மாற்றாந் தாயும் மாநில பட்ஜெட்டும்
‘வறுமையை ஒழித்துக்கட்ட இறுதி யுத்தம்’ என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு 2024-25-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை 19.01.2024 அன்று மக்கள் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதும், அடுத்த நாள் 20.01.2024 அன்று வேளாண் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. வழக்கம்போல் ஆளும் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வரவேற்பதும், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதும் காலம் கடந்து நடந்திடும் உண்மை. இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ச.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தாய்நாட்டையும், தமிழ் நாட்டு மக்களையும் நடத்துகிறது என்பதை உலகத் தமிழர்கள் அனைவரும் உணர்ந்து கொண்டிருப்பார்கள். பா.ச.க. ஆட்சி இல்லாத, மாநிலங்களில் அதுவும் குறிப்பாகத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு அனைத்து நிலைகளிலும் நெருக்கடி கொடுத்து, விழி பிதுங்கச் செய்து, ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்ற அளவிற்கு ஆட்சியாளர்கள் ஓட வேண்டும் அல்லது தனது காலில் விழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களை ஒடுக்கிப் பிழிய நினைத்த கீழ்க்காணும் இழிவான, தரங்கெட்ட, நான்காந்தர அரசியல் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
1) ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் நிதி வளத்தைத் தொடர்ந்து சுரண்டுகிறது. 2) சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) நமக்குத் தர வேண்டிய நியாயமான ஒதுக்கீடுகளையும் தர மறுக்கிறது. நம்முடைய வரிப்பணத்தைச் சுரண்டி பா.ச.க. ஆளும் மாநிலங்களுக்கு மலையளவு வழங்குகிறது, நமக்கோ தினை அளவு பிச்சை போடுகிறது. ஜி.எஸ்.டி. வரி வசூலில் இந்தியாவில் தமிழ்நாடுதான் முதலிடம் பெறுகிறது. அப்படியிருந்தும், நம்மிடமிருந்து வசூலிக்கின்ற ஒரு ரூபாய் வரியில் 03ரூ மட்டுமே நமக்குத் தருகின்றது. 3) மக்களின் வளத்தை, மேம்படுத்தத் திட்டங்கள் தீட்டி கடன் வாங்கத் தடை விதிக்கிறது. பா.ச.க. ஆளும் மாநிலங்களுக்கு தடை விதித்துக் கடன் வழங்குகிறது.
4) சென்னையில் ஏற்பட்ட ‘மிக்ஜாம்’ புயல், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத பேரிடர் இழப்புகளுக்குச் சல்லிக்காசு கூட வழங்காமல் வெட்டி வீராப்புப் பேசி வருகிறது. 5) ஆளுங்கட்சிக்கு எதிராக ஆளுநரை ஏவிவிட்டு, அடக்கு முறையைப் பயன்படுத்தி ஆட்சியை முடக்கப் பார்க்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க விடாமல் தடையாக நிற்கிறது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில்தான் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ஏழை, எளிய மக்களுக்கு, அடித்தட்டு மக்களுக்குப் பயன்படும் வகையில், அதிலும் முக்கியமாக தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்க ‘இறுதி யுத்தம்’ என்ற முழக்கத்தை முன்னெடுத்து ‘முதல்வரின் தாயுமானவர் திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, சமூகத்தில் விளிம்பு நிலையில் வாடும், வாழும் குடும்பங்களைக் கண்டறிந்து, எல்லா வகையிலும் அவர்களின் கஷ்டங்களைப் போக்கி, மாநிலத்தின் வறுமையை அடியோடு ஒழித்துக்கட்ட தொலைநோக்குப் பார்வையுடன் அரசு தனது இறுதி யுத்தத்தைத் தொடங்கியுள்ளது. ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்ற பெயரில் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஓர் இலட்சம் வீடுகள் தலா 3.50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டித் தரப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கியுள்ள 3.50 இலட்சத்தில் அலுவலர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள் சுரண்டியது போக பயனாளிகளுக்கு எவ்வளவு தொகை மிஞ்சும் என்பதுதான் புரியாத புதிர்!
நடப்புக் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட ‘புதுமைப் பெண்’ திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் கனவும் நனவாகி, இன்னும் பல இலட்சக்கணக்கான மாணவிகள் உயர் கல்வி பயில வாய்ப்பளித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அதே போல் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் மூலம் மாணவர்களின் உயர் கல்விக்கும் உயிரூட்டியிருக்கிறார் முதல்வர். ஆனால், இதில் கவனிக்கப்பட வேண்டிய, கணிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், வசதி படைத்த மாணவர்களுக்கு ஒரு ரூபாய் கூட கிடைத்திடக் கூடாது என்பதில் அரசு உறுதியாய் இருக்க வேண்டும். அதற்கான வழிகாட்டுதல் நெறி முறைகள் முறையான விதிகளுக்குட்பட்ட அரசாணை மூலம் பிறப்பிக்கப்பட வேண்டும். நிதிநிலை அறிக்கையின் தெய்வீகத் திட்டம் என்னவென்றால், மூன்றாம் பாலினத்தவர்கள் உயர் கல்வியைத் தொடர விரும்பினால், அவர்களுக்கான கல்வி, விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்கும் என்பதாகும்.
ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு ஏற்கிறதா? மறுக்கிறதா? என்பதற்கு ஆணித்தரமான பதில் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. முதலமைச்சர் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது அரசு ஊழியர் - ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நாள்களிலெல்லாம் அவர்களை நேரில் சந்தித்து, “திமுக ஆட்சிக்கு வந்ததும் நான் நிறைவேற்றுவேன்” என்று சொன்னவர், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 309, 313, 314, 318, 332 எண்களில் சுட்டிக்காட்டப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற எவ்வித அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை.
வேளாண் நிதிநிலை அறிக்கை
‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற முதல்வரின் அறைகூவலுடன் 42,281 கோடி ரூபாய்க்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறைந்த அளவு நிதிக்கு நிதிநிலை அறிக்கை தேவையா? என்ற கேள்வியும் மக்கள் மனத்தில் எழாமல் இல்லை.
ஆண்டாண்டு காலமாக விவசாயிகள் அழுது புலம்பும் ஆறுகளின் இணைப்புக்கு, குறிப்பாக காவிரி-குண்டாறு இணைப்புக்கு வேளாண் நிதி நிலை அறிக்கையில் வழிவகை சொல்லியிருக்க வேண்டும். நீர்வள ஆதாரத்தைப் பெருக்காமல், கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரைத் தேக்க நடவடிக்கை சொல்லாத அறிக்கை வீண். மக்களிடம் கவர்ச்சியை ஏற்படுத்த இம்மாதிரியான நிதிநிலை அறிக்கை உதவுமே தவிர, விவசாயம் செழிக்க, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வழியில்லை.
இரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விற்பனையாளர்கள் கொள்ளை இலாபத்திற்கு விற்பதைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைப் பற்றி அறிக்கையில் இல்லை. மண் மலடாவதற்கு முன், அதில் விளையும் தானியங்களையும், காய்கறி, கனி வகைகளையும் உண்டு மனிதர்கள் மலடாகிப் போவார்களோ என்கின்ற அச்சம் ஆட்டிப் படைக்கின்றது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து மூன்றாண்டு காலத்தில் விவசாயிகளுக்கென்று பயிர் காப்பீட்டுத் (Insurance) தொகை முழுமையாக வழங்கப்படவேயில்லை. ஒவ்வொரு சாகுபடி காலத்திலும் அரசால் நியமிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனம் விவசாயிகளிடமிருந்து பல்லாயிரம் கோடி பணத்தை காப்பீடு என்ற காரணம் காட்டி வசூல் செய்து மழை, வெள்ளத்தால், வறட்சியால் பாதிக்கப்பட்டாலும், காப்பீட்டுத் தொகை வழங்காமல் விவசாயிகளை நட்டத்திலும், நட்டாற்றிலும் விட்டுச் செல்கிறது. 1775 கோடி ரூபாய் பயிர்க் காப்பீட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. ஆனால், விவசாயிகளுக்கு வழங்கப்படுவதேயில்லை. ஒவ்வொரு வருடமும் பயிர் காப்பீட்டுத் தொகை முறையாக வழங்கப்படாத காரணத்தால் இந்த அரசின்மீது விவசாயிகள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்.
‘கடைசி விவசாயி’ என்ற திரைப்படம் தயாரிக்கும் அளவிற்கு விவசாயி தள்ளப்பட்ட பின், வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு என்ன தேவை? விளை நிலங்கள் கூறு போட்டு, கூவிக் கூவி விற்கப் படுகையில், அதைத் தடுப்பதற்கு வேளாண் அறிக்கை வழி சொல்லவில்லை. நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க வேளாண் அறிக்கை வழிவகை சொல்லவில்லை.
இன்னும் இருபது ஆண்டுகளில் தலைமுறை இடைவெளி ஏற்பட்டு விவசாயம் அழிந்துவிடுமோ? என்ற அச்சத்தையும் போக்கிட வேளாண் அறிக்கை வழிகாட்டவில்லை.
விவசாயிகள்தான் இந்த நாட்டின் ஆணி வேர் என்பதை வேளாண் அறிக்கை உணர்த்தவில்லை.
‘நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’
என்ற ஒளவைப் பிராட்டியின் கனவும்,
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுஉண்டு பின்செல் பவர்’ (குறள் 1033)
என்ற வள்ளுவரின் வாக்கும் எப்பொழுது நிறைவேறும்?
Comment