வாழ்வு வளம் பெற
நான் யார் தெரியுமா?
- Author எம்.ஏ. ஜோ, சே.ச. --
- Saturday, 19 Aug, 2023
அந்தப் பெண் வரிசையாய் சொல்லிக்கொண்டே வந்தார். ‘இப்படியெல்லாம் நடக்குமா?’ என்று அதிர்ச்சியாய் இருந்தது. ‘இத்தனை சோகங்கள் தொடர்ந்து ஒரு பெண்ணின் வாழ்வில் நிகழ முடியுமா?’ என்று அயர்ச்சியாகவும் இருந்தது.
குடும்பத்தைக் கைகழுவி விட்டு ஓடிப்போய் விட்ட தந்தை; அவர் மீதிருந்த கோபத்தையும், தனியாய்க் குடும்பத்தைச் சமாளிக்க முடியாத இயலாமையையும் தன்னையும் அறியாமல் பிள்ளைகளிடம் வெளிப்படுத்திய தாய்; ஒரு விபத்தில் ஏற்பட்ட காயங்கள் இவரது முகத்தில் ஏற்படுத்திய தழும்புகளால் தள்ளிப்போன திருமணம்; சகோதரிகள் திருமணமாகி வெவ்வேறு திசைகளில் போய்விட்ட பிறகு, முதிய தாயை உழைத்துக் காப்பாற்றிய பாசம்; தாய் இறந்த பிறகு இவர்களின் நிலத்திற்கு உறவினர்கள் உரிமை கோரிய துரோகம்; வெறுத்துப் போய் ஊரை விட்டு வெகுதூரம் வந்து வேலை தேட வேண்டியிருந்த விரக்தி...…
இடையிடையே அரும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, அனைத்தையும் சொல்லி முடித்த பிறகு அந்தப் பெண் சொன்ன வாக்கியம்தான் மறக்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. “என்னதான் ஆனாலும், நான் உடைஞ்சிட மாட்டேன். நான் யாரு? வீராயி மக!” என்றார் அவர்.
தான் அடிப்படையில் ‘யார்?’ என்ற அவரது புரிதல்தான் ஓய்ந்து, சாய்ந்து விடாமல் அவரை இன்னும் நிற்கச் செய்கிறது.
‘நாம் யார்?’ என்ற கேள்விக்கு நம்மிடம் ஒரு பதில் இருக்கிறது. ஒரே பதில் அல்ல; அது ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது.
சிலர் தாங்கள் செய்வதை அடிப்படையாகக் கொண்ட பதிலை வைத்திருக்கிறார்கள். ‘நான் ஒரு டாக்டர்’, ‘நான் ஓர் இன்ஜினியர்’, ‘நான் ஓர் ஆசிரியர்’ என்று இவர்கள் பதில் சொல்வார்கள். செய்கின்ற வேலை, தொழில், பணி இவையே தங்களின் அடிப்படை அடையாளம் என நம்புவோர் இவர்கள். பெரும் சிக்கல்கள் இவர்களுக்கு எப்போது தோன்றும்? வேலை பிடுங்கப்படும்போது; கைவந்த தொழிலைச் செய்ய இயலாதபோது; பணி ஓய்வு பெற்று விட்ட பிறகு.
வேறு சிலர் தங்களிடம் உள்ளதை அடிப்படையாக வைத்து ‘நான் யார்?’ என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறார்கள். ‘ஏதேதோ பேசிட்டே இருக்கியேடி! இத மறந்துடாத. நான் இன்னைக்கு ஓர் இலட்சாதிபதி’ எனச் சொல்கின்ற கணவன்; ‘எங்க காலேஜ்லயே நான்தான் அழகி! அழகிப் போட்டிகள்ல முதல் பரிசு வாங்குறது நான்தான்’ எனச் சொல்கிற பெண் இந்த வகையினர்.
இதில் உள்ள சிக்கல் என்ன? இன்றிருப்பது நாளைக்கு இல்லாமல் போகலாம். செல்வதுதானே செல்வம்?! அழிவது தானே அழகு?! ஒரு காலத்தில் இருந்தது இப்போது இல்லாமல் போகும்போது, தங்களின் அடிப்படை அடையாளமே சிதைந்து விட்ட சோகம் இவர்களை மூழ்கடித்து விடும்.
‘நான் யார்னா கேக்குறீங்க? நான்தான் முதலாளி! அப்படித்தான் இங்க எல்லாரும் என்னைக் கூப்பிடறாங்க!’ பிறர் தன்னைப் பற்றிச் சொல்வதை அடிப்படையாக வைத்து, தான் யார் என்ற கேள்விக்கு இவர் பதில் தயாரித்திருக்கிறார். ‘இங்க யாரை வேணும்னாலும் கேட்டுப் பாருங்க, இந்த நிறுவனத்தில நான்தான் எல்லாம்; ஆல் இன் ஆல்’னுதான் என்னைச் சொல்வாங்க!’ இதில் என்ன சிக்கல்? ‘முதலாளி’ என்று குனிந்து, பணிந்து அழைத்தவர்கள், இவரின் முதுகுக்குப் பின்னால் ‘கஞ்சப் பய’ எனக் காறி உமிழ்கிறார்கள் என்று தெரிய வரும் போது, இவர்களின் அடையாளம் என்ன ஆகும்? பிறர் நம்மைப் பற்றிப் பேசுவது மாறிக் கொண்டே இருக்கலாம். ஆனால், நமது அடிப்படை அடையாளம் நிலையாக இருக்க வேண்டுமே!
