No icon

வாழ்க்கையைக் கொண்டாடு – 21

சென்ற வாரத் தொடரானஅரசியல் சுவைப்போம்நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கருத்துகளைப் பலர் தந்தனர். ‘நெல் போட்டால் விளையும்; சொல் போட்டாலும் விளையும்என வேளாண் பெரியவர் நம்மாழ்வார் சொல்வதைப் போல, ஒரு நல்ல சொல் பல மாற்றங்களை விளைவிக்கும். நல்ல நெல் விளைவதற்கு எத்தனை இடையூறுகள் ஏற்படுமோ அதுபோல, நல்ல சொல் விளைந்து பயனைத்தர பலதரப்பட்ட இடையூறுகள் மற்றும் இன்னல்களைத் தாண்டியாக வேண்டும்.

சொல்லுக்கே இப்படி என்றால், அது செயலாக மாறும்போது எப்படி இருக்கும்? என்பதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். எல்லா இடங்களிலும் கருத்து முட்டல், கருத்து முரண்பாடுகள், கருத்து மோதல்கள் ஏற்படும். இதையெல்லாம் சரிசெய்ய அவர்கள் பயன்படுத்த நினைப்பது, ‘நாமெல்லாம் ஒரே ஊரு; நாமெல்லாம் ஒரே ஆளுக; நாமெல்லாம் ஒரே பிரிவுஎனும் காரணிகள் மூலம், தான் செய்ய விரும்புவதைச் செய்து முடிப்பார்கள்.

இது நல்லதா? உணர்வுப்பூர்வமாக நம்மை மடைமாற்றுவதால் இது ஒரு தற்காலிகப் பயனை மட்டும்தான் தரும். நிரந்தரப் பயனைத் தரவே முடியாது. பிறகு எது? அறிவுப்பூர்வமான மற்றும் உளப்பூர்வமான அணுகுமுறைதான் நல்ல மாற்றத்தைத் தரும். இதைத் தவிர்த்து, செய்யும் மற்றதெல்லாம்அரசியல் செய்கிறான்எனும் சொல்லாடலுக்குள் வந்துவிடும்.

இப்போக்கு பல நிறுவனங்களில், பலவிதங்களில் நடைபெறுகின்றது. இவையெல்லாம் முழு மற்றும் முறையான தீர்வைத் தரவே தராது. சரிசெய்ய என்னதான் வழி? விருப்பு-வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு அன்பு செய்யுங்கள்! அன்பு என்பது தவறுகளை எல்லாம் கண்டும் காணாமல் செல்வதல்ல; நீ இதையெல்லாம் இப்படிச் செய்தால் காணாமல் போய்விடுவாய் என எச்சரிக்கும் செல்லக் கடிதல் என்பதே சரி. மேலும், ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் வரைமுறை இல்லாமல் நடந்து கொள்(ல்)வதல்ல அன்பு.

உயிர்கள் அனைத்தும் இன்புற்று இருக்கவே இயற்கை இந்த உலகைப் படைத்துள்ளது. அதன் நோக்கம் அறியாது, தன் நோக்கத்திற்குச் செயல்படும் எண்ணத்தால்தான் ஏகப்பட்ட சிக்கல்கள்! இதைச் சரி செய்ய எண்ணம் இல்லாமல், பிறரைக் குற்றம் சொல்லி, தன் தவற்றைச் சரி எனக் காட்டச் செய்யும் செயலானது எத்தனை பெரிய காயத்தை ஏற்படுத்தி, ஆறாத வடுவாக்கும் என்பதை உணர்ந்தாலே நாம் ஒருவருக்கொருவர் அன்போடு பழக ஆரம்பித்து விடுவோம்.

இதெல்லாம் எங்களுக்கு நல்லாவே தெரியும்! குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களில் ஏன் மாறுபட்ட கருத்துகள் தலைதூக்குகின்றன என்பதைச் சொல்லுங்கள்எனும் முணுமுணுப்பை நான் கேட்க முடிகிறது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நோக்கம், குறிக்கோள்கள் இருந்தாலும், பொதுவான ஒன்றிற்குள் வரும்போது அதில் நம்மை ஈடுபடுத்துவதற்கு வரும் மனப்போராட்டம் மற்றும் சூழலுக்கு ஏற்ப, மாற மனமில்லா நிலை போன்றவைதான் காரணமாக இருக்கும். பகையுணர்வு எல்லாம் பிறகுதான்

