No icon

வளரும் அலட்சிய அரசியல்

மறையும் பொறுப்பேற்கும் அறநெறி

“அலட்சியம் பெரிய நூல்களை எழுதியதில்லை, புதிய அற்புத கருவிகளைக் கண்டுபிடித்ததில்லை, ஆன்மாவைத் திகைக்க வைக்கும் மாபெரும் கட்டிடங்களை நிறுவியதில்லை, உள்ளத்தை உருக்கும் இசையைப் பாடியதில்லை, சித்திரங்களைத் தீட்டியதில்லை, மக்களுக்குப் பணி செய்ய உன்னதமான தர்மங்களை மேற்கொண்டதுமில்லை. மேன்மைக்குரிய இந்தச் செயல்களெல்லாம் ஊக்கத்தினாலும், உற்சாகத்தினாலும், இதயபூர்வமாகச் செய்யப் பெறுகின்றன. உலகில் அடக்க முடியாத அசுரன் அலட்சியம்” (ஆனஸ்). இலட்சியத்திற்கும், அலட்சியத்திற்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கிச் சொல்ல இதைவிட வேறு வார்த்தைகள் தேவையில்லை. இலட்சியவாதிகளின் தியாகத்தால் கட்டமைக்கப்பட்ட பல ஒன்றியங்களாலான இந்தியா, இன்று அலட்சியவாதிகளின் சுயநலத்தால் வீழ்கிறது; அழிகிறது.

அலட்சியப் போக்குகளின் ஆதிக்கம் அரசியலில் இன்று கொடிகட்டிப் பறக்கிறது. தன் பிள்ளைக்காக நீதி கேட்ட பசுவினையும் அலட்சியம் செய்யாது, நீதி வழங்கிய மனுநீதி சோழனின் மண்ணில், இன்று கண்டு கொள்ளாமல் இருத்தல், கவனிக்காமல் விட்டுவிடுதல், பாராமுகம், உதாசீனம், தலைவலி என்று ஒதுக்குதல், யார் என்ன செய்து விடுவார்கள் என்கிற மெத்தனம், பதவி கைக்கு வந்துவிட்ட வெகுளித்தனம் இன்றைய தலைவர்கள் மற்றும் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களிடம் மலிந்து விட்டது. அரசியல் அறமற்ற நாட்டில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. இது வெட்கக்கேடு.

அரசியலுக்காய் எதையும் செய்யும் கூட்டம்

அறம் பேண அனைத்தையும் செய்த சமூகம் நம் முன்னோர் சமூகம். காரணம் அறநெறி தத்துவங்களை, கொள்கைகளை வாழ்வியலின் அரசியலாகக் கொண்டாடியவர்கள் அவர்கள். உண்மைக்கு, நேர்மைக்கு, எளிமைக்கு இலக்கணமாய் தலைவர்கள் வாழ்ந்தார்கள். இன்று, முன்னேற்றம் என்ற பெயரில் எவ்வளவு மாற்றங்கள், பின்னேற்றங்கள். சித்தாந்தத் தத்துவமாக விளங்கிய அரசியல், இன்றைய தலைமுறைக்கு ஆரவார கூச்சலிடும் சந்தையாக மாறிவிட்டது. ஊடகங்களில் வலம் வரும் எதுவாயினும் அதனை அடுத்தவருக்கு கடத்துவதோடு தங்களது கடமை முடிந்துவிட்டதாய் நினைக்கிறது.

உண்மை என்பதற்கு வழியில்லை, விலையில்லை. யார் அதிகமாக கூச்சலிடுகிறார்கள், யார் மீது அதிக ஊடக வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது, யார் அதிக பணபலம், படைபலம் கொண்டிருக்கிறார்கள், அவர்களே தலைவர்களாகக்         காட்டப்படுகிறார்கள். இதனால், இந்த சமூகத்தில் ஏற்படும் பக்கவிளைவுகள் ஏராளம். உண்மைத் தலைவன் யார் என்பதனை செயலால் நிரூபித்த காலம் மறைந்து, பேசிப் பேசியே ஊடகங்களை விலைக்கு வாங்கி, போலியை உண்மையாய் திரும்ப திரும்ப உரக்கச் சொல்லும் ஊதாரித்தனம்தான் தலைமையின் அடையாளமானது எவ்வளவு சாபக்கேடு. போகிற போக்கில் சிக்சர் அடித்தால் போதும். எந்தவித அடிப்படைத் தரவுகளும் தேவையில்லை, பேசுவதில் உண்மை இருக்க வேண்டுமென்ற அவசியமுமில்லை. உடனே ஊடக வெளிச்சத்தில் தங்கள் இருப்பை மட்டுமல்ல; மக்களின் ஈர்ப்பையும் கவர்ந்து விடலாம். அண்ணாமலை போன்ற வகையறாக்களின் செயல்பாடுகள் இதுவாகத்தான் உள்ளது.

