இவர்களால் முடிந்ததென்றால்...! 21
இப்படியும் செய்யலாமா?
- Author முனைவர் அ. மரிய தெரசா --
- Wednesday, 24 Jan, 2024
‘பிறர் நமக்கு என்ன செய்துள்ளார்கள்?’ என்று கணக்குப் பார்ப்பதைவிட, நாம் பிறருக்காக என்ன செய்துள்ளோம் என்று மனப்பூர்வமாகச் சிந்திக்கத் தொடங்கும்போது, நமக்கான விண்ணகச் செல்வத்தைச் சேர்க்க நாம் தயாராகி விட்டோம் என்பதே மறைவான உண்மை. ஆனால், பிறர் நமக்கு என்ன செய்துள்ளார்கள் என்று கணக்குப் பார்ப்பதில் மும்முரமாக இருக்கும் நாம், அதன் தொடர்ந்த பகுதியை நினைப்பது இல்லை; மறந்து விடுகின்றோம்.
நாம் பிறருக்கு என்ன செய்கின்றோம் என்பதும், எப்படிக் கொடுக்கின்றோம் என்பதும், யார் யாருக்கு எவ்வளவு செய்கின்றோம் என்பதும், எவ்வளவு கொடுக்க முடியும் என்பதும் நமக்கும், கடவுளுக்கும் தெரிந்த தனிப்பட்ட கணக்கு. இந்தக் கணக்கு பிறருக்குத் தெரியாமல் இருக்கலாம்; நாம்கூட மறந்தும் விடலாம். ஆனால், கடவுளின் கண்கள் செயல்களின் உள் எண்ணங்களையும் சேர்த்தே பார்க்கும். நமக்கான அவரது கணக்கிலும் செயல்களுக்கான வெகுமதிகள் உடனுக்குடன் இடம் பெறும். இவ்வளவு என்றோ, யாருக்கு என்றோ நீங்களோ, நானோ குறித்து வைக்கத் தேவையில்லை.
ஏழைக் கைம்பெண் போட்ட காணிக்கைக் காசு இறைமகன் இயேசுவின் பார்வையில் மிக அதிகமாகத் தெரிந்தது. இவ்வுலகில் வாழும்போது நாம் பிறருக்காக எதைச் செய்தாலும், மறுமைக்குரிய செல்வமாக மாறும். அதன் அளவு, தன்மை, மதிப்பு என எல்லாமே மாற்றமடையும். இந்தக் கண்ணுக்குத் தெரியாத செல்வம் நாம் வாழும்போதும் பயன் தரும்; இறந்த பின்பும் பயன்படும். நம் தனிப்பட்ட பாவங்கள் கரைவதற்கும், நமக்கான கணக்கில் புண்ணியங்கள் சேர்வதற்கும், தேவையில் உள்ளோருக்கும் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யும் உதவிகளே காரணமாக இருக்கும். இதைச் சொல்லும் தகுதி எனக்கு இல்லை. மகான்களும், மறைநூலும் சொல்லும் கருத்தைத்தான் சுட்டிக்காட்டுகின்றேன்.
சேவைகளின் தன்மை, உதவிகளின் வடிவம், பயன்பாடு, அளவு, தேவைப்படும் நேரம் போன்ற அனைத்துப் பரிமாணங்களும் இடங்களுக்கேற்ப, சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றம் அடையும். எல்லாக் காலகட்டங்களிலும் உதவும் கரங்களுக்காகக் காத்திருப்போர் உள்ளனர். நேரடிக்கணக்கில் வங்கிகளில், பெட்டகங்களில் பணம் வைத்திருப்போருக்கும் திடீர் நெருக்கடிகள் உருவாகும்போது அந்தக் கோடிகள் உதவாமல் போகும் வாய்ப்புகள் உள்ளன. இன்னார்தான் உதவ முடியும் என்றோ, பணக்காரரான எனக்கு உதவிகள் தேவையில்லை என்றோ யாரும் எண்ணிவிட முடியாது. எதிர்பாராத சூழ்நிலை மாற்றங்கள், திடீர் திருப்பங்கள் யாருக்கான தேவைகளையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் புரட்டிவிடும்.
