No icon

ஜோடோ யாத்ரா - 100

கற்றதும் பெற்றதும்

ங்கு எதிர்க்க வேண்டியவை பல, ஆனால் எதிர்ப்பவர்கள் வெகுசிலர்.

இங்கு ஒழிக்க வேண்டியவை  பல. ஆனால், ஒதுங்கி நிற்பவர்களோ வெகுபலர்.

இங்கு கண்டிக்க வேண்டியவை பல. ஆனால், கண்டுகொள்ளாமல் கடப்பவர்களோ பலர்.

இங்கு பகிரங்கப்படுத்த வேண்டியவை பல. ஆனால், உயிருக்கு பயந்து பதுங்கி நிற்பவர்களோ பலர்.

காரணம்?

அருந்ததிராய் வார்த்தைகளில் உரைப்பதாயின், “இங்கு பேசமுடியாதவர்கள் என யாரும் இல்லை. அவர்கள் வலுக்கட்டாயமாக ஊமையாக்கப்பட்டவர்கள். அவர்களின் குரல்களுக்கு நாம் செவிமடுக்கத் தேவையில்லை என்று வேண்டுமானால் நாம் அந்த மக்களை வகைமைப்படுத்தலாம்” சர்வாதிகாரத்தின் உச்சம் இதுதான்.

ஆட்சியில் பெரும்பான்மை உள்ளது என்கிற ஆணவம், அக்கிரமங்களை மூடி மறைக்க ஊடகங்கள் தங்கள் பக்கம் உள்ளது என்கிற அகங்காரம், தங்களைத் தாண்டி அதிகார மையங்கள் எதுவும் செய்ய முடியாது என்கிற அடக்குமுறை, பணமழையில் எப்போதும் நனைய கார்ப்பரேட்டுகள் கைவசம் என்கிற மெத்தனம். இவையனைத்தும் சேர்ந்து இந்திய ஜனநாயகத்தைக் காவுகொள்ளும் பாசிச அரசின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்கு சாவுமணி அடிக்கவே ராகுலின் பாரத் ஜோடோ!

நூறு நாட்களைக் கடந்து

“பாதயாத்திரை என்பது நிலத்துக்கு அடியில் ஏற்படும் மாற்றங்களைப் போன்ற நிகழ்வு. அது வாயைத் திறந்து எதையும் சொல்வதில்லை, அனுபவத்தில் உணர வைக்கிறது” (யோகேந்திரயாதவ், அரசியல் செயல்பாட்டாளர்). ராகுலின் நடைபயணத்தில் வார்த்தைகளை விட செயல்களே அதிகம் பேசுகின்றன. படைதிரளும் மக்கள் கூட்டமும், அறிவுசார் உலகின் மேதைகளின் பங்கேற்பும் இதற்குச் சான்று. கார்ப்பரேட் ஊடகங்கள் இதனை திட்டமிட்டே இருட்டடிப்பு செய்தாலும் காற்றுக்கு என்ன வேலி!

காந்தியின் தண்டியாத்திரை இந்திய விடுதலை வேள்வியில் ஒரு மைல்கல் என்றால், ராகுலின் பாரத் ஜோடோ இந்திய ஒற்றுமை பயணத்தின் இன்னொரு படிக்கல். நடப்பது உடலுக்கு ஆரோக்கியமெனில் பொதுநல இலக்கோடு மேற்கொள்ளும் நடைபயணம் என்பது நலமான எதிர்காலத்திற்கான வெளிச்சம். வரலாறு கற்றுத்தருவது போன்று நடந்தே பயணிப்பது என்பது போராட்ட யுக்திகளில் ஒன்று. குமரி முதல் காஷ்மீர் வரை நடந்து சென்று, யூடியுப் கண்டென்ட்டுகளை உருவாக்கும் இளைஞர்கள் இன்று சாதனையாளர்கள் எனில், பொதுநலனுக்காக நடப்பவர்கள் சாதனையாளர்களையும் தாண்டி, தரித்திரம் நீக்கிய சரித்திர நாயகர்கள். அவ்வகையில் ராகுலின் பயணத்தை வரலாறு என்றும் பேசும். குமரியில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, தொடங்கிய பயணம் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் (டிசம்பர் 20) 100 ஆவது நாளை எட்டியது. இதனைக் கொண்டாடும் வகையில், காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு அதன் முகப்பு படத்தை (DP) “யாத்திரையின் 100 நாட்கள்” என்று மாற்றியது.

ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் 10:30 மணியிலும், மீண்டும் மாலை 3:30 மணி முதல் 6:30 மணி வரையிலும் நடந்து, தினமும் 22 முதல் 23 கிலோ மீட்டர் தொலைவினை கடக்கிறார் ராகுல். மொத்தம் 3,750 கிலோ மீட்டர் தொலைவு நடந்து காஷ்மீரின் ஸ்ரீ நகரை வந்தடையவிருக்கும் இந்த நடைப்பயணம் எதை சுட்டிக்காட்டுகிறது என்கிற அலசல் அவசியம். இதுவே விமர்சனங்களை அள்ளி வீசும் பாஜக-வுக்கு நாம் கொடுக்கும் பதிலடியாக அமையும்.

ராகுல் கண்டதும் கற்றதும்

ஒரு நல்ல தலைவனின் பண்புகளை பட்டியலிட்டால் நான்கு காரியங்கள் முன்னிலைப்பெறும். அதாவது, 1.கண்டுகொள்வது, 2. கற்றுக்கொள்வது, 3. கடைபிடிப்பது மற்றும் கரம் கொடுப்பது. அன்றாட வாழ்வில் சாமானிய மக்கள் சந்திக்கும் சவால்களை நெருக்கடிகளை அகல கண்களைத் திறந்து கண்டுகொள்வது. காணும் சூழல்களிலிருந்து மாற்றத்திற்கான படிப்பினைகளைக் கற்றுக்கொள்வது. சூழல் கற்பிக்கும் மதிப்பீடுகளை செயல் வடிவங்களாக்கி கடைபிடிப்பது. அதன்வழியாக முன்னேற துடிக்கும் மனிதர்களை கரம் கொடுத்து எழ வைப்பது. இதுதான் ராகுலின் நடைபயணத்தில் நிகழ்ந்திருக்கிறது எனலாம்.

மத்திய பிரதேசம் இந்தூர் மாவட்டத்தில் பயணம் நடந்து கொண்டிருந்த தருணம் பத்திரிகையாளர்கள் ராகுலிடம், “இப்பயணத்தில் உங்களுக்கு மிகவும் திருப்தியான தருணம் எது?” என்கிற கேள்வியை முன் வைத்தனர். அதற்கு ராகுல் சொன்ன பதில் மேற்காணும் நல்ல தலைவனுக்குரிய கூறுகளை உறுதி செய்கின்றன. “திருப்தியான தருணங்கள் பல உள்ளன. ஆனால், என்னுள் ஏற்பட்ட சில சுவையான மாற்றங்களை நான் கண்டு வியக்கிறேன். முதலாவது, இந்த பாதயாத்திரையால் எனது பொறுமை கணிசமாக அதிகரித்துவிட்டது. முன்னர் குறைந்தது இரண்டு மணி நேரத்திற்குள்ளாக கோபம் வந்துவிடும். இப்பொழுது 8 மணி நேரமானாலும் அப்படியல்ல; இரண்டாவது, மற்றவர்கள் சொல்வதை காதுகொடுத்துக் கேட்கும் திறன் அதிகரித்திருக்கிறது...…” பொறுமையோடு மக்களின் குறைகளை காது கொடுத்து கேட்கும் தலைமைக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கும் சூழலில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. தேர்தல் நேரங்களில் வேடமணிந்து பவனி வரும் தரித்திர அரசியல் வியாதிகளை களையெடுக்க வேண்டிய தேவை அவசியம்.

