No icon

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

சூடு தணியாத ‘சூடு’

படுகொலைக்குப்பின்

2018, மே 22 இல் தூத்துக்குடியில் நடைபெற்ற கோரப் படுகொலை மூட்டிய அனலும், சூடும் தணியாமல் தூத்துக்குடி மக்கள் வாழ்கின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் 13 பேர் என்றும், அடித்துக் கொல்லப்பட்டவர் செல்வ மிதிஷின் என்றும், நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்கள் கணக்கு சொல்லியுள்ளார்கள். துப்பாக்கிச் சூடு தொடர்பாக கொல்லப்பட்டவர்கள் மொத்தம் 16 பேர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 13 பேர் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடு முடிந்து, 2 மணி நேரம் கழித்து, 3 கிலோ மீட்டர் தள்ளி, போராட்டத்திலே ஈடுபடாத பக்கத்து வீட்டுக்குப் போய் கொண்டிருந்த திருமதி. ஜான்சி எனும் அம்மாவை காவல் துறை அநியாயமாகச் சுட்டுக்கொன்றது. அடுத்த நாள் சுடப்பட்டவர்களின் உடல் வைக்கப்பட்ட பொது மருத்துவமனைக்கு முன்னால் கூடிய இளைஞர்கள் துரத்தப்பட்ட போது, காளியப்பன் எனும் இளைஞரைச் சுட்டுக் கொன்றது. இறந்த ஓர் ஆளின் உடலை, காலைப்பிடித்துத் தரதரவென்று இழுத்துக்கொண்டு வண்டியில் வீசும் கொடூரத்தை எல்லாம் பார்த்தனர். பக்கத்து ஊரில் இவைகளால் கொதித்துப்போனவர்கள் ஒரு பேருந்துக்குத் தீ வைத்தனர். தீயில் மாட்டி ஓர் அம்மா இறந்து போனார்கள்.

இறந்தவர்களையும், காயம்பட்டவர்களையும் எடுத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவில்லை. .மு.மு. நண்பர்களும், நல்லதம்பி மருத்துவமனையும் ஆம்புலன்ஸ் கொண்டு வந்தனர். காவல் துறையின் வஜ்ரா, தண்ணி பீச்சியடிக்கும் எந்திரம், தீயணைப்புப் படை, ஆம்புலன்ஸ் போன்றவை ஸ்டெர்லைட்டுக்குப் பாதுகாப்பாய் நின்றன.

இந்தக் கொதிப்பு தணிவதற்கு முன் தூத்துக்குடியில் கருப்புச் சட்டை, ஜெபமாலை போட்டுத்திரியும் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் காவல்துறை பிடித்துக் கொண்டு போவதாகச் செய்தி பரவியது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு களப்பணியாளர்கள் தேடத் தொடங்கினர். வழக்கறிஞர் குழு தேடலில் இறங்கியது. காவல் துறை அங்கே, இங்கே எனவும், தெரியாது எனவும் போக்குக் காட்டியது. வழக்கறிஞர் அதிசய குமார் போன்றவர்களின் தலைமையில் அன்றைய மாவட்ட நீதிபதி திருமதி. சாருகாசினி என்பவரிடம் முறையிட்டனர். வழக்கறிஞர்களும், மாவட்ட நீதிபதியும், 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துப்பாக்கிச் சூடு தளத்தில் 98 இளைஞர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்தனர். திருமதி. சாருகாசினி அவர்கள், காவல் துறையுடன் மல்லுக்கட்டி, விடாப்பிடியாக நின்று, தம்பிகளை விடுவித்தார். இரண்டு நாட்களாக அவர்களுக்கு நடந்த அடி, உதை, கொடுமையை வழக்கறிஞர்கள் மூலம் பட்டியலிட்டபின்பே இளைஞர்களைப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அடுத்த நாளே மானிட உரிமைக் காப்பாளர் திரு.ஹென்றி டிபேன் தலைமையில், உண்மை அறியும் களப்பணி தொடங்கியது. 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் தூத்துக்குடி களப்பணியாளர்களுடன் இணைந்தனர். கொல்லப்பட்டவர்கள், அடிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் இல்லங்களைத் தேடிப்பிடித்துப் பல சிரமங்கள், எதிர்ப்புகளுக்கு மத்தியில் 1400 பக்கத்தில் அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதுவே நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்கள் பிறகு சாட்சிகளைத் தேடிச் சென்று விசாரிக்கப் பெரிதும் துணைசெய்திருக்க வேண்டும்.

