இந்து தேசியமும் தமிழ்த் தேசியமும்
- Author முனைவர் இ. தேவசகாயம் --
- Thursday, 28 Sep, 2023
இந்துத்துவம் தன் அடிநாதக் கொள்கையாக ‘கலாச்சாரத் தேசியம்’ (Cultural nationalism) என்ற பெயரில் இந்து தேசியத்தைக் கட்டமைப்பதில் உறுதியாக உள்ளது என்பதனை இந்துத்துவத்தைத் தொடர்ந்து கவனித்து வருவோர் நன்கு அறிவர். இந்துத்துவர்கள் இந்திய தேசியத்தை அல்ல; இந்து தேசியத்தைத்தான் கட்டமைக்க முயன்று வருவதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்; இந்துத்துவாக்கள் இந்திய தேசியத்தைத்தான் உருவாக்க முயல்வதாகச் சொன்னாலும், இவர்கள் உண்மையிலேயே ‘இந்தியா’ என்ற பெயரில் இந்துக் கலாச்சாரத்தை, இந்து தேசியத்தைத்தான் உருவாக்கவே முனைகின்றனர் என்பதே உண்மை என்பதையும் மக்கள் புரிந்துகொள்வதும் அவசியமே.
இந்துத்துவர்கள் பேசி வரும் இந்து தேசியம் என்பதன் உள்ளடக்கம் என்ன? இது உருவானால் நாட்டின் மையக்கூறுகளுக்கு விளையப் போகும் தீங்கு என்னவாயிருக்கும்? என்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டுவது கட்டாயமாகிறது.
இவ்வேளை ‘தமிழ்த் தேசியம்’ என்ற பெயரில் தமிழகத்தில் தோழர் சீமான் நடத்தி வரும் கொள் கைப் பற்றி விரிவாகப் பேச வேண்டியது அவசியமாகிறது. இந்து தேசியம் பேசும் இந்துத்துவர்கள் எப்போதுமே முரண்படும் உரிமையை (Right to dissent) ஏற்பதில்லை என்பது போலவே, தமிழ்த் தேசியம் பேசுவோரும் முரண் கருத்துகளையும், முரண்படுவோரையும் சகிப்பதே இல்லை. செந்தமிழன் சீமான் பேசும் தமிழ்த் தேசியமும், இந்துத்துவம் பேசும் இந்து தேசியமும் எங்கெல்லாம் இணைந்து செல்கின்றன? எங்கெல்லாம் முரண்படுகின்றன? என்பன பற்றி நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழ்த் தேசியத்துக்கு எதிராக ஒரு கருத்தைத் தெரிவிக்கும் என்னையும், இக்கருத்தைக் ‘கருத்துச் சுதந்திரம்’ என்ற பெயரில் வெளியிடும் நம் வாழ்வும் சாத்தான்களின் பிள்ளைகளாகவும் கொச்சைப்படுத்தப்படலாம். ஆனால், கசக்கும் சில உண்மைகளை நாம் விழுங்கித்தான் ஆக வேண்டும்.
தேசியம்: அது என்ன?
தேசியம் ஒரு கவர்ச்சியான சொல் மட்டுமல்ல; தேசியம் அரசியலையும், கலாச்சாரத்தையும் உள்ளடக்கிய பதமும் கூட. சனநாயகத்தை நம்புகின்றவர்களும் தேசியத்தைக் கையில் எடுத்ததுண்டு. சனநாயகத்தை நம்பாத சர்வாதிகாரிகள் கையிலும் தேசியம் சிக்கி அதிகாரக் குவியலுக்குப் பயன்படுவதுண்டு.
