No icon

அருள்பணியாளர் தந்தை அமுதன் அடிகளாருடன் ஒரு நேர்காணல்

தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள ஜி.யு.போப் விருதைப் பெற்ற முதல் அருள்பணியாளர் தந்தை அமுதன் அடிகளாருடன் ஒரு நேர்காணல்.

தந்தையே, ‘நம் வாழ்வு’ வாசகர்கள் சார்பாக உங்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் ஜி.யு.போப் விருது பெறுவதாக அறிவிப்பு வந்தபோது தங்களின் மனநிலை எப்படி இருந்தது?

“இந்த விருது எனக்குக் கிடைத்ததை நினைத்து வியப்பாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. என் நண்பர்களில் ஒருவர் அலைபேசியில் வாழ்த்துக் கூறிய பின்புதான் எனக்குத் தெரிய வந்தது. மிகச் சிறந்த தமிழ்நாடு அறிஞர்களுக்கான விருது இது. 17 பிரிவுகளின் அடிப்படையில் தமிழ் வளர்ச்சிப் பணிக்காகத் தமிழ்நாடு அரசு வழங்கும் விருதுகளில் ஒன்று. அதில் எனக்கு ஜி.யு. போப் விருது கிடைத்திருக்கிறது. இதனைப் பெற்ற முதல் அருள்பணியாளர் நான் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலம் இன்றைய அருள்பணியாளர்கள் மற்றும் நம் முன்னோர்கள் செய்த இலக்கியப் பணிகளைப் பற்றி பிறர் அறியவும், அதனை எடுத்துக் கூறவும் கிடைத்த வாய்ப்பாகவே இந்த விருதை நான் கருதுகிறேன்.”

நீங்கள் பெற்ற இந்த விருதின் பாராட்டு நிகழ்வு பற்றிக் கூறுங்களேன்...

“சென்னை மூவேந்தர் அரங்கத்தில் பிப்ரவரி திங்கள் 22-ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பாக விழா நடை பெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாகத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு சுவாமிநாதன் பரிசு வழங்கி அனைவரையும் கௌரவித்தார். ஒன்றரை பவுன் தங்கப் பதக்கமும், இரண்டு இலட்சத்திற்கான காசோலையும், முதலமைச்சர் கையெழுத்திட்ட பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. உ.வே.சா. விருது, அம்மா விருது, ஒளவையார் விருது, தமிழ் விருது போன்ற 17 பட்டியலின் கீழ் 24 பேர் என்னோடு சேர்ந்து விருது பெற்றார்கள். தமிழ்ச் செம்மல் விருதில் சுமார் 25 பேர் பெற்றனர். அவர்களில் சில கிறிஸ்தவர்களையும் கண்டது மகிழ்ச்சியாக இருந்தது. நாம் செய்யும் திருப்பலி, சடங்குகள் போன்றவற்றால் நாம் வெளிநாட்டவர் எனும் எண்ணத்தை இதுபோன்ற பணிகள் மூலம் நாம் உடைக்க முடியும் என நான் நம்புகின்றேன்.”

நாம் அனைவரும் முதலில் தமிழர்கள்; பின்புதான் நாம் கிறிஸ்தவர்கள். நமது சமயம் பெரும்பாலும் நமது கலாச்சாரத்தோடு தொடர்பு கொண்டது. தமிழ் மொழி வளர்ச்சிக்கு நம்முடைய கிறிஸ்தவர்களின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என எண்ணுகிறீர்கள்?

“நமது பங்குகள், பள்ளிகள், மருத்துவமனைகளில் நாம் காட்டும் ஆர்வம் மற்றும் அக்கறையைப் பண்பாட்டுத் துறையில் நாம் காட்டுவதில்லை.

என் குருநாதர் தனிநாயகம் அடிகளார் அவர்கள் தமிழறிஞர், தமிழுக்காக உழைத்தவர். அது மட்டு மல்ல, தமிழ் மொழி சிறப்பின் உண்மை வெளிப்பட அதன் வரலாறு மற்றும் பண்பாடும் அவசியம். உலக மற்றும் மானுட முன்னேற்றத்திற்கு அனைவரும் உழைக்கின்றோம். அதில் நமது பங்களிப்பைப் பற்றி யாரும் குறைவாக மதிப்பிடக்கூடாது என்பது அவரது கருத்து. இவை நான் உரோமையில் படிக்கும்போது அவரிடமிருந்து கற்றவை. சிறப்பாக, கிறிஸ்தவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணியை எடுத்துரைக்க வேண்டும்.

