No icon

வாழ்க்கையைக் கொண்டாடு – 22

பணித் திறனும் ஈடுபாடும்

ஒரு குடும்பத்தின் தலைசிறந்த சொத்து மக்கள் செல்வம்தான். ஒரு நாட்டின் மிகப்பெரிய சொத்து அதன் மக்கள் வளம்தான். அவர்களை வைத்துதான் நாட்டின் வளர்ச்சி, உயர்வு மற்றும் அத்தனை திட்டங்களும் கணக்கிடப்படும். அதேபோலத்தான் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி, உயர்வு மற்றும் பெருமை என்பது அதன் பணியாளர்கள்தாம். தொழில்நுட்பம் மற்றும் இன்ன பிற காரணிகள் எல்லாம் பிறகுதான். அப்படிப்பட்ட பணியாளர்களைச் சிறந்த முறையில் வேலையில் ஈடுபாடு காட்டவைப்பது என்பது ஒரு சவாலான விசயம் எனச் சிலர் நினைப்பதுண்டு. அதைத் தாண்டி இவை சாதிக்கக்கூடிய விசயம்தான் என்பதைப் பலர் செயல்படுத்திக் காட்டியுள்ளனர். இச்செயல்பாட்டை நிறுவனங்களில்Employee Engagementஎன அழைப்பதுண்டு. அதாவது, பணியில் பணியாளரின் ஈடுபாடு எனப் பொருள் கொள்ளலாம்.

இந்தச் செயல்முறையை முதன் முதலில் அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் William A. Kahn என்பவர் உருவாக்கினார், பின்னாளில் அது பல்வேறு மாற்றங்களைப் பெற்று நிறுவனங்களில் தவிர்க்க முடியாத ஒரு நிலையில் உள்ளது.

பணியாளர் ஈடுபாடு என்பது, வெறுமனே பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் ஒரு சில விழாக்களைக் கொண்டாடுவது மட்டுமல்ல; இதெல்லாம் அதில் ஒரு சிறு அங்கம்தான். அதைத் தாண்டி வேறு பல சிறப்பு நிலைகளும் உள்ளன. பேரா. வில்லியம் மூன்று கூறுகளை வரிசைப்படுத்தி, இதன் அடிப்படையில்தான் ஒரு பணியாளர் நிறுவனத்தோடு ஒன்றிக்க முடியும் என்பதை விளக்குகிறார்:

உடல் மற்றும் மனத்தளவிலான ஈடுபாடு (Physical Engagement): ஒரு வேலையில் பணியாளர் எவ்வளவு மனத்தளவில் ஒன்றி வேலை செய்கிறார் என்பதைப் பொறுத்து, அவரது ஈடுபாடு அறியப்படும். இப்படிப்பட்டவர் பெரும்பாலும் வம்பு தும்புகளை உருவாக்கவோ அல்லது ஈடுபடவோ மாட்டார். தான் உண்டு, தன் வேலை உண்டு எனத் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையில் கருத்தாக இருப்பவர்.

அறிவுசார்ந்த ஈடுபாடு (Cognitive Engagement): நிறுவனத்தின் செயல் திட்டங்களை உள்வாங்கி, அதை எப்படி இன்னும் சிறப்பாக மாற்றி வளர்ச்சியைக் கூட்டலாம் எனத் தனது அறிவார்ந்த பங்களிப்பைத் தரக்கூடியவர். படைப்பாற்றல் உள்ளவராகவும், நிறுவனத்தின் மற்றும் அதன் தலைவரின் குறிப்பறிந்து செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்கும் ஆற்றல் பெற்றவராகவும் இருப்பர். இப்படிப்பட்ட ஈடுபாடு கொண்டவர்களால் ஒரு நம்பகமான முடிவினை நிறுவன நலனுக்காகத் துணிந்து எடுக்க முடியும். தானும் வளர்ந்து, நிறுவனத்தையும் வளர வைக்கும் ஆற்றல் கொண்டவர்.

