
சிந்தனைச் சிதறல் - 04
இளமையைப் பண்படுத்தும் முதுமையின் உடனிருப்பு!
அருள்தந்தை ஜோவோ சாகாஸ்! இவர்தான் போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பனில் நடைபெற்ற 37வது ‘உலக இளைஞர் நாள்’ கூடுகையின் தலைமை ஒருங்கிணைப்பாளர். இவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது: “மரியா எழுந்து விரைந்து சென்றார்’ (லூக் 1:39) என்பதுதான் உலக இளைஞர் நாள் கூடுகையின் மையச்சிந்தனையாக இருக்கின்றது. இதில் மரியா இளைஞராகவும், அவர் விரைந்து சந்தித்த நபர் எலிசபெத் வயதான நபர். இளைஞர் வயதானவருக்கு உதவி செய்ய வேண்டும் எனவும், முதுமைக்கும்-இளமைக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். தலைமுறை இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்பதை நான் நேரில் கண்டு வியந்தேன்” என்று சொன்னார்.
மேலும் அவர், “உலக இளைஞர் நாள் கூடுகைக்காகப் பல்வேறு நாடுகளிலிருந்து இளைஞர்கள் திருப்பயணிகளாக வந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை வரவேற்கவும், அவர்களைத் தங்கள் வீடுகளில் தங்க வைத்து, அவர்களுக்கு உதவி செய்யவும் பல வயதானவர்கள் முன்வருகின்றார்கள். இதனைப் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது” என்றார்.
மிகவும் பிரபலமான பேராசிரியரும், குழந்தை உளவியலாளருமான யூரிப்ரோன் ஃபென்பிரென்னர் (IRIE BRON FEBRNNER) இரஷ்யாவில் பிறந்த அமெரிக்க உளவியலாளர். இவர் தன்னுடைய ஆய்வுக்காக 500 குழந்தைகளை வயதில் பெரியவர்களுடனும், 500 குழந்தைகளைத் தனியாகவும் வைத்து வளர்த்தார். ஆய்வின் முடிவில் இரண்டாவது குழு பெரியவர்கள் இல்லாத குழுவிலுள்ள 46 சதவீதம் குழந்தைகள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்கள். 50 சதவீதம் குழந்தைகள் பள்ளிக்குத் தொடர்ச்சியாக வருவதைக் குறைத்து விட்டார்கள். 33 சதவீதம் குழந்தைகள் தங்கள் நடத்தையில் தீய பழக்க வழக்கங்களையும், தீய வார்த்தைகளையும் பயன்படுத்தியிருக்கின்றார்கள். ஆனால், முதல் குழுவில் பெரியவர்களோடு இருந்தவர்களிடம் அன்பு செய்தல், விட்டுக் கொடுத்தல், மகிழ்ச்சியோடு இருத்தல் போன்ற நன்மையான குணங்கள் காணப்பட்டன. எனவே, யூரிப்ரோன் ஃபென்பிரென்னர் தனது ஆய்வு முடிவாக “ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்தபட்சம் ஒரு பெரியவர் தேவை” என்கிறார். எனவே, இளமையான வாழ்வு என்பது தனித்த வாழ்வோ, தன் வயதில் இருப்பவர்களோடு மட்டும் சேர்ந்து வாழவோ தேவையில்லை, தன் வயதை விட பெரியவர்களோடு இணைந்து வாழ்ந்தால் நலமாக இருக்கும்; இளமைக்கு முதுமை தேவை.
ஆடி, ஓடி வாழ்ந்த காலங்களை நிறைவு செய்து ஓய்ந்திருப்பவர்கள் முதியவர்கள். அவர்களுக்கு உடல் உழைப்பு என்பது முக்கியத்துவம். ஓடி உழைத்தவர்கள் ஓர் இடத்தில் அமர்ந்திருக்க முடியாது. ஏதாவது உடல் உழைப்பைக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவ்வாறு அவர்கள் உடல் உழைப்பைப் புரியும்போது அவர்களோடு இணைந்து வேலை செய்ய வேண்டும். குறிப்பாக, தோட்டத்தையோ, இருக்கும் இடத்தையோ சுத்தம் செய்யும்போது, அவர்களோடு இணைந்து உழைக்க வேண்டும்.
