No icon

இவர்களால் முடிந்ததென்றால்...!

பேசும் வார்த்தை இவ்வளவு வலிமையானதா?

தனது மனதில் தோன்றிய எண்ணங்களை, தனது தேவைகளை, சைகைகளால் பிறருக்கு வெளிப்படுத்திய மனிதன், கால ஓட்டத்தில் வெவ்வேறு ஒலிகளை எழுப்பினான். மனிதகுல நாகரிகத்தின் விளைவாகப் படிப்படியாக ஒலிகளுக்குப் பதிலாக வார்த்தைகளைப் பயன்படுத்தினான். அதன் நீட்சியாக இன்று உலகில் எத்தனையோ பயன்பாட்டு மொழிகள்; ஒவ்வொன்றிலும் எவ்வளவோ வார்த்தைகள். அவை எண்ண முடியாதவை!

தற்போது சுமார் 7000 மொழிகளை உலகில் வாழும் 800 கோடி மக்கள் பயன்படுத்தினாலும், எழுத்து வடிவம் பெற்றவை சுமார் 300 மொழிகளே. இதை வாசிக்கும் நீங்களும், நானும் பேறு பெற்றவர்கள்! ஏனெனில்உலகின் செம்மொழிகளில் நம் தமிழ்மொழி சிறப்பான இடத்தை மட்டுமல்ல, மிகப் பழமையான பாரம்பரியத்தையும், இலக்கண-இலக்கியச் செறிவுகளையும் கொண்டுள்ளது. கடலின் ஆழத்துக்குச் சென்று முத்தெடுப்பதைப் போல மொழி எனும் கடலில் குளித்து முத்தெடுக்க நான் விரும்பவில்லை. ஏனெனில், முத்தெடுக்கத் தகுதியும், அது பற்றிய திறமையும், அறிவும் வேண்டுமல்லவா?

நாம் பேசும் மொழி பற்றிய அடிப்படை அறிவு நமக்கு வேண்டும். குறைந்தபட்சமாக நாம் படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் நாம் உச்சரிக்கும் வார்த்தைகள், அவற்றின் பொருள் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் உண்டு. அதற்கு வலிமையும், தாக்கமும் உண்டு. குழந்தைகள், உறவினர்களை அழைக்கும்போது பெயர்களைக் கொச்சைப்படுத்தாமல் அழைக்க வேண்டும். திட்டுவதாக இருந்தால் கூட அழகான வார்த்தைகளைப் பயன்படுத்தலாமே!

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் சக்தி உண்டு. சிலர் பேசும் வார்த்தைகளுக்கு மந்திரச் சக்தியே உண்டு. வெகு சுலபமாக இதை நாம் புரிந்து கொள்ள முடியும். நாம் அனைவருமே பல்வேறு வியாபார இடங்களுக்குச் சென்று நமக்குத் தேவையானவற்றை வாங்குகின்றோம். சில கடைகளில் இருக்கும் விற்பனையாளர்கள் யார் வந்தாலும் எதையும் பேசாமல், சிரிக்காமல் பொம்மை போல செயல்படுவர்.  ‘சிரிக்காதவன் கடை திறக்கலாகாதுஎன்ற பொன்மொழியை நினைவுபடுத்துபவர்களாக இவர்கள் இருப்பார்கள். இன்னும் சில விற்பனையாளர்கள் உண்டு. குறிப்பிட்ட சில கம்பெனிப் பொருள்களை வாங்கக்கூடாது என்று நினைப்பவர்களைக் கூட தங்களது வாய் வார்த்தைகளால் வாங்க வைப்பது மட்டுமில்லாமல், அவர்களைத் தங்கள் கடைகளை நாடி வரக்கூடிய நிரந்தர வாடிக்கையாளர்களாகவும்  மாற்றிவிடுவார்கள்.

வார்த்தைகளை எப்படி வேண்டுமானாலும் நாம் பயன்படுத்தலாம். சொல்லும் விதத்தில் மட்டுமல்ல; வார்த்தைகளைப் புரிந்துகொள்ளும் விதத்திலும் வேறுபாடுகள் உருவாகும். எழுத்து வடிவத்தை விட, பேசும் வார்த்தைகளுக்கு வலிமை அதிகம். ஏனெனில், அதில் உடல்மொழி, உச்சரிப்புபேசும் தொனி, பார்க்கும் விதம் போன்ற அனைத்தும் செயல்படும்.

ஒரே வார்த்தை சிலருக்கு மகிழ்ச்சியைத் தரும்; வேறு சிலரை வருத்தப்படுத்தும். ஒரே வார்த்தை சில நேரங்களில் ஆக்க சக்தியாக மாறும்; பல நேரங்களில் அழிக்கும் சக்தியாகவும் இருக்கும். ஒரே வார்த்தை சிலருக்குப் பொக்கிஷமாகத் தெரியும்; வேறு பலருக்குக் குப்பையாக மாறும். ஒரே வார்த்தை சிலருக்கு மருந்தாக மாறும்; வேறு சிலருக்குக் காயப்படுத்துவதாகத் தெரியும். ஒரே வார்த்தை சிலருக்கு முடிவெடுக்க உதவும்; வேறு சிலருக்கு எடுத்த முடிவை மாற்ற உதவும்.

