No icon

வலைதள அரசியல்!

தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் திட்ட அடிப்படைப் பணிகள் ஆரம்பித்த நேரம்; சமூக ஊடகங்களில் ஒரு வதந்தி பரவியது. ‘இருசக்கர, நான்கு சக்கர  போக்குவரத்து விதிமுறை மீறல் தடுப்பு கடுமையாக்கப்படும். அதில் வசூலிக்கப்படும், அபராதத் தொகையிலிருந்து மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் வழங்கப்படும். வாகன ஓட்டிகள் உஷார்’ என்றது அந்த வாட்ஸ் அப் வதந்தி!

இந்த வதந்தியைப் பரப்பியவர்களைத் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சங்கர் ஜிவால் கடுமையாக எச்சரித்தார். தமிழ்நாடு ஆளுநர், சமீபக் காலமாக வாட்ஸ் அப் வதந்திகளைப் பொதுவெளியில்  பேசி, வம்பில் மாட்டியதும் உண்டு. ஓர் ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பேற்க, நீதி மன்ற வழக்கு இருக்கும்போது, ‘அவர் ஏன் பொறுப்பேற்க முடியவில்லை?’ என்று கேள்வி கேட்டார் ஆளுநர்.

தென் மாவட்டங்களிலும், வடக்கு மாவட்டங்களிலும் சாதி அமைப்புகளைச் சார்ந்த குட்டிக் கட்சிகள் உள்ளன. அதன் தலைவர்கள் தங்களை வெளிச்சப்படுத்தப் பயன்படுத்தும் புளுகு மூட்டைகளுக்கு எல்லையே இல்லை. 

சமூக ஊடகங்களில் சாதிவெறியைத் தூண்டும் பேச்சுகள், வரலாற்றுத் திரிபுகள் என எல்லை மீறுவார்கள். அப்படி ஒரு தலைவன் போல் அண்ணா, பசும்பொன் தேவர் என அண்ணாமலை பேசி, எல்லாத் திசைகளிலும் அடிவாங்கினார். பாவம், அவர் ரொம்ப நல்லவர்! எத்தனை முறை அடித்தாலும் தாங்கிக்கொள்வார்.

தமிழ்நாடு முதல்வர், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பேசுகிறார்: ‘இன்னும் எட்டு மாதங்களில் தேர்தல் வரப்போகிறது. அதனால், சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி, பொது அமைதியைச் சீர்குலைக்கும் நபர்களைக் கண்காணித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

தமிழ்நாட்டில் பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்களில், பொது வெளியில் பேசுபவர்களைத் தண்டனைக்கு உள்ளாக்கினாலும், அவர்கள் வேறு, வேறு முகங்களில் வெளிவருகிறார்கள். கட்சிகளின் ‘ஐ.டி. விங்’குகள் தவிர, தொழில் ரீதியான நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், யூடியூப்பர்கள்!

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் வெறுப்பு அரசியலின் முதல் அஸ்திரமே வதந்திகள்தான்! இட்டுக் கட்டிய கதைகள், புனையப்படும் திரிபுகள், சிறுபான்மையினர் குறித்த வெறுப்புப் பிரச்சாரங்கள்...

தினமும் பல்வேறு தொலைக்காட்சிகளில் நடைபெறும் அரசியல் விவாத மேடைகளைக் கவனித்தால் இந்த உண்மை விளங்கும். ‘வலது சாரிகள்’ என்று தங்களை அடையாளப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உண்மைக்குப் புறம்பான வரலாறுகளைச் சத்தமாகப் பேசி உண்மையாக்க  முயல்வார்கள். அப்போது குறுக்கிடும் நெறியாளர்கள், “ஐயா, நீங்க வாட்ஸ் அப் யூனிவர்சிட்டியில் படித்து வந்து இங்கே பேசாதீர்கள்”  என்பார்கள். வாட்ஸ் அப்பே அவர்கள் முதல் ஆதாரம். அந்தப் பொய்யை உருவாக்கியதே அவர்கள்தான். பொய்யும், புரட்டுமே காவி அரசியல்!

சமூக ஊடகங்களான முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் (தற்போது எக்ஸ் தளம்) ஆகியவைகளைக் கைக்கொண்டு ஆர்.எஸ்.எஸ். செய்யும் மதவாத அரசியல் கற்பனைக்கு எட்டாதது! தொலைக்காட்சிகளை, செய்தி நிறுவனங்களை விலைக்கு வாங்கியோ, மிரட்டியோ வசப்படுத்தி விட்டார்கள் பா.ஜ.க. ஐம்பது கோடி வாட்ஸ் அப் பயனாளர்களைக் குறிவைத்துச் செய்கிற பிரச்சார முறை நவீனமயமானது.