ஒரு நாட்டில் இருவகை தேவைகளின் நிமித்தம் தேசியம் கட்டமைக்கப்படுவதாகக் கூறுவர். ஒரு நாடு அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் சூழலில் பல்வேறு சமூக, பொருளாதார, கலாச்சாரச் சூழமைவில் வாழும் மனிதர்களை, தமது பேதம் மறந்து, ஒன்றுபட்டு பொது எதிரியை வீழ்த்துவதற்கு மக்களைத் ‘தேசியம்’ என்ற பெயரில் அழைப்பது தேசியம்.
இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், பல சாதிகளாய், இனம், மொழி, சமய வேறுபாடுகளால் பிளவுண்டிருந்த மக்களை விடுதலை நோக்கில் ஒருங்கிணைத்ததே இந்திய தேசியம். ‘ஆயிரம் சாதிகள் எம் நாட்டில் உள்ளன என்றாலும், அந்நியர் புகல் என்ன நீதி’ எனப் பாரதி கேட்ட கேள்விக்கு, தேசியம் பதில் சொல்லியது. வேற்றுமையுள்ளும் ஒற்றுமையைத் தேடியது இந்திய தேசியம். அதேவேளை ‘உண்மைச் சுதந்திரம் எது?’ என்ற கேள்வி எழுந்தபோது, தீண்டாமை கேள்விக்குள்ளானது. ஒடுக்கப்பட்டோர் விடுதலையும் பேசு பொருளானது.
தேசியம் பாடிய பாரதி சாதியமைப்பைச் சாடினார்; பெண் விடுதலையை வேண்டினார். ஒதுக்கப்பட்ட மக்களுக்கான நீதி வேண்டி பெரியாரும் முழக்கமிட்டார். சமத்துவ முழக்கம் எழுந்த காலத்தே சமத்துவத்திற்கு எதிரான சக்திகளும் அடையாளம் காணப்பட்டன. எல்லாரையும், எல்லாவற்றையும் உள்ளடக்கித்தான் தேசியம் கட்டமைக்கப்பட்டது. இதுதான் இந்திய தேசிய இலக்காகப் பேசப்பட்டது.
உண்மையான தேசியம் எவரையும் புறந்தள்ளாது; எவரையும் ஒடுக்காது; ஒதுக்காது. இதனைத்தான் ‘உள்ளடங்கிய தேசியம்’ (Inclusive Natoinalism) என்கிறோம். உண்மை தேசியம் ஒற்றுமையை முன் வைக்கும்; பன்மையை ஏற்கும். ‘ஒற்றுமை’ எனும் பெயரில் ஒருமையை (Uniformity) வலியுறுத்தாது. பன்மையை ஏற்கும் தேசியம் பன்முக அடையாளங்களை, அவைகளின் இருப்பை அங்கீகரிக்கும். அவைகளை மதிக்கும். பன்முகச் சமூகங்களிடையே பகை வளர்க்காமல், சகிப்புத் தன்மையையும், நட்பையும் வளர்க்கும். இப்பண்புகளைத்தான் ‘சனநாயகப் பண்புகள்’ என்கிறோம். சனநாயகத்தை மதிக்கும் தேசியமே நாம் விரும்பும் தேசியம்.
