No icon

வாழ்க்கையைக் கொண்டாடு – 32

தனித்த அடையாளம் தேவையா?

‘நான் யார்?’ எனும் கேள்வி எழும்போது, இவர் இப்படிப்பட்டவர், இன்ன தொழில் செய்கிறார் எனும் வரையறைக்குள் நம்மைக் கொண்டு செல்வதுதான் அடையாளம். இந்த அடையாளம் என்பது தவிர்க்க இயலாத, அதே நேரத்தில் அவசியமான ஒன்று. ஒவ்வொரு மனிதனுக்கும் ஓர் அடையாளம் உண்டு. அந்த அடையாளம்தான் இந்த உலகிற்கு நம்மை யாரென்று அடையாளப்படுத்துகிறது.

மேலும், அடையாளம் என்பது குறிப்பிட்ட சமூக, இன மற்றும் மத எல்லைக்குள் அடங்கிவிடுவது எனும் தவறான புரிதல் வேண்டாம். அதைத் தாண்டி தனித்த செயலால், ஆற்றலால், வாழ்வியலால் நம்மை மெருகூட்டிக் காட்டுவது எனப் பொருள் கொள்ள வேண்டும். அப்படி நாம் தனித்து மிளிரும்போது, இவர் என் ஊர், என் இனம், என் மதம் என்று சொந்தம் கொண்டாட ஒரு கூட்டம் வரும். அவர்களும் இன்னொருவர் பெற்ற அடையாளம் மூலம் தனக்கான அடையாளத்தை நிலைநிறுத்தப் பார்க்கிறவர்கள். அதைப் பற்றி நாம் கவலை கொள்ளாது, நமது அடுத்தக் கட்ட உயர்வை நோக்கித் தொடர்ந்து செல்வதே நல்லது.

தனக்கான ஓர் அடையாளத்தை இந்தச் சமூகத்தில் நிலைநிறுத்துவது எளிதான காரியமல்ல; அப்படியே ஒரு சிலர், பேரும் புகழோடும் பிறந்து விட்டாலும், அதை நிலைப்படுத்திக்கொள்வது இலேசுப்பட்ட காரியமல்ல. ‘பிறகு எப்படித்தான்?’ எனும் சலிப்பான கேள்வி வருகிறதா? வந்துதான் ஆகவேண்டும். அது ஒரு தொடர் பயணம்; அந்தத் தொடர் பயணத்தில் நாம் சற்று இளைப்பாறலாம், ஓய்வெடுக்கலாம். ஆனால், தூங்கிவிடவோ, தேங்கிவிடவோ கூடாது. அப்படி இருந்தால்தான் நமக்கான பயணத்தில் தொடர் வெற்றிபெற முடியும்.

இந்த உலகம் மனிதர்களின் ஓட்டப்பந்தயம் அல்ல; மாறாக, எலிகளின் ஓட்டப்பந்தயமாக மாறிவிட்டது எனப் பலர் சொல்லக் கேட்டிருப்போம், ஆம், உண்மைதான்! மனிதர்கள் ஒருவரை ஒருவர் கடந்துதான் ஓடுவார்கள். எலிகள் அப்படி அல்ல; தாவிக் கொண்டும், தவ்விக்கொண்டும் ஓடும். அதற்குத் தகுந்தபடி நம்மை நாமே தயார்படுத்திக் கொள்வது சாலச்சிறந்தது.

இந்த அடையாளம் எளிதில் எட்டக்கூடிய ஒன்றா? ஆம், எட்டக்கூடிய ஒன்றுதான். நம்மால் முடியாது என்று ஒதுக்குவதை அல்லது புறந்தள்ளுவதை யாரோ ஒருவர் மிகச் சிறப்பாகச் செய்து முடிக்கிறார் என்றால், ‘ஏன் நம்மால் முடியாது?’ எனும் வேகம் வந்தால், நமக்கான தேடலில் எந்த இடர்ப்பாடுகள், முட்டுக் கட்டைகள் வந்தாலும், அதையெல்லாம் அனுபவமாக எடுத்து தொடர்ந்து செல்லும்போது, நம் உயர்வுக்கான ஒளி நிச்சயம் கிடைக்கும். அந்த ஒளியை அணையாமல் தக்க வைப்பதில்தான் நமது தனித்திறமை அடங்கியுள்ளது.

