சிறுபான்மை கல்வி நிறுவன சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற குழு அமைத்து அரசு ஆணை
G.O.(Ms) No.109 Director of Miniorities Welfare Letter No.B4/16812022 dated on 29.12.2022
தமிழகத்தின் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாக சந்தித்து வந்த ஒரு முக்கியமான பிரச்சனைக்கு, சிறுபான்மை மக்கள் மீது தனி கரிசனம் கொண்ட நமது முதலமைச்சர் சிறப்பான ஒரு தீர்வினைத் தந்துள்ளார். சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் பெற்று வந்த சில சிறப்பு உரிமைகளைப் பெறுவதற்கு சிறுபான்மை கல்வி நிறுவனம் என்ற சான்றிதழ் தேவைப்பட்டது. இதனை வழங்குவதற்கு மாநில அரசிடம் “அதிகாரம் பெற்ற முறையான அமைப்பு” (authorised, empowered body) ஏற்படுத்தப்படாத காரணத்தினால் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பெரிய நிறுவனங்கள் உச்சநீதிமன்றம் சென்றும், மற்றும் சிலர் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி ஒன்றிய அரசின் சிறுபான்மை ஆணையத்தின் கல்வி நிறுவனங்களுக்கான சிறப்பு முகமையிடம் இருந்தும் பல லட்சம் ரூபாய் செலவில் இந்த சான்றிதழைப் பெற்று வந்தனர்.
மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு பொறுப்பேற்றதும் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தை திருத்தியமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் எனது தலைமையில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் பல மாவட்டங்களுக்கு நேரில் சென்று சிறுபான்மையினருக்கு உள்ள தேவைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து கள ஆய்வு செய்ததில் பல மாவட்டங்களில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்ற சான்றிதழ் பெறுவதில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தனர்.
எனவே மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் இரண்டாவது கூட்டத்திலேயே (28.09.2021 அன்று நடந்த கூட்டம்) இப்பிரச்சனை குறித்து விளக்கமான தீர்மானம் நிறைவேற்றி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திருமிகு. இறையன்பு IAS, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முதன்மை செயலாளர் திருமிகு. உதயச்சந்திரன் IAS, முதலமைச்சர் அவர்களின் செயலாளர் திருமதி. அனு ஜார்ஜ் IAS, அன்றைய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் திருமிகு. கார்த்திக் IAS, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் திருமிகு. கார்த்திகேயன் IAS, பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் திருமதி. கட்கர்லா உஷா IAS ஆகிய உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொன்னேன்.
நமது மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், முனைவர் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ் ஆகியோரையும், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஆகியோரையும் சந்தித்து இது சம்பந்தமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் வலியுறுத்தவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.
நமது துறையின் அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள், முதலமைச்சர் நடத்திய துறை சார்ந்த ஆய்வு கூட்டங்கள் அனைத்திலும் சிறுபான்மை கல்வி நிறுவன சான்றிதழ் வழங்குவதில் முக்கியத்துவம் குறித்தும் அதற்காக அதிகாரம் பெற்ற குழு ஒன்றினை அமைக்க வேண்டியதின் அவசியம் குறித்தும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
நமது சட்டமன்ற உறுப்பினர்கள் திருமிகு. பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களும், முனைவர். இனிகோ இருதயராஜ் அவர்களும் சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதங்களில் இது பற்றி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதுவரை மாநில அரசில் இப்படிப்பட்ட ஒரு அமைப்பு இல்லாததினால் இப்புதிய அமைப்பை எப்படி உருவாக்குவது என்ற விவாதங்களும், கருத்துப் பரிமாற்றங்களும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கிடையே தொடர்ந்து நடைபெற்று வந்ததால், துறைகளுக்கிடையே கருத்தொற்றுமை ஏற்படுவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. எனவே நானும், சில ஆணைய உறுப்பினர்களும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை 04.01.2022 அன்று சந்தித்து இது சம்பந்தமான அரசாணையினை விரைவில் வெளியிட கேட்டுக் கொண்டோம்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக நமது துறையின் அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் அழைத்து காலதாமதமின்றி உடனடியாக இதற்கான ஏற்பாடுகளை செய்து நிதிநிலை அறிக்கை சம்பந்தப்பட்ட மானியக் கோரிக்கைகளின்போது இது சம்பந்தமான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த ஏற்பாட்டின் மூலம் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் நீண்ட கால கோரிக்கைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. பெரும் செலவினங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. அதிகாரம் பெற்ற குழுவுக்கு, தலைமைச் செயலாளரே தலைவராக இருப்பதால் பல்வேறு துறைகளில் வீண் காலதாமதம் ஏற்படாது.
சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் அலுவலகம் இந்த ஏற்பாட்டை தனியாக கவனிப்பதால் பல அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் வசதிகளும் ஏற்படுத்தப்பட இருப்பதால் பணச்செலவும், அலைச்சலும், நேரமும் மிச்சமாகும்.
இதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுத்துக் கொண்ட தனிப்பட்ட கவனத்திற்கும், முனைப்புக்கும் தமிழக சிறுபான்மைச் சமூகங்கள் என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளனர். பல துறைகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே நேரில் பேசித் தீர்த்து வைத்ததை நான் அறிவேன். இதனை ஒருங்கிணைக்க தலைமைச் செயலாளரும், முதலமைச்சர் அவர்களின் முதன்மை செயலாளர் திருமிகு. உதயச்சந்திரன் மற்றும் முதலமைச்சர் அவர்களின் செயலாளர் திருமதி. அனு ஜார்ஜ் அவர்களும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பாக அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது துறையின் அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்களுக்கும், துறையின் முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா IAS அவர்களுக்கும், சிறப்புச் செயலாளர் திரு. சம்பத் IAS அவர்களுக்கும், சிறுபான்மையினர் நல இயக்குநர் முனைவர் சுரேஷ்குமார் IAS அவர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றி.
நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒரு வெறுப்பு மனநிலையினை உருவாக்கி, பல நூறு ஆண்டுகளாக தொடர்ந்து தமிழக மக்களுக்கு நல்ல கல்வி சேவையினை இன, பல, மொழி, சாதி வேறுபாடுகளின்றி அனைவருக்கும் வழங்கி வருகின்ற சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் தொண்டினைக் கொச்சைப்படுத்த மதவாத, சாதியவாத அரசியல் சக்திகள் பல சதிகளை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்ற அரசியல் சூழ்நிலையில் சிறுபான்மை சமூகத்தின் தந்தை ஒப்பற்ற தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அடிச்சுவட்டில் தாயுள்ளத்தோடு அரவணைத்துக் கொள்ளும் நமது திராவிட மாடல் முதலமைச்சரை நாம் காலமெல்லாம் மறக்க மாட்டோம்.
‘சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், முதல்வர்கள் தனித்தனியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி அனுப்பிவிட்டு அதன் நகலை சிறுபான்மையினர் ஆணையத்தின் முகவரிக்கும் அனுப்பிவைக்க வேண்டுகிறேன். நமது பேராயர்களும், மார்க்க அறிஞர்களும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி கடிதம் அனுப்ப வேண்டுகிறேன்.
எதற்கு நன்றி சொல்கிறோமோ அது மீண்டும் மீண்டும் நன்மைகளாக உருவெடுக்கும். எதனை வாழ்த்துகிறோமோ அது மீண்டும் மீண்டும் வளரும். எதனைப் பாராட்டுகிறோமோ அது மீண்டும் மீண்டும் செயல்படுத்தப்படும்.’
Comment