No icon

​​​​​​​ஆயரான அன்பு ஆசிரியர் ஆனந்தமே...

கல்வி என்பது ஒருவரது கண்களை மட்டுமல்ல, இதயத்தையும், மூளையையும் திறக்கக்கூடியது. கல்வி ஒருவரை உச்சத்திற்கும், சிகரத்திற்கும் கொண்டு செல்லும். கல்வி தன்னுடைய வாழ்வை மட்டுமல்ல, பிறருடைய வாழ்வையும் மாற்றும், மெருகூட்டும். எவரும் எதையும் நம்மிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியும்; பறித்துக்கொள்ளவும் முடியும். ஆனால், கல்வியையும், அனுபவத்தால் வந்த ஞானத்தையும் எவராலும் நம்மிடமிருந்து பறித்துக் கொள்ள முடியாது. “ஞானம் ஒளிமிக்கது. மங்காதது”(சாஞா 6:12).

இத்தகைய சிறப்புமிக்க, விலையுயர்ந்த பொக்கிஷமான கல்வியைத் தன் குருத்துவ வாழ்வின் பெரும் பகுதியை இறையியல் பேராசிரியராக இருந்து, நம் தலைவர் இயேசுவின் போதிக்கின்ற ஆசிரியப் பணியைச் சீரும் சிறப்புமாக ஆற்றிய சிவகங்கை மறைமாவட்டத்தின் மூன்றாவது முத்தான ஆயராகிய மேதகு முனைவர் லூர்து ஆனந்தம் அவர்களின் மகத்தான, என்றும் மங்காத ஞானம் மிக்க ஆசிரியப் பணியைப் பற்றி இங்குப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அறிவைத் தேடி அலைந்தவர்

“ஞானத்தின்பால் அன்புகூர்வோர், அதை எளிதில் கண்டுகொள்வர். அதைத் தேடுவோர் கண்டடைவர்; தன்னை நாடுவோர்க்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும்” (சாஞா 6:12,13). அதனால்தான் சிவகங்கை மறைமாவட்டம், திருவரங்கத்தில் பிறந்து, திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் படித்திருந்தாலும், மதுரை கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் தத்துவயியலையும் (1979-1981), திருச்சி புனித பவுல் குருமடத்தில் இறையியலையும் (1982 -1986) பயின்றவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார். ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்பார்கள். ஆனால், இவரோ திரை கடலோடி விலை மதிப்பில்லாத் திரவியமான கல்வியைத் தேடியவர். ஜெர்மனி ஆல்பர்ட் லுட்விக் பல்கலைக்கழகத்தில் Systematic theology-இல் முனைவர் பட்டம் (1990-1994) பெற்றார். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல, நூலகங்களிலும், புத்தகங்களிலும் அதிகமாய் அறிவைத் தேடியவர். தனக்கென்று நூலகத்தையே அமைத்துக் கொண்டவர். “நூல் நிலையம் என்பது மனித வாழ்வில் ஆடம்பரமன்று, அவசியமானது” என்ற ஆசிரியரின் வார்த்தைகளைத் தனது வாழ்வில் நிஜமாக்கியவர்.

“இயேசு ஞானத்திலும், உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும், மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்” (லூக் 2:52). இயேசுவைப் போல இறைவனது அருளாலும், தனது கடின உழைப்பாலும், முயற்சியாலும் கல்வியில் உயர்ந்து நின்றார். அறிவில் சிறந்து விளங்கினார். அதனால்தான் சென்னை-பூவிருந்தமல்லி திரு இருதயக் குருமடத்தில் இறையியல் பேராசிரியராகவும், அத்துறையின் தலைவராகவும் (1999-2004) நல்லதொரு பணியை நிறைவாக ஆற்றினார்.