வாய்ப்பும், உள்ளுணர்வும் தூண்டும் விதத்தில் மனிதனது உதவும் எண்ணமும் மாற்றம் அடையும். பலர் ஞானிகளாக மாற்றம் அடைந்ததும், கொடை வள்ளல்களாக உலகுக்கு வெளிப்பட்டதும் இப்படித்தான். ‘வர்தா’ புயல் தமிழகத்தைப் புரட்டிப் போட்டபோது பலரும் உணவுக்கும், உறைவிடத்துக்கும், குடிநீருக்கும் கையேந்தும் நிலை உருவானது. அப்போது சிறுவன் ஒருவன் தனக்குக் கிடைத்த உணவுப் பொட்டலத்தைத் தானே உண்ணாமல், இன்னொருவருக்குக் கொடுத்தான். இதைப் பார்த்த ஒருவர் ‘ஏன் அப்படிச் செய்தாய்? உனக்கும் பசிக்கிறதுதானே?’ என்று கேட்டபோது அச்சிறுவன், ‘என்னைப் போன்றோருக்குப் பசி புதிதல்ல! ஆனால், அவர்கள் பசியைத் தாங்க மாட்டார்கள்’ என்றானாம்.
இச்சிறுவனின் செயலையும், உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளையும் உலகமே பாராட்டியது. இச்சிறுவன் செய்த செயல் பலரையும் நேர்மறையாகத் தூண்டிவிடும் இயல்புடையது. திருவிவிலியம் சுட்டிக்காட்டும் புளிப்பு மாவின் தன்மைகள் இப்படிப்பட்டவையே!
மினு பவுலின் என்பவர் கொச்சியில் உணவு விடுதி நடத்துபவர். உள்ளே வருபவர்கள் நன்றாகச் சாப்பிட்டு திருப்தியாகவே சென்றார்கள். வெளியே குப்பைத் தொட்டியில் உணவுப் பொருள்களைத் தேடும் வறியோரையும் அவர் பார்த்தார். தேவைக்கும் அதிகமாக இருப்போர் ஒரு பக்கம் என்றால், பசியில் வாடுவோர் இன்னொரு பக்கம். சிந்தித்தவருக்கு விடையாக மனத்தில் வெளிப்பட்டதுதான் ‘நன்மை மரம்’.
உணவகத்துக்கு வெளியே வைக்கவென வடிவமைக்கப்பட்ட நானூற்று இருபது லிட்டர் கொள்ளளவு கொண்ட குளிர்சாதனப் பெட்டி (Fridge). அதுதான் ‘நன்மை மரம்’. இரவும் பகலும் இயங்கும் அதிலிருந்து உள்ளே வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருள்களை யார் வேண்டுமானாலும் எடுத்து உண்ணலாம். பிறருக்குக் கொடுக்க விரும்புவோர் உணவுப் பொருள்களை உள்ளே வைக்கலாம். உணவுப் பொருள்களை உள்ளே வைப்போருக்கு ஒரு சில நிபந்தனைகள்: ‘கெட்டுப்போன உணவுகளை உள்ளே வைக்காதீர்கள்; பொட்டலமாக வையுங்கள்; அருகில் வைக்கப்பட்டிருக்கும் மார்க்கர் பேனாவால் உணவு வைக்கப்படும் தேதியைக் குறிப்பிடுங்கள்; இங்கே வருவோர் வாங்கி வைக்க வேண்டாம்; இது வியாபாரம் அல்ல!’
தினமும் 50 நபர்களாவது இந்த ‘நன்மை மரத்தால்’ பயனடைகின்றார்கள். பசியின் கொடுமையை அறிந்தவர்களாலும், உணவின் முக்கியத்துவத்தைப் புரிந்தவர்களாலும் இது தடையின்றி இயங்குகிறது. இப்படி யாராவது ஒருவரின் மனத்தில் தோன்றும் ஒரு நன்மையான செயல், பலருக்கும் பயன்படுவதோடு, பார்க்கும் பலருக்கும் தூண்டு விசையாகவும் மாறும்.
பிறருக்காகச் செய்யும் நன்மைகளும், உதவிகளும், அறச்செயல்களும் எப்படி வேண்டுமானாலும் அமையலாம். உதவியின் வடிவமும், பெயர்களும், தன்மையும் காலத்திற்குத் தக்க, நாகரிகத்திற்கேற்ப, நாட்டுக்கேற்ப மாறும். முன்பெல்லாம் வீடுகளின் முன்பகுதியில் திண்ணை வைத்துக் கட்டுவார்கள். வழிப்போக்கர்களும், தேவைப்படுவோரும் அவற்றில் அமர்ந்து ஓய்வு எடுத்துச் செல்வர். அப்படிப்பட்டோருக்குத் தாகம் தீர்க்கவும், பசியாறவும் வீட்டில் வசிப்போர் தங்களிடம் இருப்பதைப் பகிர்வதும் உண்டு. இன்றைய வீடுகளில் அப்படிப்பட்ட எதுவும் இல்லை. பல பாதுகாப்பு அடுக்குகளை வைத்துக் கட்டுகின்றோம். சாதாரண மக்களால் உள்ளே இருப்போரைப் பார்க்கவும் முடியாது; உள்ளே இருப்பவர்களும் இத்தனை அடுக்குகளைக் கடந்து வெளியே வரவும் விரும்புவதில்லை; அறிமுகம் இல்லாதவர்களை நம்பவும் முடியவில்லை; தேவையில் உள்ளவர்கள் பேசுவதைக் கேட்க நேரமும் இல்லை.
