No icon

‘கடவுளைத் துதியுங்கள்’ ‘Laudate Deum’

உள்ளடக்கமும், அறைகூவலும்

‘இறைவா உமக்கே புகழ்’ (Laudato si), ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ (Fratelli tutti) திருமடல்களைத் தொடர்ந்து, தற்போது ‘Laudate Deum’ - அதாவது ‘கடவுளைத் துதியுங்கள்’ என்கிற திருத்தூது ஊக்கவுரையைக் கடந்த அக்டோபர் 4 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டார். சமூகச் சுற்றுச்சூழல் நெருக்கடியைச் சரிசெய்வதற்கான அவசரம், அறிவியலுக்குச் செவிமடுப்பது, நவீன தொழில்நுட்ப முன்மாதிரிகளை ஆய்வது, உலகம் என்கிற பொது வீட்டைக் கவனிக்கும் திறன் கொண்ட நம்மைக் கட்டியெழுப்புவதற்கான விருப்பத்தைத் தூண்டுவது, சர்வதேச நிறுவனங்களின் பணி மற்றும் பொதுவெளி சமூகத்தின் முன்மாதிரியென மனிதக் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையை வலியுறுத்துவது போன்ற முந்தைய மடல்களின் கருத்துகளையும் இணைத்தே இம்மடல் வெளிவந்துள்ளது.

தற்போது ஏன் இந்த மடல்?

‘இறைவா உமக்கே புகழ்’ என்ற மடல் வெளியிடப்பட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் சூழல் குறித்த இன்னொரு மடல் ஏன்? என்கிற கேள்வி எழுவது இயல்புதான். இதற்கான விளக்கம், இம்மடலின் அணுகுமுறையில் காணக்கிடக்கிறது. சமூகச் சுற்றுச்சூழல் நெருக்கடி நாளும் மோசமடைவதால் ‘நிராகரிக்கப்பட்டவர்கள்’ (வலுவற்றவர்கள், ஏழைகள், நலிந்தவர்கள்) சந்திக்கும் வாழ்வியல் சவால்கள் திருத்தந்தையை அதிகம் கவலையுறச் செய்கின்றன. தொடரும் போர்களின் வீரியமும் குறைந்தபாடில்லை. எனவே, ‘கடவுளைத் துதியுங்கள்’ வழியாகத் திருத்தந்தை நம் மனசாட்சியை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த அழைக்கிறார்.

‘இறைவா உமக்கே புகழ்’ சுட்டிக்காட்டிய பருவநிலை மாற்றத்தின் மோசமான தாக்கத்தை நாம் தீவிரமாக எடுத்துக்கொண்டோமா?  ‘ஒருங்கிணைந்த சூழலியல்’ என்கிற முன்மொழிவைச் செயல்படுத்த முனைந்தோமா? வெறும் சுற்றுச்சூழல் அணுகுமுறையைத் தாண்டி, மனித வாழ்வின் மாண்புடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள உலகளாவிய சமூகப் பிரச்சினையாகப் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்கிறோமா? போன்ற கேள்விகளின் எதிரொலிப்பாகவே இம்மடல் உள்ளது.

இவை குறித்துப் பேசுவதன் வழியாகத் தற்போதைய மானுடவியல் காலநிலை மாற்றத்தின் (Anthropogenic Climate Change) பிரச்சினையில் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கும், வரும் நவம்பர் 30-ஆம் தேதி துபாயில் நடைபெறவிருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டுக் காலநிலை நடவடிக்கைக் குறித்த ‘COP28’ அமர்வின் தயாரிப்பிற்கு உதவியாகவும் இத்திருமடல் அமைந்திருக்கிறது. இந்த அமர்வானது காலநிலைத் தணிப்பு (Climate Mitigation) தழுவல் - மீள்தன்மை (Adaptation & Resilience)) மற்றும் நிதி ஆகிய கருப்பொருள்களை ஆராய்வதோடு, ஏற்கெனவே உற்சாகமான அர்ப்பணிப்புகளையும், முன்னேற்றங்களையும் செய்துள்ள ஒன்றியத்தில் உள்ள முன்னணி அமைப்புகளிடமிருந்து கற்றுக்கொள்ளவும் வழி வகுக்கிறது. சமூகங்களை ஒன்றிணைப்பதால், காலநிலை நடவடிக்கை முயற்சிகளை அணி திரட்டவும், மேம்படுத்தவும் முடியும். எனவேதான் திருத்தந்தை  இம்மடல்தனையும் கிறிஸ்தவர்களுக்குரியதாக மட்டும் சுருக்கிக் கொள்ளாமல்,  ‘துன்புறும் நமது பூகோளத்தின் என் சகோதர சகோதரிகளே’ (எண் 2) என்று உலகமெங்கும் வாழும் மனிதர்களுக்கான கரிசனை உரையாகத் துவங்குகிறார்.

