No icon

‘கிறிஸ்து வாழ்கிறார்'

இளைஞர் மாமன்றம் - 2023 ஏன்?

2018 ஆம் ஆண்டு, 15 ஆவது ஆயர் மாமன்றம் ‘இளைஞர்கள்: நம்பிக்கை, அழைத்தலுக்கான தெளிந்து தேர்தல்’ என்ற கருப்பொருளில் இளைஞர்களை மையப்படுத்தி நடைபெற்றது. அதன் முடிவில் மாமன்ற இறுதி ஆவணம் வெளியிடப்பட்டது. அதில், “மாமன்ற செயல்பாட்டின் முடிவு, அதன் பயன்களைச் சேகரிக்கும் ஆவணம் ஆகியன இணைந்து பயணிக்கும் செயல்முறையை நிறைவு செய்து விடவில்லை; மாறாக, ஒரு மைல்கல்லை உருவாக்கியுள்ளது. இளைஞர்களின் உறுதியான நிலைமைகள், உண்மையான சாத்தியங்கள், உடனடித் தேவைகள் ஆகியன நாடுகளுக்கும், கண்டங்களுக்கும் இடையில் மிகவும் வித்தியாசமாக இருந்தாலும், ஒரே நம்பிக்கையின் பொதுத்தன்மை இருப்பதால், இந்த மாமன்றத்தில் செய்தது போல, ஆயர்களாக இல்லாதவர்களையும் விவாதங்களில் இணைத்துக் கொண்டு, குழுமத் தெளிந்து தேர்தல் செயல் முறைகளில் ஆயர் பேரவைகளையும், குறிப்பிட்டத் திரு அவைகளையும் இந்தப் பாதையைத் தொடர அழைக்கிறோம். இந்த திரு அவை பாதைகளின் பாணியில், குறிப்பாக, விளிம்பு நிலையிலுள்ள இளைஞர்கள், திரு அவை சமூகங்களுடன் சிறிதளவு அல்லது தொடர்பே இல்லாதவர்கள் ஆகியோரிடம் அருள்பணி நோக்கு நிலைகளை வளர்க்கும் நோக்கத்துடன், உடன் பிறந்தாருக்குச் செவிமடுத்தல், தலைமுறைகளுக்கு இடையேயான உரையாடல் ஆகியன இடம் பெறவேண்டும்’ (எண். 120) என, வலியுறுத்தப்பட்டுள்ளது. மாமன்ற முடிவுகளை செயலாக்க நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2019 ஆம் ஆண்டு, ஏப். 02 அன்று, ‘கிறிஸ்து வாழ்கிறார்’ என்ற திருத்தூது ஊக்கவுரையினை வெளியிட்டார். அதில் ‘இளைஞர் பணி இணைந்து பயணித்தலாக இருக்க வேண்டும். அது ஒன்றாகப் பயணம் செய்வதை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், திரு அவையின் ஒவ்வொரு உறுப்பினரின் அழைப்பு, பொறுப்பிற்கு ஏற்ப ஆவியார் அருளும், தனி வரங்களை மதிப்பதாகவும் இருக்க வேண்டும்’ (எண். 206) என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2019 ஆம் ஆண்டு, ஏப். 02 அன்று வெளியிட்ட ‘கிறிஸ்து வாழ்கிறார்’ என்ற திருத்தூது ஊக்கவுரையின் முடிவுகளைத் தமிழ்நாடு திரு அவையில் செயல் படுத்த 2020 ஆம் ஆண்டினை, தமிழ்நாடு ஆயர் பேரவை இளைஞர் ஆண்டாக அறிவித்தது. தமிழ்நாடு ஆயர் பேரவையின் அனைத்துப் பணிக்குழுக்களும், இளைஞர் பணிக்குழுவோடு இணைந்து,   இளைஞர் ஆண்டைக்  கொண்டாடவும், இளைஞர்களுக்குத் தங்களது பணிக்குழுக்களின் செயல்பாடுகளில் பங்கேற்பு வழங்கவும், சிறப்புத் திட்டங்களை உருவாக்கின. பல்வேறு பயிற்சிகள், நிகழ்வுகள், செயல்பாடுகள் ஆகியவற்றுடன், இளைஞர் ஆண்டின் சிறப்புச் செயல்பாடாக ‘இளைஞர் மாமன்றம்’ கொண்டாடப்பட வேண்டும் என, முடிவெடுக்கப்பட்டது. அதற்கான செயல்திட்டங்களும் வகுக்கப்பட்டன. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இளைஞர் ஆண்டின் அனைத்துச் செயல்பாடுகளும் முடங்கியதால், இளைஞர் மாமன்றத்தைச் செயல்படுத்த இயலவில்லை.

