நம்பிக்கையின் நங்கூரம் அன்னை மரியா
தேனினும் இனியவள்!
அன்பின் வடிவமானவள்!
தாவீதின் குலமகள்!
ஜென்மப் பாவமின்றி உற்பவித்தவள்!
பெண்களுக்குள் பேறுபெற்றவள்!
இரக்கத்தின் ஊற்று!
ஆம்! எத்துணை சொல்லினும் நாவுக்குள் அடங்காது ஓங்கு புகழ்பெற்று விளங்குபவர்தான் நம் அன்னை மரியா! ‘நம்பிக்கையின் நங்கூரம் அன்னை மரியா’ என்ற தலைப்பு அன்னை மரிக்கு முற்றிலும் பொருத்தமான ஒன்று.
முதலாவதாக, அன்னை மரியா ஜென்மப் பாவமின்றி உற்பவித்தவர். எனவேதான் கடவுள் துய ஆவி வழியாக அன்னை மரியைத் தேர்ந்தெடுத்துள்ளார். வானதூதர் கன்னி மரியாவுக்குத் தோன்றி கருவுற்ற செய்தியை அறிவித்த பொழுது, அன்னை மரியா இரண்டே இடங்களில்தான் பேசுகிறார். ‘அருள்மிகப் பெற்றவரே வாழ்க!’ என்ற வானதூதரின் வார்த்தையைக் கேட்டு, ‘இவ்வார்த்தை எத்தகையதாக இருக்குமோ?’ என்று கலக்கமுற்றார். ‘நான் கன்னி ஆயிற்றே; இது எப்படி நிகழும்?’ என்று கேட்பது சந்தேகத்தோடு அல்ல; தான் ஒரு கன்னி என்பதால் இத்தகைய கேள்வியை எழுப்புகிறார். கடவுளின் வார்த்தைக்கு முழுவதுமாகக் கீழ்ப்படிந்த அன்னை மரியா, ‘நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்று கூறி தன்னைத் தயார்படுத்தினார்.
இரண்டாவதாக, தன் மகனின் வல்லமை செயல்களை நன்கு அறிந்த மரியா, கானாவூர் திருமண நிகழ்விற்குச் சென்ற பொழுது அங்கு விருந்தில் இரசம் தீர்ந்துவிட்டதை அறிந்து, திருமண வீட்டாரின் அவமானத்தைப் போக்க தன் மகனிடம் உதவி கேட்கிறார். ‘இரசம் தீர்ந்துவிட்டது’ என்று கூறியவுடன், இயேசு ‘அதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே!’ என்று கூறினார். இருப்பினும், அன்னை மரியா மனம் உடையவில்லை. கடவுளின் மீது நம்பிக்கைக் கொண்டு சீடர்களைப் பார்த்து, “அவர் உங்களுக்குச் சொல்வதைச் செய்யுங்கள்” என்று கூறினார். ஏனெனில், கடவுள் மீதும், அவரின் மகன் மீதும் நம்பிக்கைக் கொண்டிருந்தார். தன் மகன் இறைமகன் என்பதால், அவரால் எதையும் செய்ய இயலும் என்று மரியா நம்பினார். தண்ணீரும், இரசமானது; சுவையும் கூடியது; அனைவரும் வாழ்த்திச் சென்றனர். இதுவே இறைமகன் இயேசு செய்த முதல் அற்புதமாகப் போற்றப்படுகிறது. இதைத் தொடந்து இயேசு பல்வேறு அற்புதங்களைச் செய்து வந்தார்.
மூன்றாவதாக, இயேசு பிறந்தது முதல் அவரது இறப்பு வரை அன்னை மரியா பெற்ற வியாகுலம் அளவிடற்கரியது. குழந்தையைத் தூக்கிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடியது; இயேசு காணாமல் போனது; இயேசு சிலுவை சுமந்தது; இயேசு இறந்தது என ஒவ்வொரு துன்பத்தையும் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் நிமித்தம் அன்னை மரியா தாங்கிக் கொண்டார் என்பதுதான் உண்மை!
ஆம், அனைத்தையும் தன் வாழ்வில் அனுபவித்த அன்னை மரியா, உலக மக்களின் துன்பங்களை நன்கு அறிந்தவர். இரக்கத்தின் வடிவமானவர். அனைவரின் மன்றாட்டுகளையும் இறைவனிடம் முறையிட்டு விடுதலை பெற்றுத் தருபவர். இப்பெருமைமிகு அன்னை மரியின் நற்பண்புகளைப் பின்பற்றி வாழ்வோம்.
Comment