1706-இல் தரங்கம்பாடிக்கு வந்து அச்சுப் பணியை முதன்முதலில் தமிழகத்தில் நிறுவியவர் சீகன் பால்கு என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், 1578-லேயே ‘தம்புரான் வணக்கம்’ எனும் நூல் அச்சிடப்பட்டிருந்தது; இது பலரும் அறியாத உண்மை. இதுபோல் வீரமாமுனிவர் ‘சதுர கராதியை’ எழுதினார். இது நான்கு அகராதிகளுள் ஒன்று. அவர் தமிழ் அகராதி, இலத்தீன் அகராதி போன்றவைகளையும் எழுதினார். இதுபோன்ற உண்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்ல ஆய்வுக் கட்டுரைகள் வழியாகவும், உலகத் தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடு, பல்கலைக்கழகக் கருத்தரங்குகள் போன்று கிடைக்கும் வாய்ப்புகளில் அவற்றைப் பற்றிப் பகிர்ந்து வருகிறேன். இது தமிழுக்கான தொண்டு மட்டுமல்ல; மாறாக, மனிதர்களுக்கான தொண்டு. இத்தகைய பணிகளை நாம் எல்லாருமே மேற்கொள்ள வேண்டும். நமது பங்களிப்பு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும்.”

முதல் கத்தோலிக்க அருள்பணியாளராக இந்த விருதினைப் பெற்றுள்ள நீங்கள், இந்நேரத்தில் நன்றியுணர்வோடு எண்ணிப் பார்ப்பது என்ன?

“முதலில், ஆதியும் அந்தமுமாக இருக்கும் இறைவனுக்கு நன்றி! அடுத்தது, எனக்குத் தமிழ்க் கல்வி ஊட்டிய என் தாத்தா. இரண்டாவது, தனி நாயகம் அடிகளார். அவரே எனது வாடிக்கையான வாழ்விலிருந்து நான் வெளியே வரவும், அருள்பணியாளராகவும் வழிகாட்டியவர். இவர்கள் இருவரையும் இந்நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். அடுத்து என்னைப் படிக்க வைத்து, பல வாய்ப்புகளைக் கொடுத்த எனது தஞ்சை மறைமாவட்டம். முக்கியமாக, தஞ்சாவூர் முதல் ஆயர் மேதகு ஆரோக்கியசாமி சுந்தரம் அவர்கள்.”

உரோமையில் படிக்கும் வேளையில் வத்திக்கான் வானொலி வழியாகவும் தமிழ்ப் பணி செய்ய உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பையும், அதில் உங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் பற்றியும் கூறுங்களேன்...

“உரோமையில் படித்துக் கொண்டிருந்தபோது திருச்சியைச் சார்ந்த அருள்பணி. ஜே.எம். ஸ்தனிஸ் லாஸ் மற்றும் ஊட்டி மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்பணி. அல்போன்ஸ் மணி ஆகிய  இருவரும் என்னை அழைத்ததால், நானும் இணைந்து செய்தேன். நாளடைவில் அவர்கள் படிப்பின் காரணமாக இயலாத சூழலில், நான் பொறுப்புடன் எடுத்துச் செய்தேன். அது வாரத்திற்கு இருமுறை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். அதற்கு வியாகுல அருள்கன்னியர்களுள் ஒருவர் மொழிபெயர்க்க, மற்றொருவர் தட்டச்சு செய்வார். இவ்வாறு நாங்கள் இணைந்து சிறப்பாக அப்பணியைச் செய்தோம்.”

தமிழ் மற்றும் எழுத்து மீதான ஆர்வம் உங்களிடம் எப்போது வளர்ந்ததாக உணர்கிறீர்கள்?

“சிறுவயது முதலே என் தாத்தாவிற்குக் கண் தெரியாததால் வாசித்துக் காட்டுவதன் வழியாகவும், கவிதை எழுதும் ஆர்வம் கொண்டு எழுதியதாலும் தமிழ் ஆர்வம் வளர்ந்தது. பின்பு மறைமாவட்டத்திலும் எனது திறமையை வளர்க்கும் விதமாய் இதழியல் மேற்படிப்பு படிக்க உரோமைக்கு அனுப்பப்பட்டேன். அதன் நீட்சியாகவே அங்கும் கிடைத்த வாய்ப்புகள் சிலவற்றைப் பயன்படுத்தினேன். அருள்பணி. சுந்தரம் சுவாமி அவர்களின் ஓய்வு நிறைவில் ‘நெஞ்சில் நிறைந்தவர்’ எனும் நூலை எனது நன்றிக்கடனாக எழுதினேன்.”

வேளாங்கண்ணி குரலொலி’ இதழ் வாயிலாகத் தங்களின் இதழியல் பங்களிப்பு எவ்வாறாக இருந்தது?

“1953, செப்டம்பர் மாதம் ‘வேளாங்கண்ணி குரலொலி’ எனத் தமிழிலும், ‘வேளாங்கண்ணி காலிங்’ என ஆங்கிலத்திலும் இதழ்களைத் தஞ்சை ஆயர் துவங்கினார். அதில் நான்காவது ஆசிரியராகப் பத்து ஆண்டுகள் பணி செய்தேன். அதன்வழி பக்தி என்பது வார்த்தையோடு மட்டும் நின்றுவிடாமல், செயல்வடிவம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். பக்தியை மட்டுமே பரப்புவதை விடுத்து, திரு அவை நடப்புகள், பிரச்சினைகள் பற்றியும் சிந்திக்க அழைக்கும் வகையில் வழிநடத்தினேன். அதனால் பிரதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பாக இருந்தது.”

