No icon

வாழ்க்கையைக் கொண்டாடு – 23

வேலையில் நம் மனம் ஒன்றிக்க என்ன வழி?

“சிறந்த பங்களிப்பைத் தரும் பணியாளர் மனதுக்குள்,

எனக்கான வளர்ச்சி இங்கு எப்படி இருக்கும் எனும் தேடல்

இருந்துகொண்டே இருக்கும். இது சுயநலம் அல்ல;

அவரது உரிமை! நிறுவனம் வளர்ச்சி பெறுவதன் மூலம்,

அதன் பணியாளர்களும் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டுவதுதான்

சரியான அணுகுமுறை!”

பணியிடங்களில் குறிப்பிட்ட சிலர், கொடுக்கப்பட்ட வேலையைச் செய்துவிட்டு, அதில் மேற்கொண்டு எவ்வித முன்னேற்றத்தையும் காட்டாது வெறுமனே 8 மணி நேர வேலை; அதைத் தாண்டி எனக்கும், இந்த நிறுவனத்துக்கும் எவ்விதத்  தொடர்பும் இல்லை எனும் மனநிலையில் இருப்பதுண்டு. ‘அதற்காக நிறுவனத்தையே கட்டிக்கொண்டு அழச் சொல்கிறார்களா?’ எனக் கேட்க வேண்டாம். அந்தக் குறிப்பிட்ட 8 மணி நேரத்திற்குள்ளேயே நீங்கள் திறம்படச் செயல்பட்டு, கொடுத்த இலக்கையும் சிறப்புறச் செய்து மேன்மை மிக்க பணியாளர் எனும் நிலையினை அடைந்து நமக்கான ஓர் அடையாளத்தை ஏற்படுத்தலாம் அல்லவா! அதைத்தான் இங்கு சொல்ல வருகிறேன்.

‘நான் இதைச் செய்வதால் எனக்கென்ன கிடைத்துவிடப் போகிறது?’ எனும் மனப்போக்கில் அல்லாது, இதைச் செய்வதன் மூலம் நிறுவனம் என்னை அடையாளம் காண்கிறதோ இல்லையோ, எனக்கான பணியினை, அதன் முறையினைச் செய்து, என்னை நானே செம்மைப்படுத்திக் கொள்கிறேன் எனும் எண்ண ஓட்டத்தில் வேலை செய்ய முற்படும் போது, நீங்கள் எதிர்பார்க்காத மேன்மையும், அங்கீகாரமும் கிடைக்கும்.

அப்படியானால் ‘Job Satisfaction’ என்று சொல்லக்கூடிய வேலையில் மனத்திருப்தி காண்பது அவசியமா? இதைக் கொஞ்சம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ‘வெறுமனே வேலையைக் கடமைக்குச் செய்து அல்லது என்னை அவ்வளவாக யாரும் கேள்வி கேட்பதில்லை; ஏனென்றால், என்னால் இவ்வளவுதான் பண்ண முடியும் என்பது அவர்களுக்கே தெரியும்’ என்று தனக்கென்று ஓர் எல்லைக்கோடு போட்டுக்கொண்டு, சலிப்பை வெளியில் காட்டாது, அதே நேரத்தில் சலிப்போடு வேலை செய்யும் பலரை நாம் பார்த்திருக்கலாம். அவர்களெல்லாம் தமது வாழ்வில் அடுத்தது நோக்கிப் பயணிக்கும் ஆர்வத்தை எப்போதோ தொலைத்து விட்டார்கள் என்றுதான் நாம் பொருள் கொள்ள வேண்டும்.

பணியிடத்தில் பலதரப்பட்ட எண்ண அலைகள் உள்ள பணியாளர்கள் இருப்பதுண்டு. அவர்களை எல்லாம் ஒரே நேர்கோட்டில் இணைப்பது சற்று கடினம். ஆனால், பொதுவான சில காரணிகள் மூலம் அவர்களை முறைப்படுத்தி, நிறுவனத்தின் இலக்கு நோக்கிப் பயணிக்க மனித வளத்துறையினர் பலவித முயற்சிகள் எடுப்பதுண்டு. அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், பணியாளர்கள் அடிப்படையில் நிறுவனத்திடம் அல்லது பணியிடத்தில் எதிர்பார்ப்பது என்ன என்பதைத் தெரிந்து கொள்வது மிக அவசியம். இந்த வழிமுறைகள் இருபக்கமும் பயன் தரக்கூடியதாக இருப்பது கூடுதல் பலம். பணியாளர் வேலையில் ஈடுபாடு காட்ட பல காரணங்கள் இருந்தாலும், பொதுவான காரணங்கள் சில உள்ளன. அந்தக் காரணிகளை Pro. William Kahn அவர்கள் கீழ்வருமாறு வரிசைப் படுத்துகிறார்...

