மனிதமும் புனிதமும்...
- Author அருள்சகோ. ஆல்பன் --
- Wednesday, 01 Nov, 2023
மனிதர்கள் ஒவ்வொருவரும் மனித அனுபவத்தைப் பெற, மனிதப் பிறப்பெடுத்த ஆன்மிக மனிதர்கள். எனவே, புனிதம் என்பது இயல்பில் உள்ளது. மனிதம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டியது. வலெர்ன் என்னும் கிராமத்தைக் கிளையாய்க் கொண்ட பிரான்ஸ் மண்ணில் பிறந்த சாதாரண ஒரு மனிதரின், அசாதாரண மனித வாழ்க்கையை இன்னொரு மாற்றுக் கோணத்தில் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன். படைப்பின் சிகரமாகப் படைக்கப்பட்ட மனிதர்கள், மனிதத்தின் மாண்பை உணராது, அறியாமையில் வெறுமையாய் வாழ்ந்து வந்த நம் தேசத்து மக்களுக்கு மனிதநேயத்தை வாழ்ந்து காட்டியவர் இறை ஊழியர் ஜோசப் லூயிஸ் இரவேல்!
‘மனிதனாய் வாழ்வது என்ன அவ்வளவு கடினமா?’ என்று நினைக்கலாம். மனிதம் புளிக்கும் என்றால், புனிதம் மட்கிப் போகும். புனித வாழ்வுக்கு அடிப்படையாய் இருப்பதே மனிதநேயம்தான். அம்மனித நேயம் உள்ளவர்களால்தான் மனிதத்தை மீட்டெடுக்க முடியும். அதனால்தானோ என்னவோ கடவுளும் மனிதப் பிறப்பெடுத்தார் போலும்!
1824, ஆகஸ்டு 24-ஆம் தேதி பிரான்சில் பிறந்து, தனது 24-ஆம் வயதில் குருத்துவம் ஏற்று, மறைப்பரப்புப் பணிக்கென தமிழகம் வந்தவர் இவர். இயேசுவை எடுத்துச் செல்லும் கருவியாகவும், எடுத்துச் சொல்லும் போதகராகவும் மட்டும் இவர் வாழ்வு அமையவில்லை; அதைக் கடந்து மனிதத்தை நேசிப்பவராகவும், அதைக் களங்கப்படுத்தும் வேற்றுமைகளை வேரறுப்பவராகவும் இவர் விளங்கினார்.
நாம் இன்று பார்க்கும் கோவை, இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் இப்படி இல்லை. பெண் கல்வி என்பதைக் கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத ஒரு சூழ்நிலை. சமத்துவத்தைச் சத்தமாகக் கூட பேச முடியாது. தொடர்பு சாதன வசதியும், வாகன வசதியும் இல்லாத சூழல் ஒருபுறம்; தமிழ்மொழியும், கலாச்சாரமும் தெரியாத நிலை மறுபுறம். இப்படிப்பட்ட சூழலில் பணியாற்றியவர்தான் இறை ஊழியர் இரவேல் அவர்கள்.
மக்கள் இவரைக் குருவாகப் பார்ப்பதைக் கடந்து தங்களது குடும்பத்தில் ஒருவராகவே பார்த்தனர். அந்த அளவிற்கு மக்களின் நலனில் ஒன்றி வாழ்ந்தார். இடர்பாடுகளும், குறைபாடுகளும் அதிகமாகவே இருந்தாலும், நிறைவோடு மக்களோடு மக்களாக வாழ்ந்தார்.
சிறந்த மனிதராக, நற்குருவாக, சபையின் தோற்றுநராக, இறை ஊழியராக, பலரின் மனத்தில் புனிதராக விளங்கும் இவர், நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பல்வேறு தாக்கங்களை, மாற்றங்களை ஏற்படுத்தும் உந்துசக்தியாக இருந்து வருகிறார். ‘பிறரன்புக் கட்டளைக்கு உயிருள்ள போதனையாக’ எனும் உயரியக் கோட்பாட்டை உயிர்ப் பண்பாக ஏற்று வாழும் எம் புனித காணிக்கை அன்னை சகோதரிகள் சபை இவரின் உள்ளுயிரில் தினமும் உயிரோட்டம் பெறுகிறது. இறைவனின் ஆசீராலும், இறை ஊழியரின் பரிந்துரை செபத்தாலும் மனிதம் நிறைந்த உலகம் அமையட்டும். இறை ஊழியரின் பரிந்துரையால் நாம் பெற்ற நன்மைகள் அவரின் புனித நிலை உயர்வுக்குச் சாட்சியாகட்டும். தந்தையிடம் விளங்கிய மனிதம் மீண்டும் இவ்வுலகை ஆளட்டும்! நம்மைப் புனித வாழ்வுக்கு இட்டுச் செல்லட்டும்!!
அருள்சகோ. ஆல்பன்
சபை துணைத் தலைமைச் சகோதரி
புனித காணிக்கை அன்னை சகோதரிகள் சபை, கோவை
Comment