No icon

சென்ற இதழ் தொடர்ச்சி

இயேசுவின் இறுதி 7 வாக்கியங்கள்

ஐந்தாவது வாக்கியம்

இயேசுவே! வற்றாத ஜீவ நீரூற்றே! வறண்ட பாலை நிலமும் அதிசயமாய் நீர் சுரக்கச் செய்பவரே! மீட்பருளும் தண்ணீரை அனைவரும் பருக, வருக, வருக எனப் பெருங்குரல் எழுப்பி அழைப்பவரே! பருகுவோர் உள்ளத்தின் ஆழத்திலிருந்து, உயிர் தரும் தண்ணீர் வற்றாத நீரோடையாய்ப் பெருக்கெடுத்தோடச் செய்யும் அருட்சுனை ஆனவரே! சமாரியப் பெண் உம்மிடம் உயிருள்ள தண்ணீர் கேட்டார். தூய்மைப்படுத்தி அருள் வாழ்வில் இணைக்கும் உம் தூய இதயத்தின் ஆவியே, அந்த உயிருள்ள தண்ணீர் என அறிந்து நம்பினார்.

கன்னித்தாய், அன்புச்சீடர், பணிவிடை புரிந்து சிலுவையடியில் நிற்கும் பெண்கள், திருந்திய கள்வன்... இவர்கள் போல் எல்லாரும் உம்மைச் சிலுவையில் பார்த்து, உம் தூய இதயம் சிந்தப் போகும் இறுதித் துளி தண்ணீரைப் பருகி, ஆவியானவரின் அருள் மழையில் நனைந்து, உம் மீட்பின் சாட்சிகளாய் உலகெங்கும் செல்ல வேண்டும் என்ற தாகம், தணியாத தாகமாய், உமக்குள் இருப்பதை வெளிப்படுத்தி, தாகமாய் இருக்கிறது” என்றீர்.

 ஆறாவது வாக்கியம்

மீட்படையத் தாகிப்போரைத் தேடித் தேடி, தாகம் தாகமெனக் கதறும் என் மீட்பராம் இயேசுவே! எல்லார்க்கும் எல்லாம் ஆனவரே! நாடுவோர் இதயத்துள் தங்கி, பசி தாகம் தீர்ப்பவரே! கைநெகிழ்ந்தார் தந்தை, அதை அறிந்தான் சாத்தான் தந்தையைப் பழிக்க! மீட்புத் திட்டத்தைக் கைகழுவத் திட்டமிட்டு, உம்மைத் தாகத்தால் துடிதுடித்துச் சாகும்படி வதைத்தான். நீரோ தந்தை அன்பில் நிலைத்தே நின்றீர்! தணியாத் தாகத்திலும் தந்தை அன்பில் நிலைத்து நிற்க அனைவருக்கும் ஊக்கம் தந்தீர். சிலுவையில் அதற்கு முன்மாதிரி அளித்தீர்.

அம்மா! சிலுவையின் அடியில் நின்று வியாகுலங்களை நிறைக்கும் ஆறுதலின் அம்மா! விண்ணவரை மன்னவராய்ப் போற்றி, உம் திரு உதிரத்தால் வளர்த்த தியாகத் திரு உருவே அம்மா! இறை மகனை ஏழையாய், ஏழ்மையின் பிறப்பிடமாய் எளியக்குடிலில் நன்மனமுடன் பெற்றெடுத்த இறைவனின் தாயே! படுகொலைக்குப் பயந்தோடி, எகிப்தில் அவரை அகதியாய் காப்பாற்றி வளர்த்த விவேகம் நிறைந்த அம்மா!

நாசரேத்தில் நம்பிக்கை நாயகனாய் நடத்தி, ஆலயத்தில் பெரியோர்க்குப் போதிக்கும் சிறுவன் சேசுவாக்கி, எத்திக்கும் எதிர்பார்க்கும் மெசியாவாய் வழியனுப்பி, நற்செய்திப் பணி வாழ்வில் அவருக்குத் துணை நின்று, நற்செய்தி போதிக்கும் யாவர்க்கும் துணை நிற்கும் வரம் பெற்ற அம்மா! மெசியாவின் பாடுகளை இறைவாக்கு ஒளியில் எதிர்பார்த்த ஞானத்தின் இருப்பிடமான அம்மா!

கொலைக்களக் கல்வாரியைத் தம் தூய இரத்தத்தால் புனிதப்படுத்தி, அவமான சின்னமாம் சிலுவையை மீட்புச் சின்ன சிலுவையாக்கத் தாகித்த இயேசு, கைவிடப்பட்டவராக, சிலுவையில் தாகிக்கும் இந்த நேரத்தில், அம்மா! நீரும் கைவிடப்பட்டவராக, மகனுக்குத் தாகசாந்தி கொடுக்க இயலாதவராக, சிலுவையின் அடியில் நின்று, அனைவருக்கும் இன்று அடைக்கலம் அருளும் அம்மா!