இந்தியாவில் திட்டமிட்டு வளர்க்கப்பெறும் மதவாத அரசியல், பெரும்பான்மை இல்லாத பன்முகப் பண்புகளை உடைய இந்து மதத்தின் பெயரால் நடத்தப்படுவது. பெரும்பான்மை மதத்தின் பெயரால் மக்கள் அணி திரட்டப்பட்டு, ஒருங்கிணைந்து தேர்தல் அரசியல் மூலம் ஆட்சியமைப்பது! இவ்வாட்சி யாருக்காக உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறதோ, அவர்கள் நலன் இவ்வரசியலில் இல்லை என்பதைக் கண்டுபிடிக்கும் முன்பே ஒரு தலைமுறையின் ஆயுள் முடிந்து போகும் என்பதுதான் உண்மை. சனநாயக அரசு குடிமக்களின் சம பங்கேற்பில் உருவாவது. இக்குடி மக்களின் இனம், மொழி, சமயம் அல்லது சாதி எனும் அடிப்படையில் ஆட்சி அமைவது சனநாயகம் அல்ல; குடிமக்கள் சார்ந்த அடையாளங்களின் சார்பில் மக்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் அரசு பெரும்பான்மை (Majority) அரசல்ல; இவ்வரசு பெரும்பான்மைவாத அரசு (Majoritarian) - பெரும்பான்மை வேறு; பெரும்பான்மைவாதம் வேறு. பெரும்பான்மைவாதம் எப்போதுமே எதேச்சதிகார அரசாகத்தான் இயங்கும். எதேச்சதிகார பெரும்பான்மைவாத அரசில் சனநாயகப் பண்புக்கு இடமில்லை. இன்றைய ஒன்றிய அரசு அதன் ஆளும் முறைமைகளில் உரையாடல் இல்லை; விவாதம் இல்லை; சிறுபான்மையினர் உரிமையற்ற குடிமக்களாகவே கருதப்படுவர்.
இன்று இந்தியாவில் மதச் சிறுபான்மையினர் எவ்வளவு இழிவாக நடத்தப்படுகின்றனர் என்பது ஊரறிந்த விசயம். அரசின் நிறுவனங்களால், காவல் துறையினரால், அண்டை சமூகங்களால் நாளும் அவமானத்துக்கு உள்ளாகும் நிலையை எப்படி வர்ணிப்பது? மதவாதக் கருத்தியல் அடிப்படையில் உருவாகும் அரசு மத அடிப்படைவாதத்தின் மீதுதான் செயல்படும். மத அடிப்படைவாதம் மதச் சுதந்திரத்தை மறுக்கும், மத அடிப்படையிலே குடியுரிமையை நிர்ணயிக்கும் இந்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம் எவ்வளவு பெரிய பாகுபடுத்தும் தன்மையுடையது என்பதை நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு காட்டியது. பெரும்பான்மைவாத அரசினால், அவ்வரசு எடுக்கும் எதேச்சதிகார முடிவுகளால் சனநாயகம், சமயச் சார்பின்மை, எனும் கோட்பாடுகள் சிதைந்து வருதலைக் காண்கிறோம்.
“இந்தியாவில் வாழும் இந்துக்கள் அல்லாதோரும், இந்துக்களே. இவர்களுள் இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ‘முகம்மது இந்துக்கள்’ என்றும், கிறிஸ்தவத்தைத் தழுவியவர்கள் ‘கிறிஸ்தவ இந்துக்கள்’ என்றும், சீக்கிய சமயம் தழுவியவர்கள் ‘சீக்கிய இந்துக்கள்’ என்றும் அழைக்கப்பட வேண்டும். இந்தக் கோட்பாடுதான் இந்து ராஷ்டிரக் கோட்பாடு” -(அத்வானி, Times of India 30.01.1995).
‘இந்துக்கள்தாம் இந்தியாவின் குடிமக்கள்; ஏனையோர் அந்நியரே’ (Gliens) என்ற கருத்தில் மக்கள் மனத்தில் ஆழமாகப் பதியவிட்டு வரும் நிலையை நாளும் பார்க்கின்றோம். இந்துத்துவம் பேசும் இந்து தேசியம் ஒடுக்கலையும், ஒதுக்கலையும் வளர்க்கிறது. பகையரசியலில் குளிர் காய்கிறது.
தமிழ்த் தேசியம் என்ன செய்கிறது?
பாரதிய சனதாவின் மூத்தத் தலைவர் குடிமக்களின் சமயம் சார்ந்த அடிப்படை அடையாளத்தை மறுக்கிறார். அவர் ஓர் இந்துவாக இருப்பதில் நமக்கு ஆட்சேபனை எதுவுமில்லை. ஆனால், பெரும்பான்மை சமயத்தின் ஒட்டாக மட்டுமே சிறுபான்மையினர் இருக்க முடியும் என்று முத்திரையிடுவது அராஜகமில்லையா?
