No icon

வாழ்க்கையைக் கொண்டாடு- 11

தொடர்பு எல்லைக்கு அப்பால்

நான் நினைத்ததை அடைய எந்த எல்லைக்கும் செல்லத் தயார்எனச் சிலர் சொல்வதைக் கேட்டிருப்போம். நம் எண்ணங்களுக்கு எல்லையில்லை; ஆனால், நம் வாழ்க்கைக்கு ஓர் எல்லையுண்டு. நம் வாழ்க்கையின் உச்ச எல்லையை அடைய சில தொல்லைகளை நாம் கடந்தாக வேண்டும். அதை நாம் மட்டுமே கடப்பது கடினம். மற்றொருவர் துணையும் கிடைக்கும்போது பயணம் இலகுவாகும். அந்த இலகுவான பயணத்திற்கு நல்ல தொடர்புகளை நாம் தேடிக் கொள்வது கூடுதல் பலம்.

படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடிய பண்புடையாளர்களின் நட்பு சாலச்சிறந்தது எனத் திருவள்ளுவர் அவர்கள், ‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு’ (குறள் எண் - 783) எனும் குறளில் குறிப்பிடுகிறார். ‘இத்தனை பேரை எனக்குத் தெரியும்என்பதில் தொடங்கி, ‘இத்தனை பேருக்கு என்னைத் தெரியும்எனும் நிலைக்கு நாம் மாறுவதில்தான் உண்மையான வளர்ச்சி அடங்கியுள்ளது. இந்த வளர்ச்சியை ஒரே நாளில்ஜீபூம்பாசொல்லி உடனே அடைவதல்ல; சில பல பாடங்களைக் கற்றுணர்ந்த பின்னரே நமக்குக் கிடைக்கும்.

தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதே நல்லது எனச் சிலர் நினைக்கலாம். ‘எதற்குத் தேவையில்லாத சிக்கலை இழுத்துக்கொள்ள?’ என அலுத்துக்கொள்ளும் மனநிலையும் சிலருக்கு உண்டு. அதையெல்லாம் தாண்டி, ‘வருவதை எதிர்கொள்வோம்எனும் துணிவில் இறங்கும்போதுதான் நமக்கான வெற்றி உறுதியாகும்.

பிறருக்கு உதவுவதன் மூலம் நமக்கு நாமே மறைமுகமாக உதவிக் கொள்கிறோம் எனச் சென்ற வாரம் சொல்லியிருந்தேன், அது எவ்வளவு தீர்க்கமான வார்த்தை தெரியுமா? ‘என் வாழ்வில் இதை அடிக்கடி உணர்ந்துள்ளேன்என நம் தொடரை தொடர்ந்து வாசிக்கும் நண்பர் ஒருவர் கூறியது எவ்வளவு உண்மை என்பதை நாமும் நம் வாழ்வில் உணர்ந்திருப்போம். நட்பினை, தொடர்பினை மேம்படுத்த ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது இன்றியமையாத ஒன்று என்பதை நாம் முதலில் உணர்ந்தாக வேண்டும். தொடர்பு எல்லைக்குள் நாம் எப்போதும் இருக்க, இதுவே தலையாய வழி.

அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம். ஆபத்தினை அறியவைப்பவன் பண்பான நண்பன் ஆகிறான். நம் உயர்வின் எல்லைகளை விரிவுபடுத்த பரந்த அறிவும், விரிந்த எண்ணமும் வேண்டும். அன்பானவர்களையும், பண்பானவர்களையும் நம் தொடர்பு எல்லைக்குள் வைத்திருப்பது இன்னும் ஏற்றம் மிக்கது.

இவையனைத்தும் தானாக நம்மிடம் வருமா? நாமும் இதுபோல நலன்களைக் கொண்டிருந்தால் மட்டுமே முழு சாத்தியமாகும். சிலர் அவர்களது தேவையை மட்டுமே மையப்படுத்தித் தங்களது தொடர்பு எல்லையை விரிவுபடுத்துவர். அது நெடுங்காலத்திற்கு ஏற்றதாக இருக்காது; குறுகியக் கால பயனையே தரும். உதவி பெறுவதோடு, உதவிடும் எண்ணமும் மேலெழும்போதுதான் நம் தொடர்பு வட்டம் பெரிதாகும்.