உண்மை அறியும் ஆய்வு அறிக்கை ஆங்கிலத்தில் லொயோலா கல்லூரியில் வெளியிடப்பட்டது. கல்லூரிக்குப் பல சிக்கல்களை காவல் துறை தந்தது. வெளியீட்டு விழாவிற்குச் சென்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தவரையும் காவல்துறை விரட்டி விரட்டிப் பிடித்தது. அறிக்கையின் சுருக்கம் தமிழில் தூத்துக்குடியில் வெளியிடப்பட்டது. வெளியிட ஒப்புக்கொண்ட ஒவ்வொரு மண்டபமும் மிரட்டப்பட்டது. அன்றைய முதல்வர் எடப்பாடியின் காவல்துறை கண்ணியமின்றி நடந்தது. இறுதியில் தூத்துக்குடி மறைமாவட்டத்துக்குச் சொந்தமான நற்செய்தி நடுவ அரங்கில் அறிக்கையை வெளியிட ஆயர் இவோன் அம்புரோஸ் அவர்கள் அனுமதி தந்தார்கள். காவல்துறை போட்ட முட்டுகட்டைகளுக்கு அளவே இல்லை. அதையும்மீறி, கர்நாடகாவிலிருந்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி திருமதி. கனிமொழி போன்றவர்கள் கூடிவந்து, அறிக்கையை வெளியிட்டனர்.

அதுபோலவே, இறந்தவர்களுக்கு நினைவேந்தல் கூட்டங்கள் நடத்தவும், எடப்பாடி காவல்துறையினர் தடுப்புகளைப் போட்டனர். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வாலின் அடியாட்கள் போலவே செயல்பட்டனர். மானுட உரிமை என மூச்சுகூட விட முடியவில்லை. இதுபோன்ற நிகழ்வுகளால் தூத்துக்குடி மக்களின் சூடுதணியாமல் இருந்தது.

அகர்வால் கிளப்பும் சூடு

கொஞ்சநாள் பம்பிக்கிடந்த ஸ்டெர்லைட் நிர்வாகம் தன்வேலையைக் காட்டத் தொடங்கியது. ஸ்டெர்லைட் ஆதரவுக் கூட்டமைப்பு என்ற ஓர் அமைப்பைத் தொடங்கி, மக்களை விலைக்கு வாங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மக்களைப் பிடித்து, மாவட்ட ஆட்சியரிடம் போய், ஸ்டெர்லைட்

மூடியுள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் போய்விட்டதாக ஒவ்வொரு திங்களும் மனு கொடுக்கவைத்தனர். ஒவ்வொரு வாரமும் வருகின்ற அச்சிறு கூட்டம் பற்றி சில ஏடுகள் பெரும் விளம்பரம் கொடுத்தன. போராட்டத்தில் ஈடுபட்ட கடற்கரை ஊர் மக்களின் பெயரால் யார்யாரோ மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தனர். ஸ்டெர்லைட்டைத் திறந்தால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தவர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துப் பேசி, உண்மை நிலவரத்தை எடுத்துரைத்தனர். ஆலையில் பராமரிப்புக்காக அனுமதியுங்கள் என, நிர்வாகம் தொடர்ந்து வழக்குகள் போட்டது. அத்தனையும் மக்கள் உதவியால் நீதிமன்றத்தில் தோற்றுப்போனது. கொரோனா சமயங்களில் ஆக்சிஜன் உற்பத்திக்காக போராட்டக்காரர்களுடன் பேசி, மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது. ஆனால், தேவை முடிந்ததும் மீண்டும் ஸ்டெர்லைட் மூடப்பட்டது.