மக்கள் தங்களுக்கு தரும் பொறுப்பை சரிவர செய்ய முடியவில்லையென்றால், மக்களிடம் மன்னிப்பு அல்லது வருத்தம் தெரிவித்து, பதவி விலகுவது அல்லது சரியான நபரிடம் அந்த பணியை ஒப்படைப்பதுதான் நல்ல தலைமைக்கு அழகு. மேலை நாடுகளில் இதனை சகஜமாகப் பார்க்க முடிகிறது. சமீபத்திய இரு உதாரணங்கள். நிலவும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் பதவியேற்ற வெறும் 45 நாட்களிலே பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ்  தனது பதவியை ராஜினாமா செய்தார். இது முதல் உதாரணம். மற்றொன்று, சமூக வலைதளமான டுவிட்டரை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியதைத் தொடர்ந்து, டுவிட்டர் நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் உட்பட பலரை ஒரே நாளில் பணி நீக்கம் செய்தார். இதற்கு டுவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டார். அவர் வெளியிட்ட பதிவில், “டுவிட்டரில் முன்பு பணியாற்றியவர்கள் மற்றும் இப்போதும் பணியாற்றுபவர்கள், வலிமையான மற்றும் நெகிழ்ச்சியானவர்கள். எவ்வளவு கடினமான தருணத்திலும் அவர்கள் எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள். பலர் என் மீது கோபமாக இருப்பதை நான் உணர்கிறேன். எல்லாரும் ஏன் இந்த நிலைக்கு ஆளாகினார்கள் என்பதற்கு நான் பொறுப்பு: நான் நிறுவனத்தின் அளவை மிக விரைவாக வளர்த்தேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அறத்தை விற்று பிழைக்கும் தலைமைகள் உள்ள சமூகத்தில், இந்தியா எல்லா நிலைகளிலும் வீழ்ந்து கொண்டிருக்கிறது. 100 நாட்களில் பண மதிப்பிழப்பு பலன்தரவில்லை என்றால், என்னை எரித்து விடுங்கள் என்றவர், இன்றும் வெட்கமின்றி பொய்ப்பிரச்சாரங்களை முன்னெடுத்து பிரதமராக வலம் வருவதை வேறு எந்நாடும் சம்மதிக்காது. தகுந்த ஆளுமையும், அர்ப்பணமும் அற்ற மற்றும் குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட யாரையும் வேறெந்த நாட்டு மக்களும் தலைவர்களாய் அங்கீகரிக்கவும் மாட்டார்கள். அப்படியெனில் குற்றம் மக்களாகிய நம்மிடமும் உள்ளது. சில்லறைகளுக்காய் அல்லறைகளாய் அலைகிறோம்; மதம் என்ற  பெயரில் மனிதத்தை மறக்கிறோம். யார்தான் யோக்கியர்கள் என்கிற நிலைப்பாட்டில் அயோக்கியர்களை அங்கீகரிக்கிறோம். கொண்டு வரும் திட்டங்களிலும் அறமில்லை, செய்யும் செயல்களிலும் திறனில்லை. எதையும் கண்டுகொள்வதுமில்லை. நமக்கு அதைப் பற்றிய கவலையுமில்லை. எங்கு செல்கிறது நம் பொதுவெளி வாழ்வியலுக்கான அறநெறி?

பொறுப்பேற்காதது வெட்கமில்லையா ஜி...?