2016-இல் ரிலையன்ஸ் தொலைத் தொடர்பில் கால் பதித்த காலம். பா.ஜ.க. தன் தொண்டர்கள் மூலம் தொலைபேசி எண்களைத் திரட்டியது. பத்தாயிரம் பேர்களுக்கு ஒரே கிளிக்கில் செய்திகளை அனுப்பும் பைத்தான் மென்பொருள் வழி தேர்தல் பிரச்சாரம் செய்தது. பா.ஜ.க. மின்னணு முறையின் அனைத்துச் சாதகங்களையும் அள்ளியது.

அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை பல்வேறு இடங்களில், பல்வேறு செய்தியாளர்களைக் கொண்டு நிறைய நாள்கள் எடுத்து, பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து, தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, கர்நாடகத் தேர்தலில் வலைதளங்களில் பா.ஜ.க. செய்த மாய, மந்திரங்களைக் கட்டுரையாக வெளியிட்டது. ஒவ்வொரு வாக்காளரும் குறைந்தது ஆறு வாட்ஸ்-அப் குரூப்புகளில் சேர்க்கப்பட்டு, தினம் 120 செய்திகள் அவர்களுக்கு அனுப்பப்பட்டன.

பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், பிரச்சாரகர்கள் தவிர 1.50 இலட்சம்  பணியாளர்கள் பா.ஜ.க.வின் கர்நாடகத் தேர்தல் சமூக வலைதள பிரச்சாரத்துக்குக் கூலிக்கு அமர்த்தப்பட்டனர். அவர்கள் முதலில் பா.ஜ.க.வின் சாதனைகளை மெல்ல, மென்மையாக முதல் வாரத்தில் சொல்ல ஆரம்பிப்பார்கள். பிறகு சிறுபான்மை மக்களால் இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள்,  கொல்லப்படுகிறார்கள்; உயிர்ப் பாதுகாப்பு இல்லை; பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நாம் இங்கு வாழ முடியும் என்று பயம் காட்டுவார்கள்.

தேர்தல் நெருங்கும்போது உங்கள் வீட்டு பிள்ளைகள் ‘லவ் ஜிஹாத்’  முறையில் காதலிக்கப்பட்டு, முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று பயம் காட்டுவார்கள். உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு வாக்குகளைப் பெற அனைத்து வீண் புரளிகளும், வலைதளங்களில், வாட்ஸ்-அப்பில்  தீயாய்ப் பரப்பப்படும்.

‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தியாளரிடம் பா.ஜ.க.வின் சமூக ஊடகத் தலைவர் அஜீத் குமார் கூறுகிறார். ஒவ்வொரு பகுதிக்கும் ஒன்பது தன்னார்வலர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு குழுவிலும் ஒரு துணைத் தலைவர், காப்பி ரைட்டர், கிராபிக் டிசைனர்  இருப்பர். அவர்களிடம் தேவையான புகைப்படங்களும், லோகோக்களும் வழங்கப்படும். அவர்கள்  பிரச்சாரத்திற்கு ஏற்ப செய்திகளைத் தயாரித்துக் கொள்வர். இது தவிர, ‘கான்பிடென்ட் கிரியேட்டர்ஸ்’ எனும் மூன்றாம் தரப்பினரும் களம் இறக்கப்படுவார்கள். அவர்கள் தொழில் துறை வித்தகர்கள்! அவர்களின் பணி பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். குறித்து விமர்சிப்பவர்களை ‘ட்ரோல்’ செய்வது. அதாவது கேவல பிரச்சாரம் செய்வது.

இப்படிக் கர்நாடகத் தேர்தலில் மின்னணு ஊடகங்கள் வழி நடத்தப்பட்ட பொய்ப் பிரச்சாரம் மக்கள் விழிப்புணர்வால் முறியடிக்கப்பட்டது. தேர்தலின் கடைசி நாள்களில் ‘ஹனுமார் வழிபாடு’ என்ற மதவாதம் எடுபடவில்லை. மதம் சார்ந்த   உணர்வுகளைத் தூண்டியும் பா.ஜ.க. தோல்வி அடைந்தது.

2024 - தேர்தல்களிலும் இது போன்ற வெறுப்புப் பிரச்சாரங்கள், சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வீண் வதந்திகள் உருவாக்கப்படலாம். மதவாதம் தவிர,  பா.ஜ.க. அரசு மக்களின் வாழ்வுரிமைக்கு என்ன செய்தார்கள் என்பதே  கேள்வி; அதுவே பா.ஜ.க. ஆளத் தகுதி இல்லை என்ற மக்களின் ஏகோபித்தக் கோபக்குரலாக ஓங்கி ஒலிக்கும்.

Comment