நாம் கற்றுக்கொள்ள கடைபிடிக்க

ஒரு  குறிப்பிட்ட   கட்சியின் அரசியல்வாதி என்பதனைக் கடந்து ஒரு சாதாரண எதார்த்தவாதியாக ராகுலின் செயல்பாடுகளை உற்று கவனிக்கையில் சக மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து செயல்படுபவராகவும், இந்தியா மீதும், இந்தியாவின் பன்மைத்துவ மொழி கலாச்சார பண்பாடுகளின் மீதும் அதீத நாட்டம் கொண்டவராக வலம் வருகிறார். இந்திய சனநாயக மாண்பும், மரபும் காக்கப்படும் என்பதற்காய் தீவிரமாய் குரல் கொடுக்கிறார். ஒருமுறை நாடாளுமன்றத்தில் அவர் இரண்டு இந்தியாவைப் பற்றி பேசியது நமக்கு நினைவிருக்கலாம். அபரிவிதமான செல்வம் மற்றும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு, வேலை தேவைப்படாமல், தண்ணீர் இணைப்பு, மின்சாரம் போன்ற எதுவும் தேவைப்படாமல் நாட்டின் ஆன்மாவை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய பணக்காரர்களுக்கென ஓர் இந்தியா உள்ளது. மற்றொரு இந்தியா ஏழைகளுக்கானது. இந்த இரு இந்தியாவிற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது... என்ற அவரின் பேச்சு நினைவுகூரத் தகுந்தது. நடைபயணம் நடப்பவருக்கும், அதைப் பார்ப்பவர் மற்றும் கூடவே பங்கேற்பவருக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கிறது. மக்களோடு இணைந்து பயணிப்பதால் வாழ்வின் எதார்த்தங்களை நன்கு கற்கும் சூழல் உருவாகிறது. அவ்வகையில் ராகுலின் இந்த யாத்திரை என்பது...

தன் விருப்பச்செயல், பிறர் வினையாற்ற தூண்டும் செயல்

ஒரு எதார்த்தவாதியாக இந்த நாடு சென்றுகொண்டிருக்கும் அழிவுப்பாதையைக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே ராகுல் இந்த பயணத்தை தன் விருப்பச் செயலாகவே முன்னெடுத்திருக்கிறார். எனவேதான், குஜராத் தேர்தல் நேரத்திலும்கூட பரப்புரைக்கு செல்லாமல், தனது நடைபயணத்தைத் தொடர்ந்தார். தனது நடைபயணத்தில் சிதைந்து கொண்டிருக்கும் இந்தியாவைப் பற்றியே பேசி வருகிறார். இதுவே வரும் காலத்திற்கான அரசியல் செயல்திட்டத்தை வகுக்கும் செயலாக முளைவிட்டாலும் தவறில்லையே. ராகுலின் நடைபயணத்திற்கு எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாய நிலைக்கு பாஜகவும் தள்ளப்பட்டிருக்கிறது. எனவேதான், யாத்திரை தொடங்கிய முதல் மாதத்திலேயே ஆர்எஸ்எஸ் தலைமை வழக்கமான தன்னுடைய இயல்பை விட்டுவிட்டு, முஸ்லீம் அறிஞர்களை அவர்களுடைய இடத்திற்கே சென்று சந்தித்தது கவனம் பெறுகிறது.  இனி பாஜகவும் யாத்திரைகளை முன்னெடுக்கும்.

உடலை வருத்தும் செயல், தீவினையை விரட்டும் செயல்

குறிப்பிட்ட இலக்கை அடையும்வரை அகிம்சை வழியில் பலர் தங்களது உடலை வருத்துவது உண்டு. இதுவும் அவ்வகையே. கடந்தகால இந்தியா நூற்றுக்கணக்கான சமூக, அரசியல்  யாத்திரைகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால், இன்று காவடியாளர்களின் சிவத்தல யாத்திரை, அமர்நாத்தில் பனிலிங்க தரிசன யாத்திரை, வேளாங்கண்ணி திருப்பயண யாத்திரை, சபரிமலை ஐயப்பா பக்தர்களின் யாத்திரை என ஆன்மீக யாத்திரைகள் தான் அதிகம். கட்டுக்கடங்காமல் பாசிச அரசின் தீவினைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில், சமூக யாத்திரைகள் அதிகம் தேவைப்படுகிறது. அதற்கான உத்வேகம் இது!

