No icon

“இந்திய ஒற்றுமைப் பயணம்”

இனிவரும் நாட்களில் இந்தியா

எதைத் தின்றால் பித்தம் தெளியும்என்கிற நிலையில் இந்திய நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு, நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, சமூக-பொருளாதார-அரசியல் நிலைமை சீரடையுமா? அல்லது இன்னும் சீரழியுமா? என்கிற அச்சம் அனைவர் மனங்களிலும் எழுகிறது.

சீரடையுமா?

சீரடைதல் ஒரு துருவநிலை. பாசிச பாஜக தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு, ஒரு கட்சி அரசோ அல்லது ஒருசில கட்சிகளின் கூட்டணி அரசோ அல்லது பரவலான ஒரு தேசிய அரசோ நிறுவப்படலாம்.

கடந்த 2014-2024 காலக்கட்டத்தில் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் வெறுப்பு கலாச்சாரம், வலிந்து விதைக்கப்பட்டிருக்கும் கோப தாபங்கள், வன்மக் கதையாடல்கள், விசமாக்கப்பட்டிருக்கும் சமூக உறவுகள் போன்றவற்றுக்கு தகுந்த விசமுறிவு நிவாரணங்கள் செய்யப்பட்டு, இயல்புநிலைக்குத் திரும்பும் வேலைகளில் ஈடுபடுவோம் என்று எதிர்பார்க்கலாம்.

சீரழியுமா?

இன்னொரு துருவநிலை மென்மேலும் சீரழிதல். எப்பாடுப்பட்டாவது, என்ன செய்தாவது பாஜக ஆட்சியைப் பிடிக்கும். எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா பிரமாண்டமாகக் கொண்டாடப்படும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் தூக்கியெறியப்பட்டு, இது ஓர்இந்து ராஷ்டிரம்என்று அறிவிக்கப்படும். குடியுரிமைச் சட்டம் நடப்பிலாக்கப்பட்டு, உண்மையான இந்தியர்கள் யார், போலியான இந்தியர்கள் யார் என்று கண்டறியப்படுவர். இந்துக்கள், இசுலாமியர், கிறித்தவர்கள், சீக்கியர்கள் என அனைவருக்குமான பொது சிவில் சட்டம் அமுலாக்கப்படும். இந்தி மொழி நாடெங்கும் திணிக்கப்படும். “இந்தி, இந்து, இந்தியாஎனும் முப்பரிமாணக் கொள்கை நடைமுறைப் படுத்தப்படும்.

இந்தியாவில் காலனியாதிக்க ஆட்சிமுறையான பிரிட்டிஷ் நாடாளுமன்ற ஆட்சிமுறையை நீக்குகிறோம் என்று சொல்லி, ஆர்.எஸ்.எஸ். கலாச்சாரத்தை அடியொற்றி அதிபர் ஆட்சிமுறைக் கொண்டு வரப்படும். மொழிவாரி மாநிலங்கள் கலைக்கப்பட்டு, வெவ்வேறு மக்கள் குழுமங்கள் கலந்து விரவப்பட்டு, எந்தவிதத்திலும் ஒன்றுபடமுடியாத சன பாகங்கள் உருவாக்கப்படும். பல்வேறு சமூக  - பொருளாதார - அரசியல்சீர்திருத்தங்கள்மக்கள் மீது திணிக்கப்படும்.

அயோத்திஇராமஜென்மபூமிபிரச்சனை போல, மதுராகிருஷ்ண ஜன்மஸ்தான்மற்றும் ஆக்ராதேஜோ மகாலயாபிரச்சனைகள் ஊதிப் பெரிதாக்கப்படும்.

விசுவ இந்து பரிசத் தயாரித்திருக்கும் மீட்டெடுக்கப்பட வேண்டிய 3,000 இந்துக் கோவில்கள் பட்டியலின் அடிப்படையில் கள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சமூக நல்லிணக்கமும், பொது அமைதியும் முற்றிலுமாக அழிக்கப்படும். நாடு கலவரபூமியாகும்போது, பாசிசம் தன்னுடைய அதிகாரப் பிடியை இன்னும் இறுக்கிக் கொள்வதற்கு அந்தச் சூழலை செவ்வனே பயன்படுத்திக் கொள்ளும்.

மேற்குறிப்பிட்ட தூய மற்றும் தீய துருவநிலைகளுக்கு இடையே இன்னும் பல நிலைகளை நாம் கண்டுணரலாம் என்றாலும், இவையிரண்டும்தான் தற்போது மிகவும் சாத்தியமானவையாக விளங்குகின்றன.

வெறுப்பு, வேற்றுப்படுத்தல், வன்மம், வன்முறை போன்றவற்றை தலைவிரித்தாடச் செய்து, நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தை, சனநாயக அமைப்பு முறையை, சமூகநீதியை, பன்முகத்தன்மையை, மனித உரிமைகளைத் தகர்க்கும் வேலைகளை ஆளும் பாசிஸ்டுகள் தடையின்றி செய்துகொண்டிருக்கிறார்கள்.

