No icon

சிந்தனைச் சிதறல் – 8

111 மரக்கன்றுகள்

ராஜஸ்தான் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது தார் பாலைவனம். தார் பாலைவனம் என்பது இராஜஸ்தான், குஜராத், பாகிஸ்தான் நாடு வரைக்கும் பரவியுள்ளது. அதில் 61 சதவீதம் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. ஆனால், நம்மில் பெரும்பான்மையானோர் அறியாத தகவல் ஒன்று உள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்சமந்து மாவட்டத்தைச் ‘சுற்றுச்சூழலியல் கிராமம்’ என்று அழைக்கின்றார்கள். ‘எதற்காக?’ என்று பார்க்கும் போது, அக்கிராமத்தில் பெண் குழந்தை பிறக்கும் போது 111 மரக்கன்றுகள் நடுவது அவர்களின் கலாச்சாரமாக மாறியுள்ளது. சிசேம், மா, நெல்லிக்காய், வேம்பு போன்ற மரங்களை வளர்க்கின்றார்கள். பெண் குழந்தை வளர்ந்து, அப்பெண்ணின் திருமணம் போன்ற செலவினங்களுக்குத் தேவையான வருமானத்தை இம்மரங்களின் மரக்கட்டைகளை விற்பனை செய்தும், மரங்களிலிருந்து கிடைக்கும் பழங்களை விற்றும் ஈடுசெய்கின்றார்கள். இத்திட்டத்திற்குப் ‘பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் திட்டம்’ என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்.

மேலும், 2006 ஆம் ஆண்டு முதல் இக்கிராமத்தில் பெண் குழந்தைகள் பிறக்கும்போது கிராமத்தினர் சார்பாக 31,000 ஆயிரம் ரூபாயும், பெண் வீட்டாரிடமிருந்து 10,000 ஆயிரம் ரூபாயும் வசூலித்து, அக்குழந்தையின் பெயரில் வங்கியில் இருபது ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்புத் தொகையாக வைக்கின்றார்கள். திரு மணம் நடைபெறும்போது இந்தப் பணத்தை வட்டியுடன் பெற்று அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். மேலும், பிப்பிலாந்திரி கிராமத்தில் யாராவது இறக்கும்போது இறந்தவர்களின் பெயரில் 11 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. ஏறக்குறைய 3 இலட்சம் மரங்களைப் பாதுகாத்து வருகின்றார்கள் இந்தச் சிறிய கிராமத்தினர். 2.5 மில்லியன் அளவுக்குச் சோற்றுக்கற் றாழைச் செடிகளை வளர்த்துள்ளனர். இந்த மூலிகைச் செடியின் வழியாக எந்த நோயும் மரங்களையும், மனிதர்களையும் தாக்காத வண்ணம் பாதுகாக்கின்றது. சோற்றுக்கற்றாழையின் சாறுகளைப் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வதன் மூலம் பெருமளவு வருவாயும் கிடைக்கின்றது.

இப்படிப்பட்ட சமூகப் புரட்சிக்கும், சமூக மாற்றத்திற்கும் அடிப்படையாக இருந்தவர் திரு. சியாம் சுந்தர் பாலிவால். ‘யார் இவர்?’ என்று பார்க்கும் போது, 1964-ஆம் ஆண்டு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். ஆறாவது அகவையில் தன்னுடைய தாயை இழந்தார். அவர் பாம்பு கடித்து இறந்தார். தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். 11-வது வயதில் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தினார். இவர் வாழும்போது பிப்பிலாந்து கிராமம் மிகவும் வறட்சியான கிராமமாக இருந்தது. மேலும், அங்குச் சுரங்கம் அமைக்கும் பணியால், தீவிரமான வறட்சியாக இருந்தது. இவருக்கு 23-வது வயதில் திருமணம் நடைபெற்றது. இரண்டு பெண் குழந்தைகளும், ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. அவ்வூரில் பெண் குழந்தைகளைக் கொல்லும் மூடப் பழக்கம் இருந்தது. காரணம் என்னவென்று ஆராயும் போது, பெண் குழந்தைகள் பிறந்தால் அவளுக்குத் திருமணம் போன்ற காரியங்களை நடத்தப் போதிய பொருளாதார வசதி வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலை. அதனால், பெண் குழந்தைகளைப் பலி கொடுத்தனர்.

2007-ஆம் ஆண்டு சியாம் சுந்தர் பாலிவாலின் மகள் கிரணுக்கு 16 வயது நிரம்பியிருந்தது. வயிற்றில் வலியுடன் பள்ளியிலிருந்து திரும்பினாள். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்து போனாள்.

“அது மிகப்பெரிய இழப்பு! வலியும், வேதனையும் கொண்டேன். என்ன ஆனாலும் என் மகள் என்னோடு இருக்க வேண்டும் என்று அவளின் நினைவாக மரக்கன்றுகளை நட முடிவெடுத்தேன். மேலும், ஊரில் பிறக்கும் பெண் குழந்தைக்கு நான் வளர்ப்புத் தந்தையாக இருப்பேன் என்று முடிவெடுத்து. மரங்களை நட ஊர் மக்களுக்கு அழைப்பு விடுத்தேன். அதனால், இந்த ஊர் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது” என்கிறார் சியாம் சுந்தர் பாலிவால்.

திருத்தந்தை ‘Laudato Si’ என்ற தனது திரு மடலில் “ஏழைகளின் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும், உலகம் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும் என்று சிந்திப்பதற்கும் பதிலாக, சிலர் பிறப்பு விகிதத்தைக் குறைக்க மட்டுமே முன்மொழிய முடியும். மக்கள்தொகை வளர்ச்சியைச் சிலர் தீவிரமான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நுகர்வுவாதத்திற்குப் பதிலாகக் குற்றம்சாட்டுவது, பிரச்சினைகளை எதிர்கொள்ள மறுப்பதற்கான ஒரு வழியாகும்” (பத்தி 50) என்கிறார்.

பெண் குழந்தைகளைக் கொல்வது வழிமுறையல்ல; இயற்கையான வழியில் பெண்களை உயர்த்துவதே சிறந்த வழி என்று முடிவெடுத்தார் சியாம் சுந்தர்.

பெரிய மாற்றத்திற்குத் தொடக்கம் சிறியதாகத்தான் இருக்கும். “அமைதியையும், நட்பையும் விதைக்கும் ஓர் அன்பான வார்த்தையையோ, புன்னகையையோ அல்லது எந்தவொரு சிறிய சைகையையோ தவறவிடாமல், அன்பின் சிறிய வழியைப் பின்பற்றுமாறு லிசியக்ஸின் புனித தெரசா நம்மை அழைக்கிறார். “வன்முறை, சுரண்டல் மற்றும் சுயநலம் ஆகியவற்றின் தர்க்கத்தை உடைக்கும் எளிய தினசரி சைகைகளால் ஓர் ஒருங் கிணைந்த சூழலியல் உருவாக்கப்பட்டுள்ளது” (பத்தி 230). இவ்வாறு எடுக்கும் சிறு முயற்சிதான் பெரும் பலனைக் கொடுக்கும்.

“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற்கு 16:15). படைப்பிற்கு நற்செய்தியைப் பறைசாற்றுவோம். இயற்கையில் இறைவனைக் காண்போம், இயற்கை யோடு இயைந்த வாழ்வை வாழ்வோம்.

Comment