வாழ்க்கையைக் கொண்டாடு – 27
வாய்ப்புகளை வசப்படுத்துவது எப்படி?
‘ஏதாவது செய்து, எப்படியாவது பெரிய ஆளாக வந்துரணும்’ எனும் பேராவல் நமக்குள் இருப்பது இயல்பு. அந்தப் பேராவலைச் செயலுக்குக் கொண்டு வரும்போதுதான், அது நிலை பெற்ற ஆசையாக மாறும். இல்லையெனில் நிராசையாக இருந்து, காலம் முழுக்க நமக்குக் குடைச்சல் தந்துகொண்டே இருக்கும்.
‘இதற்குத்தான் நான் ஆசையே படுவதில்லை’ எனும் சல்சாப்பு சொல்லாமல், ‘அப்படி என்னதான் அதில் இருக்கு, ஒரு கை பார்த்துவிடுவோமே’ என இறங்கி விட்டாலே போதும், நீங்கள் பாதி வழியை அடைந்து விட்டீர்கள் என எடுத்துக்கொள்ளலாம்.
‘சாதித்து என்ன செய்யப்போகிறோம்? இருந்தோமா, நாலு காசு சம்பாதித்தோமா? வாழ்க்கையை அப்படியே இரசிச்சுப் போய்க்கிட்டே இருக்கணும்’.
நல்லதுதான்! நாம் ஏதும் குறை சொல்லவில்லை. வாழ்க்கையை இரசிக்கும் இரசிப்புத்தன்மை சும்மா வந்துவிடாது. எதாவது ஒன்றை நீங்கள் திறம்பட எடுத்து, வெற்றி கண்டு, அது எல்லாருக்கும் பயன்பட்ட வெற்றியாக மாறிவிட்டால், அது உங்களுக்கான இரசிப்புத் தன்மையை உங்கள் வாழ்க்கையில் கூட்டும். அப்படி வரும் இரசனை ஒரு தனி சுகம்தான்!
நாம் நினைத்ததை அடைந்து, வெற்றிபெற நம் எண்ணங்களை முதலில் சரி செய்தாக வேண்டும். ‘எண்ணம் சரியானால், எல்லாம் சரியாகும்’ எனும் வார்த்தையை பல இடங்களில் கேட்டிருப்போம், கேட்ட அந்த வார்த்தையின் உயிர்த்தன்மையை எப்போதாவது உணர்ந்திருப்போமா? நிச்சயமாக உணர்ந்திருப்போம். ஆனால், அதை அப்போதே விட்டுவிட்டு, வேறு சிந்தனைக்கு நாம் கடந்திருக்கலாம். இனி ஒரு முடிவெடுப்போம்: வருகின்ற எண்ணங்களின் (சிந்தனைகளின்) மேல் கவனம் வைப்போம்; அது என்ன என்னிடம் சொல்ல வருகிறது என்று உன்னிப்பாகக் கவனிப்போம்; அப்படிக் கவனிக்கும்போது எண்ணற்ற உணர்வுகளையும், ஒரு திட வழிமுறையையும் நமக்குத் தரும்.
நினைவுகளும், எண்ணங்களும் நம்மீது அதிகாரம் செலுத்துவதை அனுமதிக்காமல், நாமும் அதன் மேல் அதிகாரம் செலுத்தாமல், அது சொல்ல வரும் தீர்வு மற்றும் தாக்கத்தின் மீது மட்டும் கவனம் செலுத்துவது மட்டுமே நம் வாழ்க்கை தொடர்ந்து ஓடுவதற்கான நல்ல வழியாகும்.
எண்ணங்களை மட்டும் சரிப்படுத்திவிட்டால், போதுமா? எல்லாம் சரியாகிவிடும்தானே? அப்படியல்ல; நமக்குள் வந்துதித்த எண்ணங்கள் நம் வாழ்விற்கான அடிப்படை. அந்த அடிப்படையைப் படிப்படியாகக் கொண்டு செல்வதன் மூலம்தான், நாம் நினைத்ததை அடைந்து நம்மை நிலைநிறுத்த முடியும். ‘முடியாது’ என மட்டும் ஒதுங்கி விடாதீர்கள். ஏனெனில், நம்மால் முடியாது என ஒதுக்கிய ஒன்றை யாரோ ஒருவர் சிறப்பான முறையில் முடித்துக் காட்டும்போது, சொல்லிட முடியா சோகமும், வருத்தமும் நம்மை அப்பிக்கொள்ளும் (கொல்லும்). நம் எண்ணங்கள் அவ்வளவு வலிமையானவை! அதைச் சிறப்பாகக் கையாண்டு மேலெழுந்தவர்கள் அதிகம். அவர்களின் அனுபவ முறைகளைத் தெரிய முற்படுங்கள்.
‘எண்ணங்களை என் வழிக்குக் கொண்டு வந்து விட்டேன்; எனக்கு வெற்றி கிடைக்கும்தானே?’ நிச்சயம் கிடைக்கும்! எப்போது? வாய்ப்பு எனும் துணையோடு இணையும்போது!
‘இதென்ன புதுசா ஒண்ணு உள்ள வருது?’ என மலைக்க வேண்டாம். மின்சாரம் மற்றும் விளக்கு இரண்டையும் இணைத்து எரிய வைக்க உதவும் ஒரு மின்சாரக் கம்பிதான் (wire) வாய்ப்பு. நம் எண்ணங்கள் ஈடேற, வரும் வாய்ப்பினை நழுவ விடாமல் ‘சிக்’கெனப் பிடிப்பதன் மூலம்தான் அது நிறைவு பெறும்.
‘அப்படியா, கட்டாயம் செய்துவிடுகிறேன்’ என முடிவுக்குள் வருவதற்குள், அந்த வாய்ப்பை என் வசப்படுத்த என்ன செய்ய வேண்டும்? கொண்ட கொள்கையில், இலக்கில் தீரா ஆர்வம் இருந்தாலே போதும். அது நம் வசப்படும்.
நம் வாழ்க்கையில் உறுதியான மற்றும் வலுவான நோக்கம் இருந்தாலே போதும்; வெற்றியை நோக்கி உங்களை யாரும் தள்ள வேண்டிய அவசியமில்லை. மாறாக, உங்கள் ஆர்வமே உங்களை அங்கு அழைத்துச் செல்லும்.
தீராத ஆர்வமும், தெளிவான எண்ணங்களும் இருக்கும்போது நமக்கான பயணத்தில் வரும் தடைகளைத் தாண்டிச் செல்லும் உந்துதல் இயல்பாகவே ஊற்றெடுக்கும்.
நினைவில் வையுங்கள், நம் எண்ணங்கள் உயிருள்ளவை; அது பல விளைவுகளை ஏற்படுத் தும் ஆற்றல் கொண்டது. அது எவ்வித ஆற்றல் என்பது நம்மையும், நம் எண்ணங்களையும் பொறுத்தது! எண்ணத்தில் கவனம் வைப்போம்; எண்ணற்ற வெற்றிகளைக் குவிப்போம்.
தொடர்ந்து பயணிப்போம்....
Comment