இதற்குள் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என ஸ்டெர்லைட் பல வழக்குகள் தொடுத்து, திறக்கப்பார்த்தது. பேராசிரியர் பாத்திமா பாபு போன்றவர்களின் முயற்சியால் ஸ்டெர்லைட் நிர்வாகம் வெற்றி பெற முடியவில்லை. இறுதி வழக்கு ஒன்று உள்ளது. உச்ச நீதிமன்றம் என்ன சொல்லும் என மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர். இன்றைய தி.மு. அரசின் ஒத்துழைப்பு கிடைப்பது கொஞ்சம் நிம்மதி. ஆயினும், அகர்வாலின் பணபலம், அரசியல் பலத்தை எண்ணி மக்கள் சூடுதணியாமல் உள்ளனர்.

அருணா  ஜெகதீசன் அறிக்கை

சூடுதணியாத தூத்துக்குடி மக்களின் சூட்டைச் சற்று தணித்துள்ளது அருணா ஜெகதீசன் அவர்களின் அறிக்கை. விரிவான, ஆழமான, நியாயமான, உண்மையின் பக்கம் நின்று, எழுதப்பட்ட அறிக்கை என எல்லாரும் பாராட்டுகிறார்கள். இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கே சென்று, கதவைத் திறக்க மனமில்லாதவர்களுடைய இல்லங்களையும் மீண்டும் மீண்டும் சந்தித்து, ஆறுதல்கூறி, கரங்களைப்பற்றி, கண்ணீர் சிந்தி சாட்சியம் அளிக்க மக்களை வரச் செய்த பெருமை நீதியரசர் அருணா ஜெகதீசனைச் சாரும். மாவட்ட நீதிபதிகள் எனத் தகுதி உள்ள இருவர், அரசு வழக்கறிஞர், உதவிக்குப் பல வழக்கறிஞர்கள், ஆணைய உறுப்பினர்கள் அனைவரும் மக்களுக்கு நீதி வழங்குவதில் குறியாய் இருந்துள்ளனர்.

36 கட்டங்களாக, 1426 பேருக்கு விசாரணை அழைப்பு விடுத்து, 3000 பக்க அறிக்கை தரப்பட்டுள்ளது. 38 வழக்குகள் தள்ளுபடி, மன உளைச்சலுக்கு ஆளான 93 பேருக்கு நிதி உதவி, பலத்த காயம்பட்ட 64 பேர், லேசான காயம்பட்ட 40 பேர் என, அனைவருக்கும் இழப்பீடு நிதி, முந்தைய அரசு அறிவித்த இழப்பீடு நிதியைக் கூட்டி வழங்குதல் என, மக்கள் பக்கம் நிற்கிறார் அருணா ஜெகதீசன்.

இதை விசாரணை அறிக்கை என்பதைவிட, மக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பாகப் பார்க்க வேண்டும் என்கிறார் மானுட உரிமைப் போராளி ஹென்றி டிபேன்.

அறிக்கையைச் சட்டமன்றத்தில், மக்கள் முன்வைக்க 5 திங்கள்கள் காலதாமதமானாலும், ஊர் உலகு அறிய தெரியப்படுத்திய தி.மு. அரசையும் எல்லாரும் பாராட்டுகின்றனர்.

விசாரணை அறிக்கை அன்றைய ஆட்சி அதிகாரத்தின் உயர் அதிகாரிகளையும், காவல்துறைத் தலைவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. அவர்கள் ஆணையத்திலும் பொய் சொன்னார்கள் எனப் போட்டு உடைத்துள்ளது. காவல்துறைக்கும், வருமான வரித்துறைக்கும் உறவு மிகவும் கேவலமாக இருந்ததுடன், 100 நாள் போராட்டத்தின் உச்சகட்டத்தைச் சந்திக்ககூடிய, திட்டமில்லாத கையாலாகத்தனத்தை ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது. உயர் காவல் துறையினரின் பெயர்களைக் குறித்தோ, அவர்கள் கடமையைக் கை கழுவிவிட்டு ஓடிவிட்டனர் என்றும், ஆணையத்தில் நம்பகத்தன்மையற்ற சாட்சியம் தந்தனர் என்றும் குத்திக்காட்டியுள்ளது.

மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளருக்கும் CBI க்கும் CCTV படம் பிடித்ததில் கருப்புச்சட்டை போட்ட சிலர் புகுந்து ஆடியுள்ளனர். அவர்கள் யார் என விசாரியுங்கள் என ஆணையம் கூறியது. அது பற்றிய ஒத்துழைப்பு எதுவுமில்லை எனக் கடிந்துள்ளார்.

பொய்களையும், அடாவடிப் பேச்சுகளையும் ஆணைய அறிக்கை அம்பலப் படுத்தியுள்ளது. பொது மக்கள் மீது CBCIDயும், CBIயும் வைத்த குற்றச் சாட்டு தவறானது என என்பித்துள்ளது. மக்கள் உடைக்கவோ, எரிக்கவோ வரவில்லை. கைக்குழந்தைகளுடன் உணவுப் பொட்டலங்களுடன் அமைதிவழிப் போராட்டத்துக்கே வந்துள்ளனர். அவர்களை நீங்கள் குறிபார்த்துச் சுட்டுள்ளீர்கள். 4 இடத்திலிருந்தும், மறைவிடங்களிலிருந்தும், பின்பக்கமாக நின்றும், பின்னந்தலை, முதுகு, வாய் எனக் கண்மூடித்தனமாக சுட்டுள்ளீர்கள் என்ற குட்டை நீதியரசர் உடைத்துவிட்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வண்டிகளைப் போராட்டக்காரர்கள் எரித்தபின் தான், துப்பாக்கியை எடுத்தோம் என்று, காவல்துறை கூறிய பொய்யையும், அம்பலப்படுத்திவிட்டார் அருணா ஜெகதீசன். துப்பாக்கிச் சூட்டுக்குப்பிறகுதான் எரிக்கப்பட்டுள்ளன என உரக்கச் சொல்லிவிட்டார்.

வலதுசாரிகள் உள்ளே புகுந்ததால், துப்பாக்கி சூடு என்ற ரசினிகாந்தின் அலம்பலையும் அம்பலப்படுத்தியுள்ளார். எடப்பாடி அவர்களின் முகமுடியும் கிழிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என முழுப்பூசணிக்காயையும் சோற்றில் மறைக்கப்பார்த்த எடப்பாடி அவர்களையும், மிகவும் வன்மையாகச் சாடியுள்ளார் அன்றைய தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி இராஜேந்திரன், உளவுத்துறை சத்திய மூர்த்தி என மேலதிகாரிகள் எடப்பாடிக்கு நிமிடத்துக்கு நிமிடம் தகவல் தந்துள்ளனர். எடப்பாடியின் அலட்சியமும், அசட்டைத்தனமுமே அனைத்துக்கும் காரணம் என்று அப்பட்டமாகக் கூறிவிட்டார் நீதியரசர். சட்டம் ஒழுங்கைக் கையில் வைத்திருந்த எடப்பாடி தான் அனைத்துக்கும் பொறுப்பு என ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், குற்றத்தில் நேரடியாகவோ அல்லது ஏதோ ஒரு விதத்திலோ தொடர்புடைய அனைவரின் பங்களிப்பையும் பறைசாற்றியுள்ளது. கலவரத்தில் மக்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளது. தொடர்புடைய எல்லா காவல்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளையும் பெயர் சொல்லிப் பட்டியலிட்டு, அம்பலப்படுத்தியுள்ளது. இது மக்கள்மீது நடத்தப்பட்ட, திட்டமிட்ட தாக்குதல்  என, ஆவணப்படுத்தி உள்ளது. எனவே, தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் எனும் சூடு பிடித்துள்ளது.

