No icon

வாழ்வு வளம் பெற - 7

அமர்ந்து, அமைதியாய்!

தன் கையில் ஒரு தண்ணீர் செம்பை வைத்துக் கொண்டு, வேகமாக நடந்து கொண்டே பேரன் தாத்தாவிடம் பேசினான்.

அனுபவம், வாசிப்பு, சிந்தனை இவற்றின் வழியாகத் தாத்தாவுக்கு நிறைய ஞானம் வாய்த்திருக்கிறது என்பதைச் சிறுவன் புரிந்திருந்தான். எனவே, அவனைப் பெரிதும் குழப்பிய கேள்விகளை எல்லாம் தன் தாத்தாவிடமே கேட்டான்.

இங்க பாரு தாத்தா, நல்ல தண்ணியே இந்த வீட்ல கிடைக்காதா? எவ்வளவு தூசி மிதக்குது பாத்தியா? என்ன இதெல்லாம்? சுத்திச் சுத்தி வருது பாரு!” என்ற பேரன் தண்ணீர் செம்பைத் தாத்தாவிடம் காட்டினான்.

தாத்தா அருகிலிருந்த ஒரு மேஜையைக் காட்டி, “சரி, இந்தச் செம்பை அங்க அந்த மேஜையில வை. நீ பக்கத்துல நிக்காம, அஞ்சடி தூரம் போகணும். அதோ அங்கிருக்கிற நாற்காலியில போய் உக்காரு. நான் சொல்லும் போதுதான் எழுந்து வரணும். சரியா?” என்றார்.

தலையசைத்த பேரன், செம்பை மேஜையில் வைத்து விட்டு, அந்த அறையின் ஓரத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். தாத்தா, தான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மீண்டும் வாசிக்கத் தொடங்கிவிட்டார். நாற்காலியில் அமர்ந்த சிறுவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எழுந்து நின்றான். மேஜையை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்ததும், தாத்தா அவனைப் பார்த்தார்.

உக்காரு. நான் என்ன சொன்னேன்? நான் சொல்றப்பதான் நீ எழுந்து வரணும்.”

பேரன் மீண்டும் அமர்ந்தான்.

ஐந்து நிமிடங்கள் ஆன பிறகு, தாத்தா பேரனைப் பார்த்துச் சொன்னார்: “இப்ப போய்ப் பாரு. செம்பைத் தொடக்கூடாது, தூக்கக்கூடாது. அதைக் கவனமா பார்த்தா போதும்.”

பேரன் போய்ப் பார்த்தான். சுற்றிச் சுற்றி வந்த தூசித் துகள்களை முற்றிலும் காணவில்லை. அவையெல்லாம் கீழே போய் அடங்கியிருந்தன. மேலே இருந்த நீரில் எந்தக் களங்கமும் இல்லைசிறுவனின் கண்கள் வியப்பில் விரிந்தன.

இரண்டு வாரங்கள் போயிருக்கும். பள்ளியிலிருந்து வந்ததிலிருந்து பேரன் ஒரு நிலையில் இல்லை என்பது தாத்தாவுக்குப் புரிந்தது. அவன் மேலும், கீழும் நடந்தான். வெளியே சென்றான். மீண்டும் உள்ளே வந்தான். தொலைக்காட்சியை இயக்கினான். சில நொடிகளில் அவனே அதை நிறுத்தினான்.

தாத்தா அவன் அருகே போய் நின்றார். “என்ன என் பேரனுக்கு?”

ஒரே குழப்பமா இருக்கு தாத்தா. காஷ்மீருக்கு டூர் கூட்டிப் போறதா எங்க டீச்சர் சொன்னாங்க. போறதா, வேணாமான்னு புரியல. ஒரே குழப்பமா இருக்கு. போனா நண்பர்களோடு ஜாலியா இருக்கலாம்னு தோணுது. ஆனா, கட்டணத்தைக் கேட்டாஇவ்வளவா?’ன்னு எரிச்சல் வருது. இவ்வளவு பணத்தைக் கேட்டு எப்படி அப்பா, அம்மாவை நச்சரிக்கறதுன்னும் தோணுது.”

தாத்தா அவன் தோளைத் தொட்டுச் சிரித்தார். “சரி. இந்த வீட்ல உனக்குப் பிடிச்ச இடம் எது?” என்று  கேட்டார்.

மாடிஎன்றான் பேரன்.

இருவரும் மாடிக்குப் போனார்கள். “இதோ இந்த நாற்காலியில உட்காரப் பிடிக்குமா?” என்று தாத்தா கேட்டார்.

பிடிக்கும்.”

உட்கார். அன்னைக்கு அந்தச் செம்பின் மேலே மிதந்த தூசியெல்லாம் அடங்கி, தண்ணீர் சுத்தமாகறதுக்கு என்ன பண்ணினோம்? ஓர் இடத்துல அதை வச்சோம். ஞாபகம் இருக்கா? மேஜையில செம்பை வச்ச மாதிரி, இப்ப உன்னை இந்த நாற்காலியில வைக்கிறேன். நீ எந்திரிச்சு நிக்கக் கூடாது, நடக்கக் கூடாது, ஓடக்கூடாது. நீ செய்ய வேண்டியதெல்லாம் சும்மா இந்த நாற்காலியில அமைதியா உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு நான் வருவேன். சரியா?” என்று கேட்டு விட்டு கீழே போய் விட்டார்.

