கல்வியில் தமிழக அரசின் செயல்பாடுகள்
தேவை எச்சரிக்கையுடன் கூடிய முன்னெடுப்புகள்
தமிழகத்தில் இன்று கல்வி நிலையங்களுக்கு, பள்ளிகளுக்கு பஞ்சமில்லை. நர்சரி, மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ. அரசு பள்ளிகள் என ரகங்கள் பலவிதம். பெற்றோருடைய உழைப்பின் 90 விழுக்காடு குழந்தைகளின் கல்விக்கு செலவாகிறது. ஸ்டேட்டஸ், கெத்து, ஊருக்கு ஒப்ப என்கிற எண்ணவோட்டங்களில் கடன் வாங்கியாவது, பட்டினி கிடந்தாவது குழந்தைகளை (நல்ல) கல்வி நிறுவனத்தில் படிக்க வைக்க வேண்டும் என்கிற உணர்வு ஏழை, நடுத்தர, பணக்கார வர்க்க பேதமைகளைத் தாண்டி நிகழ்கிறது. விளைவு, தனியார் கல்வி நிலையங்களை நோக்கிய படையெடுப்பு குறைந்த பாடில்லை.
இந்நிலையில், தற்போது தமிழக அரசும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுவான சமச்சீர் கல்வி முறையை உருவாக்கும் முயற்சியிலும், அரசு பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்தும் நோக்கிலும், பல்வேறு முன்னெடுப்புகளையும் செய்து வருகிறது. இது பாராட்டுதற்குரியது. அதேவேளையில், தமிழக அரசின் கல்வித்திட்டங்கள் குறித்த திறனாய்வும் தேவைப்படுகிறது.
கல்வியில் புதுப்புது திட்டங்கள்
2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, செயலாக்கம் பெற்று வருகின்றன.
இல்லம் தேடிக் கல்வித்திட்டம்: “கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உயிர்சேதம், பொருள்சேதம், பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டது. இவையெல்லாம் பெரிய இழப்புகள் என்றாலும், இணைய வளர்ச்சி எல்லாருக்கும் கிடைக்காத நாடுகளான வளர்ந்து வரும் நாடுகள், வளர்ச்சி அடையாத நாடுகளில் உள்ள மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளி என்பது ஒரு தலைமுறை இடைவெளியை ஏற்படுத்தும்” என்று, ஐ.நாவின் குழந்தைகளுக்கான அமைப்பு கவலை தெரிவித்தது. இதனைக் கருத்தில் கொண்டு கொரோனா பெருந்தொற்றால் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையில், தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக 200 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முன்மாதிரிப் பள்ளிகள் (Model Schools) : அரசுப் பள்ளி மாணவர்கள் புகழ்பெற்ற அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்விபெற உதவும் நோக்கோடு துவங்கப்பட்டது இத்திட்டம். கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில் அரசு இப்பள்ளிகளை துவங்கியது. மேலும், 15 மாவட்டங்களில் இத்தகைய முன்மாதிரிப் பள்ளிகளைத் தொடங்க நடப்பு நிதியாண்டில் 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் : வரும் ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளையும் நவீனமயமாக்குவதற்கான திட்டமிது. பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டுவது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (smart class rooms) ஏற்படுத்துவது, அதிநவீன கணினி ஆய்வகங்கள் உருவாக்குவது இத்திட்ட நோக்கம். இத்திட்டங்கள் படிப்படியாக 7,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். இந்த நிதியாண்டில் 1,300 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மத்திய மாநில நூலகங்கள் : மாநிலத்தில் இயங்கிவரும் பொது நூலகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து, மேம்படுத்த தேவையான ஆலோசனைகள் வழங்க ஓர் உயர்மட்டக் குழுவை அரசு அமைத்துள்ளது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உயர்தர வசதிகளுடன்கூடிய மாவட்ட மத்திய நூலகங்கள் அரசால் ஏற்படுத்தப்படும். இந்நூலகக் கட்டடங்களுக்கு தமிழ் அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்படும்.
புத்தகக் கண்காட்சி : புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்வது இதன் நோக்கம். சென்னை புத்தகக் கண்காட்சி போன்று, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது. இத்துடன் இலக்கியச் செழுமைமிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள், புத்தகக் கண்காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் 5.6 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.