பாரத் ஜோடோ யாத்திரை

இவர்களிடமிருந்து இந்தியா எனும் பெருங்கனவை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைகளுக்குக் கையளிக்கும் வகையில் செப்டம்பர் 7, 2022 அன்று கன்னியாகுமரியிலிருந்து காஸ்மீர் வரையிலானஇந்திய ஒற்றுமைப் பயணம்எனும் ஒரு பெருமுயற்சியை காங்கிரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் திரு. இராகுல் காந்தி முன்னெடுத்தார். இந்தியா முழுவதுமுள்ள குடிமைச் சமூக இயக்கங்கள் பலவும் இம்முயற்சியை ஆதரித்து களமிறங்கின.

ராகுல்காந்தியின் கரிசனை

இந்துத்துவ சக்திகள்இந்து ராஷ்டிரம்நிறுவுவோம், புதிய அரசியலமைப்புச் சட்டம் எழுதுவோம், வாரணாசிக்கு தலைநகரை மாற்றுவோம், சிறுபான்மையினருக்கு வாக்குரிமை மறுப்போம் என்றெல்லாம் பேய்க்கனவு ஒன்றை பரப்பிக் கொண்டிருந்தபோது, “உங்களது கனவு என்ன?” என்று இராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது. “இந்திய ஒற்றுமைப் பயணம்நடத்தி, அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்கள் கருத்துகளைக் கேட்டறிந்து, அதனடிப்படையில்தான் புதிய கனவு வடிவமைக்கப்படும் என்று அவர் விடை பகர்ந்தார். அந்த சனநாயக அணுகுமுறையும், தனது கட்சியையும் கடந்தகால ஆட்சியையுமே சுயபரிசோதனைக்கு உள்ளாக்கும் நேர்மையும் மிகவும் பாராட்டத்தக்கவையாக இருந்தன.

நம்முடைய, நம் குழந்தைகளுடைய, வருங்காலத் தலைமுறைகளுடைய நிம்மதியான நல்வாழ்வுக்கும், சமாதானத்துக்கும், பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் பாசிச சக்திகளை அம்பலப்படுத்தி, தோற்கடிப்பது மிக மிக முக்கியமானதாக இருக்கிறது.

எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்திய வரலாற்றில் மிக மிக முக்கியமானது. எப்பாடுபட்டேனும், தேர்தலைத் திருடியாவது, (டொனால்ட்) டிரம்ப் பாணி வேலைகளைச் செய்தாவது பாஜக வெற்றி பெற பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொள்ளும். காரணம் அவர்களின் நூற்றாண்டுகாலக் கனவுக் கைகூடும் வேளை இது. அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார்கள்.

பொதுமக்களின் வெதுவெதுப்பான நிலை

பொதுமக்களாகிய நமக்கு ஒரு சில தெரிவுகள்தான் இருக்கின்றன. ஒன்று, எதுவுமே செய்யாமல், வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வாளாவிருப்பது. தமிழ்நாட்டில் இம்மாதிரி எல்லாம் எதுவும் நடக்காது என்று மனப்பால் குடிக்கலாம். அல்லது பாஜகவும், காங்கிரசும் ஒன்றேதான். எனவே, இரண்டையும் எதிர்ப்போம் என்று சொல்லி வெறுமனே எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு வேடிக்கைப் பார்க்கலாம்.

சீமான் அண்ணனுக்கு குருமூர்த்திகள் சொல்லிக் கொடுப்பது போல, வாய்க்கு வந்தபடி எதையாவதுப் பேசி குழப்பிக்கொண்டே, சும்மா இருக்கலாம். மொத்தத்தில் எதையுமே உருப்படியாகச் செய்யாமல் உட்கார்ந்திருப்பது ஒரு தெரிவு.

இரண்டாவது தெரிவு, ஆயுதக் குழுக்கள் அமைத்து வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடுவது. இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது, நடைமுறைக்கும் சாத்தியமற்றது. சில வீராதி வீரர்கள் தற்காப்புப் போராட்டம் மட்டும் நடத்தக் கூடாது, எதிர்த்து அடிக்க வேண்டும் என்றெல்லாம் முகநூலில் எழுதித் தள்ளுகிறார்கள். வாய்ச்சொல் வீரர்கள் இவர்கள். வழிநடத்த மாட்டார்கள். வன்முறை வாழ்க்கைக்கும் உதவாது.

காங்கிரஸ் தலைமையில் அணி திரள்

இவ்விரண்டு துருவநிலைகளுக்கிடையே மேலும் பல உத்திகளைக் கண்டுணரலாம். நாடு முழுவதும் கட்டமைப்புள்ள, கிளைகள் உள்ள காங்கிரசுக் கட்சியால் மட்டுமே நாடு தழுவிய பாசிச எதிர்ப்பினை வடிவமைக்க முடியும், வழிநடத்திச் செல்ல முடியும்.

பெரும்பாலான பிராந்தியக் கட்சிகளும், தலைவர்களும் தங்கள் மடியில் இருக்கும் கனத்தால் பயந்து விழிபிதுங்கி நிற்கிறார்கள். சில தலைவர்கள் பிரதமர் கனவில் மிதக்கிறார்கள், பலர் மதில்மேல் பூனைகளாக அமர்ந்திருக்கிறார்கள். இவர்களின் மீது நம்பிக்கை வைத்து ஏமாறுவதைவிட, இராகுலை (கவனிக்கவும், காங்கிரசை அல்ல!) நம்பலாம்.

