நாளை நம் நிலை எதுவோ?
2008 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெண் சமூக ஆர்வலர் தெருவில் ஆடைகள் களையப்பட்டு, ஒரு பெரிய கட்டையால் அடிவாங்கிக் கொண்டு பல ஆண்களுக்கு முன்னால் நடந்தபோது, சில கைகள் அதைப் புகைப்படமாக்கியது. அதைக் கண்டு மனத்தில் கோபம்! பல தலித் ஆதிவாசிப் பெண்களுக்கும் இதேபோல பல வன்கொடுமைகள் இந்த நாட்டில் நடந்துள்ளன.
ஒவ்வொரு முறையும் இது போன்ற கொடுமைகள் நடக்கும்போது நம்மில் பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து விட்டுக் கடந்து செல்கின்றோம்; இல்லையெனில் தெருவில் போராடுகின்றோம். ஆனால், இந்தக் கொடுமைகள் பெண்களுக்கு இன்னமும் நடந்து கொண்டே இருக்கின்றன என்பதை மணிப்பூர் சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது. அடுத்த வாரம் நாம் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பெண்களைப் பற்றிச் சிந்திப்போமா என்பதே இங்கு கேள்விக்குறிதான்.
பெண்களுக்கு எதிரான வன்முறை குறைந்த பாடில்லை. அவை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இந்த வாக்கியமே அன்றாட நிகழ்வாகி விட்டது. ஐந்து அட்டவணையில், ‘இந்தியப் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள்’ என்ற தலைப்பில் செப்டம்பர் 13, 2022, BBC செய்தி தகவலின்படி 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்று தனது முதல் சுதந்திர தின உரையில், இந்தியாவில் நடக்கும் கற்பழிப்புகளைக் கண்டித்து, “இந்தப் பலாத்காரங்களைப் பற்றிக் கேட்கும்போது நம் தலைகள் வெட்கத்தால் தலைகுனிந்து நிற்கின்றன” என்று கூறினார். அவரது பாரதிய ஜனதா கட்சி அரசின் கீழ் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையாமல் இருப்பதாகத் தரவுகள் காட்டுகின்றன.
தேசியக் குற்றப் பதிவுகள் பணியகத்தின் 2016 - 2021 அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை இந்தியாவில் காவல் துறை பதிவு செய்த 6 மில்லியன் குற்றங்களில், 428, 278 வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.
2016 இல் 338,954 வழக்குகளில் இருந்து, இது ஆறு ஆண்டுகளில் 26.35% அதிகரித்துள்ளன.
2021 ஆம் ஆண்டில் பெரும்பாலான வழக்குகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, வரதட்சணை மரணங்கள் மற்றும் தாக்குதல்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
மேலும், 107 பெண்கள் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். 1,580 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர். 15 சிறுமிகள் விற்கப்பட்டுள்ளனர் மற்றும் 2,668 பெண்கள் சைபர் கிரைம்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
56,000க்கும் மேற்பட்ட வழக்குகளுடன், 240 மில்லியன் மக்களுடன் இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட வட மாநிலமான உத்தரப்பிரதேசம் மீண்டும் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அதற்கு அடுத்தபடியாக இராஜஸ்தானில் 40,738 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 39,526 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்தியா பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக மாறிவிட்டது.
