பிப்ரவரி: இலக்கியத் திங்கள் சிறப்புக் கட்டுரை
தமிழினத்தின் இலக்கிய வளம் அறிவோம்
தமிழரின் மொழி வளம், பண்பாடு, நாகரிகம் கண்டு உலகமே இன்றும் வியந்து நிற்கிறது; என்றும் மகிழ்ந்து போற்றுகிறது. தமிழுக்கும், தமிழினத்திற்கும் அதன் வளமையாலும், சிறப்பாலும், சீர்மிகு இலக்கியப் படைப்புகளாலும் உலக அரங்கில் இன்றும் என்றும் மாபெரும் அங்கீகாரமும், சிறப்பும் உண்டு என்றால் அது மிகையல்ல. மேலை நாடுகளில் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இருக்கைகள் அமைப்பதும், தமிழ் மொழியின் தொன்மையினை அறிய கல்வியாளர்களும், மொழி ஆர்வலர்களும் ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கைகள் வெளியிடுவதும் தமிழின் வளமையை, தமிழரின் பெருமையை உலகறியச் செய்கின்றன.
‘தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’
என்றார் பாவேந்தர் பாரதிதாசன். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இலக்கிய மரபுகளைக் கொண்ட அமுதமொழி நம் தாய் மொழி. அஃது இன்பத் தேன்மொழி; இலக்கியச் செம்மொழி. இது மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. குறிப்பாக, தமிழ் இலக்கியங்கள், வாழ்வின் பல்வேறு கூறுகளை எடுத்து இயம்புகின்ற உலகின் தலைசிறந்த இலக்கியங்களில் ஒன்று.
வரையறை கொண்டு எல்லைக்கு உட்பட்ட மனித வாழ்வின் எதார்த்த அனுபவங்களை, பரந்த மனதுடனும், விரிந்த கற்பனை வளத்துடனும், சீர்தூக்கிப் பார்த்து மொழிவழியாகச் சுவைபடத் தருவதே இலக்கியங்களின் தனிச்சிறப்பு. சுருங்கக் கூறின், பல்லாயிரம் நபர்களின் வாழ்வியல் அனுபவங்களை ஓரிடத்தில் குவியலாக்கி அள்ளிக் கொடுப்பதே அழகுத் தமிழ் இலக்கியங்கள்.
கடந்துபோன வாழ்க்கையை அசைபோட்டுப் பார்க்கவும், நாளைய வாழ்க்கை நிகழ்வுகளை அறத்தின் வழிநின்று சீர்தூக்கிச் செம்மைப்படுத்திக் கொள்ளவும் வழிகாட்டுவதே நம் இலக்கியங்கள். நேற்றைய அறநெறி வழியில் நின்று, இன்றைய சமூகத்தைச் செம்மைப்படுத்தி, நாளைய உலகை புதிதாய்ப் படைக்க வழிகாட்டும் ஒளிவிளக்கே நம் தமிழ் இலக்கியங்கள். தமிழ் இலக்கிய உலகம் ஆழிப் பெருங்கடல் போன்றது. குறிப்பாக, தமிழ் மொழியில் மரபுரீதியாக 96 சிற்றிலக்கிய நூல் வகைகள் இருப்பினும், இன்று பல புதிய இலக்கிய வகைகள் உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியங்கள் விரிந்து செல்கின்றன. சங்க இலக்கியம், நீதி இலக்கியம் எனப் பழங்காலத்தில் வகைப்படுத்தப்பட்டவை, இடைக் காலத்தில் பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம், உரை நூல்கள், புராண இலக்கியம், இசுலாமிய தமிழ் இலக்கியம் என அடையாளப்படுத்தப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில், இவை கிறித்தவ தமிழ் இலக்கியம் மற்றும் புதினம் எனவும், இருபதாம் நூற்றாண்டில் கட்டுரை, சிறுகதை, புதுக்கவிதை மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரை எனவும் இக்காலத்தில் வகைப்படுத்தப்படுகின்றன.
பண்டைக்கால தமிழ்ப் புலவர்கள், என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களைப் படைத்து அதில் நல்ல பல கருத்துகளை இழையோட விட்டிருக்கின்றனர். தமிழர் இலக்கியங்கள் வாழ்வியல் அறநெறிப் பெட்டகங்கள். எல்லாச் சூழல்களிலும் மனிதன் அறம் சார்ந்து வாழ்வதற்கான வழிமுறைகளை, வாழ்வியல் நெறிகளைச் சுட்டிக்காட்டுகின்றன. மனிதனின் புற வாழ்க்கை பொருள் தேடக்கூடியது; ஆனால், வாழ்வியல் எதார்த்தத்தில் அது பொருள் அற்றது; அது மாயையானது; நிலையற்றது. அத்தகைய சூழலில் மனித வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கொடுப்பது அம்மொழியின் வளமையான இலக்கியப் படைப்பே!
