No icon

​​​​​​​அன்னை மரியா: மகிழ்ச்சியின் ஊற்று!

நீல மலைத்தொடரின் செழுமையும், வளமையும் பொங்கிட்ட, கொங்கு நகரின் அழகில் மணம் பொங்குகின்ற, அகில், சந்தனம் முதலிய நறுமணப் பொருள்களும், மணம் வீசும் பூக்களும் கலந்து நிரம்பவும், விண்மீன்கள் நெருங்கி இருக்கின்றதும், ஒளிவிடுகின்ற மணிகள் பொருந்தியதுமான கோவிலுள் ஆயுதங்கள் ஊடுருவிச் செல்ல முடியாது தடுக்கும் காப்புறை போன்ற மேலாடையாகிய உத்தரியத்துடன், மயக்கத்தைத் தீர்க்கவல்ல, தெளிந்த உருவில் அமைந்த 153 மணிகளை உடைய செபமாலையைப் பெருமையுடன் ஏந்தியிருக்கின்ற நினது அருள்கரத்தை நீட்டி, வட திசையை நோக்கி வருவோரை எல்லாம் வரவேற்று, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிடச் செய்கின்ற செபமாலைத் தாயே! வாழ்க!!

மரியா மகிழ்ச்சிக்கடல் என்றால் மிகையாகுமோ! ஏனெனில், அவர் கண்ணுக்குக் கருணை என்று பெயர்; அவர் பார்வைக்குப் பாசம் என்று பெயர்; அவர் கைக்கு ஈகை என்று பெயர்; அவர் கருத்துக்கு இரக்கம் என்று பெயர்; அவர் முகத்திற்கு மகிழ்ச்சிக் கடல் என்று பெயர்; ஏனெனில், அன்னையின் மடியில் தவழும் குழந்தைக்குத் தெரியும் இவையெல்லாம்!

கடலில் உள்ள மீன்களுக்குத் தெரியும் அதன் தன்மை. முத்தெடுக்க வேண்டுமானால் கடலில் மூழ்க வேண்டும். அதுபோல் அன்னையின் அன்பில், அரவணைப்பில் மூழ்கும் போதுதான் மகிழ்ச்சியில் திளைக்க முடியும். படைப்பு அனைத்துமே, ஏன் சிறப்பாக மனிதன் மகிழ்ச்சியாக இருக்கத்தான் விரும்புகிறான். ஆனால், இன்று மிகவும் அது குறைந்து காணப்படுகிறது. பலரிடம் போலி மகிழ்ச்சியைத்தான் காண்கின்றோம். உண்மையான மகிழ்ச்சி இருக்கின்றவர்களின் முகம் எப்பொழுதும் அழகாக இருக்கும். ‘என்ன அழகு உந்தன் அன்பழகுஎன்று அன்னையைப் புகழ்ந்து பாடுகின்றோம் என்றால், அங்கே மகிழ்ச்சி பொங்கி வழிவதால்தான். மகிழ்ச்சி பகிரப்படும்போதுதான் நிறைவு பெறுகிறது.

அடுத்தவரின் துன்பத்தைக் கண்டு மகிழ்வது ஒரு நோய்! காயப்படுத்திச் சிரிப்பது ஆணவத்தின் உச்சக்கட்டம் என்பதைப் புரிந்துகொண்டு, அன்னையின் வழியில் செல்வோம்.

ஒரு பெண் இந்த உலகில் அனுபவிக்க முடியாத துன்பத்தைச் சொல்ல முடியாத விதத்தில் அனுபவித்தார் என்றால், அது மரியாவைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. சமுதாயத்தில் மதிப்பில்லாத நிலை; வேலை செய்ய முடியாத நிலை; தந்தையில்லாத நிலையில் தன் மகனை எப்படி வளர்த்திருப்பார்! துன்பமான நேரம்; சூழ்நிலை பாதிக்கப்பட்ட நேரம்... மகிழ்ச்சி கிடைத்திருக்குமா? மரியாவுக்குக் கிடைத்தது!

புனித பவுல் 1கொரிந்தியர் 16:9 இல் கூறுவது போல, அங்கு எதிரிகள் பலர் இருந்தாலும், பயனுள்ள முறையில் பணியாற்ற எனக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது. எங்கு எதிரிகள், எங்கு பிரச்சினைகள் உள்ளனவோ, அங்குதான் மகிழ்ச்சி கிடைக்கும். இறையுறவு கிடைக்கும். காரணம், குழந்தை இயேசு மரியாவின் கையில்! அதனால் தான் இரவோடு இரவாக, பாலைவனமாக இருந்தாலும், திருடர் பயம் இருந்தாலும், வெயில் இருந்தாலும் எகிப்திற்குச் சென்றார்கள்புலம்பவில்லை, அழவில்லை; கடவுளின் திட்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள்.

