
வாழ்க்கையைக் கொண்டாடு – 12
கற்கை நன்றே, கற்கை நன்றே!
எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலே ‘அறிவாளி’ எனும் நிலை ஒரு காலத்தில் இருந்தது. அது மெல்ல மெல்ல மாறி, ‘படித்தவர் எல்லாம் அறிவாளி அல்லர்; படித்ததை வைத்து அடுத்த நிலைக்குத் தன்னைக் கொண்டுச் செல்பவரே அறிவாளி! இல்லையில்லை, படித்ததை வைத்துத் தொண்டு செய்பவரே அறிவாளி!’ எனும் பலதரப்பட்டக் கருத்துகள் உலவுவதைப் பார்க்கின்றோம்.
இங்கு குறிப்பிடப்படும் அறிவு என்பது, கற்றலின் அடுத்த நிலை. கற்றல்தான் அனைத்துக்கும் ஆணி வேர். கற்றால்தான் நாம் உயர முடியும். பெற்ற அறிவும், கற்ற அறிவும் நம்மை வளப்படுத்த வேண்டும். இதற்கு நாம் கொண்டிருக்க வேண்டியது, தீராத ஆர்வம் மட்டுமே. தொடர் கற்றல் மட்டுமே நமக்கான மாற்றத்தையும், பழையதில் இருந்து புதுவித மனிதனாக நம்மை உருமாற்றும் (Transformation) வித்தையையும் தந்து உதவும். சமூக உயர்வுக்குப் பயன்தராத எந்தக் கற்றலும் வீண்தான் எனும் கருத்தைப் பல அறிஞர்கள் பல்வேறு சூழல்களில் சொல்லியுள்ளதை நாம் முறையாகச் செயல்படுத்தும்போது, கற்றலின் சுகம் எவ்வளவு ஆழமானது எனத் தெரிய வரும். கற்றல் என்பது அறிவைத் தரும்; ஞானத்தைத் தருமா? நமது உயர்வுக்காகத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்வது அறிவு. நம் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் தேவையற்றதை விட்டுவிடுவது ஞானம். இன்னும் ஆழமாகச் சொல்லப்போனால், எதிர்வரும் பிரச்சினைகளை எதிர்கொள்வது அறிவு; அதை வராமல் முன்கூட்டியே தவிர்த்து விடுவது ஞானம். அவ்வளவுதான்! ‘ஸ்ஸ்ஸப்பா... ஒரு பெரிய பாடம் எடுக்குற மாதிரி இருக்கு’ என நீங்கள் எண்ணலாம்? வேறு எப்படித்தான் சொல்வது? இப்படித்தான் சொல்லியாக வேண்டும்.
நீங்கள் கேட்கும் ஆர்வத்தோடு இருப்பதால், நான் படித்த இன்னொன்றையும் சொல்கிறேன். ‘ஓர் ஆப்பிளுக்குள் எத்தனை விதைகள் உள்ளன?’ என்பதை நம்மால் எளிதாகக் கணக்கிட்டுக் கூறமுடியும். ஆனால், ‘ஒரு விதைக்குள் எத்தனை ஆப்பிள்கள் உள்ளன?’ என்பதை நாம் கணக்கிட்டுக் கூற முடியுமா? முடியாதல்லவா! அப்படி முடிந்தால் அதுதான் ஞானம் என்று அறிவார்ந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இப்போது சொல்லுங்கள், நாம் அறிவைப் பற்றிப் பேசுவோமா? இல்லை ஞானத்தைப் பற்றிப் பேசுவோமா? அறிவைப் பற்றிப் பேசுவோம்; ஞானத்தைப் பற்றிப் பேசும் சூழல் வரும்போது பேசலாம் (இப்படிச் சொல்லித் தப்பிக்க வேண்டியதுதான்).
இங்கு நாம் குறிப்பிடும் அறிவு என்பதை கற்றல் எனும் பொருளில் எடுத்துக் கொள்வோம். நான் ஏற்கெனவே பேசியுள்ளதுபோல, கற்றல்தான் அனைத்துக்கும் ஆணிவேர். அந்த ஆணிவேரை எப்படியெல்லாம் ஆழப்படுத்தி, நம்மை ஆளுமை மிக்கவராக மாற்றலாம்? வாருங்கள் பார்த்து விடுவோம்.
“உங்களுக்கு என்ன தெரியும் என்பதைவிட, என்னவெல்லாம் தெரியாது என்பதைத் தெரிந்து கொள்வதுதான் உண்மையான அறிவு!” - என்ன குழப்பமா இருக்கா? பின்ன இருக்காதா என்ன? இதைச் சொன்னவர் கன்பூசியஸ்! இதைத்தான் இன்றைய நடைமுறையில் Learn, Relearn and Unlearn என வகைப்படுத்திச் சொல்கிறார்கள். அதனடிப்படையில் நாம், நமது கற்றல் திறனை வகைப்படுத்தும்போது ஒரு தெளிவு பிறக்கும். அது நம் வாழ்க்கைக்கு ஓர் உந்துதலைத் தரும்.