நம் தொடர்பு எல்லையைச் செம்மையாக்க இவற்றைப் பின்பற்ற முயல்வோம்.

  •  சரியான நபர்கள்மீது கவனம் செலுத்துங்கள்.
  •  வெற்றி அல்லது பலன் என்பது இரு பக்கமும் இருக்க வேண்டும் (win-win situation).
  •  உதவியைப் பெறவும், கொடுக்கவும் தெரிய வேண்டும்.
  •  சரியான புரிதலை ஏற்படுத்த வேண் டும்.
  •  கருத்துகளைப் பரிமாறி நம்மை மேம்படுத்த வேண்டும்.
  •  பிறரைப் பாராட்டும் நல் மனம் வேண்டும்.
  •  நன்றி காட்டும் நல்மனம் வேண்டும்.

எல்லாருக்கும் எல்லாமே தெரியுமா?’ என்றால், தெரியாது! ஆனால், எல்லாவற்றையும் அறிந்து கொள்ள நல்வாய்ப்பாக நட்பு வட்டமும், தொடர்புகளும் அமையும். ஏதோ ஒருவித கலக்கத்தில் மனம் வாடி நிற்கும்போது நமக்கொருவர் நினைவில் வந்தால் அவர்தான் உற்ற நண்பன். நம்பிக்கையை நிறைவேற்றும் களமாகப் பலருக்கு நிற்பது அவர்கள் கொண்டிருக்கும் தொடர்புகளே.

விரிந்து பரந்துள்ள இந்த உலகில் சிறு புள்ளியாக இருக்கும் நம்மைப் பெரும்புள்ளியாக மாற்ற நல்ல தொடர்புகளே நமக்குத் துணையாய் நிற்கும். உதவிகளைப் பெறவும், கொடுக்கவும் தெரிந்திருந்தால், நம் உயர்வுக்கான எல்லையை யாரும் அடைக்க முடியாது.

வெற்றி என்பது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தாலும், தொடர்ந்து நம் தொடர்புகளை விரிவாக்கும்போது எல்லையில்லா வெற்றியினை நாம் காணும் காலம் கனிந்து வரும். எவ்விதக் காரணமும், கசப்பும் இன்றி, காலமே ஒருசிலரை நம்மிடம் இருந்து பிரித்துவிடும். அதே காலம் சிலரைக் காரணமின்றியும், காரணத்தோடும் இணைத்து விடும். காலச் சக்கரத்தில் சிக்கிக்கொள்ளும் நிலையைத் தவிர்க்கச் சற்று விழிப்போடு இருந்தால் மட்டுமே, இவையெல்லாம் ஏன்? எதற்காக? என்று இனம் காண முடியும்.

அலைந்து அலைந்து நாம் தேர்ந்தெடுக்கும் தொடர்புகளுக்குள் தொலைந்து விடாமல் இருக்க நோக்கத்தை எப்போதும் தெளிவுபட வைத்திருப்போம். உறவுகளைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமை நம்மிடம் இல்லை. அதேநேரத்தில், தொடர்புகளை (Networking) தெளிந்து தேர்ந்தெடுக்கும் முழு உரிமை நமக்குண்டு, ஆதலால் இதன் பொருட்டு ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு நாமேதான் பொறுப்பேற்க வேண்டும்.

உலகம் பெரிது! வாய்ப்புகளும் பெரியன! வரும் வாய்ப்புகளை நழுவவிடாது, நம் வாழ்வினை மேம்படுத்தத் தொடர்புகளுக்கு இல்லை எல்லை எனப் பயணிப்போம், பலன் பெறுவோம்.

தொடர்ந்து பயணிப்போம்...

Comment