தமிழ்த் தேசியம் பேசும் சீமான் இந்துத்துவவாதிகள் போல் பழம்பெருமை பேசுகிறார். இந்து பெரும்பான்மைவாதம் பேசுவோர் எவரையெல்லாம் ‘பிறர்’ (other) என்று முத்திரை குத்துகின்றனரோ, முத்திரை குத்த ‘சுத்த வாதம்’ பேசுகின்றனரோ... அதையே சீமானும் செய்கிறார். “இந்துக் கலாச்சாரத்தைப் போற்றாதோர் இந்தியர்கள் அல்லர்” என்றார் கோல்வால்க்கர். இவரோ தமக்கு வாக்களிக்காதோரைச் ‘சாத்தானின் பிள்ளைகள்’ என்று வசைபாடுகிறார். இஸ்லாமியரையும், இவர் ஏற்கெனவே சார்ந்திருந்ததாகச் சொல்லப்பட்ட கிறிஸ்தவரும் ‘சாத்தானின் பிள்ளைகள்’ என்று தீர்ப்பிட இவருக்கு உரிமையுண்டு. அது அவரின் கருத்துச் சுதந்திரம்; ஆனால், மதச் சிறுபான்மையினர் (Minorities) என்று அழைப்பதையே இவர் ஏற்கவில்லை. இஸ்லாமியரையும், கிறிஸ்த வரையும் ‘சிறுபான்மையினர்’ என்று அழைப்போரைச் செருப்பைக் கழற்றி உதைப்பதாகச் சொல்கிறார். இந்துத்துவ உதிரிகள் நாடெங்கும் மதச்சிறுபான்மையினருக்கு எதிராகக் கொட்டும் வார்த்தைகளுக்கும், இவர் பேசிய செருப்படிக்கும் என்ன வித்தியாசம்? சனநாயக அரசு உத்தரவாதமளிக்கும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு இவர் அளிக்கும் மதிப்பு என்ன?
அரசியலின் அரிச்சுவடியே அறியாமல், இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுதலைத் தவறு என்கிறார். இவர்கள் மதத்தால் கிறிஸ்தவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் இருந்தாலும், இவர்கள் தமிழர்கள் என்பதால் சிறுபான்மையினர் இல்லை என்று புதிய வியாக்கியானம் தருகிறார்.
சிறுபான்மையினர் என்ற அடையாளம், அவர்களுக்கான தனித்த உரிமைகள் என்பனவெல்லாம் சலுகைகள் அல்ல; அகில உலக மனித உரிமைப் பிரகடனங்கள், தேசிய அளவிலான அரசமைப்புச் சட்டங்கள் அனைத்தும் மத மற்றும் மொழிச் சிறுபான்மையினரின் தனித்துவத்தை, அவர்தம் அடையாளத்தை அங்கீகரித்து, தனி உரிமைச் சாசனங்களை வகுத்துள்ளன. “சனநாயகத்தின் பெருமையே சிறுபான்மையினர் பாதுகாப்பில்தான் இருக்கிறது” என்பார் பண்டிதர் நேரு. அரசமைப்பின் நீண்ட நெடிய விவாதங்களில் சிறுபான்மை உரிமைப் பாதுகாப்பு மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. தமிழ்ப்பேசும் கிறிஸ்தவர்கள் அல்லது இஸ்லாமியர் தமிழறிந்தோரே; தமிழ்த் தேசியத்தை நம்புவோர்தாம். தாய்மொழியாம் தமிழைப் போற்ற இவர்கள் எவரிடமும் அனுமதி பெற வேண்டுவதில்லை.