Confucius
தொடர்ந்து கற்பது (Learn): நாம் கொண்டிருக்கும் திறனை மேம்படுத்தி, வெற்றியினைப் பெற கற்றல் என்பது தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும். தொடர்ந்து கற்பது நம்மை எல்லா நிலைகளிலும் வலுப்படுத்தி வைக்கும். இல்லையெனில் வளர்ச்சியில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுவிடும். இன்னும் சொல்லப் போனால், வெற்றிப் பாதையில் இருந்து விலக்கி வைக்கப்படுவோம். (உ.ம்) - உங்கள் தொழில் சார்ந்து மற்றும் உங்கள் தனிப்பட்ட வளர்ச்சி சார்ந்து வரும் புதுப் புது தகவல்களை அறிவது.
கற்பதை நிறுத்துவது (Un Learn): இது மிக மிக முக்கியம். தேவையற்றதை நீக்கும்போதுதான் தேவையானதை நிரப்ப முடியும். இதை நாம் சரிவரச் செய்தாலே முன்னேற்றத்தின் பாதி வழியைக் கடந்து விடலாம். ஏதோ ஒரு காலக்கட்டத்தில், ஒரு குறிப்பிட்டத் திறனோ, முறையோ உதவியிருக்கலாம். ஆனால், அது இப்போது தேவையற்றதும், பயனற்றதுமாக இருந்தால் அதை விட்டுவிடுதல் தானே நல்லது! தூக்கிக்கொண்டே சுமத்தல் அதிக பாரத்தைத் தரும். மேலும், ‘இவர் ஒரு பழமைவாதி’ எனும் முத்திரையும் நம்மீது குத்தப்படும். (உ.ம்) - ஒரு தகவலை / செய்தியைக் கேட்கும்போது உங்களுக்குக் கோபம் வருகிறதென்றால், ஒன்று - அது பொய்யாக இருக்கலாம்; இல்லையெனில், அந்தப் பொய்யான பிம்பம் உங்களுக்குள் உண்மையென ஆழமாகப் பதிந்திருக்கலாம். அதை உணரும்போது உதறித்தள்ளி புதுச் சிந்தனை கொண்டவனாக மாறுவது நல்லது. இதைத்தான் ‘விட்டு விலகி இருத்தல்’ என நாம் அழைக்கின்றோம்.
மீண்டும் ஆழமாகக் கற்பது (Relearn): சிலவகைத் திறன்களை நாம் தொடர்ந்து தற்காத்து வளர்த்தெடுப்பதன் மூலம், தற்போது இருக்கும் நிலையில் இருந்து, மற்றுமொரு மேம்பட்ட நிலைக்கு நாம் செல்ல முடியும். அப்படிப்பட்ட திறன்களை நாம் மீண்டும் மீண்டும் மெருகேற்றி மேம்படுத்துவது அவசியம். சிறு வயதில் கூட்டாஞ் சோறு ஆக்கிய அனுபவத்தை, அப்படியே கொஞ்சம் அடுக்களையிலும் (Kitchen) திருமணம் புரிந்தும் செய்ய ஆரம்பித்தால் குடும்பம் சிறப்புறும் அல்லவா! இதைச் சிரிப்பாக நினைத்துக் கடப்பதும், சிறப்பாக எடுத்து நகர்வதும் அவரவர் எண்ண ஓட்டத்தைப் பொறுத்தது. மேலும், ஓர் உதாரணம் - உங்களுக்கு நன்றாக எழுதும் திறன் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அந்த எழுத்தாற்றலை இன்னும் திறன் மிக்கதாக்க, நீங்கள் கையாளும் பழைய முறைகளை மாற்றி, காலத்திற்கு ஏற்றாற்போல புதுவிதமாக எழுதி நம்மைப் புதுப்பித்துக்கொள்ள நாம் எடுக்கும் முயற்சியும், ஆக்கமும் மீண்டும் ஆழமாகக் கற்பது (Relearn) எனும் வகைக்குள் வரும். இதையெல்லாம் செய்தால் நாம் மேன்மை அடைய முடியுமா? மேன்மை அடைய முடியுமா என்பது, நாம் எடுக்கும் தொடர் முயற்சியைப் பொறுத்தது. ஆனால், நிச்சயமாகக் கீழ்மை அடைய முடியாது என்பது என் கருத்து. மீண்டும் சொல்கிறேன் கற்கை நன்றே, கற்கை நன்றே!
தொடர்ந்து பயணிப்போம்...
Comment