கடந்த 2021 ஆம் ஆண்டு, அக்டோபர் 10 அன்று, 16 ஆவது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான செயல் முறையினைத் தொடங்கிவைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள் மாமன்றத்தின் செயல் முறையானது மறைமாவட்டங்களிலும், பங்குகளிலும் கொண்டாடப்பட வேண்டும். அனைவரிடமிருந்தும் பதில்கள் பெறப்பட்டு, அறிக்கைகள் தொகுக்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டு, உரோமையில் நடைபெற உள்ள 16 ஆவது ஆயர்கள் மாமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்ற, அழைப்பினை விடுத்தார். அதற்கேற்ப, 2021 ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் நமது மறைமாவட்டங்களிலும், பங்குகளிலும் மாமன்றம் தொடங்கப்பட்டு, இணைந்து பயணிக்கும் (மாமன்ற) செயல் முறையின் அடிப்படையில், கலந்துரையாடல் பங்கு, மறைவட்டம், மறைமாவட்டம் ஆகிய தளங்களில் நடத்தப்பட்டது. கருத்துகள் தொகுக்கப்பட்டு, தமிழ்நாடு ஆயர் பேரவை வழியாக இந்திய ஆயர் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இச்செயல்முறையில் மறைமாவட்ட, மறைவட்ட, பங்குத் தளங்களில் ஒருசில இளைஞர்களே பங்கேற்றனர். பெரும்பாலான இளைஞர்களுக்கு இதனைப் பற்றிய தெளிவோ, அனுபவமோ இல்லை. இச்செயல்முறையில் பங்கேற்க அவர்கள் வரவேற்கப்படவில்லை. அவர்களது கருத்துகள் கேட்கப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. குரலற்றவர் களின் மெல்லிய குரலும், ஓங்கி ஒலிக்க வேண்டிய செயல்முறையில் இளைஞர் பங்கேற்காதது பெரும் குறை என்பது, அனைவராலும் உணரப்பட்டுள்ளது. திரு அவையில் தாங்கள் பயன்படுத்தப்படுகிறோம் என்ற உணர்வினை பல இளைஞர்கள் தொடர்ந்து வெளிப்படுத்துகின்றனர். தங்களை அங்கீகரிக்கவில்லை என்ற உணர்வும், அவர்களிடம் உண்டு. திருவழிபாடுகளில் வெறும் பார்வையாளர்களாக இருப்பதால், தங்களது உணர்வைத் தொடும் வழிபாடு தேவை என எண்ணுகின்றனர்.  பங்குகளில் உள்ள முடிவெடுக்கும் பங்கேற்பு அமைப்புகளில் எவ்வித பங்கேற்பும் வழங்கப்படுவதில்லை. மூத்தோர் தங்களைப் போட்டியாளர்களாகக் கருதி ஒதுக்குகின்றனர். இவைபோன்ற காரணங்களால் பெரும்பாலான இன்றைய இளைஞர்கள் திரு அவைக்கு வெளியே வாழ்கின்றனர்.

இங்ஙனம், ஒதுங்கியும், ஒதுக்குதலுக்கும் உள்ளாகியுள்ள ஆண், பெண் இளைஞர்கள் திரு அவையில் வரவேற்கப்படுவதற்கான தளங்கள் உருவாக்கப்பட வேண்டிய தேவையை நமது தமிழ்நாடு ஆயர்கள் உணர்ந்துள்ளனர். இளைஞர்களைச் சந்திக்கவும், அவர்களோடு உரையாடவும், அவர்களது உணர்வுகளுக்கும், கேள்விகளுக்கும் செவிமடுக்கவும், அவர்களோடு இணைந்து செயல்படுவதும் காலத்தின் கட்டாயம் என்று, நமது ஆயர்கள் கருதுகின்றனர்.

இளைஞர் இயேசுவின் உயிராற்றலுடைய ஆண், பெண் இளைஞர், ஒன்றிக்கும் தூய ஆவியாரால் இயக்கமாக இணைந்து, ஒருவருக்கொருவர் செவிமடுத்து, தூய ஆவியார் தங்களுக்குச் சொல்ல விரும்புவது என்ன என்பதை, திறந்த உள்ளத்துடன் செவிமடுத்துச் செயல்பட முன் வரவேண்டும். அனைவரும் பங்கேற்கக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய குறிப்பாக, சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் விளிம்பு நிலையில் உள்ளவர்களது குரல்களுக்குச் செவிமடுத்து, செயல்படுத்தும் வாய்ப்பை திரு அவையும், இளைஞர்களும் பெற வேண்டும். இறைமக்கள் மற்றும் சமூக நன்மைக்காகத் தூய ஆவியார் தாராளமாகப் பொழிகின்ற பல்வகை வரங்களையும், அருட்கொடைகளையும், கனிகளையும் கண்டுணர வேண்டும். உலகைப் புதிதாய்க் கட்டியெழுப்பும் முயற்சியில் பொறுப்புடன் பங்கேற்றுச் செயல்படுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். சமூக உரையாடல், நலமாக்குதல், ஒப்புரவு, பங்கேற்பு ஆகியவற்றின் குடிமைச் சமூகங்களை வலுப்படுத்துவதன் மூலம், இறையாட்சிச்

சமூகத்தை வளர்த்தெடுக்க வேண்டும். நற்செய்திக்கு எதிர்ச்சான்று பகரும் சிந்தனைகள், செயல்கள் ஆகியவற்றை புறந்தள்ளி, நற்செய்திக்குச் சான்றுபகர வேண்டும். கிறித்தவ குழுக்களின் உறுப்பினர்களிடையிலும், பிற கிறித்தவ சபைகள், பிற சமயங்கள், மக்கள் இயக்கங்கள் ஆகியவற்றுடனும் உரையாடி, உறவாடி, ஒத்துழைப்பை வளர்க்க வேண்டும்.

மேற்காணும் நோக்கங்களுக்காகத் தமிழ்நாடு திரு அவையில் இளைஞர் மாமன்றம் - 2023 ஐ தமிழ்நாடு திரு அவையில் முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளனர். அதற்கேற்ப தமிழ்நாடு திரு அவையில் எதிர்வரும் ஆகத்து 07 அன்று, அனைத்துப் பங்குகளிலும் கொண்டாடப்பட உள்ள இளைஞர் ஞாயிறு கொண்டாட்டத்தோடு, இளைஞர் மாமன்றம் - 2023  ஐத் தொடங்குகின்றோம்.

Comment