‘இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் இரண்டு மாதங்களாக எரிந்து கொண்டிருக்கிறது’ என்று 20-07-2023 அன்று வெளியான ஒரு காணொளி உலகையே பதை பதைக்கச் செய்தது. இந்தச் சம்பவம் 04-05-2023 இல் நடந்ததாகத் தகவல். சமூக வலைத்தளங்களில் மற்றும் பல இடங்களில் மக்கள் வெகுண்டெழுந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
“எங்கள் கிராமத்தைத் தாக்கும் கும்பலுடன் காவல்துறையும் இருந்தது. எங்கள் வீட்டிலிருந்து கூட்டிச் சென்ற போலீஸ், கிராமத்திலிருந்து சிறிது தூரம் சென்றதும், அந்தக் கும்பலுடன் எங்களை விட்டுச் சென்றது; நாங்கள் காவல் துறையால்தான் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டோம்; அந்தக் கும்பலால் எல்லா ஆண்களும் கொல்லப்பட்ட பிறகு, அவர்கள் செய்ய நினைத்ததை முடித்த பிறகு, நாங்கள் அங்கேயே விடப்பட்டோம்” என ஆங்கில நாளிதழுக்குப் பாதிக்கப்பட்ட பெண் பேட்டியளித்துள்ளார். வீடியோவில் காணப்பட்ட இரண்டு பெண்களில் இளம் வயதுப் பெண்ணின் தந்தை மற்றும் அவரது இளைய சகோதரரை அந்தக் கும்பல் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காணொளியைப் பார்க்கவே மனம் துடிக்கிறது. அதை அப்படியே வெளியிட்டது பத்திரிகை அதர்மம்! பாதிக்கப்பட்ட பெண்ணால் மனத்தளவில், உடளலவில் அதை எளிதாகக் கடந்து வரமுடியுமா? எல்லாக் கொடுமைகளும் பெண்ணின் உடலில் தான் நிகழ்த்தப்பட வேண்டுமா? அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவில் உள்ள மற்றப் பெண்களுக்கும் நடக்கலாம் என்பதில் சந்தேகமேயில்லை. ஏனென்றால், நம் நாட்டில் பெண்களுக்கு எதிரானக் கொடுமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
2008 இல் ஒடிசா மாநிலம் கந்தமாலில் நடந்த மதக் கலவரத்தின்போது அருள்சகோதரி மீனா கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார். 2012 இல் தலைநகரில் நிர்பயா, 2014 இல் உ. பி. மாநிலம் பதான் எனும் இடத்தில் இரண்டு தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டனர். 2015 இல் மேற்கு வங்கத்தில் 72 வயது அருள்சகோதரி வன்புணர்வு செய்யப்பட்டது, 2018 ஆம் ஆண்டு காஷ்மீரில் 8 வயது ஆசிபா கோவிலில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது என வரிசைப் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றன.
இதற்கெல்லாம் யார் காரணம்? பெண்களா? அல்லது மனநோயால் பாதிக்கப்பட்ட ஆணாதிக்கமா? எந்தப் பிரச்சினையானாலும் பெண்களைத் தாக்கினால், அவர்களின் உடலைச் சிதைத்தால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி விடலாம் என்ற வக்கிர எண்ணமா? ‘பெண்களின் உடை எங்களின் ஆசையைத் தூண்டுகிறது’ என்று பெண்கள் உடுத்தும் உடையில் குறை கண்டீர்கள். ஆனால், இங்கே ஆண்கள் அரை நிர்வாணமாக எங்கும் செல்லலாம். 8 வயது ஆசிபாவின் உடையிலும், 72 வயது அருள்சகோதரியின் உடையிலும் என்ன குற்றம் கண்டீர்கள்? பெண்களைப் பாதுகாக்கும் பதவியில் உள்ள பெண்கள், மணிப்பூர் பெண்களின் அவல நிலைக்குப் பதில் எதுவும் கூறவில்லை. காவல்துறைதான் இப்பெண்களின் நிலைக்குக் காரணம் என்கிறது பாதிக்கப்பட்ட பெண்ணின் பேட்டி.
2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு நீதி கிடைக்கவில்லை. மாறாக, கொலையாளிகள் கொண்டாடப்பட்டார்கள். இங்கே பல மனநோயாளிகள் பெண்களை வன்முறைக்கு உட்படுத்துவதால் தாங்கள் பலமானவர்கள் என்று காட்டிக்கொள்கிறார்கள். சட்டமும் துணை போகிறது. இதற்கு என்னதான் வழி? பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். 76 வருட சுதந்திர இந்தியாவில் பெண்களுக்குச் சுதந்திரம் இல்லை என்றால், இங்கே யார் குற்றவாளிகள்? இவர்களின் ஆதிக்கத்தை அடக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டுமா? அல்லது பெண்கள் கைகளில் ஆயுதம் ஏந்தி நடக்க வேண்டுமா? பெண்ணின் உடலை புனிதமாக்கிச் சிதைப்பதுதான் மனித தர்மமோ?
