சிங்கப்பூர் பேராயரின் எச்சரிக்கை!
செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சிங்கப்பூருக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக வத்திக்கான் திருப்பீடம் தெரிவித்துள்ளது. இப்பயண நிகழ்வுகளில் மற்றும் திருப்பலியில் கலந்து கொள்வதற்கான படிநிலைகள் என்ன என்று இறைமக்கள் ஆர்வமாகத் தேடி வரும் நிலையில், ஒருசில தனியார் அமைப்புகள் திருத்தந்தையின் திருப்பயணத்தோடு தொடர்புடையவர்கள் எனக் காட்டிக்கொண்டு இணையதளம் மூலமாக இதற்கான அனுமதிச் சீட்டுகளை விற்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை அறிந்த சிங்கப்பூர் உயர் மறைமாவட்டத்தின் பேராயர், திருத்தந்தையின் திருப்பலியில் பங்கேற்க விரும்புபவர்களுக்கான அனுமதிச் சீட்டு அனைத்தும் இலவசம் என்றும், திருத்தந்தையின் பயண நிகழ்வுகளில் பங்கேற்பது தொடர்புடைய அனுமதிச் சீட்டுகளுக்குத் திரு அவையின் அதிகாரப்பூர்வத் தளத்தை மட்டுமே நாடுமாறும் இறைமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தவறான நபர்களால் சேகரிக்கப்படும் இறைமக்களின் விவரங்கள் பின்னாள்களில் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய ஆபத்து இருப்பதையும் சிங்கப்பூர் பேராயரின் தகவல் தொடர்பு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. புனித திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் 1986-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி சிங்கப்பூருக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார், அதன் பிறகு தற்போதுதான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருப்பயணம் இடம்பெற உள்ளது.
Comment