்னை ஆக்னசிடம்நான் எழுதியுள்ளவை எல்லாம் நம் நல்ல ஆண்டவரிடமிருந்து வந்தவையேஎன்று சொன்னார். தன் நவதுறவு கன்னியர்களுக்கு, “எனது அன்பின் சிறுவழி உங்களைத் தவறான வழிக்கு இட்டுசெல்லுமெனில், நீங்கள் அதை அதிக காலம் கடைப்பிடிப்பதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். நான் இறந்த பிறகு மீண்டும் வருவேன். வந்து சரியான வேறொரு பாதையை நான் காட்டுவேன். ஒருவேளை நான் மீண்டும் வராமலே போய் விட்டால், நான் உரைப்பதை உறுதியாக நம்புங்கள்! ஆற்றலும் இரக்கமும் நிறைந்த நம் நல்ல ஆண்டவர்மீது நாம் ஒருபோதும் மிஞ்சின நம்பிக்கை வைக்க இயலாது என்பதே உண்மை! நாம் அவரிடம் நம்பிக்கை வைக்கும் அளவுக்கு அவரிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம்!” என உறுதி அளித்தார்.

தெரேசா தனது போதனைகளைத் திருத்தம் செய்வதற்காகத் திரும்ப வரவில்லை. ஆனால், 1910, சனவரி 15க்கும், 16க்கும் இடைப்பட்ட இரவில் இத்தாலியில் உள்ள கல்லிப்போலி கார்மெல் மடத்துத் தலைமை சகோதரிக்குத் தோன்றிஎனது வழி உறுதியானது!” என்று தெளிவாகக் கூறினார்.

நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்த பணி ஆர்வம்

எனது பணி இப்போதுதான் தொடங்க இருப்பதாக நான் உணர்கிறேன். எனது சிறிய வழியை ஆன்மாக்களுக்குக் கற்பிப்பதும், நல்ல ஆண்டவரை நான் நேசிப்பதுபோல அவர்கள் நேசிக்கச் செய்வதும் எனது அருள்பணி. எனது விருப்பங்கள் நிறைவேறுமென்றால், மண்ணிலேயே எனது விண்ணக வாழ்வை உலகம் முடியும்வரை செலவிடுவேன். ஆம், எனது விண்ணக வாழ்வை மண்ணகத்தில் நற்செயல்கள் செய்வதிலேயே செலவிட விரும்புகிறேன். இன்னும் மீட்க வேண்டிய ஆன்மாக்கள் இருக்குமானால் உலகம் முடியும் வரை என்னால் ஓய்வெடுக்க இயலாது. வானதூதர்கள் இனிமேல் நேரமில்லை என்று சொன்ன பிறகு, நான் ஓய்வெடுப்பேன். ஏனென்றால், விண்ணுலகிற்குத் தெரிவு செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை நிறைவு பெற்றிருக்கும். எல்லாரும் பேரின்ப வீட்டில் இளைப்பாறிக் கொண்டிருப்பார்கள். இந்தச் சிந்தனைகளால் எனது உள்ளம் மகிழ்ச்சியால் அக்களிக்கிறதுஎன்று தனது பணியைக் குறித்து மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

மேலும், “விண்ணில் எனக்காகக் காத்திருக்கும் மகிழ்ச்சியைப்பற்றி நான் அதிகம் சிந்திப்பதில்லை. எனது இதயத்தைத் துடிக்க செய்வது இதுதான். நான் பெறவிருக்கும் அன்பையும், நான் அளிக்கவிருக்கும் அன்பையும் பற்றியதே. எனது மரணத்திற்குப்பிறகு நான் ஆற்றவிரும்பும் நன்மைகளைப்பற்றியே சிந்திக்கிறேன். குறிப்பாக, குருக்களுக்கும், மறைப் பணியாளர்களுக்கும், திரு அவைக்கும் உதவி புரிவதைப் பற்றியே அதுஎன்றார் ஆர்வத்துடன்.

தொடரும் திருப்பணி

தனது ஆன்மிகச் சிறுவழியை அனைவரும் பின்பற்றக் கூடுமாயிருக்கும்படி தனக்கென சிறப்பான இறை அருள்கொடை எதையும் அவர் விரும்பவில்லை. ‘மலர்களைத் தூவுதல்என்ற எளிய செயலின் தத்துவத்தில் அன்றாட வாழ்வு வழங்கும் சிறு சிறு வாய்ப்புகளையும் அன்புக்காக அர்ப்பணித்து, 1897 -ஆம் ஆண்டு  செப்டம்பர் 30 -ஆம் நாள் இறையன்பின் எரிபலியானார். நம்மையும் அவ்வாறே செய்ய அறிவுறுத்துகிறார்.

அவரின் இந்தக் கூற்றுஎன்னைவிட வலுவற்றதும், என்னைவிட குறையுள்ளதுமான ஓர் ஆன்மா உலகின் எந்த மூலையிலாவது இருக்குமானால், அந்த ஆன்மா என்னைப்போல் நிபந்தனையின்றித் தன்னை முழுவதும் இறைவனுக்குக் கையளிக்குமானால் என்னில் செய்ததைவிட மகத்தானவற்றை நல்ல இறைவன் அந்த ஆன்மாவில் செய்வார் என உறுதியாய் நம்புகிறேன்என்றார்குழந்தை தெரேசாவின் விழாவைக் கொண்டாடும் நாமும் அவர் விரும்புவதுபோல சிறு சிறு தியாக மலர்களை இயேசுவின் பாதங்களில் தூவலாமே!

Comment