மேற்காணும் கல்விசார் திட்டங்களுக்காக பள்ளிக்கல்வித் துறைக்கு ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டில் 36,895.89 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வானவில் மன்றம் : அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களின்மீது மாணவர்களுக்கு ஈர்ப்பு மற்றும் ஆர்வத்தைத் தூண்டி, மாணவர்களை உயர்கல்விக்கு தயார்படுத்தும் முயற்சியிது! முதலில் 13,210 அரசுப்பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்படுவதாக அரசு அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் அரசு ஆதி திராவிடர் நலப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
சிற்பி திட்டம் : கடந்த 14.09.2022 அன்று, சென்னை கலைவாணர் அரங்கில் போதை பழக்க வழக்கங்களில் இருந்து பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில், சென்னை மாநகர காவல்துறை சார்பில் ‘சிற்பி’ (Students in Responsible Police Initiatives - SIRPI) என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்து பேசுகையில், “சிறுவர்களைச் சமூக ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது நம் கடமை. இத்திட்டத்துக்கு 100 பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு படிக்கும் 2,764 மாணவர்களும், 2,236 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளிகளில் ஒவ்வொரு புதன் கிழமையும் மாணவ, மாணவிகள் ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் முன்னிலையில் கூடுவார்கள். அவர்களுக்கான வகுப்புகளை காவல்துறை அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் நடத்துவார்கள்” என்றார்.
நம்ம ஸ்கூல் திட்டம் : தமிழகத்தில் செயல்பட்டுவரும் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியார் பங்களிப்பையும் இணைத்து ‘நம்ம ஸ்கூல்’ என்கிற திட்டத்தை கடந்த 2022, டிசம்பர் 19 அன்று முதலமைச்சர் தொடங்கி வைத்தார். பொது மக்கள், முன்னாள் மாணவர்கள், தன்னார்வ அமைப்புகளிடம் நிதி உதவி பெற்று, அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதே இத்திட்ட நோக்கம். அதன்படி அரசுப் பள்ளிகளில் படித்து சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களையும் தன்னார்வலர்களையும் கொண்டு, சிஎஸ்ஆர் நிதி எனப்படும் சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் அரசுப் பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “எல்லா துறையிலும் முதலீடு செய்தால் லாபம் வரும். ஆனால், எங்கள் துறையில் மட்டும் வட்டியுடன் சேர்த்து நல்ல சமுதாயம் உருவாகும்” என்றார்.
சிறுபான்மையினர் கல்வி உதவி : இதுவரை ஒன்றிய அரசு 1 முதல் 8 ஆம் வகுப்புவரை பயிலும் தலித், பழங்குடியினர், பிற்பட்டோர், சிறுபான்மையினருக்கான பிரீமெட்ரிக் கல்வி உதவியை வழங்கி வந்த நிலையில், சமீபத்தில் இவ்வுதவித் தொகையை நிறுத்தம் செய்தது. தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் சிறுபான்மையினர் மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற்று வந்தனர். அவர்களுக்கு தற்பொழுது தமிழக அரசு இக்கல்வி உதவியைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. அரசுக்கு பாராட்டுகள்!
திட்டங்களுக்குப் பின்னால் நிற்பது
கல்வியாளர் ஆயிஷா நடராசன் சொல்வது போன்று, நம் கல்வி முறை குழந்தைகளை மையப்படுத்தி இயங்கும் கல்வி முறை அல்ல; ஆசிரியர்களை மையப்படுத்தியும் தற்பொழுது அது இயங்கவில்லை. அதிகாரத்தையும், அதிகாரிகளையும் மையப்படுத்தி இயங்குகிறது. இது ஆபத்தானது. நல்லெண்ணத்தோடு புதுப்புது திட்டங்கள் வழியாக கல்வியில் பல மாற்றங்களை தமிழக அரசு முன்னெடுப்பதைப் பாராட்டும் தருணத்தில், இத்திட்டங்கள் ஆசிரியர் - மாணவர் இடைவெளியை அகலப்படுத்துவதாகவோ, ஆசிரியருக்கான இடத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரிப்பதாகவோ அமைந்து விடக்கூடாது. வெறும் போட்டித் தேர்வுகளுக்கும், உயர் பதவிகளுக்கும் மாணவர்களை உருவாக்குவதே நோக்கமாகவும் அமைதல் கூடாது. மாறாக, மானுட வாழ்வின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான கல்வி காலத்தின் கட்டாயம்.
அவ்வகையில் தமிழக அரசின் மேற்காணும் திட்டங்களின் செயல்பாட்டுத் தளங்கள் சிலவற்றை ஆய்வு செய்து பார்ப்போம். நம் நாட்டில் பள்ளிக்கூடங்களில் படித்துவரும் மாணவ - மாணவியர்களில் 18 விழுக்காடு பேர் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என்றும், அவர்களில் 80 விழுக்காட்டினர் மாணவர்கள் என்றும் ஆய்வொன்று தெரிவிக்கிறது. இந்நிலையில், மாணவர்களை மது போதை போன்ற தீய பழக்கங்களிலிருந்து மீட்டு, ஒழுக்கமுள்ளவர்களாக, சமூக பற்றுள்ளவர்களாக மாற்ற சிற்பித் திட்டம் நல்லதுதான். ஆனால், இதனை யார் நடத்துவது? காவல்துறை. மாணவர்களுடன் நீண்ட நேரம் நெருக்கமாக இருக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்களால் செய்யமுடியாததை காவல்துறையால் எப்படி செய்ய முடியும்? பாடத்திட்டங்கள், நன்னெறி வகுப்புகள் வழியாக இதுவரை நல்லொழுக்கங்களைப் பயிற்று வித்தோம். இக்கட்டமைப்பு தற்பொழுது சரியாக பயனளிக்கவில்லை என்றால் கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்வதை விட்டுவிட்டு ஆசிரியர்கள் இடத்தை காவலர்களிடம் ஒப்படைப்பது எவ்வளவு நன்மை பயக்கும்? மாணவர்களை போதையிலிருந்து விடுவிக்க திட்டமிடும் அரசின் அதிகார வர்க்கங்களே போதைப் பொருள் விற்கும் மாஃபியா கிரிமினல் கும்பல்களின் தலைவர்களாக செயல்பட்டால் எப்படி மாற்றம் வரும்?
