No icon

வாழ்க்கையைக் கொண்டாடு- 13

நேர்த்தி எனும் நறுமணம்!

 ‘எனக்கு ஒரு வேலைய முடிச்சாகணும்; அதை கில்லி மாதிரி செஞ்சு முடிக்க யாராவது இருந்தால், கொஞ்சம் எனக்குச் சொல்லேன்என நாம் பிறரிடமும், பிறர் நம்மிடமும் கேட்டிருக்கலாம். எல்லா நேரமும், எல்லாவற்றையும், எல்லாரும் சிறப்பாகச் செய்துவிட முடியுமா? முடியும்! இது ஆகக்கூடிய விசயம்தான். சிறப்பான திட்டமிடலும், ‘இதை என்னால் செய்து முடிக்க முடியும்எனும் திட நம்பிக்கையும் இருந்தால், எதுவும் நிறைவேறக்கூடிய ஒன்றுதான்!

எந்த ஒரு செயலைச் செய்தாலும், ‘இதை இவர்தான் செய்திருப்பார்’, ‘இவரால் மட்டுமே இதைச் செய்திருக்க முடியும்’, ‘இதைக் கட்டாயம் இவரால் செய்திருக்க முடியாதுஎனும் முடிவுக்கு வருவது, எதை அடிப்படையாகக் கொண்டு தெரியுமா? அதைச் செய்து முடிக்கும் திறனால்தான். இந்தத் திறன் பட்டைத் தீட்டப்படும்போது, நேர்த்தி எனும் நறுமணம் வெளிப்படும்.

புத்தாடை ஒன்றைத் தைக்க வேண்டும்; அதை யாரிடம் கொடுத்தால் சிறப்பாகத் தைத்துக் கொடுப்பார்?’ எனும் ஒரு பெரிய தேடலில் இறங்கி, தெரிந்த நண்பர்களிடம் எல்லாம் கேட்டு, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து, அதை அந்தக் குறிப்பிட்ட தையற்காரரிடம் கொடுப்பது எனத் தீர்மானிப்பதற்குப் பின், இத்தனை அலசல்கள் உள்ளனவா என நாம் என்றாவது நினைத்ததுண்டா? நினைத்திருப்போம். ஆனால், அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல், வழக்கம்போல கடந்திருப்போம். இதே அலசல்களை நம்மைச் சார்ந்திருப் போர், நம்மை அறியாமலே நம்மிடமும் செய்திருப்பார்கள். பிறர் நம்மைப் பற்றி மறைமுகமாக அல்லது அவர்களுக்குள்ளாகவே வைத்திருக்கும் கருத்துதான், ‘நாம் எப்படி?’ எனும் பிம்பத்தை வைத்திருக்கும்; அதற்கு இந்த நேர்த்தி எனும் திறன் வழிவகுக்கும்.

ஓர் அழகான பொம்மை இருக்கிறது; அதன் அழகை இன்னும் கூட்ட அல்லது உயிருள்ள பொம்மைபோல மாற்ற ஒரு பொட்டினை வைத்தால் இன்னும் மெருகு கூடும் என நினைத்து, அதை நாம் செய்யும்போது அந்தப் பொம்மை நாம் நினைத்தது போலவே அழகு கூடிய பொம்மையாக மாறும் அல்லவா! இதுதான்நேர்த்திஎன அழைக்கப்படுகின்றது. அழகுக்கு உயிரோட்டம் தரும் செயல்தான் நேர்த்தி.

எல்லாம் நல்லாத்தான் இருக்கு; ஆனால், ஏதோ ஒண்ணு குறைவாத் தெரியுதே?’ என நாம் நினைப்போம். அங்கு குறைவுபடுவது நேர்த்தி எனும் கீர்த்திதான்!

தமிழில் மெய்யெழுத்து என்பது, ஒரு சிறு புள்ளியால் மட்டுமே உயிர்பெறும். சிறு செயல்தான் சில நேரங்களில் பெரு மாற்றத்தைத் தரும். அதுபோல்தான், நாம் காட்டும் எந்த முனைப்பான சிறு செயலும், பெரு உயர்வை நமக்குத் தரும்.

மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலை நீங்கள் தூரத்தில் இருந்து பார்க்கும்போது ரம்யமும், அழகும் தெரியும். அதை அருகில் சென்று உற்றுநோக்கும் போதுதான் கலை நுணுக்கமும், கலைநயமும் தென்படும். அந்தக் கலை நுணக்கம்தான் நேர்த்தி! ஒட்டுமொத்தத் திறனோடு அழகும், அர்ப்பணிப்பும் சேரும் போது, எதுவாக இருந்தாலும் அது நேர்த்தியானதாக மாறிவிடும். அந்த நேர்த்திதான் நம் பக்கம் எண்ணற்றோரை ஈர்க்கும்; இந்தக் கடற்கரைக் கோயில்போல!

இந்த நேர்த்தியை நாம் வேலை பார்க்கும் இடங்களில்professionalismஅதாவதுதொழில் முறை சார்ந்த நிபுணத்துவம்என அழைக்கின்றோம். இதைத்தான் நம் திருவள்ளுவர் அவர்கள் தெரிந்து வினையாடல் அதிகாரத்தில், ‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ (குறள் எண்  517) எனத் தெளிவுபடக் கூறுகிறார். அப்படியானால் அறிவு, திறன் இதற்கெல்லாம் வேலையில்லையா? என நமக்கு ஓர் ஐயம் ஏற்படும்.

நேர்த்தி என்பது இவையெல்லாம் சேர்ந்த ஒரு கூட்டுக்கலவைதான். இந்த நேர்த்தி வெளிப்படும் போதுதான் நாம் சிறப்பான ஒரு நிலையை அடைய முடியும். தொடங்கிய வேலையைச் சிறப்புறச் செய்து முடிக்கும் ஆற்றலும் இதற்குள்தான் அடங்கும். மொத்தத்தில் சொல்வதானால் முழுமை பெறல்! நீங்கள் ஒரு வேலையைச் சிறப்புறத் தொடங்கி இருக்கலாம்; உங்களது ஒட்டுமொத்தத் திறனையும் அதில் காட்டியிருக்கலாம்; ஆனால், அது முழுமை பெறாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக தொங்கிக் கொண்டு இருந்தால் நமக்கே ஓர் ஏளனச் சிரிப்பு வரும்தானே! ஆதலால் தொடக்கத்தை விட முடிவு சிறப்புற இருப்பதுதான் சாலச்சிறந்தது.

இவனிடம் மட்டும் ஏதோ ஒரு வேறுபாடு தெரியுதே! மற்றவர்களை விட இவனிடம் ஏதோ ஒரு தனித்தன்மை இருக்கே!’ எனப் பிறர் நம்மீது வைக்கும் ஏக்கப் பார்வைதான் நமக்கான வெற்றிப் பாதை! இந்தத் தனித்தன்மையை வளர்த்தெடுக்க நமக்குத் தேவையான முதன்மைத் தன்மை எது தெரியுமா? தேவையற்ற மற்றும் வீணான எண்ணங்களில், சிந்தனைகளில் நாம் மூழ்காமல் இருந்தாலே போதும்; வாழ்கைக்கான தேடலில் நாம் மூழ்கி முத்தெடுக்க முடியும்!

உங்களுக்கென ஒரு திறமையைக் கண்டு கொள்ளுங்கள். ‘அப்படியெல்லாம் என்னிடம் எதுவுமே இல்லைஎன்ற வருத்தம் இருந்தால், வருத்தப்படாமல், எதுவாக ஆகவேண்டுமோ அதை வளர்த்தெடுக்க முற்படுங்கள். அதுதான் நமக்கான அடையாளமாக மாறும். மொத்தத்தில் எல்லாம் சாத்தியம்தான், ஆகக்கூடிய ஒன்றுதான். அதற்கு முதலில் நாம் மனது வைத்தாக வேண்டும்.

மிச்சமில்லாமல் உச்சம் தொடும் பேராற்றல் நமக்குள்தான் இருக்கிறது. அதைத் தேடிக் கண்டடைவது நம் முதல் வேலை. அந்த வேலையை இன்றே, இப்போதே தொடங்குவோம்.

தொடர்ந்து பயணிப்போம்....

Comment