நீரும், பெண் சீடர் குழுவும் கண்ணீர் வடிக்கும் பரிதாபக் கோலம் கண்டு, ‘என் சீடர் என்பதற்காக, இவர்களுள் ஒருவருக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறுவான்’ என்றுரைத்த இயேசுவுக்குத் தண்ணீர் கொடுப்பதற்காக ஓடினான் படைவீரன் ஒருவன்;  கடற்பஞ்சைக் கையிலெடுத்தான், ஈசோப்புத் தண்டில் அதைப் பொருத்தினான். புளிப்பேறியத் திராட்சை இரசத்தில் அதைத் தோய்த்தான்; உயர்த்தினான். இயேசுவே! அதை உம் நாவில் வைத்தான். கைம்மாறு பெற்றவனானான். இயேசுவே, நீரோ அதைச் சுவைத்தீர். “எல்லாம் நிறைவேறிற்று” என்றீர்.

ஏழாவது வாக்கியம்

இப்போது விடப்போகும் மூச்சே இறுதி மூச்சு என்றுணரும் இயேசுவே! ‘வானகம் விட்டேன், வையகம் வந்தேன். இறை-மனித இணைப்பாளராய் செயல்பட்டேன். தந்தையே! உலகில் நீர் தேர்ந்து, என்னிடம் ஒப்படைத்தவர்களைத் தீயோனிடமிருந்து விடுவித்துப் பாதுகாத்தேன். என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள இறைவாக்குகளை நிறைவேற்றினேன். கசப்புக் கலமான பாடுகளின் பாத்திரத்தில், இறுதித் துளிவரை பருகிவிட்டேன். மீட்புத் திட்டத்தை முழுமையாய் நிறைவேற்றிவிட்டேன்’ - இவ்வாறு தந்தையிடம் பேசி, துடிப்பினை நிறுத்தித் துளையுறப் போகும் உம் தூய இதயத்தைத் திடப்படுத்தினீர்.

இமைக்கும் இமைகளை அகலத் திறந்தீர். மங்கும் விழிகளால் சிலுவை முன்னால் கண்ணீர் வடிக்கும் அனைவரையும் கண்டீர், கருணை கொண்டீர். ‘நீரே மெசியா, நீரே இறைவன், நீரே இறைமகன், நீரே இறைவனிடமிருந்து வந்தவர்’ எனப் போற்றுவோரின் இதயக் குரலைக் கேட்டீர். அனைவரையும் ஒன்றுபடுத்தி, புது வாழ்வருளும் உன்னதக் குருவாய் ஒளிர்வதற்காக, வானகத் தந்தையின் திருத் தூயகத்தில் நுழையும் நேரம் வந்தபோது, இமைக்கும் இமைகளை இறுகமூடி, இறுதி மூச்சை இழுத்து, தந்தையே! உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன்’ என்றே உரக்கக் கூவி உயிர் துறந்தீர்.

மாசற்ற செம்மறியான இயேசுவே! பாஸ்காப் பெருவிழாவில் பலியாகி உம் தூய இரத்தத்தால் மனுக்குலப் பாவக் கறை கழுவி உயர்ந்த உன்னதக் குருவாய் வானகத் தந்தையின் திருத்தூயகத்தில் நுழையும் புனிதமான நேரமதை, தேவாலயத் தூயாதித் தூயகத் திரை தானாய் அதிசயமாய்க் கிழிந்து திறந்து அறிவிக்கச் செய்தீர்.

உலகை அழித்து, வாழ்வோர் இறந்தோரை நடுத்தீர்க்க மாட்சியுடன் வரவிருக்கும் இறையரசுத் தலைவா! கதிரவன் இருண்டு, நிலம் அதிர்ந்து, கற்பாறைகள் பிளந்து, கல்லறைகள் திறந்து, மரித்தோர் உயிர்த்து, உலக முடிவின் நிகழ்ச்சிகளிதனை ஒரு நொடிப்பொழுதினுள் நிகழ்த்தி, உலக முடிவில் இவை மீண்டும் நடைபெறும் என எம்மை நம்ப வைத்து, உலக முடிவில் உமது பேரின்ப வாழ்வைப் பெற ஆயத்தமாய் வாழும்படி அருள் அடையாளம் தந்துள்ளீர்.

சிலுவையில், மூன்றாணிகளுள் முடங்கி, மூன்று மணி நேரமாய் நீர் உரைத்ததோ உயிர்தரும் ஏழே ஏழு வாக்கியங்கள். வேதனை தாங்கும் வேளையிலும், அளவோடு பேசி, அறிவுக்கு விருந்தாகி, உயிருக்கு ஊட்டமாகி, மறை உண்மைகளின் விளக்கமாகி, அழியா வாழ்வின் அமுதாகி, எம்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்தி, உம் இரண்டாம் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கச் செய்துள்ளீர்.

வாழ்வின் சிலுவைகளை அனுதினமும் சுமந்து, முழு மனத்துடனே சிலுவை வழியில் உம்மைப் பின் தொடர்ந்து, உலகில் உம் திருவுளமதனை நிறைவேற்றி, உம் மீட்பின் பலன்களை யாம் பெற்று, இறுதியில் உம்மைப்போல் எம் ஆன்மாவை விண்ணகத் தந்தையின் கையில் ஒப்படைத்து, உமது பேரின்ப வாழ்வில் வந்து சேர வரம் அருள வேண்டும் என்று ஆணி பதிந்த உம் திருப்பாதங்களில் எம் முகம் பதித்தே வேண்டுகின்றோம் -ஆமென்.

Comment