கண்டனையோ, கேட்டனையோ…
கிழக்கு வெளுக்க வா…
- Author ஜார்ஜி --
- Saturday, 23 Sep, 2023
‘உறவின் மொழி’ என்ற தலைப்பில் பிரபலங்கள் குறித்து, அவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவரைப் பேட்டி கண்டு, ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் வாரா வாரம் வரும் சிறப்புத் தொடரில் 06.09.2023 தேதியிட்ட இதழில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் குறித்து அவர் அம்மா ரேச்சல் கொடுத்த பேட்டியை வாசித்து மகிழ்ந்தேன். ஒரு கிறிஸ்தவர் இன்னொரு கிறிஸ்தவர் பற்றி ஒரு வெகுசனப் பத்திரிகையில் பேட்டி தரும் சம்பவம் நம் சூழலில் எப்போதாவது நிகழும் ஓர் அற்புதம்!
ஹாரிஸின் அப்பா ஜெயக்குமார். ஒரு காலத்தில் பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களுக்குக் கித்தார் வாசித்தவர்; கிறிஸ்தவர்; மதுரைக்காரர். ரேச்சல் சென்னைப் பெண்; இந்து. சிறு வயதிலேயே நன்றாகப் பாடும் திறமை கொண்டவர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் B.A. படிக்கும் காலத்தில், கல்லூரி ஆர்கெஸ்ட்ராவில் ஜெயக்குமார் கித்தார் வாசிக்க, அந்த ட்ரூப்பில் அவ்வப்போது பாட வந்த ரேச்சலுக்கும் அவருக்கும் ‘விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவாக’ காதல் பிறந்துவிட்டது. ஜெயக்குமாருக்கு வயது 20. ரேச்சலுக்கு 18. ஒருவர் கித்தார் வாசித்தார். இன்னொருவர் பாடினார். காதல் வரவில்லையென்றால்தான் ஆச்சர்யம்!
தமிழ் சினிமா பாணியில் காதல் எதிர்க்கப்பட்டது. மதம் முக்கியக் காரணம். ஜெயக்குமார் வீட்டில் அறவே முடியாது என்று சொல்லி கதவை அடைத்துவிட்டார்கள். ரேச்சலின் அப்பா ஒரு ரிட்டயர்டு கான்ஸ்டபிள். ‘பையன் பார்க்க நல்லவனாகத்’ தெரிந்ததால் (போலீஸ் பார்வை) சென்னைக்குக் கூட்டி வந்து, பெண் வீட்டார் மட்டும் கூடியிருக்க, ஓர் அந்தோணியார் கோவிலில் (எந்த இடம் என்று தெரியவில்லை), அந்தோணியார் சுரூபத்தின் அடியில் தாலியை வைத்துச் செபித்து விட்டு ஜெயக்குமார் ரேச்சலை மணம் புரிந்திருக்கிறார். இத்தனைக்கும் ஜெயக்குமார் கத்தோலிக்கர் அல்லர்; ரேச்சல் அப்போது கிறிஸ்தவரே அல்லர். “யதேச்சையாக உள்ளே வந்த அந்தக் கோயில் ஃபாதர் மணக்கோலத்தில் இருந்த எங்களைப் பார்த்துவிட்டு, செபம் பண்ணி ஆசிர்வாதம் செய்தார்” என்கிறார் ரேச்சல். யார் அந்தப் புண்ணியவானோ?! இது நடந்தது 1974 இல்.
