இந்தியாவைப் பிரிக்க சதியோ?
அமித்ஷா திறமையான தேர்தல் நிபுணராக இருக்கலாம். ஆயினும், சமூகத்தின் உணர்வுகளைப் பிரதிபலிப்பவரா? இந்தி திணிப்பை முன்னிருத்திய அவருக்குத் தென் இந்தியாவிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அதனால், அதிகம் பாதிக்கப்பட்டவர் வட இந்தியாவிலிருந்து தென் இந்தியா வரும் புலம்பெயர் தொழிலாளர்தாம். ஏழை மக்கள்தாம் இதற்கான விலையைக் கொடுக்கின்றனர். ‘மொன்’ என்ற நாகலாந்து நகருக்குத் தேர்தல் பரப்புரைக்காக அமித்ஷா செல்வது பெரிய செய்தி ஆக்கப்பட்டது. தேர்தல் வரும், போகும். ஆனால், இந்தியா ஒன்றாக நீடித்திட வேண்டும். கிழக்கு நாகர்களை மேற்கு நாகர்களிடமிருந்து பிரிப்பது, மம்தாவின் பெங்காலிகளைக் கூர்க்கா ராஜப்ஹோன்சி பழங்குடியினரிடமிருந்து அந்நியப்படுத்துதல் ஆகியவை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சருக்கு ஒரு தேர்தல் நோக்கத்தின் குறுக்கு வழியாக இருக்கலாம். ஆனாலும், இந்தியா ஒன்றாக இருந்தாக வேண்டும்.
‘பிரிட்டிஷார் நம்மைப் பிரித்து ஆளவில்லை; பிரித்தது நாமே; அவர்கள் ஆண்டார்கள்’ என இந்தியாவின் முதல் ஒன்றிய உள்துறை அமைச்சர், இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல் தன் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய ஆளும் கட்சி இந்தக் கொள்கையை மாற்றி அமைத்துள்ளது. அவர்களே பிரித்து, அவர்களே ஆள்கின்றனர். எனினும், பிளவுபட்ட இந்தியாவை, நொறுக்கப்பட்ட பொருளாதாரத்தை, அருகி வரும் சந்தையை, தனிப்பட்ட சமூகங்களிடையே பாதுகாப்பின்மை உணர்வை, உணர்வுப்பூர்வ பிளவுபட்ட நாட்டை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
வட கிழக்குத் தேர்தல் முடிவுகளை அறிவோடு விவரிக்க ஒருவருக்குச் சிறப்புத் தகுதி வேண்டும். பாதிக்கப்பட்ட சமூகங்களின் மத்தியில் எழுந்துள்ள பாதுகாப்பற்ற பதற்றம்தான் ஓட்டளித்த விழுக்காடு அறிவிக்கிறது. திரிபுரா 88.9%, நாகலாந்து 85%, மேகாலயா 77%. மாநிலக் கட்சிகள் மீதான ஆழ்ந்த நம்பிக்கை என்பது, தத்தம் வெளிப்படையான தனித்துவத்தை அசைக்க முடியா பிரகடனமாகவே உள்ளது. “எம் தனித்தன்மையை மதியுங்கள்” என அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் வேறுபட்டவர்கள்; நாங்கள் வேறுபட்டவராகவே இருக்க விரும்புகிறோம் என்பதே இதன் செய்தி.
பொது எதிர்ப்பையும், போராட்டங்களையும் அடக்கி ஒடுக்கிவிட்டதாக ஆளும் வகுப்புகள் சில நேரங்களில் மகிழலாம். ஆனால், அவர்களால் உள்ளார்ந்த நம்பிக்கையை ஒருபோதும் வெல்ல இயலாது. “நான் நாஜி சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டபோதுதான் என் மனத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த இயன்றது” என விக்டர் ஃப்ராங்கிள் குறிப்பிடுகிறார். நாட்டின் வருங்காலம் அதன் இணைப்பில் உள்ளது என்பதை இந்துத் துவா கொள்கையாளர் உணர வேண்டும்.
சோவியத் ரஷ்யாவின் கட்டுப்பாடுகள் மிக்க அரசைப் பற்றிய எளிய, சிரமமில்லாத கம்யூனிஸ்ட்டுக்கு எதிரான நகைச்சுவைகள் மக்களைச் சிந்திக்க வைத்தன. அது உணர்வுப்பூர்வ நகைச்சுவையாக உருமாறி, சோவியத் வல்லரசை வீழ்த்தியது. அதுவும் ஓசையில்லா வழியில்! இந்து ராஜ்யமும் அதே வழியில் வீழுமா?