மேலிருந்த வானம், கீழே இருளில் கண்ணுக்குத் தெரிந்த யாவையும் சிறுவன் பார்த்தான். தான் வேகமாகச் சுவாசிப்பது புரிந்ததும், ஆழமாய்ச் சுவாசிக்கத் தொடங்கினான். நிதானமாய் மூச்சை வெளியேற்றி, நிதானமாய் மெல்ல மெல்ல காற்றை உள்ளிழுத்தான். மேலே சுழன்று, சுழன்று சுற்றியதெல்லாம் அடங்குவது போலிருந்தது. நேரம் போனதே தெரியவில்லை.

பதினைந்து நிமிடங்கள் கழித்து, தாத்தா மேலே வந்து, “எப்படி இருக்கான் என் பேரன்?” என்றார்.

குழப்பமெல்லாம் போயிடுச்சு தாத்தா. அப்பா, அம்மாவைக் கஷ்டப்படுத்தி, இவ்வளவு காசு செலவழிச்சு, அவ்வளவு தூரம் போறது தேவையில்ல தாத்தா. என் நண்பர்களை ஒரு நாள் இங்க கூப்பிடலாம்என்றான் பேரன்.

அலைந்து கொண்டே இருக்கும் நம் மனதை அமைதிப்படுத்த நாம் அமர வேண்டும். ஓய்வே இன்றி ஓடிக்கொண்டே இருக்கும் மனித மனம் அமைதி பெறுவது எப்படி? ஓரிடத்தில் அமர்வதன் மூலம்தான்!

வெகுநேரம் அமர்ந்திருக்க முடியாவிட்டால் பரவாயில்லை. குறைந்தது ஒரு நாளில் பதினைந்து நிமிடங்களாவது அமர வேண்டும்.

அமர்ந்த பின்னும் மனம் ஓடிக்கொண்டே, ஓர் எண்ணத்திலிருந்து மற்றோர் எண்ணத்திற்கு என்று தாவிக்கொண்டே இருக்கலாம். கடந்த காலத்திற்குள் ஓடி, கடந்தவற்றைப் பார்த்துக் கொதிக்கலாம். எதிர்காலத்திற்குள் ஓடி கற்பனையில் மிதக்கலாம்.

இந்த எண்ணங்களை எல்லாம் விரட்டி, மனத்தை அமைதிப்படுத்த நம் சுவாசத்தைக் கவனித்தால் போதும். என்ன எண்ணங்கள் தோன்றுகின்றன என்று கவனித்து விட்டு, அவற்றை வெளியேற்றி, மீண்டும் நம் சுவாசத்தில் கவனம் செலுத்தினால் போதும்.

தினமும் சில மணி நேரங்களைத் தியானத்தில் செலவிடும் நண்பரும், ‘போதி ஸென்டோஸென் தியான மையத்தின் இயக்குநருமான அருள்பணி. . சிரில், சே.., எனதுஉள்ளம் நலமா?’ எனும் நூலில் இப்படிச் சொல்லுகிறார்: “இயல்பான சுவாசமே சிறந்த சுவாசப் பயிற்சி ஆகும். மனமொன்றித்து இயல்பான சுவாசத்தைப் பயிற்சி செய்யும்போது, தொடக்கத்தில் குறுகியதாய் இருக்கும் சுவாசம் கூட போகப் போக ஆழ்ந்த, நீண்ட சுவாசமாக மாறும் அற்புதத்தைக் காணலாம்.”

இயல்பான சுவாசப் பயிற்சியினால் மனம் அமைதி அடைகிறது; உடல் இறுக்கம் குறைந்து, ஓய்வு பெறுகிறது; சுவாசம் முழுமை பெறுகிறது; இரத்த ஓட்டம் சீராகிறது; உடல் இலேசாகிறது.”

சுவாசத்தின் மீதுள்ள நம் கவனத்தை மீறி வேறு எண்ணங்கள் வரலாம். அவை எத்தகையவை என்று கவனிப்பது நல்லது. பெரும்பாலும் இவை நம் கோப, தாபங்களாகவே இருக்கும் என்கிறார்கள் சில அறிஞர்கள்.

யார் மீது கோபப்பட்டோம்? அல்லது யார் நம்மைக் கோபப்படுத்தினார்? கோபத்தில் என்ன சொன்னோம்? என்ன செய்தோம்? அல்லது மற்றொருவரின் கோபத்திற்கு நாம் இலக்கானபோது என்ன நடந்தது?… என்பவை நம்மில் தோன்றும் ஒருவகை நினைவுகளாக இருக்கும்.

தாபங்கள்என்பவை என்ன? தாபங்கள் ஆழமான பேராசைகள்! ஆங்கிலத்தில்பர்னிங் டிஸையர்என்றொரு பதம் இருக்கிறது. ‘உள்ளத்தில் கனன்று எரியும் ஆசைகள்என மொழிபெயர்க்கலாம்.

கோபமோ, தாபமோ, நம்மில் தோன்றுவது என்ன எண்ணம் என்பதைக் கவனித்து விட்டு, அதை இதமாய் வெளியேற்றி விட்டு, மீண்டும் நம் சுவாசத்தில் கவனம் செலுத்தினால் மட்டுமே இதன் பயன்களை நாம் பெற முடியும்.

எனவே, தினமும் குறைந்தது பதினைந்து நிமிடங்களாவது அமர்ந்து, அமைதியாய்த் தியானிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நமது வாழ்வு மேலும் வளம் பெறும்.

Comment