வாழ்க்கையைக் கொண்டாடு- 16
குற்றம் கடிதல்
‘தொடர் அனைத்தும் நல்லாத் தானே போயிட்டு இருக்கு, ஏன் சட்டுனு இந்தத் தலைப்பு?’ எனும் முணு முணுப்பு வரலாம். எல்லாவற்றையும் கடந்ததுதானே வாழ்க்கை! ஆதலால், இதைப் பற்றியும் நாம் பேசித்தான் ஆக வேண்டும்.
‘எல்லா நேரத்திலும், எல்லா நிலையிலும் நாம் நல்லவராகவே இருக்க முடியாதே! பிறகு எதற்கு இதைப் பற்றிப் பேச?’ என்பது ஒருபுறம் இருந்தாலும், எல்லா நிலையிலும், எல்லாச் சூழலிலும் நாம் நல்லமுறையில் இருக்க முயற்சிப்பதில் தவறில்லை தானே? ஆமாம், தவறில்லைதான்!
பின்விளைவுகள் தெரியாது அல்லது ‘இது எதனால்?’ எனும் பிரித்தறியும் நிலை தெரியாது நாம் செய்யும் செயல்கள் தவறு என அழைக்கப்படுகின்றன. இதைச் செய்தால் இன்னின்ன பின் விளைவுகள் வரும் என்பது தெரிந்தும், அதைச் செய்வது தப்பு அல்லது குற்றம் என அழைக்கப்படுகிறது. தவறுக்கு மன்னிப்பும், தப்புக்குத் (குற்றம்) தண்டனையும் தரவேண்டும் என்பதும் நடைமுறையில் உள்ள ஒன்று. தப்பில்தான் தப்பித்தல் எனும் வார்த்தையும் ஒளிந்துள்ளது. ஆதலால், தப்பை தப்பில்லாமல் செய்துவிட்டால் தப்பில்லை எனும் அரிய கருத்தும் அங்குமிங்கும் அலைந்தாடுகிறது.
அதெல்லாம் எதற்கு நமக்கு? நாம் நல்லது நோக்கிப் பயணிப்பவர்கள் ஆயிற்றே! பின் எதற்கு இதைப்பற்றி எல்லாம் பேச?’
எல்லாவற்றையும் தெரிந்து கொள்வோம். தேவையானவற்றை ஆழமாக அறிந்துகொள்வோம். அவ்வளவுதான் வாழ்க்கை!
குற்றம் செய்பவர்களை எல்லாம் தண்டித்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும்தானே? குற்றத்தை உணர்பவர்கள் அதைச் சரி செய்யும் வாய்ப்பைத் தேடி நகர்வார்கள். அதை நியாயப்படுத்த நினைப்பவர்கள் வேறு கோணத்தில் அதைத் தொடரும் வழிகளைத் தேடுவார்கள்.
இவற்றையெல்லாம் இங்கு சொல்லக் காரணம் என்ன? காரணம் உண்டு.
எல்லா நிறுவனங்களிலும் இவருக்கு இந்த வேலை (Job Data/ Roles and Responsibility) என முறையாகப் பிரித்துக் கொடுத்து விடுவார்கள். அதைச் சரியாகச் செய்ய தவறும் பட்சத்தில், இது தவறா? தப்பா? எனும் கேள்விகள் பலமாக எழும். அப்போது ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லும் சூழல் வரும். ‘நான் சரியாகத்தான் கொடுத்தேன்; அவர் சரியாகச் செய்யவில்லை’ என்றும், ‘இல்லை இல்லை, மனிதவளத்துறையில் இருந்து இவருக்கான வேலை பற்றிய JDயை தவறாகக் கொடுத்து விட்டார்கள்’ எனும் குற்றச்சாட்டும் எழும். எங்கு தவறு நடந்தது என்பதை அறிந்து, அதைச் சரிசெய்ய முற்படுவதுதான் சரியான அணுகுமுறை. மேலும், கடமையில் இருந்து தவறியிருந்தால், ‘ஏன்?’ என்ற விளக்கம் கேட்பதுதான் நேரிய செயல். அதை விடுத்து, இன்னொருவர் மேல் குற்றம் சுமத்தி நாம் தப்பிக்கப் பார்ப்பது நமக்கும், நாம் செய்யும் வேலைக்கும் நல்லதல்ல.