மேற்கூறிய தகவல்கள் ‘ஆனந்த விகடனில்’ இல்லை. இவை சாது சுந்தர் நடத்தும் ஏஞ்சல் டிவிக்கு ஜெயக்குமார் - ரேச்சல் தம்பதியர் கொடுத்த ஒரு விரிவான நேர்காணலிலிருந்து நான் எடுத்தவை. இன்றைக்கு ஜெயக்குமார் ‘Apostolic Church of India’ என்கிற ஒரு சபையில் ஆயராக இருக்கின்றார். கோட்டும், சூட்டும் அணிந்தும், ஆயர்கள் அணியும் ஒரு முரட்டுச் சிலுவை கழுத்தில் தொங்க, ரேச்சல் அம்மா பக்கத்தில் அடக்க ஒடுக்கமாக அமர்ந்து அவர் கொடுத்திருக்கும் இந்த டி.வி. பேட்டியில் தன் காதல் திருமணம், திரையுல அனுபவங்கள், செப வாழ்க்கை, 1991 மே 21 அன்று ஸ்ரீபெரும்புத்தூர் அரசியல் மேடையில் சங்கர் கணேஷ் கச்சேரியின் ஓர் அங்கமாகக் கித்தார் வாசித்துக் கொண்டிருக்கும்போதே அவர் பார்க்கப் பார்க்க, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டு வெடித்துச் சிதறியது (‘எங்க வெள்ளை யூனிஃபார்ம் பூரா யாரோ பெரிய அண்டாவ எடுத்து கவுத்த மாதிரி இரத்தம்; பக்கத்துல நின்ன சங்கர் சார் பாக்கெட்டுல ஒரு கண்ணு வந்து விழுந்துச்சு!’), மெல்ல நற்செய்திப்பணி வாழ்வுக்குள் நுழைந்தது, தீவிரமானது, ரேச்சல் அம்மா பாடும் இரண்டு பாடல்கள்... என ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு அலுப்பில்லாமல் செல்லும் அந்தக் காணொளியை https://youtu.be/j356LX3v3D4 என்கிற கொழுவியில் காணலாம்.
‘ஆனந்த விகடன்’ பேட்டியில் ரேச்சல் அம்மா மிக இயல்பாகப் பேசியிருக்கிறார். காதல் திருமணம் புரிந்து, சென்னையில் வாழ்க்கையைத் துவங்கிய போது எதிர்கொண்ட ஆரம்பக் காலச் சவால்கள், வறுமையில் செழுமை கண்டது (‘மயிலாப்பூர் அருகே அபிராமபுரத்தில் ஓர் ஓலைக் குடிசையில இருந்தோம்’), கண்டிப்பான குழந்தை வளர்ப்பு (‘அவர் அடிக்கமாட்டார். ஏன், அதட்டக்கூட மாட்டார். ஆனா, நான் நல்லா அதட்டுவேன். அடியும் விழும். என் மூணு பிள்ளைங்களுக்கும் என்னைப் பார்த்தாதான் பயம்’), செல்லக் கோபங்கள் (‘என்னைத் தூங்க வெச்சுட்டு ஹாரிஸ் கிரிக்கெட் விளையாட போய்டுவான்’), ஹாரிஸின் பாசம் (‘எவ்ளோ பிஸியா இருந்தாலும் எப்படி இருக்க? என்னடி பண்ணுறே?’ன்னு தங்கச்சிகளை விசாரிப்பான்’), மகனுடைய வெற்றியில் பூரிப்பு (‘மின்னலே’ வந்தப்ப, நாங்க எல்லோரும் தியேட்டர் போயி கைதட்டி ஆரவாரம் பண்ணிப் பார்த்தோம்’), ஓர் அம்மாவின் சாதாரண ஆசைகள் (‘இப்பகூட என் பிறந்த நாளுக்குச் சர்ப்ரைஸா கூட்டிக்கிட்டுப் போய் விலையுயர்ந்த பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்தான்’), மகனுடைய இசையில் பிடித்த பாடல் (‘முதற்கனவே’)... என எதார்த்தமாக, அழகாக அமைந்துள்ள இந்தப் பேட்டியில் ரேச்சல், ஹாரிஸை, ‘அவன்’, ‘செய்வான்’, ‘வருவான்’ என்று ஒருமையில் குறிப்பிடுவது மிகப்பெரிய ஆசுவாசம். பிரபலம் என்பதற்காகவே சொந்த மகன்களை ‘அவர்’ போட்டுப் பேசுபவர்கள் எனக்கு ஒவ்வாமை தருகிறார்கள்.