தமிழர் இலக்கியங்கள் மெய்யியல் நூலகங்கள். மெய்மையை அடையும் வழிகள் மூன்று என்பார்கள்: அவை தர்க்கம், கற்பனை, மற்றும் உள்ளுணர்வு. கற்பனையை முதன்மையாகக் கொண்ட அறிவுப் பாதையே இலக்கியங்கள். அத்தகைய பாதையில் உடன் வருபவையே உள்ளுணர்வும், தர்க்கமும். பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் அடைந்த வாழ்வியல் மெய்மைகள் அனைத்தும் ஒருசேரக் கோர்க்கப்பட்ட அழகுப் பாமாலையே தமிழர் இலக்கியங்கள்.
நம் தாய்மொழி, இமயம் தொடும் இலக்கியச் செழுமை கொண்டது! தமிழ் மொழியின் இனிமையையும், அழகையும் அளந்துகாட்ட முடியாது. தமிழ் மொழிக்கென்று தனியழகு இருப்பது உலகம் அறிந்தப் பேருண்மை. நம் தாய்மொழி தமிழ், இலக்கியச் செழுமை கொண்ட செம்மொழி. இம்மொழியில் இலக்கியங்களுக்குப் பஞ்சமில்லை; அதன் இனிமைக்கும் எல்லை இல்லை. தமிழ் இலக்கியங்களும் இலக்கணமும்தான் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன. இலக்கியம் தாய் என்றால், இலக்கணம் சேய்; இலக்கியம் தேமாங்கனி என்றால், இலக்கணம் தீஞ்சுவைச்சாறு; இலக்கியம் பெருவிளக்கு என்றால், இலக்கணம் அதன் ஒளி; இலக்கியம் எள் என்றால், இலக்கணம் எண்ணெய். இந்த உறவு முறையை அறிந்த நம் முன்னோர்...
‘இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே
எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே
எள்ளினுள் எண்ணெய் எடுப்பது போல
இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்.’
எனக் கூறி வியந்தனர். அத்தகைய தமிழ் மொழியின் இலக்கியங்கள் சங்க இலக்கியம், சங்கம் மருவிய கால இலக்கியம், தற்கால இலக்கியம் எனப் பிரித்தறியப்பட்டு, காலத்தால் அழியாத கருத்துப் பெட்டகமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய வளம் செறிந்த இலக்கியக் கருவூலத்தில்...
இலக்கணம் பேசும் தொல் காப்பியமும்
வாழ்வியல் அறம்தரும் வள்ளுவன் கூற்றும்
வளமாய் வாய்த்த வான்புகழ் தமிழே - உந்தன்
இலக்கியச் செழுமை எங்கேனும் உண்டோ!
எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும்
மதுரைச் சங்க பதினெண் மேற்கணக்கே!
நாலடி நான்மணி இனியவை தொடங்கி - கைநிலையோடு
கலைநயம் பேசும் பதினெண் கீழ்கணக்கே!
‘நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத்தொகையோ!’
‘முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி - மருவினிய
கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத் தொடும் பத்து’
பத்துப் பாட்டின் நூல் வகையோ!
‘நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம் கீழ்கணக்கு!’
சிலப்பதிகாரம் மணிமேகலையும்
குண்டலகேசி வளையாபதியுடன்
சீவக சிந்தாமணியும் சேர்ந்து
சீர்மிகு ஐம் பெரும் காப்பியங்களே!
‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ்வினைச் சிலம்பு காரணமாக,
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்’
சிலப்பதிகார காப்பியச் செய்தியே!
‘அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் இல்லது
கண்டதில்லை’ என்பதே உலகிற்கு
மணிமேகலையின் அறம்சார் கருத்தாம்!
உதயண குமார காவியம் தொடங்கி
நாக குமார காவியம் தொடர்ந்து
யசோதர காவியம் சூளாமணியுடன் நீலகேசியும்
முழங்கிடும் பெருமை ஐஞ்சிறு காப்பியங்களே!
தேவாரம் திருவாசகம் திருப்பாவை
திரு வெம்பாவை நாச்சியார் திருமொழி
இறை அமுதூட்டும் ஆழ்வார் பாசுரங்கள்
மறை வழிகாட்டும் பக்தி இலக்கியங்களே!