வீதிகளின் குரல்களைக் கேட்கும் செயல், வீழ்ந்தோரின் உரிமைகளை காக்கும் செயல்

இந்த நடைபயணம் வெறும் காணொளி காட்சி அல்ல; உடலை எதிர்ப்புக் கருவியாக்கி, தரையில் கால் பதித்து நடந்து உடல் உள்ள வலிமையை ஒருங்கே பறைசாற்றும் செயல். மக்களோடு உடனிருக்கிறோம், மக்களின் அழுகுரலுக்கு செவிமடுக்கிறோம் என்பதனை முழங்கிடும் செயல். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டதால் தாங்கள் முன்னெடுக்கும் அனைத்து செயல்பாடுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் மக்களுடைய ஆதரவு இருப்பதாக நினைத்துக் கொள்ளும் பாஜகவின் செயல்களை எதிர்ப்பதற்கு, வீதிகளில் மக்களைத் திரட்டி வேலையின்மை, வறுமை, விலைவாசியேற்றம் என மக்கள் படும் துன்பங்களை முழங்கிடவேண்டும். நாடாளுமன்றத்தில் பேச முடியாமல் அதிகார மையங்களின் அடக்குமுறைகள் தொடர்கையில் வீதிகளில்தான் குரல்களை உரத்து ஒலிக்கச் செய்ய வேண்டியுள்ளது.

உண்மையை உரக்கச்சொல்லும் செயல், நல் மனத்தோர் இணைந்து பயணிக்கும் செயல்

இப்பயணத்தில் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து, அனைத்து இந்தியர்களும் பெருந்திரளாகப் பங்கேற்பதைக் காணமுடிகிறது. ஒவ்வொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் அரசியல், சமூக, பொருளாதார அடிப்படையில் இந்தியா இன்று பிளவுபடுத்தப்படுவதை எதிர்த்தும், வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை மறுக்கப்படுவது ஆகியவை குறித்தும், வெறுப்பு அரசியலினால் மக்கள் பிளவுபடுத்தப்படுவதை எதிர்த்தும், மத்திய அரசியலமைப்பில் அதிகாரக் குவியலைக் கண்டித்தும் பல்வேறு கருத்துகளை பத்திரிகையாளர்கள் வாயிலாக மக்களின் பார்வைக்குக் கொண்டுவருகிறார். குறிப்பிட்ட கட்சி அரசியல் கடந்து இந்திய மக்கள்சார் பிரச்சனைகளின் உண்மைத்தன்மையை உரக்கச் சொல்வதால்தான் இந்த யாத்திரையில், காங்கிரஸ் கட்சியினர் மட்டுமில்லாமல், ஏராளமான மக்கள் அமைப்புகளும், இயக்கங்களும், அறிவு ஜீவிகளும், முக்கியப் பிரமுகர்களும்கூட இணைந்து நடக்கின்றனர். சமூகச் செயற்பாட்டாளர் மேதாபட்கர், பாடகர் டி.எம். கிருஷ்ணா, மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் போன்ற அரசியலுக்கு அப்பாற்பட்ட பல ஆளுமைகளும் ராகுலுடன் கைகோர்த்திருக்கிறார்கள்.

தென்மாநிலம் ஒன்றில் ராகுல் நடைபயணத்தில் இருந்தபோது, கால் வேதனையால் அவதிப்பட்டார். அத்தருணம் 6 அல்லது 7 வயது மதிக்கத்தக்க சிறுமி அவரிடம் வந்து ஒரு கடிதத்தைக் கொடுத்தாள். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: “நீங்கள் தனியாக நடப்பதாக கருதாதீர்கள். பெற்றோர் அனுமதிக்காததால் என்னால் உங்களோடு நடக்க இயலாது. ஆயினும் நானும் நடப்பதாகக் கருதுகிறேன்”.

விடியலின் வெளிச்சம் வெகுதூரமில்லை. நம்பிக்கை எஞ்சியிருக்கு!

Comment