No icon

வாழ்வு வளம் பெற 16

‘இல்லை’ என்று சொல்ல...

அருளாளர் பட்டத்தை வெல்ல அப்படி என்ன செய்தார் ஜோசஃப் மெயர் நுசர்? சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர் இவர். ஆஸ்ட்ரோ-ஹங்கேரியப் பேரரசில் இருந்த தெற்கு டிரோல் எனும் மாநிலத்தில் வாழ்ந்தவர். அந்தப் பேரரசு வீழ்ந்தபோது, அதன் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, எல்லைகள் மாற்றப்பட்டன. தெற்கு டிரோல் பகுதியை இத்தாலி நாட்டிற்குத் தாரைவார்த்தது பேரரசு.

இராணுவத்தில் இருந்த தந்தை இறந்து விட்டதால், தாயால் வளர்க்கப்பட்ட ஜோசஃப் மெயர் மிக நல்ல கத்தோலிக்க இளைஞனாக வளர்ந்தார். குடும்பப் பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டே சமூகப் பணிக்கு அதிக நேரம் ஒதுக்கினார். நோயுற்றோரையும், முதியோரையும் சந்திப்பது, ஏழைகளுக்கு உதவுவது என்று அலைந்தார்.

ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லர் ஜனநாயக முறையில் அதிபர் பதவியைக் கைப்பற்றி, அதன் பின் மக்களாட்சியை முற்றிலுமாக ஒழித்து விட்டு, தன் நாட்டு மக்கள் தன்னைப் பார்த்து பயந்தே தன் ஆணைகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு செயல்படும் விதத்தில் காய் நகர்த்தினான். அதே வேளையில் முசோலினி எனும் சர்வாதிகாரி இத்தாலி நாட்டை ஆள வந்தான்.

ஜோசஃப் மெயரின் திருமணம் 1942-இல் நடந்தது. அடுத்த ஆண்டே முசோலினியின் ஆட்சி கவிழ்ந்தது. உடனே இவர் வாழ்ந்த தெற்கு டிரோல் பகுதியை ஜெர்மனி கைப்பற்றி, அங்கு வாழ்ந்த இவரைப் போன்ற இளைஞர்களை எல்லாம் வலுக்கட்டாயமாக இராணுவத்தில் சேர்த்தது.

அப்படிச் சேர்க்கப்பட்ட இளைஞர்கள் எல்லாம் ‘நாஜி’ கருத்தியலை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.  சில நாள்களில் ‘ஹிட்லருக்கு முற்றிலும் பிரமாணிக்கமாக இருந்து, அவனது கட்டளைகளை எல்லாம் நிறைவேற்றுவோம்’ என்ற வாக்குறுதியை எடுக்குமாறு வற்புறுத்தப்பட்டார்கள்.

ஜோசஃப் மெயர் தன் கையை உயர்த்தி ‘என்னால் முடியாது’ என்று சொன்னார். ‘மனிதர் ஒருவருக்குப் பிரமாணிக்கமாக இருந்து, அவர் சொல்வதை எல்லாம் செய்வேன் என்று வாக்குறுதி அளிக்க எனது கத்தோலிக்கக் கிறிஸ்தவ சமயம் அனுமதிப்பதில்லை’ என்று உரக்கச் சொன்னார். சொன்னதை எழுதித் தருமாறு கேட்டான் தளபதி. தயக்கமின்றி உடனே அமர்ந்து, தான் சொன்னதை எழுதிக் கொடுத்தார். அன்று மாலையே அவரைக் கைது செய்து, வதை முகாமில் அடைத்து, பட்டினி போட்டுத் துன்புறுத்த, ஜோசஃப் மெயர் இறந்தார்.

‘இல்லை, இதை ஏற்க மாட்டேன்’ என்று அவர் உறுதியாக மறுத்ததுதான் அவரை இப்போது வணக்கத்திற்குரிய அருளாளராக ஆக்கியிருக்கிறது.