ஒரு வானூர்தி கிளம்புகிறது என்றால், அது கிளம்புவதற்கென்றுப் பொதுவான நேரம் உண்டு. அந்த நேரத்திற்குள்தான் நாம் சென்றாக வேண்டும். ஒவ்வொருவரின் விருப்பத்திற்கு ஏற்பச் செயல்பட முற்பட்டால், வானூர்தி கிளம்புவதற்குச் சாத்தியமே ஏற்படாது. அதுபோலத்தான் குடும்பத்திற்கு என்று, நிறுவனத்திற்கு என்று சில குறிக்கோள்கள், கோட்பாடுகள் இருக்கும்; இருக்கத்தான் வேண்டும். அதற்குள் நம்மை ஈடுபடுத்தி மற்றும் உட்படுத்திச் செயல்பட ஆரம்பித்து விட்டால், சிக்கல்கள் இல்லை. அது தவறும் பட்சத்தில் சிலரைக் குற்றம் சொல்வதும், நடைமுறைகளைக் குறை சொல்வதும், சில்லறைத்தனமாக அரசியல் செய்வதும் தொடர் கதையாகிவிடும்.

மனிதவளத்துறை என்பது நிறுவனத்தில் உள்ள அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்துச் செல்லும் ஒப்பற்றத் துறையாக இருக்கும். ஆதலால், பல பிரச்சினைகளைக் கையாளும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பதோடு, நல்லதோர் அணுகுமுறையை எல்லாரிடமும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது இத்துறையில் உள்ளவர்களுக்கு அவசியமான ஒன்று.

நல்ல மனம் கொண்டோர் எல்லா இடங்களிலும், எல்லா நிலையிலும், எவ்விதப் பாகுபாடும் இன்றி மனிதம் என்ற ஒற்றைச் சொல்லுக்காக மதிப்பளிக்கும் மதிப்பீடு கொண்டோர் இருக்கிறார்கள் என்பதே எவ்வளவு பெரிய நம்பிக்கை! அந்த நம்பிக்கையை நான் TVS நிறுவனத்தில் வேலைபார்க்கும்போது எனது மனிதவளத் துறையைத் தாண்டி எனக்குக் காட்டிய பெருமதிப்பிற்குரிய அந்த நல் உள்ளங்கள் காட்டிய அன்பையும், நல்வழிப்படுத்துதலையும் அன்போடு நினைவுகூர்கிறேன். இதுபோல நாம் செல்லும் இடங்களில் எல்லாம் நம்மீது அக்கறை கொண்டு நம்மைச் சீர்படுத்தும் நல்லெண்ணம் கொண்டோரை அடையாளம் காண்பது நல்லது. வேறுவிதமான அற்ப அடையாளங்களுக்குள் நாம் சிக்கிவிடக் கூடாது.

இதுபோன்ற நலவிரும்பிகளை நாம் தேடிச் செல்வது ஒருபுறம் இருக்கட்டும்; நாமே அந்த நல விரும்பிகளாகப் பிறருக்கு இருப்பதில் எல்லையற்ற ஆனந்தம் உண்டு.

ஒரு நாளைக்கான அதிகப்படியான நேரத்தை நாம் வேலை பார்க்கும் இடத்தில்தான் செலவளிக்கின்றோம். அப்படியானால் அந்த இடம் தகுந்த சூழல் மற்றும் சுமூக இடமாக இருக்க வேண்டும் தானே! அதைத்தான் மனித வளத்துறையில் உள்ளவர்கள் சரியான நேரத்தில் நிறுவன மேலாளர்களிடம் பேசி நல்லதொரு சூழலை உருவாக்க முற்படுவார்கள்.

வணிகத்தைக் கவனிக்க ஒரு நிறுவனத்தில் எண்ணற்றத் துறைகள் உள்ளன. மனித மனத்தைக் கவனிக்க மனிதவளத்துறை மட்டும்தான் உண்டு. ஆதலால் பணியாளர்களுக்கும், மனித வளத்துறையில் உள்ளவர்களுக்கும் ஒரு நடப்புணர்வு இருந்து கொண்டே இருக்கும். ஏனெனில், இது அன்புசூழ் உலகு!

என்ன நடந்தாலும், எது நடந்தாலும் அன்பு ஒன்றே மாறாதது. மொத்தத்தில், என்ன ஆனாலும் அன்பு மாறாதது!

சம்பள உயர்வு நமக்கு ஆனந்தத்தைத் தரும். ஆரோக்கியமான பணியிடம் நமக்கு பேரானந்தத்தைத் தரும்.

தொடர்ந்து பயணிப்போம்...

Comment