உணர்வுப்பூர்வமான ஈடுபாடு (Emotional Engagement): ‘இந்த நிறுவனத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்; ஏனென்றால், எனக்கு எது வந்தாலும் எங்க முதலாளி பாத்துக்குவார். எங்க முதலாளி, அவர் தங்க முதலாளிஎனப் பாட்டுப் பாடாத குறையாக, நிறுவனத்தின் தலைவரோடு ஓர் உணர்வுப்பூர்வமான ஈடுபாடு கொண்டவராக இருப்பர். தன் எண்ணத்தால், செயலால் எப்போதும் நிறுவனத்தின் மீது கட்டற்ற பாசப் பிணைப்பு கொண்ட இவர்களை அவ்வளவு எளிதில் நிறுவனம் விட்டு விடாது. தொட்டுத் தொடரும் ஓர் உறவாகத் தொடர்ந்து இருப்பர். இதில் அன்பும், உரிமையும் நிறைந்திருப்பதை நாம் பார்க்க முடியும்.

பணியாளர் ஈடுபாடு என்பது மேற்கண்ட மூன்று நிலைகளில் எதாவது ஒன்றையாவது பெற்றிருந்தால் போதும்; அவர்களுக்கும் நிறுவனத்துக்கும் ஒரு பிணைப்பு இருக்கும். இல்லாத பட்சத்தில் வெறுப்பு மட்டுமே மிஞ்சும். ‘இதற்கும், மனிதவளத் துறைக்கும் என்ன தொடர்பு?’ எனக் கேட்கலாம். இல்லாமலா இருக்கும்! இந்த மூன்றில் ஏதாவது ஒரு பிணைப்பை ஏற்படுத்த நிறுவனத்தின் துணை கொண்டு அதைச் செயல்படுத்துவது மனிதவளத் துறையின் பொறுப்பு. ‘இதையெல்லாம் செய்வது நிறுவனத்துக்கு வருமானத்தைக் கூட்டத்தானே?’ எனும் நகைப்பான கேள்வி வரலாம். அப்படிப் பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. நாம் நமது அதிகமான நேரத்தைக் குடும்பத்தைவிட வேலை பார்க்கும் இடத்தில்தான் செலவிடுகிறோம்; அப்படி இருக்கும் போது, அங்கு நமது மனம் ஒரு நிலையில் இல்லாது அலை பாய்ந்தால் இருபக்கமும் நட்டம்தான். ஆதலால், இது இருபக்கமும் பலன் தரும் செயல் என்று பார்ப்பதுதான் நல்லது.

மேற்கூறிய மூன்று காரணிகள் நிறுவனத்துக்கு உண்டான அணுகுமுறைகளாக இருந்தாலும், பணியாளர் ஒரு நிறுவனத்தோடு ஒன்றிக்க மற்றும் முழு ஈடுபாடு காட்ட அவர்களது மனத்துக்குள் ஓடிக் கொண்டிருக்கும் மூன்று முத்தான காரணிகள் உள்ளன. அவை சரி செய்யப்படும் போதுதான் இந்த இரு பக்க நலன்களும் சரியாக இருக்கும். எவ்வித அடிப்படை வசதிகளும் கொடுக்காமல், எதிர்பார்ப்பை மட்டுமே புகுத்தி எக்கச்சக்கப் பலனை எதிர்பார்த் திருப்பது வீண்தான். நிறுவனத்தில் உள்ள ஒவ்வொருவரையும் நிறுவனத்தின் தவிர்க்க இயலாத ஒருவராகப் பார்ப்பது நிறுவனத்தின் பொறுப்பு. அந்தத் தவிர்க்க இயலாத ஒருவராக மாறத் தொடர்ந்து முயற்சித்துச் செயலாக்குவது பணியாளரின் பொறுப்பு. அதென்ன அந்த முத்தான மூன்று காரணிகள்? அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடர்ந்து பயணிப்போம்...

Comment