எதிர்ப்பு ஏற்கெனவே தொடங்கியுள்ளது. எதிர்பாராத விதமாகச் சிலருக்கு வன்முறை மொழிதான் புரிகிறது. அண்மையில் காஷ்மீரில் 29 பொதுமக்கள் தங்கள் உயிரை இழந்த பின்னும், சிலர் பாடம் கற்க மறுக்கின்றனர். குருடர் பார்க்கிறார்கள். ஆனால், முழு பார்வையுடையவர் தங்கள் செருக்கின் காரணமாகப் பார்க்க மறுக்கின்றனர். ஒருவேளை பார்த்தாலும், அதன் பொருளை உணர இயலவில்லை. இந்த இந்து ராஜ்ஜிய சமய வெறிதான் அண்மையில் காலிஸ்தான் கோரிக்கையை 29 வயது அம்ரித்பால் சிங்கிடம் உசுப்பேற்றி உள்ளதா?
மோடியின் பெயரைத் தவறாக உச்சரித்ததால் பவன் கேரா (நகைச்சுவை நடிகர்) கைது செய்யப்பட்டார். ஆனால், அம்ரித் பால் சிங் (காலிஸ்தான் கோரிக்கையை அண்மையில் எழுப்பியவர்) தொடர அனுமதிக்கப்படுகிறார். ‘ஊழல்’ குற்றத்திற்காகச் சிசோடியா (தில்லி மாநிலத் துணை முதல்வர் - ஆம் ஆத்மி கட்சி) கைது செய்யப்படுகிறார். பா.ஜ.க.வில் இணைந்ததற்காக ஹேமத் பிஸ்வாஸ் சர்மா மீதான சகல குற்றங்களும் மன்னிக்கப்படுகின்றன. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் ‘ஏன்?’ எனக் கேள்வி எழுப்புகிறார். பிரதம மந்திரியின் கட்சியில் இணைந்தால், சிசோடியா குற்றமற்றவர் என விடுவிக்கப்படுவாரா? என ஆச்சரியப்படுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
தேர்தல் பரப்புரையின்போது மேகாலயாவின் என். பி.பி. கட்சியின் ஊழல்கள் ஏராளம் எனக் கூறியவர், தேர்தல் முடிந்த கையோடு என்.பி.பி. வெற்றி பெற்ற வேட்பாளரை இந்தியாவிலேயே சிறந்த அரசியல் பங்குதாரர்போல வாரி அணைத்துக்கொள்கிறார். ஒவ்வொரு முறையும் பா.ஜ.க.வைக் கடுமையாகத் தாக்கிப் பேசுகையில் ஒரு புது வழக்கு. அவருடைய பழைய காலத்தின் வழக்கு தூசி தட்டப்படுகிறது. லாலுபிரசாத் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார். அத்வானி, சசிகலா(?), அருண் சௌரி போன்றவர்கள் புத்திசாலிகளாக ஒதுங்கிப் போய்விடுகின்றனர். அதானி போன்ற கூட்டாளிகள் விலக்களிக்கப்படுகின்றனர்.
2400 ஆண்டுகளுக்கு முன்னரே சமுதாயத்தில் கூட்டாளி முதலாளிகளால் என்ன விபரீதங்கள் நிகழும் எனச் சீனர் கண்டறிந்துள்ளனர். ஆள்பவர் ஆடம்பரத்தில் வாழ்வதும், ஊக வணிகர் வளம் பெறும்போதும், உழவர் தங்கள் நிலத்தை இழப்பதும், சேமிப்புக் கலங்கள் காலியாவதும், அரசு வெற்று விளம்பரங்களில்-ஆயுதங்களில் வருவாயைச் செலவிடுவதும், ஆளும் வகுப்புகள் பொறுப்பின்றியும், டாம்பீகமாகவும், தம் தேவைக்கதிகமாக வைத்திருப்பதும், ஏழைகளுக்குப் போக்கிடமின்றி இருப்பதும்.... இந்தக் குழப்பமும், திருட்டும் ஏற்க இயலாது. இது அண்டங்களின் ஒழுங்குக்கு எதிரானவை என ‘தா.ஓ.தே. சிங்க்’ நூல் குறிப்பிடுகிறது.
தனியார் முனைப்புகள் ஊக்கமளிக்கலாம். டெங்க்சியோ பிங்க் (மேனாள் சீன அதிபர்) அதை அறிந்திருந்ததால், மாவோ காலத்திற்குப் பிறகு தனியார் தொழில் முனைவோரை ஆதரித்தார். எனினும், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தனர். ஜாக் மா, பஓஃபான், குஓ குவங்சங்க், சன் டாவு... யாராக இருந்தாலும் பொறுப்புடன் இருந்தனர். கண்ணை மூடிக்கொண்டு எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., அதானியை ஆதரிப்பதைதான் ராகுல் காந்தி கேள்விக்குட்படுத்துகிறார். காலம்தான் விடையளிக்கும்.
