
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாதோ!
ஒன்றிய அரசின், குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளின் (Civil Service Examinations) நம்பகத் தன்மை சிதைந்துவிட்டது. ஆர்.எஸ். எஸ்-சின் அரசியல் பிரிவான பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் குடிமைப் பணிகள் அனைத்தும் அவர்கள் வசம் ஆகிவிட் டன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன் தொண்டர்களின் ஊடுருவலால் அரசு இயந்திரத்தை முழுமையாக ஆள்கிறது என்பதே உண்மை. ஆட்சிகள் மாறினாலும், அதிகாரம் காவிகளின் கையில் நாடு எப்பொழுதும் இருக்கும் என்பதே தற்போதைய பரிதாப நிலை!
அண்மையில் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி பொதுவெளியில் ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணித் தேர்வில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 676 பேர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் எனப் பகிரங்கப்படுத்தியுள்ளார். பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் 4000-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இந்திய ஆட்சிப் பணிகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது மறைக்க முடியாத உண்மை.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ‘சங்கல்ப்’ என்ற கல்வி அறக்கட்டளையை நடத்தி வருகிறது. 2020 இல் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் 759 இடங்களில் 466 இடங்களில் தேர்ச்சிப் பெற வைத்து, சங்கல்ப் ஐ.ஏ.எஸ் அகாடமி சாதனை (!) புரிந்திருக்கிறது. அதன் தேர்ச்சி சதவீதம் சராசரியாக 60 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.
நம்ம அண்ணாமலை அங்கே படித்தவர்தான். அவர் தேர்ச்சி பெற்ற கதையைக் கேளுங்கள். 2010 இல் ஐ.பி.எஸ். தேர்வு எழுதுகிறார் அண்ணாமலை. அன்றைக்கு இருக்கும் முறை என்னவென்றால், எழுத்துத் தேர்வில் 2000 மதிப்பெண்களுக்குத் தேர்வுகள் நடக்கும். கட்டுரைக்கு 200 மதிப்பெண்கள்; பொது அறிவு, பேப்பர் தலா 300 மதிப்பெண்கள்; சட்டம் 2 பேப்பர்கள் தலா 300; பொது நிர்வாகம் பேப்பர் தலா 300. ஆக மொத்தம் 2000 மதிப்பெண்கள். இதில் அண்ணாமலை வாங்கிய மதிப்பெண்கள் 927 மட்டுமே. 50% மதிப்பெண்கள் கூட வாங்க வில்லை. 50% முதல் 55% மதிப்பெண்கள் வாங்குகிறவர்கள் தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.க்குத் தேர்வு செய்யப்படுவார்கள். இது தான் தகுதித் தேர்வும் கூட. இதிலேயே இவர் தேர்வு பெறவில்லை. ஆனாலும், தகுதிப் பெற்று நேர்முகத் தேர்வுக்குச் செல்கிறார். அது 300 மதிப்பெண்களுக்கு நடக்கும். அதில் 240 மதிப்பெண்களை வாங்குகிறார். இதுதான் ஆச்சரியமான செய்தி! எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறாத அண்ணாமலை, இதையும் சேர்த்து 1167 மதிப்பெண்கள் பெற்று 284வது ஆளாக வந்து ஐ.பி.எஸ்.க்குத் தேர்வு செய்யப்படுகிறார்.
நேர்முகத் தேர்வில் இவருக்கு எப்படி 240 மதிப்பெண்கள் கிடைத்தன? அதில்தான் இவருக்குப் பயிற்சி கொடுத்த சங்கிகளின் ‘சங்கல்ப்’ உள்ளே வருகிறது. அத்துடன் கரூரைச் சார்ந்த முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், நீட் ஆதரவாளர், முன்னாள் யு.பி.எஸ்.சி. உறுப்பினர் முனைவர் பாலகுருசாமியும் வருகிறார். அவர் இன்று ஜார்கண்ட் ஆளுநர். எங்கள் பக்கத்துத் தெருக்காரர் சி.பி. ராதா கிருஷ்ணணுக்கு ஆலோசகராய் நியமிக்கப்பட்டதும் இதன் பின்னணி தகவல்கள். இதில் மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு இருக்கத்தான் செய்கிறது.
இந்திய தேசமெங்கும் சமூக நீதியை மறுக்கிற, ‘நீட்’ தேர்வை அமல்படுத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து. நளினி சிதம்பரத்தை வாதிட வைத்து வழக்கை வெற்றியாக்கியுள்ளது ஆர்.எஸ். எஸ். சின் ‘சங்கல்ப்’ கல்வி அறக்கட்டளை.