அமலவை மரியின் தூதுவர் சபையின் (MMI) இறையியல் பேராசிரியராகவும், பிற குருமடங்களிலும் வகுப்புகள் எடுத்து, பல குரு மாணாக்கர்களை உயர்த்தி விட்டிருக்கிறார். வேளாங்கண்ணி மரியியல் பயிலகத்தில் இறையியல் வகுப்புகள் எடுத்து மரியன்னைக்கு மகிமை சேர்த்திருக்கிறார். இறை மக்க ளுக்கு மரியன்னைமீது பக்தியையும், தெளிவையும் பன்மடங்காக ஏற்படுத்தியிருக்கிறார். ‘கொக்கைத் தேடி குளம் வராது; குருவியைத் தேடி பழம் வராது’ என்ற காசி ஆனந்தனின் வரிகளின் உண்மையை உணர்ந்து கல்வி பயின்று, அறிவைத் தேடியதால் தான் இயேசுவைப் போல் நல்ல ஆசிரியராக, பேராசிரியராக உயர்ந்து நிற்கிறார் ஆயர் ஆனந்தம்.

கற்பித்தலோடு கற்றுக் கொண்டுமிருப்பவர்

“சொல்லிக் கொடுக்க நினைப்பவர், மேலும் கற்றுக்கொள்ள மறுக்கக்கூடாது” என்ற ஜான் காட்டன் டானா என்பவரின் வார்த்தைகளைத் தன் வாழ்வின் மூலம் அர்த்தமாக்கியவர். ஒருபுறம் புத்தகங்களை வாசித்துக் கொண்டே இருப்பார்; மறுபுறம் புத்தகங்களை எழுதிக்கொண்டே இருப்பார். ஒரு புறம் பயிற்சி முகாம்கள், seminars, Input sessions பங்கேற்றுக் கொண்டேயிருப்பார்; மறுபுறம் குரு மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டேயிருப்பார். “மருத்துவன் என்பவர் இருமிக்கொண்டே மருந்து கொடுப்பவன்; வக்கீல் என்பவன் பொய்யால் அநீதிக்காக வாதாடிக்கொண்டிருப்பவன்; ஆசிரியர் என்பவன் படிப்பதை நிறுத்திவிட்டவன்” என்பார் கவிப்பேரரசு வைரமுத்து. ஆனால், இந்தக் கவிதை வரிகளைப் பொய்யாக்கியவர் ஆயர் ஆனந்தம் அவர்கள். இன்றும் தொடர்ந்து புத்தகங்களையும், மனிதர்களையும் வாசித்துக் கொண்டேயிருக்கிறார்; படித்துக்கொண்டேயிருக்கிறார்.

மாணாக்கர்களோடு ஒன்றாகக் கலந்தவர்

“சொல்லித் தருபவர் சாதாரண ஆசிரியர்; நன்றாக விளக்குபவர் நல்ல ஆசிரியர்; வாழ்ந்து காட்டுபவர் மகத்தான ஆசிரியர்; ஊக்கமளிப்பவர் முதிர்ச்சி பெற்ற ஆசிரியர்” என்பார் அம்லா இம்மானுவேல். கடினமான இறையியல் பாடங்களை Trinity (சமத்திருத்துவயியல்), Eucharistic Theology (நற்கருணையியல்), Mariology (மரியியல்) ஆகியவற்றை மாணாக்கர்கள் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் எளிமையாகக் கற்பிக்கக் கூடியவர்.

