No icon

இவர்களால் முடிந்தது என்றால்...!

5. நான் சுட்ட தோசை!

கூகுள், யூடியூப், வாட்ஸ் அப், இன்டர்நெட் என்று பலரும் சமையல் கலையில் கலக்கும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இது பெரிய செய்தியா?

இது யாருக்குத்தான் தெரியாது என இதை வாசிக்கத் துவங்கும் நீங்கள் அலட்சியமாக நினைக்கலாம் அல்லது முகத்தையாவது சுழிக்கலாம். ஆனால், இது யாரால், எப்போது, எந்நிலையில் சொல்லப்பட்டது என்று கேட்கவாவது முயலுங்கள். நம்மைப் படைத்த கடவுளை கேள்வி கேட்காமல் வாழ நமக்கு இது உதவும்.

பிறவியிலேயே நடக்க முடியாதவன் அல்ல அவன். உங்களைப் போல, என்னைப் போல எந்தக் குறையுமின்றி பிறந்து, 25 வயதுவரை மெட்ரிக் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எனச் சென்று, படித்து, பட்டங்கள் வாங்கிய அழகான வாலிபன் அவன். பற்பல கனவுகளோடும், கற்பனைகளோடும் வளர்ந்த அவனுக்கு படிப்படியாக இடுப்புக்கு கீழ் செயல்பாடுகள் நின்று போயின. காலை உபாதைகள் முதல் அத்தியாவசிய தேவைகள் என அனைத்துக்கும் அடுத்தவர் உதவியை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

ஒரு கட்டத்தில் அவனுக்கு ஊன்றுகோல் போல் இருந்த அத்தனை உறவுகளும் ஒன்றன் பின் ஒன்றாக குறுகிய காலத்துக்குள் உலகை விட்டே மறைந்து விட, தன்னந்தனியாக, நிர்கதியாக நின்றவனுக்கு நல்ல சமாரியனாக உதவ ஒரு இந்து நண்பர் உதவிக்கரம் நீட்டினார். இன்று அவரது பராமரிப்பில் அவன்.

எதுவுமே செய்ய முடியாமல், இருந்த இடத்தைவிட்டு நகரமுடியாதவன் எனக்கு அனுப்பிய புகைப்படமும், வாட்ஸ் அப் செய்தியும் தான் அது. அதையே இந்தக் கட்டுரைக்குத் தலைப்பாக்கினேன். அவனோடு அவ்வப்போது நான் தொலைப்பேசி மூலமாக பேசுவதுண்டு. “நீ தனியாக இல்லைஎன அவனுக்கு நான் சொல்லும்போது, அவனது பதிலும், நம்பிக்கை நிறைந்த பேச்சும் எந்தச் சூழ்நிலையிலும் நான் சோர்ந்து போகக் கூடாது என்ற உத்வேகத்தை எனக்கு கொடுக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அவனது பேச்சில் விரக்தியோ, வெறுப்போ, ஒப்பீடோ, பொறாமையோ ... எதுவுமே இராது. இப்படிகூட இருக்க முடியுமா என பலமுறை வியந்திருக்கிறேன்.

நாம் விரும்பிச் சென்று பார்க்கும் இடங்கள் உலகில் பல உண்டு. ஆனால், இவற்றில் எதுவும் வாழ்வைப் பற்றிய முழு உண்மையை நமக்கு உணர்த்துவதில்லை. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் மூன்று இடங்களுக்குச் சென்று பார்க்க வேண்டும் என ஞானிகள் அறிவுறுத்துவர்.

1. மருத்துவமனை 2. சிறைச்சாலை 3. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் இல்லம். இவை இவ்வுலக வாழ்வின் முழு உண்மையை நமக்கு புரிய வைக்கும். நாம் இவ்வுலகில் பிறந்ததற்கான நோக்கத்தையும் தெளிவுப் படுத்தும்.