உங்களின் எழுத்துப் பணியின் தற்போதைய மற்றும் எதிர்கால இலக்கு என்ன?

“கிறிஸ்தவர்களும் இந்நாட்டு மக்கள்தான் என்பதை இலக்கியம் மற்றும் இலக்கிய ஆராய்ச்சிகள் வழியாக வலியுறுத்துவதே என் முதல் இலக்கு. தற்போது எனக்கு 81 வயதாகிறது. இப்போதும் என் எழுத்துப் பணிகளை முடிந்தளவு முயற்சிக்கின்றேன். வீரமாமுனிவர் பிறந்த ஊரில் தங்கி அவரைப் பற்றி எழுதினேன். பின் தஞ்சாவூரிலும், புனித அருளானந் தர், அவர் தமிழ் மொழிக்கு ஆற்றியுள்ள பணிகளை ஆராய்ச்சி செய்து எழுதி வருகின்றேன். கிறிஸ்தவர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய பணிகளை அனைவரும்  அறிந்துகொள்ள வேண்டுமென்ற நோக்கோடு எழுதி வருகின்றேன்.”

எழுத்துப் பணியை வளர்க்க தமிழ்நாடு திரு அவை எடுக்க வேண்டிய முயற்சிகளாகத் தாங்கள் கருதுபவை?

“இறைவார்த்தையும், அதை அறிவிக்கும் பணிகளும் நமக்கு உண்ணும் உணவாக நாளும் இருக்க வேண்டும். மக்கள் முழுமையாகச் சமூக ஈடுபாடு கொள்ளவும், அது செயலாக்கம் பெறவும் நமது பங்களிப்பு மற்றும் வழிகாட்டுதல் இருந்தால்தான் அது பொருளுடையதாக இருக்கும்.”

பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் ‘நம் வாழ்வு’ இதழுக்கும், வாசகர்களுக்கும் தங்களின் பரிந்துரை?

“‘நம் வாழ்வு’ பொதுமக்களுக்கான இதழாக இருப்பது பாராட்டுக்குரியது. அனைத்து மக்களும் பயன்பெறும் விதத்தில் சமூக, அரசியல், வாழ்வியல் வழிகாட்டி என அனைத்துத் தளத்திலும் இடம் பெறுகின்றது. மேலும், அது திரு அவை கோட்பாடுகளை மட்டுமே உள்ளடக்கியதாக, குறுகிய வட்டமாக இல்லாமல், அனைத்துத் தரப்பினரும் பயன்பெறவும், ஈடுபடவும், கவிதை, கட்டுரை, இலக்கியப் படைப்புகள் எனப் படைப்பாற்றலோடு அழகுருவம் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. அது இன்னும் வலுப்பெற வேண்டும். பொதுநிலையினரை இன்னும்  ஊக்குவிக்கும் விதமாக ஒருங்கிணைந்த திரு அவையாக அது தொடர்ந்து பயணிக்க வேண்டும். இன்னும் பல நூறு ஆண்டுகள் தமிழ்ச் சமூகத்திற்கு ‘நம் வாழ்வு’ ஆற்றும் இதழியல் பணி தொடர வேண்டுமென வாழ்த்துகிறேன்.”

இளைய தலைமுறையினருக்கு தங்களது ஆலோசனை...

“ஆழ்ந்த ஞானமுள்ள  மகான்களாக ஆசிரியர்களும், மாணவர்களும் உருவாகி வளர வேண்டும். உண்மையுடனும், நேர்மையுடனும் சான்று பகரும் தன்மையை வளர்த்தல் வேண்டும். மதிப்பிடுதல் தரமானதாக இருத்தல் வேண்டும். முழுமையான வளர்ச்சியுடன் புதிய தலைமுறை உருவாக வேண்டும். இளையோர் தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம், இலக்கிய வளம், மொழிப்புலமை மற்றும் மொழிப் பயன்பாடு இவற்றில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். செம்மொழித் தமிழ் என்றும் சிங்கார அரியணையில் அமர்ந்திருக்க தமிழ்த்தொண்டு செய்திடல் வேண்டும்; இளைய தலைமுறை அத்தகைய பணிகளை முன்னெடுக்க வேண்டும்.”

இறுதியாக, தந்தையே...  உங்கள் தமிழ்த் தொண்டு பல இளையோருக்கு வழிகாட்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. உங்கள் பணிசிறக்க ‘நம் வாழ்வின்’ வாழ்த்துகளும், செபங்களும்!

Comment