வானவில் திட்டத்தில் தரம் பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் உள் நுழைந்துள்ளன (எ.கா: ஆகா குரு (Aha Guru) நீட், JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் அமைப்பு). இவ்வமைப்புகளின் லோகோக்களைத் தாங்கித்தான் வானவில் மன்ற செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அடிப்படையிலே அறிவியலைக் கற்று, உயர்கல்வி பயின்று, தேர்வு எழுதி, ஆசிரியராக வருபவர்களிடம் இந்தத் திறன் இல்லையா? அவர்களிடம் திறன் இல்லையென்றால், ஆசிரியர்களைத் தயார்படுத்தி, அவர்களிடம் உள்ள திறமைகளை மாணவர்களுக்குக் கடத்த நினைக்காமல், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத ஏராளமான பணிகளை ஒதுக்கீடு செய்து விடுவதும், தன்னார்வலர்கள் பெயரில் பெருநிறுவனங்களை பள்ளிகளுக்குள் நுழைப்பதும் எப்படி நியாயமாகும்? ஆசிரியர் நியமனத்தில் ஊழல்களையும், சிபாரிசுகளையும் தவிர்த்து, தகுதியை மட்டுமே முன்னிலைப்படுத்தி நியமனங்களை நிறைவேற்ற அரசு தயாரா?
“தீண்டாமை ஒரு குற்றம், தீண்டாமை ஒரு பெரும் பாவச் செயல்” என்று, பாடப் புத்தகங்களில் அச்சடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நம் தமிழகத்தில் ஆங்காங்கே இன்றும் தீண்டாமை தொடர்வது சாபக்கேடு. சமீபத்தில் ஈரோடு மாவட்டம் பாலக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் தலித் பிரிவைச் சேர்ந்த 5 மாணவர்களை பள்ளியில் உள்ள கழிப்பறையை கழுவ சொல்லிய செய்தி காணொளியாக வலம் வந்ததை நாம் பார்த்திருப்போம். இதுபோன்ற கொடுமைகள் நிகழா வண்ணம் கடுமையான சட்டங்களையும், புகார்கள் வரும் போது, அரசு நிர்வாகம் தயக்கமில்லாமல் உறுதியான நடவடிக்கையையும் எடுக்க வேண்டுமல்லவா?
எச்சரிக்கையோடு முன்னெடுப்புகள் அவசியம்
“ஜனநாயகத்தில் கல்விக்கு முதன்மையான இடம் உள்ளது. கல்வியே மக்களின் மனங்களில் ஜனநாயக உணர்வை வளர்க்கிறது” (அமெரிக்கக் கல்வியாளர் ஜான் டூயி). “கல்வியானது நிகழ்காலத்திலும், எதிர்காலத்திற்குமாக ஓர் இணையற்ற முதலீடு. கல்வி அனைவருக்கும் தேவையான ஒன்று. சமத்துவம், சமயச்சார்பின்மை, சனநாயகம் போன்ற அரசியல் சட்டத்தில் காணப்படும் உயரிய குறிக்கோள்களை அடைய கல்வியே உகந்த வழி. மேலும், நம் பொருளாதாரத்தில் பல்வேறு நிலைகட்கும், பிரிவுகட்கும் தேவையான தேர்ந்த மனித சக்தியை உருவாக்கி வழங்கக் கூடியது கல்வி மட்டுமே” (பெரியார்). தனது ஒப்புகைகள் (Confessions) நூலில் தூய அகுஸ்தீனார், “என் மேல் கற்றலைத் திணித்தவர்களுக்கு என் கற்றலின் நோக்கம் பற்றிக் கவலையில்லை. என் படிப்பு, பணம் மற்றும் புகழுக்கான அளவுக்கு மிஞ்சிய ஆசையை நிறைவேற்றும் என்று அவர்கள் நினைத்தார்கள்” என்கிறார்.
சிந்தித்து செயல்படுவோம். தரமான தகுதியான கல்வியால் தமிழகம் இனியும் தலை நிமிரட்டும்!
Comment