அர்த்தமுள்ள தன்மை (Meaningfulness): ‘நான் பார்க்கும் இந்த வேலை எனக்கும், என் வளர்ச்சிக்கும் தொடர்பு உள்ளதாக உள்ளதா?’ எனும் கேள்விதான் ஒரு தகுதியுள்ள மற்றும் திறமையுள்ள பணியாளர் / ஊழியர் மனத்தில் ஓடிக்கொண்டு இருக்கும். ஏனோதானோ என இல்லாமல், மனம் ஒன்றித்து வேலை செய்ய முடிகிறதா? எனும் கேள்வி ஓடிக்கொண்டே இருக்கும். அதற்குச் சரியான தீர்வு கிடைத்து விட்டால், வேலையில் மனம் ஒன்றிக்கும், செய்யும் வேலையில் தனித்திறன் வெளிப்படும். வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும்; வாழ்வதிலும் பொருள் வேண்டும் என்று நம் வள்ளுவப் பெருந்தகை சொல்வதுபோல, செய்யும் வேலை ஒரு பொருள் உள்ளதாகப் பணியாளர் நினைக்க வேண்டும்; அதற்கான தளத்தை நிறுவனம் ஏற்படுத்திக் கொடுப்பது நல்லது.

பாதுகாப்பு (Safety): எந்த ஓர் இடத்திற்கு நாம் சென்றாலும், அவ்விடம் நமக்குப் பாதுகாப்பானதா? எனும் தேடல்தான் முதலில் இருக்கும். வசதியானதா? என்பது பிறகுதான் வரும். ‘எனது முழுத்திறனையும் காண்பிக்கும் இடம் இதுவாக இருக்குமா?’ எனும் ஐயப்பாடு ஒரு திறமையான பணியாளருக்கு இருந்துகொண்டே இருக்கும். அந்த ஐயப்பாட்டைச் சரிசெய்து, சமன் செய்வது நிறுவனத்தின் கடமை. அதற்குப் பின்புலமாய் இருந்து செயல்படுவது மனித வளத்துறையினர்தான். அந்தப் பாதுகாப்பை உணரும் தருணத்தில்தான், தனது முழுத்திறனையும் ஒருவர் நிறுவன நலனுக்காக வெளிப்படுத்தும் சூழல் வரும்.

கிடைக்கும் வாய்ப்பு (Availability): இங்கு Availability என்பதை ‘வாய்ப்பு’ எனும் பொருள்பட எடுத்துக்கொள்வோம். சிறந்த பங்களிப்பைத் தரும் பணியாளர் மனதுக்குள், எனக்கான வளர்ச்சி இங்கு எப்படி இருக்கும் எனும் தேடல் இருந்துகொண்டே இருக்கும். இது சுயநலம் அல்ல; அவரது உரிமை! நிறுவனம் வளர்ச்சி பெறுவதன் மூலம், அதன் பணியாளர்களும் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டுவதுதான் சரியான அணுகுமுறை ஆகும். அது தவறும் நிலையில், எங்கோ ஒரு சறுக்கல் விழும். அந்தச் சறுக்கல் விழுவதற்கு முன் சரிசெய்வது அனைவருக்கும் நல்லது. இந்த வாய்ப்பின் மூலம் தனக்கான ஒரு தனித்துவத்தை ஏற்படுத்த முடியுமென்றால், அந்தப் பணியாளர் ஒரு மிகப் பெரிய சொத்தாக நிறுவனத்திற்கு மாறிவிடுவார்.

மேற்கண்ட கூறுகளை எந்த ஒரு நிறுவனம் கடைப்பிடிக்கிறதோ, அந்த நிறுவனம் அளவற்ற வளர்ச்சி காணும். இதைத் தாண்டி மற்றதெல்லாம் அந்தந்த நிறுவனத்தின் மேன்மையைப் பொறுத்தது என்று Pro. William Kahn வரையறை செய்கிறார்.

‘எனக்கான அங்கீகாரமும், அடையாளமும் கிடைத்தால்தான் எனது முழுத்திறனையும் வெளிப்படுத்துவேன்’ எனும் நிலையில் சில பணியாளர்கள் இருப்பதுண்டு. உங்கள் திறமையைக் காட்ட ஆரம்பியுங்கள்; உங்களுக்கானது, உங்களை நோக்கி நீங்கள் கேட்காமலே வந்தடையும். நமது தனித் திறன் நமக்கு ஒரு தனித்துவத்தைத் தரும். அந்தத் தனித்துவத்தைக் கண்டடையுங்கள்.

தொடர்ந்து பயணிப்போம்...

Comment