நாம் இயேசுவின் சீடரா? பக்தரா?
- Author எஸ். எரோணிமுஸ் --
- Thursday, 14 Dec, 2023
ஒருவர் தனக்கு வரன் தேட, தன்னைப் பற்றிய விவரக் குறிப்பை (bio data) சிறிது வித்தியாசமான முறையில் தயாரித்திருந்தார். அதில் religion என்கிற இடத்தில் By birth:Roman catholic என்று குறிப்பிட்டு விட்டு, அதன் கீழே By faith: Humanity என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அங்ஙனமே cast: என்ற குறிப்பில் By birth என்று தான் சார்ந்ததைக் குறிப்பிட்டு விட்டு அதன்கீழே but follow: ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றும் எழுதியிருந்தார். அந்த விவரக் குறிப்பு அவரின் மனப்பக்குவத்தை வெளிப்படுத்தி இருந்தது. இயேசுவின் போதனையைச் சரியாக உள்வாங்கி, அதனைத் தன் வாழ்வில் சாதி, மதத்தைத் தாண்டிச் செயல்படுத்தத் துடிக்கும் அந்த இளைஞனை நினைத்து இயேசுவே மனம் மகிழ்ந்திருப்பார்.
ஆனால் நடந்தது என்ன தெரியுமா?
ஒரு கத்தோலிக்கக் குடும்பம் அவ்விளைஞரின் பெற்றோரை அணுகி, அவரைப் பற்றிய விவரம் கேட்டதன் அடிப்படையில், அந்த விவரக் குறிப்பை அவர்களுக்கு அவரின் பெற்றோர் அனுப்பி வைத்தனர். அடுத்த நாளே அக்குடும்பம் அவரின் பெற்றோரை அழைத்து, “என்ன, பையன் பயோ டேட்டாவுல religion by faith Humanity-னு போட்டிருக்கார்? பையன் கோவிலுக்குப் போவாரா?” எனச் சந்தேகத்தோடு விசாரணை செய்துள்ளனர்.
இந்த நிகழ்வு என்னைப் பெரிதும் யோசிக்க வைத்தது. இந்நிகழ்வில் வரும் இரண்டுமே கத்தோலிக்கக் குடும்பங்கள். இளமைப் பருவம் தொட்டே மறைக்கல்வி, மறையுரைகளைக் கேட்டு, அருளடையாளங்கள் பல பெற்று, திருப்பலி போன்ற வழிபாடுகள் பலவற்றில் பங்கு பெற்ற குடும்பங்கள். ஆனால் ‘சக மனிதனை நேசிப்பதன் மூலமே இறைவனை நேசிக்க முடியும்’ என்கிற ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தின் நம்பிக்கை, மற்றொரு கத்தோலிக்கக் குடும்பத்திற்கு எதிர்மறையாகப்படுவதுடன், ‘அவர் கோவிலுக்குப் போவாரா? அவருக்கு இறைநம்பிக்கை உண்டா?’ என்கிற சந்தேகத்தையும் கொடுக்கிறது என்றால், அது எப்படி? எதனால்? என்று என்னைச் சிந்திக்கத் தூண்டியது.
மனிதநேயத்தைப் பற்றிய அக்கறை கொண்டவர்கள் கோவிலுக்குப் போக மாட்டார்களா? அல்லது கோவிலுக்குப் போவோரிடம் மனிதநேயம் இருக்காதா? என்ன சொல்ல வருகிறார்கள் இவர்கள்? என்றெல்லாம் அடுத்தடுத்துக் கேள்விகள் எழும்பின. இது ஏதோ இரண்டு கத்தோலிக்கக் குடும்பங்களுக்கு இடையே நடந்த நிகழ்வு என்று எளிதாகக் கடந்து போக முடியாது. ஏனெனில், இன்றைய நமது ஒட்டுமொத்தத் திரு அவையும் இந்த இரண்டு குடும்பங்கள் போன்றே இரண்டு பெரிய குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்றன.
கண்ணால் காணக்கூடிய சகோதரரை அன்பு செய்வதன் மூலமாகவே கடவுளை அன்பு செய்ய முடியும் என்பதை முழுமையாக ஏற்று, பிறரன்பு பணியில் இறையன்பை அனுபவிக்கும் சீடர்களாக வாழத் தலைப்படுவது ஒரு குழு. தவறாமல் கோவி லுக்குச் செல்வது, வழிபாடுகளில் ஈடுபடுவது போன்ற பக்தி செயல்பாடுகளில் கவனம் செலுத்தி, இறைவனை நேசிக்க அதிக அக்கறை காட்டும் பக்த கோடிகளாய் மாறி நின்று பிறரன்பு செயல்பாடுகளை மறந்து விடுவது அல்லது பின்னுக்குத் தள்ளுவது என்கிற இரண்டாம் வகை குழு என இரு குழுக்களாகப் பிரிந்து கிடக்கிறது இன்றைய திரு அவை. அதிலும் இந்த இரண்டு குழுக்களும் சமமாகப் பிரிந்து நிற்கவில்லை; மாறாக, இரண்டாம் வகை குழுவினரான பக்த கோடிகள் தொண்ணூ று சதவீதம் என்றால், முதல் வகை குழுவான சீடர்கள் வெறும் பத்து சதவீதம் மட்டுமே உள்ளனர்.