இன்று நமது கையில் இறைவார்த்தையை வைத்திருந்தால், நாமும் இயேசுவையே மரியாவைப் போல் வைத்திருக்கிறோம் என்ற மனநிலையோடு இருக்கும்போது நமக்கு மகிழ்ச்சி உண்டு

கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?” (உரோ 8: 31) என்ற இறைவார்த்தையின்படி வாழும்போது, பாலையாக இருந்தாலும், கல்லும் முள்ளும் நிறைந்த இடமாக இருந்தாலும் பயமில்லை என்பதை உணர்ந்து, மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

1) இறைவார்த்தை வழி மகிழ்ச்சி:

யோவான் 15:11 இல்என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் கூறினேன்என்கிறார். யார் எல்லாம் இறைவார்த்தையைப் பெற்றுக் கொண்டுள்ளார்களோ, அவர்கள் அதன்படி வாழ வேண்டும். அப்போதுதான் மகிழ்ச்சியைப் பெற முடியும். லூக்கா 1:45 இல்ஆண்டவர் உமக்குச் சொன்னது நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்என்ற இறைவார்த்தையை மரியா வாழ்வாக்கியதால் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

2) விடுதலை பெறுவதால் மகிழ்ச்சி:

திருப்பாடல் 126:2 - அப்பொழுது நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பார வாரம் எழுந்தது. இங்கே இஸ்ரயேல் மக்கள் அடிமை நிலையிலிருந்து விடுதலை பெறுகிறார்கள். ஆண்டவர் தந்த விடுதலையில் மகிழ்ச்சி அடைகிறார்கள். எனவே, பாவத்திலிருந்து விடுதலை பெற பாவ அறிக்கை செய்தல், குடி, கெட்ட நடத்தை போன்றவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டும். ஏனெனில், மரியா பாவத்திலிருந்து விடுதலை பெற்றிருந்தார்கள். அதனால்தான் மகிழ்ச்சியோடு இருந்தார்கள்.

3) மகிழ்ச்சி இயேசுவிடமிருந்தே வரும்:

பிலிப்பியர் 4:4 - “ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன் மகிழுங்கள்.” நாம் அவரை விட்டுப் பிரியும்போது மகிழ்ச்சி ஓடிவிடும். கானாவூர் நிகழ்வில் நாம் காண்பது என்ன? திருமண வீட்டார் இரசம் தீர்ந்ததால் கவலை அடைகிறார்கள். மரியா இதை அறிந்து கடைக்குச் செல்லவில்லை. திருமண வீட்டாரிடம் செல்லவில்லை. இயேசுவிடம் செல்கிறார்கள். இயேசுவிடமிருந்துதான் மகிழ்ச்சியைப் பெற்றுத் தருகிறார்கள். எனவேதான் மரியா இன்றும்  இயேசுவிடம் போகச் சொல்கிறார்கள். மகிழ்ச்சியை வெளியில் தேடாதே; அது போலியான மகிழ்ச்சி. இயேசு மட்டுமே நிறைமகிழ்ச்சியைத் தருபவர்.

4) இறைப் பிரசன்னத்தில்தான் மகிழ்ச்சி:

திருப்பாடல் 16:11 - “வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர். உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு. உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டுஎன்கிறது. இறை பிரசன்னம் ஆலயத்தில் மட்டுமல்ல, இறைவார்த்தையை வாசித்துத் தியானிக்கும்போதும் கிடைக்கிறது. ஆண்டவரின் பிரசன்னம் கோவிலில்தான் சிறப்பான விதத்தில் உள்ளது என்பதை மறக்க வேண்டாம். மரியா எப்போதும் இயேசுவோடு இருந்தார்கள். அதனால்தான் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. இறை பிரசன்னம், நற்கருணைவழி மற்றும் வார்த்தை வழியாக மட்டுமே பெற முடியும்.

இறைவார்த்தையைப் பகிர்வதில் மகிழ்ச்சி:

1யோவான் 1:4 - “நாங்கள் கண்டதை, கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம். எங்களது மகிழ்ச்சி நிறைவடையுமாறு உங்களுக்கு இதை எழுதுகிறோம்.” தாங்கள் பெற்ற இன்பத்தை, பெரு வாழ்வை மற்றவர்களிடம் பகிர்ந்து கொடுக்கும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாக மாறுகிறது. மரியா எலிசபெத்தைச் சந்தித்துப் பகிரும்போது, தூய ஆவி இறங்கி வந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார். தாங்கள் மட்டுமல்ல, அவர்கள் வயிற்றிலுள்ள குழந்தைகளும் மகிழ்ச்சியால் துள்ளினர். மரியா இறைவார்த்தையைச் சிந்தித்து, தனதாக்கி, வாழ்வாக்கிப் பகிர்ந்ததால் எல்லா நிலைகளிலும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

நாமும் செபமாலைத் தாயின் வழியில் சென்று மகிழ்வில், உறவில் திளைப்போம். மரியே வாழ்க!

அன்னையே, புனித செபமாலைத் தாயே! எங்களைக் கடவுளுடன் இணைக்கும்

அன்புச் சங்கிலியே!

வானதூதர்களோடு நல்லிணக்கத்தை

ஏற்படுத்தும் அன்பின் உறவே!

தீய சக்திகளின் தாக்குதலிலிருந்து

எங்களுக்குப் பாதுகாப்பளிக்கும்

வலிமைமிகு துறைமுகமே!

உம்மை ஒருபோதும் பிரியாமல்

வாழ வரம் தாரும் தாயே!

Comment