தொடக்கப் புள்ளி

பொறுப்பற்ற மனிதர்களின் நடத்தையால் ஒருமைப்பாடு சமரசம் செய்யப்படும் ஓர் உலகத்தைக் கேள்வி கேட்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது, திருத்தூது ஊக்கவுரையின் துவக்கம். “நாம் வாழும் உலகம் வீழ்ச்சியடைந்து, முறிவுப் புள்ளியை நெருங்கிக் கொண்டிருப்பதைக் காண்கையில், இது வரை நாம் கொண்டிருக்கும் நமது பதில்கள் தகுந்ததாக இல்லை என்பதை நான் உணர்கிறேன். அதே நேரத்தில், பருவநிலை மாற்றத்தின் தாக்கம் பலருடைய வாழ்க்கையிலும், குடும்பங்களிலும் அதீத ரீதியிலான பாரபட்சங்களை விதைக்கும் என்பதில் சந்தேகமில்லை. சுகாதாரம், வேலைவாய்ப்பு, வளங்களுக்கான அணுகல், வீட்டு வசதி, கட்டாய இடப்பெயர்வு போன்ற தளங்களில் அதன் விளைவுகளை நாம் உணர்வோம்” (எண் 2) என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

காலநிலை மாற்றம் ‘கட்டமைப்பு பாவத்தின் அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டு’ (எண். 3) என்று அமேசான் பேரவை உணர்த்திய புகாரை மீண்டும் நினைவூட்டி, சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு இடையிலான நெருங்கிய தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டிய ஆப்பிரிக்க ஆயர்களின் கவலையையும் திருத்தந்தை நினைவு கூர்கிறார். இம்மடல் உலகளாவிய பருவநிலை நெருக்கடி மற்றும் ஒருங்கிணைந்த சூழலியல் குறித்த திருத்தந்தையின் போதனையின் முக்கிய மைல் கல் என்றே நாம் கூறலாம்.

பிரிவு 1: ‘உலகளாவிய காலநிலை நெருக்கடி’ (எண்கள் 5-19)

கடந்த இரண்டு ஆண்டுகளில் காலநிலை மாற்றம் குறித்து அரசுகளுக்கிடையிலான குழுக்கள் வெளியிட்ட ஆவணங்களின் அடிப்படையில், மனித காலநிலை மாற்றம் குறித்த தற்போதைய நிலையை மதிப்பாய்வு செய்கிறது (IPCC) இப்பகுதி. அதனடிப்படையில் “நாம் ஏற்படுத்திய மாபெரும் சேதத்தை இனி தடுக்க முடியாது. இன்னும் அதிக துயரமான சேதத்தைத் தடுக்க நமக்கு அதிக நேரமும் இல்லை" (எண் 16) என்கிற வருத்தத்தைப் பதிவு செய்கிறார் திருத்தந்தை.

‘இயற்கை அவ்வப்போது தன்னிலே மாறிக்கொள்கிறது’ என்று கூறி நழுவிக்கொள்ளும் நமது பொறுப்பற்றத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இப்பிரிவு. “கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் இயற்கையின்மீது தடையற்ற மனித தலையீட்டுடன் தொடர்புடைய முன்னேற்றங்கள், இத்தகைய ஆபத்தான மாற்றங்களின் அசாதாரண வேகத்திற்கான காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை என்பதை இனியும் சந்தேகிக்க முடியாது” (எண் 14).  எனவே, தொற்றுநோய் அனுபவம் மூலம் ஏற்கெனவே பல முறை நினைவுகூரப்பட்ட ‘எல்லாம் ஒன்றோடு மற்றொன்று இணைக்கப்பட்டுள்ளது’ மற்றும் ‘யாரும் தனியாக மீட்கப்படுவதில்லை’ (எண் 19) என்கிற இரண்டு கோட்பாடுகள் வழியாக, உலகம் என்கிற பொது வீட்டைப் பாதுகாக்கும் ஒருங்கிணைந்த செயல்திட்டங்களைக் கண்டு பிடிக்க, கடைப்பிடிக்க அழைப்பு விடுக்கிறது.

பிரிவு 2: ‘வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்மாதிரி’ (எண்கள் 20-33)

‘இறைவா உமக்கே புகழ்’ மடலின், பிரிவு-3 சுற்றுச்சூழல் நெருக்கடியின் மனித வேர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மீண்டும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. குற்றம் சாட்டப்பட வேண்டியது தொழில்நுட்ப முன்னேற்றம் அல்ல; இது அத்தியாவசியத் தேவை. காரணம், எதார்த்தத்தை மேம்படுத்துவதற்கான சக்தி! ஆனால், எப்பொழுது இந்தத் தொழில்நுட்பங்கள் தார்மீக மதிப்பீட்டிலிருந்து விடுபட்டு, அதிக பொருளாதார வளங்களைக் கொண்டவர்களின் சேவைக்காகவும், அவர்களின் தனிப்பட்ட சொந்த நன்மைக்காகவும் மட்டுமே சுரண்டப்படுகிற சூழல் ஏற்படுகையில், மனிதகுலச் சீரழிவின் ஆபத்து ஆரம்பமாகிறது. இது எல்லாருடைய ஒருங்கிணைந்த வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல் ‘ஒரு சிலரின் சலுகைகளை மேலும் ஒருங்கிணைக்கும்’ (எண் 32) நிலையை உருவாக்குகிறது. கடந்த காலங்களில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களால் ஏமாற்றப்பட்ட சில சமூகங்களின் அனுபவங்களிலிருந்து இது உறுதி செய்யப்படுகிறது. இந்த எதார்த்தப் பகுப்பாய்வு ஏழைகளின் கூக்குரலை முழக்கமிடுகிறது.

(தொடர்ச்சி அடுத்த இதழில்...)

Comment