இங்கு பொறுப்பிற்கு வந்துவிட்டால் வாய்ச்சவுடால் இருந்தால் மட்டும் போதும், சூடு சொரணை எதுவும் தேவையில்லை போல! கடந்த 2016 மார்ச் 31 இல் மேற்கு வங்கம் கொல்கத்தாவின் விவேகானந்தர் சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் கட்டுமானத் தொழிலாளர்கள் 27 பேர் இறந்தனர். இதனைக் கேள்விப்பட்ட உடனே மோடி ஜி இப்படிச் சொன்னார் : “மேம்பாலம் இடிந்தது, இது கடவுளின் செயல் அல்ல; மாறாக, மோசடியால், ஆள்வோரின் ஊழலால் நிகழ்ந்துள்ளது. இந்த மாநிலத்தை ஆள்வது எப்படிப்பட்ட அரசு என்பதை மக்களுக்குப் புரிய வைக்கும் வகையில் வேண்டுமானால் இது கடவுளின் செயலாக இருக்கலாம். இன்றைக்குப் பாலம் இடிந்து விழுந்துள்ளது. நாளை முழு மாநிலமே சேதம் அடையலாம் என்ற கருத்தை கடவுள் இதன் மூலம் உணர்த்தியிருக்கிறார். இந்த மாநிலத்தை மேற்கொண்டு அழிவிலிருந்து காக்க வேண்டும் என்பதற்காக இந்த செய்தியைக் கடவுள் விடுத்திருக்கிறார்!”. மோர்பி தொங்குபால விபத்திற்கும் இது பொருந்தும்தானே ஜி அவர்களே!

கடந்த அக்டோபர் 30 ஆம் நாள், குஜராத்தின் மோர்பி நகர் 143 ஆண்டு பழமையான தொங்குபாலத்தில் ஏராளமானோர் ஒரே நேரத்தில் திரண்டதால் தாங்கு கம்பிகள் பட்டென்று அறுந்து விழுந்தது. இதில் 53 குழந்தைகள் உள்பட 141க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக நேரடியாகவும், முக்கியமாகவும் தொடர்பில்லாத 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த நிறுவனம், துணை ஒப்பந்த நிறுவன உரிமையாளர்கள் யாருமே கைது செய்யப்படவில்லை. விபத்து குறித்து கேள்விப்பட்டதும் வழக்கம் போல கவலையுற்று, நீலிக்கண்ணீர் வடித்தார் ஜி. தொலைக்காட்சியில் நானும் அதைப் பாhத்தேன். மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று, சிகிச்சை பெறுகிறவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவரது வருகையை முன்னிட்டு, மருத்துவமனைக்கு இரவோடு இரவாக வர்ணம் பூசியதையும் நாம் கண்டோம். வழக்கமான கண்துடைப்பு நிவாரணமும், விசாரணையும் நீள்கிறது.

நடைபெற்ற ஊழலைப் பற்றியோ, சரிவர கடைப்பிடிக்காத செயல்திட்டம் பற்றியோ, அனுபவமற்ற நிறுவனத்திற்கு கைமாறிய டெண்டர்கள் பற்றியோ பாஜக கள்ள மௌனம் சாதிக்கிறது. கூடுதலாக ஜியும் அவரது சகாக்களும் நித்திரையில் உள்ளார்கள். ஏன் இந்த வேடத்தனம்? தனது பிரதமர் பதவிக்கு வேடம் புனைந்த மாநிலம் என்பதாலா? தனது கட்சி ஆளும் மாநிலம் என்பதாலா? இந்தக் கள்ள மௌனம். பா.சிதம்பரம் சொல்வது போல, “இந்திய அரசியல் நிர்வாக அமைப்பில் எந்த ஒரு தவறுக்கும், துயரகரமான செயலுக்கும், தோல்விக்கும் யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்குப் பதிலே கிடையாது. விபத்துக்குப் பிறகு, யாருமே அரசின் சார்பிலோ, பொதுவாகவோ மக்களிடமோ, பாதிக்கப்பட்டவர்களிடமோ மன்னிப்பு கோரவில்லை. யாரும் தார்மீகமாக பொறுப்பேற்றுக்கூட பதவி விலக முன்வரவில்லை. அரசின் விமர்சகர்கள் கூறுவதைப்போல, இந்த விபத்துக்கு யாரையும் பொறுப்பாக்குவதோ, அவருக்குத் தண்டனை வழங்குவது கூட நிர்வாகத் தரப்பில் நடக்காது.” மக்களாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் கடைப்பிடிக்கும் அறநெறி இதுதான்.

இந்திய அரசியலில் அறம் செத்துப் போய் விட்டதா? இல்லை; அரசியல் என்றாலே அறத்தை எதிர்பார்க்கக்கூடாது என்பதுதான் இன்றைய நியதியா? சிந்திப்போம்! அறம் பேசுவோம், அறம் பழகுவோம். அறம் கடைப்பிடிப்போம்.

Comment