அறநெறி வாழ்வியல் செவ்வழி காட்டிடும்
வான்முகில் தொட்ட செம்மொழி தமிழே
வளமை கொண்டவுன் வாசம் கிடைக்க
வண்டு அடியேன் தவமாய் கிடப்பேன்!
என்றே வியக்க வைக்கிறது. இலக்கியப் படைப்பில் காணப்படுகின்ற மொழிக் கூறுகள், சொல்லின் பயன்பாடு, சொல்லாட்சி, அதன்வழிக் கருத்தின் ஆழம், விழுமியங்கள், பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்கிறது. இலக்கிய இலக்கண வளங்களைக் கொண்டு சீரும் சிறப்பும் மிக்க நம் தமிழ் மொழியின் பெருமையை, சொல் வளத்தை, சொல்லாடல் நயத்தை எடுத்துக் கூறும் கவியரசர் கண்ணதாசன், ‘அகரம் தமிழுக்குச் சிகரம்’ என்கிறார். மேலும், முத்தமிழின் இனிமையை முக்கனிச்சாறுக்கு ஒப்பிடுகிறார். அவ்வாறே, தமிழ் மொழியின் இலக்கிய வளத்தைக் குறிப்பிடும் தமிழறிஞர்களும், தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்ற இராபர்ட் கால்டுவெல், ஜி.யு. போப், வீரமாமுனிவர், ஜார்ஜ் ஹார்ட், ஹெரால்டு சிட்மன் போன்ற மேலை நாட்டினரும் ‘தமிழின் இலக்கிய நடை வேறெந்த மொழிகளிலும் கலந்திடாத வண்ணம் தனித்துவம் பெற்றுத் திகழ்கிறது’ என்கின்றனர்.
தமிழ் மொழியின் தனிச்சிறப்பே இது செம்மொழிக்கான தொன்மை, தனித்தன்மை (தூய்மை), பொதுமைப் பண்புகள், நடுவுநிலைமை, தாய்மைத் தன்மை, கலை பண்பாட்டுத் தன்மை, தனித்து இயங்கும் தன்மை, இலக்கிய இலக்கண வளம், கலை இலக்கியத் தன்மை, உயர் சிந்தனை மற்றும் மொழிக் கோட்பாடு என்னும் பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான். இப்பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மூத்த மொழி நம் தமிழ் மொழி. இத்தகைய சிறப்புமிக்க மொழியே நம் தாய் மொழி என்பதில் தனிப்பெருமை கொள்ள வேண் டும்; மொழிச் செருக்கு கொள்ளவேண்டும்.
அண்மைக் காலங்களில் தமிழ் மொழிப்பற்றும், இனப்பற்றும் தமிழ் மண்ணிலும், தமிழர் வாழும் மேலை நாடுகளிலும் இத்தலைமுறையினரிடத்தில் புத்தெழுச்சி பெற்று வருவது பாராட்டுதற்குரியது. ஆயினும், இலக்கியங்கள் அறியாமல் தமிழ் மொழியின் வளமையையும், செழுமையையும் அறிய முடியாது என்பதே உண்மை. முந்தைய தலைமுறை தமிழ் மொழியை உயிர்ப்புள்ள மொழியாகக் காத்துக்கொண்டிருக்கும் சூழலில், இன்றைய இளைய தலைமுறையினர் அப்பணியைச் சிறப்புடன் தொடர்வதே பெருமைக்குரியதாக இருக்கும்.
குழந்தைகளும், இளையோரும்தான் முந்தைய தலைமுறையினரின் வரலாற்றை முன்னெடுத்துச் செல்லவிருப்பவர்கள். இவர்கள்தான் தங்களின் பாரம்பரிய நினைவுகளை, மரபுகளைச் சுமந்து செல்ல வேண்டியவர்கள். அதற்கான ஆற்றலையும் நிறைவாகக் கொண்டிருப்பவர்களும் இவர்களே! ஆகவே இளையோரே, மொழியைப் பற்றிக்கொள்ளுங்கள்! அதன் சிறப்பை உலகறியச் செய்யுங்கள்!
தமிழினத்தின் வளமை அறிவோம்! தமிழர் எனப் பெருமை கொள்வோம்!
வாழ்க தமிழ்! வளர்க அதன் இலக்கியப் பண்பாட்டுப் பெருமை!
திருமதி. சுஜாராணி,
தமிழாசிரியை, சாந்தோம் மேல்நிலைப் பள்ளி
Comment