நம் குழந்தைகளை, பேரக் குழந்தைகளை வெறுப்பாளர்கள், வீணர்கள், வன்முறைவாதிகள் கைகளில் விட்டுச்செல்வதா அல்லது எதிர்த்து அரசியல் களமாடும் இராகுல் போன்ற ஓர் இளந்தலைவனிடம் விட்டுச்செல்வதா என்றால், நம்முடைய தெரிவு இராகுலாகத்தான் இருக்க முடியும்.

பாசிச எதிர்ப்புக் கொள்கை கொண்ட அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், குடிமைச் சமூக அமைப்புகள் அனைவரும் கைகோர்த்து, ஓர் அடிப்படை வேலைத்திட்டத்தை உருவாக்கி இயங்க வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது. இந்த பாசிச ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அனைத்து அமைப்புகளும் தங்கள் இயக்கங்களுக்கு ஓராண்டு பகுதிநேர விடுப்பை அறிவித்து, அவற்றின் இருபது விழுக்காடு வேலைகளை மட்டும் கவனித்துவிட்டு, பாசிச எதிர்ப்பு வேலைகளை என்பது விழுக்காடு செய்தாக வேண்டும்.

அதேபோல, தத்தம் கொள்கைகள், கோட்பாடுகளுக்கும் சற்றே விலக்கு அளித்துவிட்டு, பிற வேறுபாடுகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, பாசிச எதிர்ப்புக் கொள்கைமீது மட்டும் ஊன்றி கவனம் செலுத்தியாக வேண்டும். தங்களுடைய நேரம், பொருள், ஆற்றல் அனைத்தையும் பாசிசத்தைத் தோற்கடிக்க பயன்படுத்தியாக வேண்டும்.

இனியொரு விதி செய்வோம்!

பாரதி சொல்வது போல, “இனியொரு விதி செய்வோம், அதை எந்நாளும் காப்போம்

மதச்சார்பற்ற, சனநாயக, முற்போக்குக் கொள்கைகள் கொண்ட இந்தியக் குடியரசைத் தக்கவைத்தவாறே வேற்றுமையில் ஒற்றுமை, சமய நல்லிணக்கம், மனித உரிமைகள், அகிம்சை உள்ளிட்ட பல்வேறு விழுமியங்களை, கதையாடல்களைப் போற்றி நிற்போம்!.

இந்தியர்களை சாதி, மத அடிப்படையில் பிரித்தாளுவதைத் தடுப்போம்!.

மதச்சார்பின்மை-மதவாதம் போன்ற தந்திரமிக்கக் கதையாடல்களுக்குள் வீழ்ந்துவிடாமல், சமாதானகரமான சகவாழ்வு-ஒட்டுமொத்த அழிவு எனும் கதையாடலில் கவனம் செலுத்துவோம்!.

எதிர்வரும் 2024 தேர்தலில் இயந்திரங்களை நீக்கிவிட்டு வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்தச் செய்வோம்!.

வாக்குக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவது போன்ற தேர்தல் ஊழல்களைஅரசின் மீது போர் தொடுப்பதுபோன்ற பெரும் குற்றமாக அறிவித்து தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவோம்!.

அடுத்ததாக அமையவிருக்கும் அரசு சாதி, மதம், இனம், மொழி, பாலினம், வயது, வகுப்பு போன்றவற்றின் அடிப்படையில் மக்களை வேற்றுப்படுத்துவதாக இல்லாமல் இருக்க ஆவண அனைத்தும் செய்வோம்!.

அடுத்து வரும் அரசு கல்வி, வேலை, வழிபாட்டு உரிமை, உணவு உரிமை போன்றவற்றை உறுதி செய்வதாக இருக்கச் செய்வோம்!.

ஒன்றிய அரசு மாநிலங்களின் உரிமைகளை, அதிகாரங்களை ஏற்று நடக்கும் வழிவகைகளைச் செய்வோம்!.

அனைத்து மாநில மொழிகளையும் அதிகாரபூர்வ மொழிகளாக அங்கீகரித்து, அவரவர் மாநிலங்களின் நிர்வாகம், நீதி பரிபாலனம், வழிபாடு, கல்வி போன்றவை அவரவர் மொழிகளில் நடக்கச் செய்வோம்!.

நீட், நெக்ஸ்ட், சியு,டி போன்ற பயனற்ற நுழைவுத் தேர்வுகளை ஒழித்துக் கட்டுவோம்!.

ஜி.எஸ்.டி. போன்ற கொடும் வரிகள், சாலைச் சுங்கவரி போன்ற வழிப்பறிக் கொள்ளைகள் இல்லாமற் செய்வோம்!.

மனிதர்கள் வாழத்தகுந்த நாடாக இந்தியாவை மாற்றியமைக்க ஆவண அனைத்தும் செய்வோம். வாருங்கள்!

Comment