மணிப்பூரில் பாதிக்கப்பட்ட இரண்டு சகோதரிகளின் குரல் இவ்வாறு ஒலிக்குமோ?
என்னை நீ தெய்வமாகக் கொண்டாட வேண்டாம்.
என்னைப் பெற்றவனுக்கு நான்
இளவரசியாகத் தெரிய வேண்டாம்.
என்னைக் காதலிப்பவனின் கண்களுக்கு
நான் கனவுக் கன்னியாகக்
காட்சியளிக்க வேண்டாம்.
என்னை மணம் புரிந்தவனுக்கு
ஜாடிக்கு ஏற்ற மூடியாக வேண்டாம்.
சதையும், இரத்தமுமாய்,
உணர்வுள்ள உயிரினமாக என்னை வாழவிடு.
உன்னை உலகுக்குக் கொண்டு வர உபயோகப்பட்ட என் பிறப்புறுப்பு
இன்று உனக்குக் காமப் பொருளாக மாறியுள்ளது.
உன் பசியாற்ற என் இரத்தத்தைப் பாலாக்கிய
என் மார்பகங்கள் இன்று உன் ஆணாதிக்கத்தின் உச்சமாக மாறியுள்ளது.
மனிதனாக உன்னை மதிக்க முடியாது.
விலங்குகளுக்கு கூட நன்றியுண்டு!
நீயோ வாழவே தகுதியற்றவன்!
நோய்ப்பட்ட சமூகத்தின் சாபக்கேடு நீ!
இங்கே பறிபோனது என் மானம் அல்ல;
காட்சிப் பொருளாகிப் போனது
என் நிர்வாண உடல் அல்ல;
என்னைச் சுற்றி கூட்டமாக வந்தாயே!
என் அந்தரங்கத்தை அரசியலாக்கினாயே!
நீ வெட்கித் தலை குனிய வேண்டும்.
உன்னைப் பெற்ற தாய்க்கு
நீ எதிரியாகிப் போனாய்!
உன் சகோதரிக்கும், மனைவி, மகளுக்கும் தேவையற்றவனாகிப் போனாய்!
அன்று எத்தனையோ காமம் நிறை கண்கள்
என் உடலைப் பார்த்து இரசித்தன என்றாலும்,
இன்று பல கோடி சகோதர சகோதரிகள்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி முதல்
நல்லவர்கள் எனக்காகக் கொதித்தெழுகின்றனர்.
இதுவே மனிதம் சாகவில்லை
என்பதற்கு அடையாளம்.
அறியாமை இருள் நிறைந்த
பல மனங்கள் மத்தியில்
மனிதநேயம் நிறைந்த மகான்கள் வாழ்கின்றனர்.
என்னோடு முடியட்டும் இந்தச் சாபம்
இன்றோடு உலகம் அழிந்து விட்டால்
நலம் என்று அன்று தோன்றியது
என்னிலிருந்து வெளியேறிய இரத்தத்துளிகள்
வேற்றுமையின் முடிவாக இருக்கட்டும்.
வெறியின தாகம் தணியட்டும்.
மனம் வலித்தாலும் மீண்டும் எழுந்து வருவேன் உன்னை வேரறுக்க!
பாதிக்கப்பட்ட பெண்களின் இந்தக் குரல்கள், தவறிழைத்தவர்களின் காதைக் கிழித்துக் கொண்டு கேட்கட்டும். அவர்களின் செத்துப்போன மனசாட்சியே அவர்களுக்குத் தீர்ப்பளிக்கட்டும். மௌனம் சாதிக்கும் அரசின் மௌனம் கலையட்டும். நீதி ஓங்க அனைவரும் வேற்றுமைச் சக்திகளுக்கு எதிராக ஒன்றுபடுவோம். நம் மௌனம் நாளை நமக்கே எதிராகத் திரும்பாமல் இருக்க வன்முறையை, ஏற்றத்தாழ்வை வேரறுப்போம்.
Comment