No icon

சிந்தனைச் சிதறல் – 7

சிறுவர்களுடன் திருத்தந்தை

கடந்த ஜூலை மாதம் 18-ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 5 முதல் 13 வயது நிரம்பிய 250 சிறுவர்களைச் சந்தித்தார். கோடை விடுமுறையில்கதாநாயகர்களாக இருங்கள்என்ற தலைப்பில்  விளையாட்டுகளுடன் சிந்திக்க அவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டார்கள். இந்தக் கோடை முகாமை, வத்திக்கான் பணியாளர்கள் ஒருங்கிணைத்தார்கள். இந்த நிகழ்வில் சிறுவர்களுடன் திருத்தந்தை உரையாடினார்.

திருத்தந்தை அவர்கள் சிறுவர்களுடன் இருக்கும்போது, அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறினார். எடோர்டோ என்ற சிறுவன் கேட்டான்: “எங்கள் பெற்றோருக்கு நீங்கள் என்ன செய்தி சொல்வீர்கள்?” அதற்குத் திருத்தந்தை, “உங்கள் அனைவரையும் நன்றாக வளர்த்த உங்கள் பெற்றோருக்குநன்றிஎன்று சொல்வேன்என்றார்.

எலினா என்ற சிறுமி, “திருத்தந்தையாகிய உங்கள் வாழ்வில் மிகச் சிறந்த  கதாநாயகர்கள் யார்?” என்று கேட்டாள். அதற்குத் திருத்தந்தைஎன்னுடைய தாத்தா-பாட்டிதாம் மிகச்சிறந்த கதாநாயகர்கள்; அவர்களிடமிருந்து ஞானத்தைக் கற்றுக்கொண்டேன்என்றார்.

இப்படியாகப்  பல்வேறு கேள்விகளுக்கும் புன்னகையோடு பதில் அளித்தார் திருத்தந்தை.

அடுத்தவர்களை  நம்பி வாழும் சிறுவர்கள்:

திருவிவிலியத்தின் அடிப்படையில் சிறுவர்களைப் பற்றி இரண்டே கருத்துகளில் அடக்கிவிடலாம். அதில் ஒன்று, சிறுவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். இரண்டாவது, சிறுவர்களைப் போல மாற வேண்டும். இதில் முதல் கருத்தைச் சற்று ஆழமாகச் சிந்திக்கலாம்.

சிறுவர்கள் அனைத்திற்கும் அடுத்தவர்களைச் சார்ந்து இருப்பவர்கள். அன்புக்காக, அறிவுக்காக, பாதுகாப்புக்காக, பொருளாதாரத்திற்காக என்று அனைத்திற்கும் அடுத்தவர்களைச் சார்ந்துதான் இருக்கின்றார்கள். இதில் ஆன்மிகமும் உள்ளடக்கியதுதான். சிறுவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் தளத்தில் நாம் இருக்கின்றோம். குறிப்பாகப் பெற்றோர்களுக்கு அதில் அதிகமான பங்களிப்பு இருக்கின்றது.

அதனால்தான் கடவுளின் கட்டளைப்படி விடுதலையின் நாயகன் மோசே இஸ்ரயேல் மக்களுக்கு கூறியதாவது: “உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போதும், எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு. உன் கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கிடையே அடையாளப் பட்டயமாக அவை இருக்கட்டும்” (இணைச்சட்டம் 6:6-7).

பெற்றோர்கள் ஆன்மிகத்தையும்நல்ல பழக்கத்தையும் கற்றுக்கொடுக்கும் முதன்மை ஆசானாக இருக்க வேண்டும் என்று  இறை வார்த்தை அழைப்புக் கொடுக்கின்றது.

மோசே கட்டளையிட்ட எல்லாவற்றினின்றும் இஸ்ரயேல் சபைமுன் யோசுவா வாசிக்காதது எதுவுமில்லை. அப்போது பெண்கள், குழந்தைகள், அவர்களிடையே வாழ்ந்த அயலார் ஆகியோரும் உடன் இருந்தனர்” (யோசுவா 8:34-35).

இவ்வாறு பொது நிகழ்வின் போதும்குடும்பத்திற்காக முடிவுகளை எடுக்கும் போதும் நாம் சிறுவர்களை அழைப்பது கிடையாது. அப்படி அவர்கள் வந்தாலும், அவர்கள் பேசுவதை நம் காதுகள் கேட்பது கிடையாது.

மறைக்கல்விக்குத் தனிக் கவனம்:

நம் பிள்ளைகளுக்குப் பணத்தைக் கட்டி இசை வகுப்பிற்கும், யோகா வகுப்பிற்கும், சிலம்பம் சுற்றக் கற்றுத்தரும் வகுப்பிற்கும், கணிப்பொறிப் பற்றிக் கற்றுக்கொள்ளும் வகுப்பிற்கும் நாம் அனுப்புகின்றோம். ஆனால், மறைக்கல்விக்கு அனுப்பத் தயங்குகின்றோம். அப்படியே அவர்கள் வகுப்பிற்கு வந்தாலும், தகுந்த தயாரிப்பின்றி ஏனோ தானோவென்று வகுப்பெடுக்கிறார்கள் சில மறைக்கல்வி ஆசிரியர்கள்.

கத்தோலிக்கப் பள்ளிகளில் மறைக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சில நிறுவனங்கள் இருக்கின்றன. மறைக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத சில பங்குத் தந்தையர்கள்! ஆயர்கள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். சிறார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எதிர்காலத் திரு அவையைத் தாங்கப் போகும் சிறுவர்களுக்குத் தனி கவனத்தையும், தனி அன்பையும் நாம் அளிப்போம்.

Comment