அன்னை தெரசாவின் தொழுநோயாளிகளைப் பராமரிக்கும் இல்லம் ஒன்றை பார்வையிடச் சென்ற ஒருவர், நோயாளிகளைக் கவனிக்கும் அருட்சகோதரி ஒருவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து போனார். ஏனெனில், அவர் சொன்ன வார்த்தைகள், பார்வையிடச் சென்றவருக்கு முரண்பாடாகத் தெரிந்ததே காரணம்.

இந்த இல்லத்தில் தங்கியிருப்போரின் உடலில் பாதிக்கப்பட்ட இடங்களில் வலி தெரிய வேண்டும் என நாங்கள் ஜெபிக்கின்றோம்என்று அவர் சொன்னதைப் புரியாமல் விழித்தவரிடம், தொழுநோய் பாதிக்கப்பட்ட இடங்களில் உணர்வுகள் தெரியாது. செல்கள் செயலிழந்திருக்கும். வலி வந்தால் அவர்களது நோய் குணமாகத் தொடங்குகிறதுஎன்று விளக்கம் கொடுத்தார்களாம்.

வாழ முடியுமா? என்ற கவலையில் உள்ளோரும், சிறு குழந்தைகளைப் போன்று பிறர் தயவில் வாழ வேண்டிய நிலையில் உள்ளோரும், உறவினர்களால் உதறித் தள்ளப்பட்டதால் உதவும் கரங்கள் மூலமாக வாழ்வோரும் நம்பிக்கையோடு வாழும்போது, எந்தக் குறையும் இல்லாத இளம் வயதினரும், குணப்படுத்தக் கூடிய சிறுசிறு நோய்களால் பாதிக்கப்பட்டோரும், வேலை கிடைக்காமல் இருப்போரும், குடும்ப பிரச்சனைகளை சந்திப்போரும் விரக்தி நிலைக்கு ஏன் செல்ல வேண்டும்?

உங்களுக்குள் உள்முகமாக பார்ப்பதை சிறிது நேரம் தவிர்த்து, வெளியுலகைப் பாருங்கள். ஐம்புலன்களும் நமக்குப் பலவற்றைப் பாடமாக பயிற்றுவிக்கும்.

இந்த உலகம் அழகானது,

உற்றுப் பாருங்கள் புரியும்.

இந்த மக்கள் மாறிக்கொண்டேயிருப்பவர்கள்,

வாழ்க்கைப்பாடத்தைக் கற்றுத்தருவர்.

இந்த அன்றாட வாழ்க்கை புதுமையானது, திறந்த மனதோடு பாருங்கள் தெரியும்.

இந்த மனித வாழ்க்கை நிலையற்றது, மறைந்தவைகள் நமக்குப் புரிய வைக்கும்

ஒருவரின் வலியை, அழுகையை, துக்கத்தை, வேதனையை, மகிழ்ச்சியை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவரின் மன நிலைக்குச் சென்று அல்லது அவரின் வயதுக்கு மாறி, அவர்களின் கண்களாலும் நாம் பார்க்க வேண்டும். பட்டாம் பூச்சி பறக்கும்போது அதைப் பார்க்கும் நாம் பிரமித்து, கண்களை அகல விரிப்பது இல்லை. ஆனால், சிறு குழந்தைகளுக்கு அது கண்கொள்ளாக் காட்சி. அதை நாமும் ரசிக்க வேண்டுமென்றால், குழந்தையின் கண்கள் நமக்கு வேண்டும்.

அதைப்போலவே பிறரின் வலிகளையும், இயலாமைகளையும் உணர வேண்டுமென்றால், அவர்களின் நிலைக்கு நாம் நம்மை உட்படுத்திப் பார்க்க வேண்டும். அப்போது புரியும் நமது வாழ்க்கை ஆசீர்வாதமானது என்பது! அரைமணி நேரம் கண்களை மூடி நடந்து பார்ப்போமே! ஒரு மணி நேரம் முட்டியால் நடக்க முடியுமா? எந்த வேலையும் செய்யாமல், பேசுவதற்குக் கூட யாருமில்லாமல் ஒரு நாள் முழுவதும் படுக்கையில் இருக்க முடியுமா? எங்கேயோ உங்களை அழைத்துச் செல்வதாக எண்ண வேண்டாம். மறந்து போனவற்றை நினைக்க வைப்பதாகவும் கருத வேண்டாம்.