இப்படிப்பட்டோருக்காக என ஒரு சில நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் ஒரு முறைதான் ‘சஸ்பெண்டட் காஃபி’ (Suspended Coffee). நாம் வாழும் சமுதாயத்தில் இம்முறை இன்னும் வந்து சேரவில்லை. இம்முறை சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் நேப்பிள்ஸ் நகரில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் அதைப் பிரபலமாக்கி, பல நாடுகளுக்கும் முகநூல் மூலமாகப் பரவச் செய்த பெருமை அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் சுவீனி (John Sweeney) என்பவரைச் சேரும். ‘முகம் தெரியாத ஒருவருக்கு ஒரு குவளை காஃபி வாங்கிக் கொடுங்கள்; இரக்கச் செயல் எதுவும் ஒருவரின் வாழ்வையே மாற்றும் தன்மையுடையது’ என்ற வாசகம்தான் இம்முறையைப் பிரபலமடைய வைத்தது.
உணவகத்திற்குக் காஃபி குடிக்க வரும் ஒருவர் ஒரு காஃபி குடித்திருப்பார்; இரண்டு காஃபிக்குப் பணம் செலுத்திவிட்டு, ‘ஒரு காஃபி சஸ்பெண்டட்’ (நிறுத்தி வைக்கப்பட்டது) என்பார். பணம் இல்லாமல் வந்து கேட்போருக்குக் கடையின் உரிமையாளர் இந்தக் கணக்கிலிருந்து கொடுத்து உதவுவார். இதில் பணம் செலுத்தியவருக்கும், பயனடைந்தவருக்குமிடையே எந்த நேரடித் தொடர்பும் இல்லை. ஆனால், இருவரும் பயன் அடைகின்றார்கள். அவரவருக்கான மறைமுகக் கணக்கில் இவை இடம்பெறும்.
இன்று, இதுபோன்ற இரக்கச் செயல்களுக்காகப் பலரும் உதவிக்கரம் நீட்டுகிறார்கள். மருத்துவம், கல்வி, சுகாதாரம், உறைவிடங்கள், ஏழைத் திருமணங்கள் என இப்படிப்பட்ட அறப்பணிகள் ஆங்காங்கே செயல்படுவதை நாமும் கேள்விப்பட்டிருப்போம். இப்படிப்பட்ட இரக்கச் செயல்களும், அறச்செயல்களும் தொடர்ச்சியானவை. இவற்றுக்கு எல்லையற்ற பரிமாணங்களும் உள்ளன. இவற்றுக்குப் போட்டியில்லை; பொறாமையில்லை. இவற்றைச் செய்வதற்கு வேண்டிய அகத்தூண்டல்கள் இலாப - நஷ்ட கணக்குப் பார்க்காதவர்களுக்கு மட்டுமே உண்டு.
‘இப்படியும் இரக்கச் செயல்களைச் செய்யலாமோ?’ என்று எண்ணுவோருக்கு, ‘எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்’ என்பதே பதில். எதில் ஈடுபட்டாலும், எப்படிச் செய்தாலும் அறச் செயல்களுக்கான வெகுமதி அவரவர் மறைவான விண்ணகக் கணக்கில் சேரும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
இந்தக் கருத்தை நாலடியார் இன்னும் சிறப்பாக விளக்குகின்றது:
‘ஆ வேறு உருவின ஆயினும், ஆ பயந்த
பால் வேறு உருவின அல்லவாம் பால்போல்
ஒருதன்மைத்து ஆகும் அறம், நெறி, ஆ போல்
உருவு பலகொளல் ஈங்கு’
பசுக்கள் பல்வேறு நிறத்தினதாயினும், அவை தரும் பால் வெவ்வேறு நிறமுடையது அன்று; ஒரே நிறம் உடையது. பாலைப் போன்று அறப்பயனும் ஒரே தன்மையுடையதாகும். அவ்வறத்தை ஆக்கும் முறைகள் பசுக்களின் நிறங்களைப் போன்று பலவாகும்.
(தொடரும்)
Comment