No icon

வாழ்க்கையைக் கொண்டாடு – 30

எனக்கான திறனை எப்படிக் கண்டுகொள்வது?

எனக்கான திறனைக் கண்டுகொள்வது எப்படி?’ எனும் தேடலை விட, கேள்விதான் பலருக்குள் இருக்கும். ஆம், தேடல் உங்களுக்குத் தேவையானதைத் தரும்; கேள்வியும் தேவையானதைத் தரும்; ஆனால், தேடல்தான் அதி தீவிரமாக வேலை செய்யும். தொடர் தேடல் உங்களுக்கு நீங்கள் நினைத்திராத புதையலையே தரும்.

கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும்என்று விவிலியத்தில் வரும் வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை என்பதை என் வாழ்வில் பலமுறை கண்டுள்ளேன்.

ஆம், கேட்டால்தான் கிடைக்கும்! கேள்வி கேட்கும் திறனால்தான் நம்மை நாம் கூர்மைப்படுத்த முடியும். உங்களுக்குத் தேவையானது கிடைக்கும் வரை தட்டிக்கொண்டே இருங்கள்; அதில், எவ்விதச் சோர்வும் இருக்கக்கூடாது. ‘இவ்வளவு விடாமுயற்சியோடு இருக்கிறானே; இவனுக்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும்எனும் எண்ணம் இயற்கைக்கு ஏற்படும். தேவையானதைத் தீவிரமாகத் தேடும்போது இந்த அண்டம் முழுவதும் உறுதுணையாக உங்களுக்கு உதவிட வரும் என்பது உளவியல் உண்மை.

எல்லாத் தகவலும் பொதிந்து கிடக்கும் கூகுள் கூட நாம் தேடினால்தான் அல்லது கேட்டால்தான் நமக்கான தகவலைத் தரும். ‘இவரு பாக்குறதுக்கு ரொம்ப நல்லவரா இருக்காரேஅல்லதுஇவரு பாக்குறதுக்கு ரொம்பப் பரிதாபமா இருக்காரேஎன இறங்கியோ, உருகியோ தகவலை நமக்குத் தராது; கேட்டால்தான் தரும்.

நமக்கான பொருள் தேவைகளை நம் பெற்றோரிடம் கேட்டு வாங்கத் தெரிந்த நமக்கு, நமது அறிவுக்கான மற்றும் வாழ்க்கைக்கான தேடலை / கேள்வியை முறையானவர்களிடம் இருந்து கேட்டுப் பெற தெரிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில், தேடலையும், கேள்வியையும் யாரிடம் கேட்டால் தெளிவு பெறுமோ அவர்களிடம் இறைஞ்சிக் கேட்கும் மனநிலையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கேள்வியும், தேடலும், தொடர் முயற்சியும்தான் நம்மை முழு மனிதனாக மாற்றும் வல்லமை கொண்டவை. நம்மில் பலர் எதையும் துவங்கும் போது மிகுந்த ஆர்வத்தோடு தொடங்கி, அதை எப்படி முழுமை பெற வைப்பது எனும் வழி தெரியாது, இடையிலேயே அம்முயற்சியைக் கைவிட்டுத் தன்னைத்தானே நொந்துகொள்ளும் நிலை இருந்திருக்கும்.

இதையெல்லாம் சரிசெய்ய வழியே இல்லையாஇருக்கு! அப்படியா, இந்த வலி போக்க என்ன வழி? என்ன மருந்து?

வேறொன்றும் இல்லை; அதற்கான மருந்து மற்றும் வழி நம்முள்ளே உள்ளன. சலிப்பில்லாத் தேடல், உயர்வான குறிக்கோள்... இவை இருந்தாலே போதும், உங்களுக்கான உயர்வு நிச்சயம்.

இவையெல்லாம் எனக்கு அளவுகடந்து இருக்கு; ஆனால், எனது திறமை எது என்பதை அடையாளம் காண முடியவில்லைஎன்கிறீர்களா? முதலில் குறிக்கோளும், விடாமுயற்சியும், சலிப்பில்லாத தொடர் பயணமும் இருக்கும்போது, நம் திறன் நமக்கு அடையாளம் காட்டப்படும்.

முதலில் குறிக்கோள், திறன் (Talent/Skill) தேடல் என இருக்கும்போது எல்லாம் ஒரு நேர் கோட்டிற்கு வந்துவிடும்.

அப்படியா? இன்றே, இப்போதே நான் குறிக்கோளை ஏற்படுத்திப் பயணிக்கப் போகிறேன்என அவசரப்பட வேண்டாம். அதற்குக் கொஞ்சம் திட்டமிடலும் இருக்க வேண்டும். திட்டமிடல் சரியாக இருக்கும்போது, சில சறுக்கல்கள் வரும்போது நம்மை நாம் சரிசெய்யும் வாய்ப்பு அமையும். இல்லையெனில் தொய்வு வந்துவிடும். திட்டமிட்டுச் செயல்படும் செயலில்தான் முறையான அணுகுமுறை இருக்கும். அதுதான் நம்மை இன்னும் திடப்படுத்தி, ஊக்கத்தைத் தரும்.

இந்தத் தொடர் ஊக்கமும், சலிப்பில்லாப் பயணமும் இருக்க என்ன செய்ய வேண்டும்? தீர்ந்து போகாத ஆர்வம். என்ன இது? தொடர்ந்துஇது வேணும், அது வேணும்னு ஒரே கொக்கிப் போட்டுப் பேசுறீங்க? எனக் கேட்கத் தோன்றலாம்.

ஆம், எதுவும் நமக்கு எளிதில் கிடைத்து விடுவதில்லை. எல்லாம் ஒரு போராட்டத்தில், புரட்சியில், முயற்சியில், தொடர் தேடலில்தான் கிடைக்கும். எளிதில் கிடைத்து விட்டால் அதில் ஏதும் பிடிப்பு ஏற்படாது. உங்களது பெற்றோர் கொடுத்த பணத்தில் செலவு செய்வதற்கும், நீங்களே சம்பாதித்துச் செலவு செய்வதற்கும் நிறைய வேறுபாடுகளை அறியலாம்.

மொத்தத்தில், யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் நீங்களே ஒன்றைத் தேடி அடையும் போது அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்படும். அதை அடைய இன்றே முற்படுங்கள்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்’ (குறள் எண் 616)

ஒன்றை நாம் முழு மனத்தோடு தேடும்போது அது நிச்சயம் நம்மை வந்தடையும். இதை உண்மையாக்கும் வகையில் உலகப் புகழ்பெற்ற அறிவியல் மேதையின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வை உங்களுக்குக் கூறுகிறேன், அது நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த வாரம் பேசுவோம்.

தொடர்ந்து பயணிப்போம்...

Comment