இப்படிப்பட்ட அடையாளத்தை அடைய என்னென்ன செய்ய வேண்டும்? ‘நான் இன்றே இதை அடையப் போகிறேன்’ எனும் வேகம் வந்தால் நல்லதுதான். அதேநேரத்தில், நான் ஏற்கெனவே சொன்னது போல, இது ஏதோ ஒரே நாளில் எட்டிப் பறிக்கக் கூடிய கனியல்ல. ஆனால், என்றோ ஒருநாள் நாம் பறித்து உண்ணக்கூடிய கனிதான் என்பதில் சிறிதும் ஐயம் வேண்டாம். அந்த நம்பிக்கையோடு சிலவற்றை முறையாக, சரியாகக் கடைப்பிடித்தாலே போதும்; நாம் யாரென்று இந்த உலகுக்குக் காட்டிவிடலாம்.

‘இவற்றையெல்லாம் செய்து என்ன, இறுதியில் மண்ணுக்குள்தானே போகப்போகிறோம்’ எனும் தத்துவம் பேசிப் பயனில்லை. இந்த மண்ணில் இருக்கும் வரை வாழ்கிறோம் அல்லவா! அதுபோல உயர வேண்டும் எனும் எண்ணம் நமக்குள்ளே ஊற்றெடுக்க வேண்டும். அதுதான் நாம் நமது வாழ்க்கையை வாழ்வதற்கான முழு அர்த்தம். அதில்தான் ஓர் இலயிப்பும், உயிர்ப்பும் இருக்கும். இந்த இலயிப்பும், உயிர்ப்பும்தான் நம் முன்னேற்றத்திற்கான தொடர் தூண்டுதல்.

இது உண்மையா? ஆம், உண்மைதான்! எண்ணற்றோர் கண்டுணர்ந்த இந்த உண்மையை நாமும் கண்டுணர வேண்டும்.

‘எனக்கான ஒரு முன்னேற்றத்தை முன்னெடுக்க நான் தயார்! என்னவெல்லாம் செய்யவேண்டும் சொல்லுங்கள்’ எனும் வீரிய வேகம் வருகிறதா? வரட்டும்! நாம் இப்போது இருக்கும் நிலையில் இருந்து இன்னும் உயர் நிலைக்குச் செல்ல வேண்டும் என்று எப்போது நீங்கள் நினைக்க ஆரம்பித்து விட்டீர்களோ, அப்போதே அதற்கான வழிகளும் உங்களுக்குத் தெரிய வரும்.

ஒரு ஜப்பானிய பழமொழி ஒன்று உண்டு... ‘The Master will appear when the student is ready’. அதுபோல, நான் எனக்கான உயர்வை, முன்னேற்றத்தை அடைந்தே தீருவேன் எனும் தீர்க்கமான எண்ணம் உங்களுக்குள் வந்துவிட்டால், வருவதெல்லாம் வாய்ப்புகள்தான். நீங்கள் சந்திப்பதெல்லாம் முன்னேற்றங்கள்தான். நீங்கள் ஒரு திடமான தேடலோடு பயணிக்கும்போது, எதிர்வரும் தடைகள் உங்களுக்குத் தடை போட்டாலும், அதை எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களுக்குள் தானாகவே இருக்கும். ஏனோ தானோவென்று நாம் எடுத்து வைக்கும் அடியில் சிறு தடை வந்தாலும், அது நம்மை முடக்கிப் போட்டுவிடும். மொத்தத்தில், எவ்விதத்திலும், எந்தச் சூழலிலும் நம் மனம் தளராது, சென்றுகொண்டே இருக்க நம்மைப் பழக்கப்படுத்தப் பழக்கப்படுத்திக் கொள்வோம்.

வாழ்க்கையை வெறுப்பவர்கள் வலிகளைக் கூறுவர்; வாழ்க்கையை உணர்பவர்கள் வழிகளைக் கூறுவர். வாழ்க்கையை உணர்வோம், பிறரையும் உணர வைப்போம். 

தொடர்ந்து பயணிப்போம்...

Comment