‘நான் யார்?’ என்ற கேள்விக்கு நமது பதிலை முடிவு செய்யும் முன், என்னில் இருக்கிற பலவற்றில் ஒன்றை மட்டும் தேர்ந்து கொண்டு, மற்றதைப் புறந்தள்ளி விட்டால், அது ஆபத்தாக முடியும்.
‘யுவல் நோவா ஹராரி’ என்ற அறிஞரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்று அனைத்துலகும் அறிந்த அறிவுஜீவிகளில் ஒருவர்! பரவலாக, பரபரப்பாகப் பேசப்பட்ட ‘சாப்பியன்ஸ்’, ‘ஹோமோ தேயுஸ்’, ‘21 லெசன்ஸ் ஃபார் த டுவன்ட்டிஃபர்ஸ்ட் சென்சுரி’ போன்ற நூல்கள் இவர் எழுதியவைகள்தான்.
இந்த ஆண்டு பிப்ரவரியின் முதல் வாரத்தில் வந்த ‘டைம்’ பன்னாட்டு இதழில் இவரது கட்டுரை ஒன்று வெளிவந்தது. ‘அடையாளத்திற்கான ஆபத்துமிக்க தேடல்’ (த டேன்ஜரஸ் குவெஸ்ட் ஃபார் ஐடென்டிட்டி) என்ற தலைப்பில் வந்த இக்கட்டுரையில் நோவா சொல்கிறார்: “என்னிலுள்ள, எனைச் சார்ந்த ஒன்றை மட்டும் முன்னிறுத்தி, மற்றவைகளை எல்லாம் மறந்துவிடுவது அல்லது மழுங்கடிக்கப் பார்ப்பது எத்துணை பெரிய கொடுமை!”
நாம் தமிழர்கள்! அதை மறுக்கவோ, மறைக்கவோ வேண்டியதில்லை. ‘தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!’ என்று பாடியவர் கவிமணி. ஆனால், நாம் தமிழராய் இருக்கிறபோதே நாம் இந்தியர்கள்! நாம் கிறிஸ்தவர்கள்! இவற்றில் ஏதோ ஒன்றை மட்டும் இறுகப் பிடித்துத் தக்கவைத்துக் கொண்டு, மீதியை மறுத்தால் அல்லது மறந்து விட்டால் அது எவ்வளவு பெரிய மதியீனம்!
“இத்தனையும் நான்தான். நான்தான் இவையெல்லாம்’ என்று புரிந்து, ஏற்றுக்கொண்டால் மட்டுமே நமக்கு நிம்மதி” என்கிறார் நோவா.
1948 ஆம் ஆண்டு மே 25 அன்று ஃபிரான்சின் தலை நகரான பாரீசிலிருந்த அமெரிக்கத் தூதரகத்தில் நுழைந்தார் அவர். தனது அமெரிக்கக் குடியுரிமையைத் துறப்பதாகச் சொல்லி, தனது கடவுச் சீட்டை (பாஸ்போர்ட்) ஒப்படைத்து விட்டு, தன்னை வியப்போடும், குழப்பத்தோடும் பார்த்த அதிகாரிகளிடம் அவர் சொன்னார்: “இன்று முதல் என் சொந்த நாடு என்று எதுவுமில்லை; நான் உலகக் குடிமகன்” (குளோபல் சிட்டிசன்). அவரது பெயர் கேரி டேவிஸ் (Carry Davis). இவர் தொடங்கிய ‘உலகம் ஒன்றே’ (ஒன் வெர்ல்ட்) என்ற இயக்கத்தில் இன்று ஏறத்தாழ பத்து இலட்சம் பேர் அங்கத்தினராக உள்ளனர்.
‘நான் யார்?’ என்ற கேள்விக்குப் பதில் தேடும் முயற்சியில், மற்ற எல்லாவற்றையும்விட முக்கியமான அடித்தளமாக இருக்க வேண்டிய உண்மை என்ன தெரியுமா? ஹென்றி நாவென் எனும் தலைசிறந்த ஆன்மிக எழுத்தாளர் தனது நூல்களிலும், உரைகளிலும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிய உண்மை இது. ‘நான் யார் தெரியுமா? அடிப்படையில் கடவுளின் அன்புக்குரிய பிள்ளை நான். அவர் ஆழமாய் அன்பு செய்யும் அவரது அன்பு மகன் நான். அவரது மகள் நான்’ எனும் பேருண்மையே! இதனை மனதார நம்பி, ஏற்றுக்கொண்டு, கடவுளின் அன்புப் பிள்ளைகள்போல இவ்வுலகில் வாழ முயன்றால் நம் வாழ்க்கை வளம் பெறும்.
Comment