“கடினமான சொற்களைப் பயன்படுத்தி வாசகர்களுக்குப் புரியாத விதத்தில் எழுதுபவன், பேசுபவன் சிறந்த எழுத்தாளனோ, போதனையாளனோ அல்ல; எளிய வார்த்தைகளைப் பயன்படுத்தி, அனைவரும் புரியக்கூடிய விதத்தில் எழுதுபவனே, போதிப்பவனே சிறந்த எழுத்தாளன், போதகர்” என்பார் பேராயர் புல்டன் J. ஷீன். இது முற்றிலும் ஆயர் ஆனந்தத்திற்குப் பொருந்தும். கற்பித்தல் மட்டுமல்ல, இவரது வாய்மொழித் தேர்வும் மிகவும் எளிமையாக இருக்கும். அன்று மிகவும் Relax-ஆக, மகிழ்ச்சியாகக் குருமாணவர்கள் இருப்போம். எவ்வளவு தெரியாமல் இருக்கிறான் என்பதை அறிவதல்ல இவரது தேர்வுமுறை. எவ்வளவு அறிந்து, புரிந்திருக்கிறான் என்பதே இவரது தேர்வு முறை.

அறிவோடு அன்பைக் கலந்து ஊட்டியவர்

“இயேசு போதகர்கள் நடுவில் அமர்ந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும், அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார்” (லூக் 2:46). தனது ஆசிரியப் பணியில் இயேசுவை அதிகமாய்ப் பிரதிபலித்தவர் ஆனந்தம் அவர்கள், குருமாணவர்களாகிய நாங்கள் இரசிக்கும், ருசிக்கும் அளவுக்குத் தேன் சொட்டப் பேசக்கூடியவர், கற்பிக்கக்கூடியவர். அவர் பேசுவதை நாங்கள் கூர்மையோடும், கவனத்தோடும் கேட்போம், கற்போம். அதே போல நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மனம் கோணாமல் செவிமடுத்துப் பதிலளிப்பார். அடுத்த வகுப்பில் வரும்போது அதிக விளக்கங்களையும் தருவார். வகுப்பறையிலும், வகுப்பறைக்கு வெளியிலும் குருமாணவர்களுக்கு அதிகச் சுதந்திரம் கொடுத்தவர். அவர் பேராசிரியர்களோடு இருந்ததைவிட, குருமாணவர்களோடு இருந்ததுதான் அதிகம்.

குழந்தையைப் போன்று தங்குதடையின்றி வெள்ளை உள்ளத்தோடு சிரித்து மகிழ்வார். அவரது சிரிப்பில் கடலலைகளும், சில்லறைக் காசுகளும் தோற்றுப் போகும். எங்களுக்கும், அவருக்கும் இடையே தொலைவு அதிகமில்லை. மாணாக்கர்களின் குடும்பச் சூழ்நிலையை அறிந்து உதவக் கூடியவர். வார இறுதிப் பங்குப் பணிகளில் பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதற்குப் பெரும் உதவி செய்தவர். தனது கற்பித்தலாலும், வாழ்வாலும் எங்களுக்குப் போதித்த அரசின் நல்லாசிரியர் விருது பெறாத எங்கள் இதயங்களில் நிற்கும் மிகச்சிறந்த ஆசிரியர்!

“நான் வாழ்வதற்கு என் தந்தைக்கும்,  நன்கு வாழ்வதற்கு எனது ஆசிரியருக்கும் கடன்பட்டுள்ளேன்” என்பார் மாவீரர் அலெக்சாண்டர். அவரிடம் இறையியல் பயின்ற எங்களது உள்ளார்ந்த உணர்வும் அதுதான். “பூமியிடமிருந்து பொறுமையையும், காற்றிடமிருந்து சுறுசுறுப்பையும், ஆகாயத்திடமிருந்து பரந்த நோக்கத்தையும், நீரிடமிருந்து தூய்மையையும், தீயிடமிருந்து துணிவையும் பெறுகிறோம்” என்கிறார் ஜார்ஜ் எலியட். ஆயர் ஆனந்தம் அவர்களே, உமது ஆசிரியப் பணிகள் மூலம் இவற்றையெல்லாம் உம்மிடமிருந்து நாங்கள் பெற்றிருக்கின்றோம். ஆயாரானாலும் உமது ஆசிரியப் பணி என்றும் சிறக்க எனது வாழ்த்துகளும், செபங்களும்!

Comment