ஹாரிஸின் திருமணமும் காதல் திருமணம் தான். அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதோடு, “எங்க மருமக எங்களை நல்லா பார்த்துக்குவாங்க. அப்படியொரு நல்ல மருமகள். என்னை ‘அம்மா... அம்மா...’ன்னுதான் பாசமா கூப்பிடுவாங்க” என்று மருமகளைச் சிலாகிக்கும் ரேச்சல், கூடுதலாக “அப்புறம் முக்கியமான விஷயம்... என்னைவிட என் மருமகளோட சமையல் ரொம்ப சூப்பரா இருக்கும்” என்று சொல்கிறார். ஒரு மாமியார் இப்படிச் சொல்வது உலக வரலாற்றில் இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.
இந்தச் சின்ன சந்தோசங்களையும் ஒரு வெகுசனப் பத்திரிகையில் கிறிஸ்தவப் பெயர்களைக் காணும்போது ஏற்படும் கிளர்ச்சியையும் தாண்டி, ‘ஆனந்த விகடன்’ பேட்டி எனக்குப் பிடித்துப் போய் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், அந்த நேர் காணலில் இருந்த அழுத்தமான கிறிஸ்தவ அடையாளம். ‘வாசித்துக் கொண்டிருப்பது ஆனந்த விகடனா? அல்லது நம் வாழ்வு பத்திரிகையா?’ என்று இனம் காண முடியாத வகையில், ரேச்சல் அம்மா அந்தச் சிறிய பேட்டியில் விவிலிய வாக்கியங்களை (“உன் நம்பிக்கை வீண் போகாது” (நீதி 23:18); “என் மகனே, நீ செவிகொடுத்து, ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து!” (நீதி 23:26); “உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக” (விப 20:12) என்று மேற்கோள் காட்டுகிறார். அதில்லாமல், இடையிடையே, ‘இதுவும் கர்த்தரோட கிருபைதான்!’, ‘மகனை உள்ளுக்குள்ள ஆசீர்வதிச்சுக்கிட்டே இருப்பேன்’, ‘இப்படிப்பட்ட ஒரு புள்ளையைக் கொடுத்திருக்கீங்களே ஆண்டவரேன்னு கண்ணீரோடு ஒவ்வொரு நாளும் நான் நன்றி சொல்வேன்!’ போன்ற தனித்துவமான கிறிஸ்தவ வாக்கியங்கள்!
ஒரு மதம் மாறிய கிறிஸ்தவர், பிரபல இசையமைப்பாளரின் அம்மா, குடும்பப் பெண்மணி, 35 இலட்சம் பேர் வாசிக்கும் ஒரு வெகுசனப் பத்திரிகைக்குத் தரும் பேட்டியில், மிகச் சரளமாக விவிலிய மேற்கோள்களையும், கிறிஸ்தவச் சொல்லாட்சிகளையும் பயன்படுத்துகிறார். ஆனால், நாம் இன்னும் நமது சொற்பொழிவுகளிலும், மறையுரைகளிலும் சினிமாப் பாடல்களையும், ஷேக்ஸ்பியரையும், இம்மானுவேல் கான்ட்டையும் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.
‘யாரைச் சொல்றே நீ?’
‘நான் என்னயச் சொன்னேன்!’
தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியம், இதழியல், பல்சமய உரையாடல் போன்ற துறைகளில் தமிழ் நாடு கத்தோலிக்கத் திரு அவைக்குத் தனித்த பங்காற்றியுள்ள தஞ்சை மறைமாவட்ட அருள்பணியாளர் அமுதன் அடிகளாரின் 75வது அகவை நிறைவையொட்டி அவர் நண்பர்கள் அருள்பணி ஆர்.கே (தஞ்சை மறை மாவட்டம்), அருள்பணி லூ. அந்துவான் (திருச்சி மறை மாவட்டம்) ஆகியோர் தொகுத்து, இனியவை வெளியீடாக வந்த, ‘அமுதனுக்கும் தமிழென்று பேர்’ என்ற இலக்கியக் கட்டுரைத் தொகை நூலை, அண்மையில் முழுவதுமாக வாசித்துப் பயனுற்றேன்.
‘இனி ஒரு விதி செய்வோம்’ என்ற தலைப்பில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் எழுதியுள்ள கட்டுரையில், பின்வரும் சுவாரஸ்ய சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.