வீட்டில் உருது பேசும் இஸ்லாமியர்கள், தெலுங்கு பேசும் நாயுடுகள், இவர் பார்வையில் அந்நியர்கள்; எப்போதோ எங்கிருந்தோ வந்து நம் மண்ணில் குடியேறி வாழ்ந்து வரும் மக்கள் சிலரை ‘வந்தேறிகள்’ என்று கேலிசெய்து ஒதுக்குவது எதேச்சதிகாரமில்லையா?
ஆரியம் பேசும் வடவர்களுக்குத் திராவிடம் கெட்ட வார்த்தையாக இருக்கலாம். நமதூர் சீமானுக்குத் திராவிடமும், இன்றைய திராவிட அரசியலாரும் எதிரிகளாகிப் போனது ஏன்? இந்துத்துவம் போற்றும் சனாதனம், இவரின் கருத்தியலுக்கு ஒத்துப்போவது ஏன்? இவர் பேசும் அரசியலில் இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் தாக்கப்படும்போக்கு கண்டுகொள்ளப் பெறுவதில்லையே ஏன்? மணிப்பூர் படுகொலைகள் இவர் அரசியல் விவாதத்தில் இல்லையே!
இந்துத்துவர்கள் இந்து மதத்தை முன்வைத்துப் பெரும்பான்மைவாத அரசியல் செய்தாற்போல், சீமான் முப்பாட்டனுக்கு வழிபாடு செய்கிறார். சனநாயக அரசு எவரையும் மதத்தின் அடிப்படையில் பாகுபடுத்தலும், வாக்கு வங்கிகளையும் கட்டமைத்து அரசியல் நடத்தும் உரிமை வழங்கவில்லை. ‘தமிழர் சமயம் சைவமே’ என்று கூறி, முப்பாட்டனை வணங்கித் திரிவதும் அவரின் தனியுரிமை.
ஒரு மதத்தை ஏற்பதும், மறுப்பதும் சனநாயக உரிமை. மதமாற்றத்தைக் கொச்சைப்படுத்தும் இந்துத்துவச் சக்திகளைப் போன்று மதமாற்றத்தை நாம் கொச்சைப்படுத்த வேண்டாம். ஆனால், முப்பாட்டனாம் முருகனுக்கு வழிபாடு செய்வதும், அதுவே தாய் மதம் என்று போற்றிக் கொள்வதும், மதவாத அரசியலில் ஒரு பகுதி இல்லையா? இது பெரும்பான்மைவாதமில்லையா?
மதப்பெரும்பான்மையைக் கட்டமைத்து அரசியல் செய்யும் போக்கைப் புரிந்துகொள்வோம். இந்துத்துவ அரசியலின் அனைத்துக் கோணங்களையும் பிரதிபலிக்கும் தமிழ்த் தேசியத்தின் போக்கைப் புரிந்துகொள்வோம்.
இந்திய தேசியம் என்ற பெயரில், இந்து கலாச்சாரத் தேசியம் முன்னெடுக்கும் துருவப் படுத்தும் (Polarise) நச்சுப் பண்பினை, சிந்திக்கும் மக்கள் அறிவர்.
இந்நிலையில் தமிழ் இளைஞர்கள் பலர் திசை திருப்பப்பட்டு வரும் நிலையில், கிறிஸ்தவம் சார்ந்த இளைஞர்களும், சில இளம் அருள்பணியாளர்களும் பொய்யான தேசியத்தால் ஈர்க்கப்பட்டுத் திசை மாறிச்செல்வதையும் காண முடிகின்றது.
தமிழ் மொழிக்கும், தமிழின் தனித்த புகழுக்கும், அதன் தனித்தன்மையைக் காக்க முனையும் தமிழறிஞர்களுக்கும் நாம் எதிரிகளல்லர். ஆனால், மதத்தின் பெயரால் பகை அரசியல் செய்யும் இந்துப் பெரும்பான்மைவாத பகையரசியலை அப்படியே பின் தொடரும் தமிழ்த் தேசியவாதிகளிடம் எச்சரிக்கை வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.
Comment