வாழ்வில் சில வேளைகளில் ‘இல்லை, நான் ஏற்க இயலாது, பணிய மாட்டேன்’ என்று மறுக்கத் துணியும் மனம் வளமான வாழ்க்கைக்கு அவசியம். இது இல்லை என்றால், நம் வாழ்க்கை திசை மாறி, திண்டாடி சிதைந்து போகும்.

“சும்மா ஜாலிக்குத்தான் இருப்போம்; நாங்கள்லாம் நண்பர்களாகச் சேர்ந்து, விருந்து முடிஞ்சதும் புகை பிடிப்போம். இந்தாங்க சிகரெட்! விலையுயர்ந்த அயல்நாட்டு சிகரெட்! எடுத்துக்கங்க!” என்று ஒருவர் சொல்லும்போது, நமது பதில் என்னவாக இருக்க வேண்டும்?

“இந்த மாதிரி விருந்துகள்ல நீ மது அருந்தலன்னா, உன்னை எல்லாரும் ஒருமாதிரி பார்ப்பாங்க. சும்மா குடி! ஒண்ணும் ஆயிடாது. குடிக்கறவன் எல்லாம் குடிகாரன் ஆகறதில்ல. கமான்!” என்கிறான் நண்பன். நாம் என்ன சொல்வோம்?

“இங்க பாரு, நீ என்ன மகானா? பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கியே? இந்த அலுவலகத்துல இருக்கிற எல்லாரும் காசு வாங்குறோம். இதுக்குப் பேரு இலஞ்சம் இல்ல. அவங்கக் கேட்டு வர்ற காரியத்தை நாம கச்சிதமா செஞ்சு குடுக்கறதுக்கு, அவங்க தர்ற டிப்சுதான்” என்கிறார் சக பணியாளர். நமது பதில்?

இந்த மூன்றில் முதல் இரண்டும் ஆபத்தானவை. உடல் நலத்தையும், உள்ள நலத்தையும் கெடுப்பவை. மூன்றாவது, அறத்திற்கு எதிரான, நேர்மைக்குப் புறம்பான ஒரு தவறு.

இதுபோன்ற தருணங்கள் வரும்போதெல்லாம் ஒருகணம் சுதாரித்துக் கொண்டு, மனத்திற்குள் அமைதியாய் கடவுளின் அருள் கேட்டு, நிதானமாய் உறுதியாய் ‘இல்லை. மன்னிக்கவும். நான் புகைப்பதில்லை. நான் மது அருந்துவதில்லை. நான் இலஞ்சம் வாங்குவதில்லை’ என்று சொல்வதே மன நிம்மதிக்கும், நிறைவுக்கும் இட்டுச் செல்லும்.

இப்படித் தவறாக எதுவும் இல்லாத வேளைகளில் கூட நம்மால் இயலவில்லை, நமக்குப் பிடிக்கவில்லை என்றால், ‘இல்லை, முடியாது, மன்னிக்கவும்’ என்று சொல்லும் நிதானமும், முதிர்ச்சியும் வளமான வாழ்க்கைக்கு அவசியம்.

மகனின் பிறந்த நாள். இந்த நாளை எதிர்பார்த்துப் பல நாள்களாக மகன் காத்திருந்தது தெரியும். நண்பர்களையெல்லாம் ஆசையாக அழைத்திருக்கிறான். “இங்க பாருங்க, இன்னைக்கும் லேட்டா வராதீங்க. பிள்ளை ஏமாந்திடுவான். சாயந்திரம் ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வரப் பாருங்க” என்று மனைவி பலமுறை சொல்லியிருக்கிறாள். மாலை ஐந்து மணிக்குக் கிளம்பி விடலாம். ஆனால், இந்த வேலையை முடித்துவிட்டுப் போகலாம் என்று முனைப்பாய் இருந்ததால் மணி 5.30 ஆகிவிட்டது. எழுந்திருக்கும் வேளையில் அதிகாரி வந்து, ‘இது ரொம்ப அவசரம். இதை முடிச்சுக் குடுத்துட்டுப் போங்க, ப்ளீஸ்’ என்கிறார். இந்த வேளையிலும் ‘சாரி சார். இன்று மகனின் பிறந்த நாள். ஏற்கெனவே அரை மணிநேரம் தாமதமாகி விட்டது. நான் கிளம்ப வேண்டும். நாளை பார்ப்போம்’ என்று சொல்லும் பக்குவமும், பொறுமையும் இருந்தால்தான், உங்கள் உறவுகள் செழிக்கும். மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். உங்கள் உயர் அதிகாரிக்குக் கூட உங்கள் மேல் மதிப்பு உயரும்.