பெரியார் அவர்களின் கூற்று ஒன்று உண்டு. “நாம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் காலத்தில், அவாள்கள் அதை முடக்க நீதிமன்றத்தில் வந்து உட்கார்ந்து விடுவார்கள்” என்றார். அது ‘நீட்’ விவகாரத்தில் நடந்தது. அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆரிய ஆதிக்க வெறியே தவிர, வேறு எதுவும் இல்லை.
ஒன்றிய அரசால் நடத்தப்படும் ஐ.ஐ.டி. மற்றும் ஐ.பி.எம். நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் ஒளிவு மறைவின்றி அறியப்படுகிறது. நுழைவுத் தேர்வு (JEE) என்ற முறையில், வெகு ஜனங்களுக்கு உள் நுழைவு மறுக்கப்படுகிறது. பிற்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் நுழைய முடியாத ஆதிக்கக் கோட்டையாக மாறியுள்ளது. மீறி உள் நுழையும் மாணவர்களும் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு, மர்ம மரணங்கள் தொடர்கின்றன. அதில் ஆர். எஸ். எஸ். அமைப்பின் மாணவர் பிரிவு தொடர்ந்து வன்முறை வெறியாட்டம் நடத்துகிறது. புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக இடதுசாரி, வலதுசாரி மாணவர் மோதல் உயிர்ப் பலிகளை உள்ளடக்கியது பல நாள்களின் பத்திரிகைகளின் தலைப்புச் செய்தி.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டர்கள் மாவட்ட ஆட்சித் தலைவராகவோ அல்லது காவல் துறை அதிகாரிகளாகவோ இருந்தால், அங்கே மறைமுக இந்துத்துவா ஆட்சி புரிகிறது. அவர்களின் பல செயல்பாடுகள் சட்ட விதிகளுக்கு உட்படாமல், தொண்டு நிறுவனங்கள், தனியார் அறக்கட்டளைகள் என்ற பெயர்களில் நடைபெறுகின்றன. தங்கள் முழு அதிகாரத்தையும் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்குப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வழிகாட்டுகிறார்கள். பல தொழில் அதிபர்களும் இதில் பின்னணி என்பதே அதிர்ச்சியூட்டும் தகவல்.
தமிழகக் கல்வி அமைச்சர், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்காக அரசாணை வெளியிட முடிவெடுத்தார். அவரால் செயல்படுத்த அதிகாரிகளால் தடை செய்யப்பட்டது. அத்தடைகளை மீறிச் செயல்படுவது மூத்த அமைச்சருக்கே சவாலாக இருந்தது. அதிகாரிகளை ஆளும் கட்சியால் எதுவும் செய்ய முடியாது என்பதே வலிக்கும் உண்மை. மாநில அரசுகளின் உத்தரவுகளைப் பற்றிக் கவலைப்படாத, ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதிகரித்து விட்டார்கள்.
ஒன்றிய அரசில் மட்டும் அல்ல, தமிழக அரசிலும் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் மிக அதிகமாக வேரூன்றி விட்டது. தமிழக அரசு இதை சரிபார்க்க, தமிழக அதிகாரிகளின், அலுவலர்களின், பணியாளர்களின் முகநூல் பதிவுகளை மட்டும் உளவுத்துறை மூலம் கண்காணித்தால், பல ‘அவாள்’ மடி பூனைகள் வெளி வந்து விடும். பிற சமூக வலைதளங்களில் ஒளிந்திருப்பவர்களையும் கண்டுபிடித்து விடலாம். தமிழக முதல்வரைக் குறித்து தவறான தகவல் வெளியிட்டு, கைதானவர்களின் எண்ணிக்கையில், இந்தச் சதவீதத்தைச் சரிபார்த்தால் உண்மை புரியும். இந்தக் களவாணிகளை வைத்துக்கொண்டு திராவிட மாடல் அரசு எப்படிச் சுதந்திரமாகச் சுழலும்?
ஆர்.எஸ்.எஸ். ஊடுருவாத இடமே இல்லை. பட்டேல்களும், தயாள் சர்மாக்களும், முகர்ஜிகளும் தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் காப்பாற்றிய காங்கிரஸ்காரர்கள். அவர்கள் ஆர்.எஸ். எஸ். அமைப்பின் ஸ்லீப்பர் செல்கள்! நம்மூரிலும் ‘செட்டி நாட்டு சீமானின் செல்ல மகன்’ போன்றவர்கள் ‘நீட்’ முதற்கொண்டு, பா.ஜ.க.வின் அனைத்துக் கொள்கை முடிவுகளுக்கும் வக்காலத்து வாங்கும் கதர் சட்டைக்காரர்கள்.
காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல் முதற்கொண்டு, ‘இ-ந்-தி-யா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரை ஆர்.எஸ்.எஸ். அபாயம் குறித்துப் பேசுவது ஆறுதலான செய்தி.
நாம் நம் குழந்தைகளை இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவது, தேசம் காக்கும் மாற்று முன்னெடுப்பாகும்.
Comment