சூடு தணிய எதிர்பார்ப்பு

கடந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக தந்த உறுதிமொழியை நினைவு கூர வேண்டும். "ஸ்டெர்லைட் படுகொலையில் தொடர்புடையவர்கள் கூண்டில் ஏற்றப் படுவார்கள்" இந்த வாக்குறுதியை இப்போது முதல்வர் மனசாட்சியின்படி, எந்தச் சமரசத்துக்கும் இடமில்லாமல் நிறைவேற்ற வேண்டும். திரு. ஹென்றி டிபேன் கூறுகிறார்திரு. இறையன்பு, திரு. உதயச்சந்திரன் போன்று முதல்வருக்கு நெருக்கமான செயலர்கள் மாறுபட்ட அழுத்தமாக தந்தாலும், முதல்வர் ஏற்கக்கூடாது. இதுவே, மக்கள் எண்ணம். முதல்வர் இப்போது எடுக்கும் முயற்சிகள் போதாது. தொடர்புடையவர்களாக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளவர்களை இடைநீக்கம் செய்வது மட்டும் தீர்வல்ல; பணி நீக்கம் செய்துவிட்டு, நேர்மையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை கவனக்குறைவால்  அல்ல; மாறாக, எடப்பாடியின் காவலர்கள் துப்பாக்கிச் சூட்டிற்காகக் கூட்டுச்சதி செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதற்குக் குற்றவியல் வழக்குத் தொடர வேண்டும் அல்லவா?

ஆணையத்தின் முடிவுகளைச் சட்டமன்றத்தில் வைக்க 5 திங்கள்கள் கடந்தன. அதற்குள் நடவடிக்கை எடுப்பதற்கான செயல் திட்டத்தையும் அறிவித்திருக்கலாமே என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில், அரசின் பரிந்துரை இல்லாமல் சட்டமன்றத்தில் அறிக்கை வைக்கப்பட்டுள்ளது.

காவல் துறையின் செயல்பாடுகள் பற்றி ஆராய CBIக்குப் பொறுப்பு தரப்பட்டது. அது ஒரே ஒரு காவலரைக் குற்றவாளியாக்கி உள்ளது. 16 பேர் படுகொலைக்கு எப்படி ஒருவர் திட்டமிட்டார், செயல்பட்டார்? காவல்துறையை விட்டு விட்டு CBI  மக்களைக் குறைசொல்கிறது. ஆணையத்தின் அறிவிப்புப்படி CBIயின் முடிவைப் புறந்தள்ள வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் வேல் முருகன், ஜவஹிருல்லா, கொங்கு ஈஸ்வரன், காங்கிரஸ் பொதுவுடைமைக் கட்சியினர் கேட்டுக்  கொண்டபடி  திரு.எடப்பாடி மீது குற்றவியல் நடவடிக்கை தேவை.

துப்பாக்கிச்சூடு ஸ்டெர்லைட்டின் சதிப்பின்னலா? எடப்பாடி ஆட்சியின் தூண்டுதலா? காவல்துறையின் பேரமா? எனப் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆணையம் விடைதரவில்லை. வேதாந்தா பற்றிய எந்தக் குறிப்பும் விசாரணை அறிக்கையில் இல்லை. ஸ்டெர்லைட்டின் பங்கு விசாரணைக்கு வரவில்லை. ஸ்டெர்லைட் தனக்கு பாதுகாப்புக்கேட்டு அரசு அதிகாரிகளோடு, பேசியது வெட்ட வெளிச்சம். அது பற்றி ஏன் விசாரிக்க வில்லை. CCTV படத்தில் தெரியும் 20க்கும் மேற்பட்ட கருப்புச் சட்டைக்காரர்கள் காவலர்களுடன் திரிகின்றனர். அவர்கள்  ஸ்டெர்லைட்டின் அடியாட்களா?

சூடு தணியாமல் மக்கள் இந்தக் கேள்விகளைக் கேட்கின்றனர்.

Comment