நாம் பணி செய்யும் இடத்தில், குறிப்பிட்ட பணியாளர் ‘அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்யவில்லை, சொன்னாலும் எதிர்த்துப் பேசுகிறார், அவரை இன்றே வேலையில் இருந்து அனுப்பி விடுங்கள்’ எனும் காரசாரமான வார்த்தைகளும், மின்னஞ்சல்களும் துறைத் தலைவர்களிடம் இருந்து மனித வளத்துறைக்கு வரும். சில நேரங்களில், எதற்கு வம்பு... அவர்கள் சொன்னபடியே அனுப்பி வேறு ஆளை எடுத்துவிடுவோம் எனும் மனநிலைக்குச் சில HRகள் செல்வதுண்டு. இதன் உண்மைத்தன்மை என்ன? அதை ஆராய்ந்து, சரியான முடிவெடுப்போம் எனும் நிலைக்குச் செல்பவர்களும் உண்டு.
எப்போதுமே சட்டத்தின் இயல்பான அடிப்படை விதியான, முறையான நெறிமுறையோடு அணுகுதல் விதியைப் (Natural Justice of Law) பின்பற்றுவது நல்லது. எவ்வித முன்தீர்மானம் இன்றி, முறையாக அணுகி முடிவுக்கு வருவதுதான் நன்மை பயக்கும். ஆதலால், வேலையில் சில குறைபாடுகள் இருப்பின் அதைச் சரிசெய்யும் பொருட்டு, PIP (Performance Improvement Plan) எனப்படும் செயல்திறன் மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி, அதில் அவர் தவறியதைச் சரி செய்ய வாய்ப்புக் கொடுத்து, அந்தக் குறிப்பிட்ட பணியாளரின் உரிமையை நிலைநாட்டுவதில் HRக்கு முக்கியப் பங்குண்டு.
அப்படியானால் மற்ற துறைகளில் உள்ள அனைவரும் ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்றுதான் வேலை செய்கிறார்களா? என்று குதர்க்கமாகக் கேள்வி கேட்க வேண்டாம். அவர்களுக்கு இருக்கும் பணிச் சுமை மற்றும் வணிக முன்னேற்றத்தில் அவர்கள் காட்ட வேண்டிய உழைப்பு காரணமாக இந்த முடிவினை எடுக்க HRகளின் உதவியை நாடுவது வழக்கம். தவறுவது இயல்புதான் அதை சரி செய்யும் வாய்ப்பு வழங்கி, மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்குள் எண்ணற்றப் போராட்டத்தைத் தாண்டி வரவேண்டியிருக்கும். அதை முனைப்போடு செய்யும்போது நமக்குச் சலிப்புத் தட்டாது.
சதுரங்க ஆட்டத்தில் எல்லாக் காய்களுக்கும் (Coins)) ஒரு பவர் உண்டு. அதில் உள்ள சிப்பாய் (Pwans) கூட சிறப்பாக முன்னேறினால் ராணியாக மாறும். ஆனால், அது அவ்வளவு எளிதில் நடந்து விடாது. அதுபோல, தவற்றினைச் சரிசெய்ய ஒன்றிரண்டு வாய்ப்புகள்தான் வழங்கப்படும். அதற்குள் சரி செய்யப்படவில்லை என்றால், அதற்கான விளைவை நாம் ஏற்றுதான் ஆகவேண்டும். ஏனென்றால், நிறுவனம் என்பது ஏதோ ஒரு சிலர் ஆசைக்காக, நோக்கத்திற்காகச் செயல்படுவதில்லை. அதைக் கணக்கில் கொண்டு, தவற்றினைச் சரிசெய்யும்போது மட்டுமே நிறுவனத்திற்கான தொடர் பயணத்தில் நாமும் ஓர் அங்கமாக இருப்போம். செய்யும் செயலை முறைப்படுத்தி முன்னேறும்போது நிறுவனத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக நாம் அடையாளம் காட்டப்படுவோம்.
தொடர்ந்து பயணிப்போம்....
Comment