பாரதியார் ஒரு முறை சென்னை, திருவல்லிக்கேணியில் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதில் காந்தியடிகளைப் பேச அழைத்தாராம். காந்தியடிகளும் வந்து, ஆங்கிலத்தில் பேசிவிட்டுப் போனார். அதன் பின்பு காந்தியடிகளுக்குக் கடிதம் எழுதிய பாரதியார், “திருவல்லிக்கேணியில் தாங்கள் ஆற்றிய உரை ஆங்கிலத்தில் அமைந்து விட்டது ஏன்?” என்று ஆதங்கமாகக் கேட்டுவிட்டு, “நீங்கள் உங்கள் தாய்மொழியான குஜராத்தியிலோ அல்லது ஹிந்தி மொழியிலோ உரையாற்றியிருக்க வேண்டும்” என்று சற்று காட்டமாகக் கடிந்து எழுதினார்.
அதற்குப் பதில் எழுதிய காந்தியடிகள், “சரி, பாரதி. நான் ஆங்கிலத்தில் உரையாற்றியது தவறு தான். திருத்திக்கொள்கிறேன். ஆனால், நீங்கள் ஏன் இந்தக் கடிதத்தைத் தமிழில் எழுதாமல், ஆங்கிலத்தில் எழுதினீர்கள்?” என்று கேட்டார்.
அதற்குப் பாரதி, “நாங்கள் யாரையாவது புண்படுத்தும் விதமாகப் பேசுவதாக இருந்தால், எங்கள் தாய்மொழி தமிழைப் பயன்படுத்த மாட்டோம்” என்று சொன்னாராம்.
தமிழில் இன்று சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் கடுஞ்சொற்களையும், கெட்ட வார்த்தைகளையும் கேட்டால் பாரதி என்ன சொல்வார் என்று நினைத்துப் பார்க்கிறேன்.
தூற்றுதல் ஒழி!!
பேச்சுத் தமிழ் இலக்கண நூல்கள் உருவாக்கத்தில் கிறிஸ்தவர்களின் பங்களிப்புக் குறித்து முனைவர் மோரிஸ் எழுதியுள்ள சற்று தீவிரமான, மிக நுட்பமான கட்டுரையில் 1859 ஆம் ஆண்டு பி. சிங்காரப் பெலவேந்திரம் பிள்ளை என்பவரால் எழுதி வெளியிடப்பட ‘A Tamil Vade - Mecum’ என்ற நூல் குறித்து விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மறைபரப்புப் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக இதை பெலவேந்திரம் எழுதியிருக்கிறார். நூலின் நான்காவது பகுதியில் ஆசிரியர் தொகுத்துக் கொடுத்துள்ள ஒரே அர்த்தம் கொண்ட பல தமிழ்ப் பேச்சு சொற்றொடர்கள், தமிழ் மொழியின் வளமைக்குச் சான்று.
எடுத்துக்காட்டாக, ‘Come early in the morning’ என்ற ஆங்கில வாக்கியத்திற்கு மாற்றாகப் பின்வரும் தமிழ்ப் பேச்சு வழக்குச் சொற்றொடர்களை ஆசிரியர் தருகிறார்: வெள்ளென வா, காலம்பர வா, பொழுது விடிந்தவுடன் வா, நிலந்தெளிந்ததும் வா, உதயத்தில் வா, எழுந்ததும் வா, எழுப்ப வா, கோழி கூவ வா, அதிகாலமே வா, இருட்டோடே வா, தூங்கியெழுந்ததும் வா, சூரியன் கரகரவென்கிறதுக்குள் வா, குண்டு போட்டதும் வா, கீச்சான் கத்தின பிற்பாடு வா, வெள்ளி முளைச்ச பிற்பாடு வா, கிழக்கு வெளுக்க வா, குருவி கூவ வா....
ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தச் சொற்றொடர்களில், ஏறக்குறைய எல்லாமே இன்னமும் புழக்கத்தில் இருப்பதுதான் நம் மொழியின் சிறப்பு!
என்றுமுள தென்தமிழ்!!!
(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)
Comment