பள்ளியை ஆய்வு செய்ய பள்ளி ஆய்வாளர் வந்து வகுப்பறைக்குள் நுழைந்து விட்டார். கலக்கத்தோடு ஆசிரியர் பின்னே நிற்கிறார். மாணவர்களின் முன்னால் ஆய்வாளர் நின்று, ஒன்றன்பின் ஒன்றாக ஆங்கிலச் சொற்களைச் சொல்கிறார். அவர் சொல்லும் சொற்களைப் பிழையின்றி மாணவர்கள் எழுத வேண்டும்.

தனக்குக் கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்ற ஆதங்கத்தில், ஆசிரியர் மாணவர்கள் எழுதுவதைப் பார்த்துக்கொண்டே வருகிறார். ஒரு மாணவனின் ஏட்டில் இருந்த எழுத்துப் பிழைகளைப் பார்க்கிறார். அவனுக்கு அருகில் இருக்கும் மாணவன் பிழையின்றிச் சரியாய் எழுதுவதைப் பார்க்கிறார். ஆய்வாளர் வேறு பக்கம் பார்த்தபோது, சைகையால் தப்புத்தப்பாய் எழுதும் மாணவனிடம், அருகில் இருக்கும் மாணவனின் ஏட்டைப் பார்த்து எழுதுமாறு உணர்த்துகிறார். அந்த மாணவன் பணிவாக, ஆனால் உறுதியாக, ‘இந்தத் தவறை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்’ என்கிறான். அந்த வயதிலேயே அத்தனை உறுதியோடு செயல்பட்ட அவன், பின்பு மகாத்மாவாக, தேசத்தந்தையாக உயர்ந்ததில் வியப்பென்ன இருக்கிறது!

நம்மில் பலரிடம் இந்த உறுதி இல்லாமல் போவதற்கு என்ன காரணம்? அவர்கள் செய்யுமாறு தூண்டுகிற தவறைச் செய்வதால் கிடைக்கும் இலாபங்களின் ஈர்ப்பே பலரை வீழ்த்தி விடுகிறது. ‘எல்லாரும்தானே செய்கிறார்கள்?’ என்று சாக்குப்போக்குச் சொல்லி சிலர் மனத்தை அமைதிப்படுத்திக் கொள்கிறார்கள். ‘தயக்கம் ஏதுமின்றி இத்தனை பேர் செய்வதை, நான் செய்ய மறுத்தால் என்னை எப்படிப் பார்ப்பார்கள்? என்னைப் பற்றி என்ன பேசுவார்கள்? என்னை ஒதுக்கி விடுவார்களோ?’ என்பன போன்ற கவலை தரும் எண்ணங்களுக்குப் பணிவோர் சிலர்.

‘இல்லை’ என்று சொல்லக் கூடிய இந்தத் திறனை வளர்த்துக் கொள்வதோடு மட்டுமன்றி, நம் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் இதனைக் கற்றுத்தர வேண்டும். ‘பெரியவங்க ஏதாவது சொன்னா மாட்டேன்னு சொல்லக்கூடாது’ என்று கற்பிப்பது முட்டாள்தனம். தவறா? குற்றமா? உனக்கு இயலாதா? உனக்குப் பிடிக்கவில்லையா? அப்படியானால் தயங்காமல் ‘இல்லை’, ‘மாட்டேன்’, ‘இயலாது’ என்று மறுக்கும் திறனை அவர்களில் வளர்த்தால் அவர்களின் வாழ்வும் வளம் பெறும்.

(உங்கள் கருத்துகளை +91 9445006852 என்ற எண்ணிற்கு வாட்சாப் மூலம் எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெசெஜ் வடிவிலோ அனுப்புங்கள்)

Comment