இன்றைய திரு அவையின் தீவிரச் செயல்பாடுகளே இதற்குக் காரணம் என்பதையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஏனென்றால், தம் உறுப்பினர்களைச் சீடர்களாக்குவதை விட வெறும் பக்தர்களாக்குவதிலேயே இன்றைய திரு அவை தீவிரம் காட்டுகிறது.
திரு அவை நடத்தும் மறைக்கல்வி, மறையுரைப் போதனைகள் அனைத்தும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் அளவிற்குச் சீடத்துவ வாழ்விற்குச் சீர்திருத்தம் செய்கிறதா? என்பது விடை தேட வேண்டிய வினாவாக நிற்கிறது.
குழந்தைப் பருவத்தில் கொடுக்கப்படும் மறைக்கல்வியில் மறையைப் பற்றியும், திரு அவையைப் பற்றியும் அறிய கொடுக்கப்படும் முக்கியத்துவம், அடுத்து இருப்பவரிடம் அறநெறியைப் பயில்வதற்கும், அறநெறியோடு பழகுவதற்கும் கொடுக்கப்படுவதில்லை என்பதே என் ஆதங்கம்.
திருவிவிலிய வசனங்களை அதிகார, வசன எண்களுடன் ஒப்பிக்கக் குழந்தைகளைத் தூண்டி பாராட்டும் நாம், கற்ற வசனத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தூண்டியது மிகக்குறைவே. அதற்கான வழிமுறைகளைக் குழந்தைகள் உணரச் செய்யும் முன்முயற்சிகளே இல்லை என்பதே உண்மை. அங்ஙனமே புதுப் புது வடிவங்களில், புதுப் புது பக்தி முயற்சிகள், வழிபாடுகள் கூடிக்கொண்டே செல்லும் திரு அவையில், சமத்துவம், சகோதரத்துவம் அன்றாட வாழ்வில் மலரச் செய்ய தேவைப்படும் நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே உள்ளன.
கோவில் தலத்தில் குழுமியிருப்பதில் பெருமை கொள்ளும் தொண்ணூறு சதவீத பக்தர்களுக்கு, களத்தில் இறங்கிச் செயல்படத் துடிக்கும் பத்து சதவிகிதம் உள்ள சீடர்கள் எதிரிகளாகத் தெரிகின்றனர். இந்நிலை குடும்பத்திற்குள்ளும், குடும்பங்களுக்கு இடையிலும், பங்குத் தளத்திலும் அன்றாடம் ஒருவித நெருக்கடி நிலையை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றது.
“கோவிலுக்குப் பணம் செலுத்தும் ஒவ்வொருவரும் செலுத்தும் பணம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்று கவனிக்கும் பொறுப்பும் உடையவர்கள்” என்று ஒருவர் இறையியல் கருத்து சொன்னால், உடனிருக்கும் அவரின் மனைவி, “அதெல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார்; நீங்க உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்” என்று சொல்லி, தம் மறைக்கல்வி ஞானத்தை அவரிடம் நிலைநாட்டி, அவர்தம் வாயை மூடுவார்.
“அன்பியங்கள் பங்குத் தந்தைக்கு வசூல் செய்து கொடுப்பது போன்ற வேலைகளுக்காக அமைக்கப்பட்டவை அல்ல; மாறாக, நம் அன்புறவைப் பகிர்ந்து, குழுவாகச் சாட்சிய வாழ்வு வாழவே” என்று ஒருவர் கருத்து சொன்னால், அடுத்த நாளே பங்குத் தந்தையிடம் போய் ‘கோள்’ சொல்லும் பக்தக் குடும்பங்கள் அன்பியத்தில் உள்ளன.
“பெயரளவில் இல்லாமல், முறையாகப் பங்குப் பேரவை அமைத்துச் செயல்பட்டால் நல்லது” என்று ஒருவர் சொன்னால், பங்குத் தந்தைக்கு மட்டும் அல்ல; ஒட்டுமொத்தப் பங்குக்கும் அவர் எதிரியாக்கப்பட்டு, அடுத்த கூட்டத்திற்கு அவருக்கு அழைப்பு கூட கொடுக்காது அற்புதமாக நடக்கும் பங்குகள் பல உள்ளன.
ஆக, இன்றைய கத்தோலிக்கத் திரு அவைக்குள் இருக்கும் இரு வேறு குழுக்கள், அவற்றுக்குள் நிலவும் நெருக்கடிகள் இவற்றைக் கண்டு திரு அவை என்ன செய்யப் போகிறது? என்பதே ஒரு நம்பிக்கையாளனாக என்னிடம் எழும் கேள்வி.
திருச்சபையின் உறுப்பினர்களாகிய நாம் எந்த பக்கம்? தொண்ணூ று சதவீதம் உடைய பக்தர்கள் குழு பக்கமா? அல்லது வெறும் பத்து சதவீதம் உடைய சீடத்துவ மனமுடைய குழுவின் பக்கமா? இணைந்து விடை தேடுவோம் வாருங்கள்.
Comment