இடைப்பட்ட நேரத்தில் யோகி போன்ற இந்துத் துவா தலைவர்கள் வேறோர் உலகில் வாழ்கின்றனர். அவர்கள் ‘எதிரிகள் அதானியோ, ஊகவணிகரோ அல்லர்; பசு வணிகம் செய்பவர்’. குற்றவாளிகளை ஒழித்துவிடுவதாக இவர் சபதமிடுகிறார். இவருடைய குற்றவாளிகள் யாரென்று பார்த்தால், பா.ஜ.க.வை விமர்சனம் செய்பவர், அரசியல் கேள்வி எழுப்புபவர், இஸ்லாமிய சிறுபான்மையினர், கேள்வி கேட்கும் ஆதிவாசி அல்லது தலித் போராளிகள் அல்லது பசு வணிகம் செய்பவர் ஆவர். இதே மனப் போக்குடன் இருக்கும் மோடி ‘ஜி’ உ.பி-யில் 9000 காவலர் கூட்டத்தில் உரையாற்றும்போது அவர்களின் தலையாயக் கடமை குற்றவாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தும் ஓர் அமைப்பை உருவாக்குவது எனக் குறிப்பிட்டார்.
நம் நாகரிகத்தின் விவேகமானவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்தது நல்லவைகளே. மகிழ்ச்சியான உறவுகளையும், சமூக நல்லுறவையும் ஏற்படுத்தக் கூடிய புறச்சூழலை உருவாக்க நம்மைக் கேட்கின்றனர். இந்தப் பொது இலக்கை அடைய நமது தேசிய நிறுவனங்களை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் நமது நாட்டைத் தோற்றுவித்தவர்கள் முன் மொழிந்தனர். இன்றோ அரசியல்வாதியான துறவி, சக குடிமக்களை அவர்கள் கேள்வி கேட்டால், உரிமம் பெற்ற மாட்டிறைச்சி உரிமையாளரான இந்து அல்லது ஜெயின் வணிக முதலாளிகளிடமிருந்து ஓர் ஏழை இஸ்லாமியருக்கு மாற்றினால் ‘நான் அழிப்பேன்’ என்கிறார். ‘என்கவுன்டர்’ கொலைகளை அடுத்து கல்வி, சுகாதாரம் போன்ற ஏனைய மனித வளக் குறியீடுகளில் உ.பி பின் தங்கியிருப்பதில் வியப்பொன்றும் இல்லை. இவை வெடிக்கும் நாள் நமக்கு அச்சமூட்டுகிறது.
நம்மீது நாமே திணித்துக் கொண்ட கண்மூடிய நிலையால் துதிபாடும் ஜனநாயகம், பரஸ்பர புகழ்ச்சி, சார்பு ஆகியவற்றைச் சகித்துக் கொண்டு வாழ் கிறோம். சட்டப்பூர்வமான குடிமக்களுடைய உரிமையை ஏதோ பிரதம மந்திரி தன் பெருந்தன்மையால் வழங்குவது போல செயல்படுகிறார். ஊடகம் முடக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்கள் ஒன்றிய அரசைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. மக்களுக்கு ஊட்டப்படுவது கழுத்தை நெரிக்கும் தேசியவாதம். இந்தக் கெட்ட கனவுகள் கலையுமா?
நஜீப் ஜங்க், மேனாள் தில்லி துணை நிலை ஆளுநர் கூற்று நம்பிக்கை ஊட்டுகிறது. “இரவு எப்போதும் நீடிக்காது” என்கிறார் அவர். பகல் வெளிக் கிளம்பும்போது இரவு மறையத் தொடங்குகிறது. நியூ ராம்பெர்க் நீதிமன்றத்தில் நாஜிக்கள் தோலுரிக்கப்பட்டதுபோல, ஒருநாள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக ஆர்.எஸ்.எஸ்.சும் தோலுரிக்கப்படும். ஆம், குருடர் பார்க்கின்றனர்; ஓட்டுப் போடுபவரை விலைக்கு வாங்குவது, சட்டமன்ற உறுப்பினர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்குவதும், விற்பதும், விமர்சகரைப் புலனாய்வுக்கு உட்படுத்துவதும், திருடர் கூட்டத்தை ஆதரிப்பதும் ஒரு முடிவுக்கு வரும். பசுக்கள் மட்டும் குளிர்பதனத் தங்குமிடங்களில் சொகுசாக வாழ்கின்றன. அமைதியாக இருப்போம். மார்கஸ் அவுரேலியஸ் கூறுவது போல, “தன்னைக் காயப்படுத்துபவரை அவரைப் போலன்றி, மாறாக நடத்துவதுதான் சிறந்த பழி தீர்த்தல் ஆகும்”.
- தமிழாக்கம்: திரு. து. சே. ஞானராஜ், சென்னை
Comment