முதுமையையும், தனிமையையும் பிரிக்க முடியாது. எனவே, முதியவர்கள் தனிமை என்ற சிறைக்குள் சிக்காமல், அவர்கள் சுதந்திரமாக இருக்க இளையோர் உதவி புரிய வேண்டும். இக்காலம் தொழில் நுட்பம் மிகுந்த காலக்கட்டம், எனவே, அதற்கு ஏற்றார்போல் முதியவர்களும் இக்காலச் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ இளையோர் முதியவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அலைபேசி, கணிப்பொறி, தானியியங்கி ஆகிய தொழில் நுட்பச் சாதனங்களை முதியவர்கள் பயன்படுத்த இளையோர்கள்தான் உதவி செய்ய வேண்டும். நோயுற்று படுத்த படுக்கையாய் இருக்கும் போதும், அவர்களுக்குத் தேவையான பண வசதி போன்றவற்றில் பக்க பலமாக இருக்க வேண்டும். அமைதியான இறப்பையும், நல்ல மரணத்தையும் அடைய நிச்சயமாக முதுமைக்கு இளமை தேவை.
முதுமை இளமையிடம் எதிர்பார்ப்பது என்ன?
மரியாதை: பல வருடங்கள் வாழ்ந்தவர்கள், பல விதமான அனுபவங்கள் கொண்டவர்கள், நாம் பார்க்காத உலகத்தைப் பார்த்தவர்கள்; அவர்கள் வாழ்ந்த காலங்களைக் கணக்கில் கொண்டு அவர்களுக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். அதுதான் அவர்களுக்கு இத்தலைமுறை கொடுக்கும் உன்னதமான பரிசு!
உடனிருத்தல்: வயதானவர்களோடு பயணம் செய்வதும், அவர்களோடு உடனிருப்பதும் எளிதான காரியமல்ல; அவர்களோடு உடனிருக்கும்போது அவர்களுக்குப் பாதுகாப்பும், மகிழ்ச்சியும் கிடைக்கும். எனவே, அவர்களோடு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டாம்.
உரையாடல்: வயதானவர்களோடு பேசுவதை நாம் தவிர்த்து விடுகின்றோம். காரணம், அவர்களின் பேச்சில் முடிந்துபோன, கடந்து போன கதைகள் மட்டும்தான் இருக்கும். ‘எங்க காலத்திலே செல்போன் இல்ல; இருந்தாலும் நாங்கள் கடினப்பட்டோம்’ என்று பேசிய கதையை மீண்டும் மீண்டும் பேசுவார்கள். இத்தலைமுறையில் இருப்பவர்கள் பொறுமையோடு அவர்கள் பேசுவதற்குச் செவிகொடுக்க வேண்டும்.
தாங்குதல்: இன்று நாம் அனுபவிக்கும் வீடு, வசதி வாய்ப்புகள் அனைத்தும் வயதானவர்களின் உழைப்பாகத்தான் இருக்க வேண்டும். வயதான காலத்தில் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய, மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைப்படும். அவர்கள் கேட்டால் கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்காமல், அவர்கள் கேட்பதற்கு முன்பாக பொருளாதார ரீதியாக உதவி செய்வோம்.
புதியதைக் கற்றுக்கொடுத்தல்: ‘கற்றது கையளவு; கல்லாதது உலகளவு’ என்பார்கள். அது போல கற்றுக்கொள்ள வயது என்பது தடையல்ல! எனவே, வயதானோருக்குத் தற்காலத்தில் வளர்ச்சியடைந்த அறிவியல் தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொடுக்க இத்தலைமுறை தயங்கக்கூடாது. ‘பாடையிலே போகப்போற உனக்கு எதுக்கு ஐபோன்?’ என்று கிண்டல் செய்யாமல். அவர்களுக்குப் பொறுமையோடு கற்றுக்கொடுக்கலாம். இவைகளைத்தான் நமது மூத்த குடிமக்கள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது. ஆகவே, இளையோர் பொறுமையோடு, அன்போடு அவர்களுக்கு உதவி புரிய வேண்டும்.
உலக தாத்தா-பாட்டி மற்றும் முதியோர் தினத்திற்கான தனது முதல் செய்தியில் திருந்தந்தை பிரான்சிஸ் “வேர்களைப் பாதுகாப்போம்” என்றார். வேர் இல்லாமல் மரம் இல்லை. ‘வளர்ச்சி... வளர்ச்சி’ என்று ஓடிக்கொண்டியிருக்கும் நாம், சற்று நின்று நம் முதியோரைக் கவனிப்போம். நம்மை வளர்த்து ஆளாக்கிய அவர்களின் தியாக உள்ளத்தைக் கொண்டாடுவோம்.
மூத்தவர்கள் பழுதடைந்த விளக்குகளல்ல; பாதுகாக்கப்பட வேண்டிய விளக்குகள்! எனவே, அவர்களைப் பாதுகாப்போம்.
Comment