குணப்படுத்தவே முடியாத (Muscular dystrophy vs Myopathy) மையோபதி நோயினால் பாதிக்கப்பட்ட அந்த வாலிபன் தன்னால் முடிந்தவற்றை செய்ய முயலும்போது, நம்மால் முடியாதா? வெளியுலகை சுற்றிவரும் வயதில், அறைக்குள் முடங்கியிருக்கும் அந்த மகன் மகிழ்ச்சியாக, நேர்மறையாக பேசும்போது உங்களால் முடியாதா?

இளம் வயதிலேயே பிணி, மூப்பு, சாக்காடு என்று முனிவர்களும், ஞானிகளும் அறிவுறுத்தும் மனித வாழ்வின் நிலை குறித்து சிறிதளவு அறிந்தாலே, நாம் வாழும் இந்த வாழ்க்கைக்கும், கடவுள் நமக்குத் தந்திருக்கும் நலமான உடல் உறுப்புகளுக்கும் நன்றி சொல்லுவோம். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு அல்ல; கோடி, கோடியாக! அப்போது வாழ்வில் வரும் சிறுசிறு சறுக்கல்கள், முயற்சியின் போது வரும் தற்காலிக தோல்விகள், உறவுகளால் வரும் நெருக்கடிகள், நண்பர்களால் வரும் புறக்கணிப்புகள் இவையெல்லாம் பெரியவைகளாக நமக்குத் தெரியாது.

உடல் நலத்திலும், பொருளாதார அடிப்படையிலும், உறவு ரீதியாகவும், சமூக மட்டத்திலும், வாழ்க்கை வசதிகளிலும் நமக்கும் கீழே எத்தனை கோடி மக்கள் வாழ்கின்றார்கள் என்ற நினைவு மட்டுமல்ல; இப்படிப்பட்டவர்களுக்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா? என்ற சிந்தனையும், அதற்கான தேடல்களும் செயல்படுவதற்கான வழிகளும் நமக்குள் ஊற்றெடுக்கும். இவை புரிந்து கொள்ளப்படவும், செயல்படுத்தப்படவும் நாம் நமது அன்றாட வாழ்வில் சிலவற்றை மட்டும் கடைபிடிப்பதில் கருத்தாய் இருந்தால் போதுமானது.

சிலவற்றை புதைத்து விடுங்கள்

குப்பையானவற்றை எரித்து விடுங்கள்

ரம்யமானவற்றை ரசித்து விடுங்கள்

கசப்பானவற்றை ஜீரணித்து விடுங்கள்

இனிப்பானவற்றை உண்டு விடுங்கள்

மகிழ்ச்சியானவற்றை பறக்க விடுங்கள்

கடந்தவற்றை மறந்து விடுங்கள்

தீங்கிழைத்தவர்களை  மன்னித்து விடுங்கள்

ஒப்படைத்த கடமைகளை முடித்து விடுங்கள்

மாற்ற முடியாதவற்றை ஒப்படைத்து விடுங்கள் (கடவுளிடம்)

வாழ்க்கையை வாழ்ந்து விடுங்கள்.

இவற்றைச் செய்வதற்கு வயது வரம்பு ஏதுமில்லை, பொருளாதார நிலை தடையாக இராது, பிறந்த இடம், பேசும் மொழி, வாழும் இடம் என எதுவும் குறுக்கிடாது, பார்க்கும் பணி எதுவாக இருந்தாலும் இடையூறாக மாறாது. (தொடரும்)

Comment