லி லேண்ட் ஸ்டேன் போர்டு- ஜேன் தம்பதியின் ஒரே மகன். 1884-இல் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு கொடிய காய்ச்சலால் இறந்து போனான். அடுத்த செயலாகத் தங்களது மிகப்பெரும் சொத்துகளை என்ன செய்வது என்று சிந்தித்தத் தம்பதியர், தங்களது மகன் மகிழ்ச்சியடைய பல்கலைக்கழகத்திற்கு ஏதாவது கட்டடம் கட்டிக் கொடுப்போம் என்ற முடிவுக்கு வந்து அதன் முக்கிய அதிகாரிகளில் ஒருவரை அணுகினர். அவர்களது எளிமையான தோற்றத்தைக் கண்டு, அவர்கள் பேசும் முன்பு தனக்குள் முடிவெடுத்த அந்த அதிகாரி, அவர்கள் சொல்ல வந்த செய்தியை முழுமையாகக் கேட்காமல், உதாசீனப்படுத்திக் கேலியாகப் பேசியதோடு, ‘இந்தப் பல்கலைக்கழகம் கட்டுவதற்கு எவ்வளவு செலவானது தெரியுமா? உங்களால் என்ன செய்துவிட முடியும்?’ என்று தரக்குறைவாக அவர்களை நோக்கிச் சொன்னார். எனவே, தங்களது நோக்கத்தை மாற்றிக் கொண்டு அவர்களது மகன் பெயரால் துவங்கப்பட்டதுதான்ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்’. இன்று அது எல்லாத் துறைகளிலும் வளர்ந்து உலகத் தர நிர்ணயத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது.

பேசும் வார்த்தைகளுக்கு வலிமை உண்டா? என்பது பற்றிய சர்ச்சையும், கருத்து வேறுபாடுகளும் என்றுமே உண்டு. இன்றும் அறிவுப்பூர்வமாகவும், நடைமுறையில் பேசப்படும் பல்வேறு கருத்துகளாலும் இது குறித்த ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. மசாரோ எமோட்டோ என்ற ஜப்பானிய விஞ்ஞானி தொண்ணூறுகளில் வார்த்தைக்குச் சக்தி உண்டு என நிரூபித்தார்.

இதை நிரூபிப்பதற்காக அவர் ஒரே மாதிரியான மூன்று வேளைகளில் ஒரே அளவு அரிசியைப் போட்டு ஒரே அளவு நீரை ஊற்றினார். ஒவ்வொரு நாளும் முதல் குவளைக்கு நன்றி சொல்லி வந்தார். இரண்டாவது குவளையிடம்நான் வெறுக்கிறேன்என்பார். மூன்றாவது குவளையிடம் எதுவுமே சொல்லாமல் புறக்கணிப்பார்.

ஒரு மாதத்துக்குப் பிறகு நன்றி சொன்ன குவளையிலிருந்து நல்ல வாசனை வந்தது. இரண்டாவது குவளை கறுப்பாக மாறி பூஞ்சைகள் உருவாகியிருந்தன. மூன்றாவது குவளையிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதாம்.

நேர்மறை, எதிர்மறை வார்த்தைகள் பொருள்களின் தன்மையிலும், பயன்பாட்டிலும் மாற்றத்தைக் கொண்டு வருவதைப் போல, வார்த்தைகள் மனித உடலிலும், மனத்திலும் மாற்றங்களை நிகழ்த்தும். நமது உடலும் நாம் பேசும் வார்த்தைகளை அப்படியே நம்பி அவ்வார்த்தைகளைப் பின் தொடர்கிறது. ‘என்னால் முடியாது; என் உடல் பாரமாக இருக்கிறது; எனக்குத் தலை வலிக்கிறது...’ என்று வாய் முணுமுணுக்கும் போது, உடலும் ஒப்புக்கொள்கின்றதுநாம் வாழும் வாழ்க்கை முறையில், நாம் செய்யும் பணிகளில்எடுக்கும் முயற்சியில், சிந்தனையில் எதிர்மறை உணர்வுகள் உருவாக நமது வாய் வெளிப்படுத்தும் எதிர்மறையான வார்த்தைகளும் காரணமாக இருக்கின்றது.

பேசும் வார்த்தைகளின் தாக்கத்தால் ஏற்படும் பின்னடைவுகள் நம்மோடு மட்டும் நின்று விடுவதில்லை. நமது அருகில் இருப்போரையும், நம்மோடு வாழ்வோரையும், நம்மோடு தொடர்பில் உள்ளோரையும்கூட தொற்றிக்கொள்ளும். ‘என்னால் முடியாதுஎன்று சத்தமாகச் சொல்லி விடாதீர்கள்; நம் மனதுக்கு இது கேட்டுவிடும். ‘எனக்கு உடல் பலவீனமாக இருக்கின்றதுஎனச் சொல்லாதீர்கள். ‘உடல் பலவீனமாக மாறிவிடும்என்று சொல்கிறார்கள் பேசும் வார்த்தைகளை ஆய்வு செய்யும் அறிஞர்கள்.

எந்த வயதினராக இருந்தாலும், ஒவ்வொருவரும் நல்ல உடல் நலத்தோடும், சிறப்பான பண்புகளோடும், மிகுந்த பொருளாதார வளத்தோடும், சிறந்த நட்பு வட்டங்களோடும், நல்ல உறவு வட்டங்களோடும் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். இவை சிறப்பாக அமைய வேண்டுமானால், நமது எண்ணங்கள் எப்போதும் தூய்மையானதாகவும், நேர்மறையானவையாகவும் இருக்க வேண்டும். இறையரசின் மதிப்பீடுகளும் இவற்றை உள்ளடக்கியவையே.

எண்ணங்கள் தூய்மையாக இருக்கட்டும்! ஏனெனில், அவைதான் வார்த்தைகளுக்கு அடிப்படை! வார்த்தைகள் இனியவையாக வெளிப்படட்டும்! ஏனெனில், அவை அப்படியே செயல்படும் சக்தி வாய்ந்தவை!             

(தொடரும்)

 

Comment